நந்தினி சேவியர்-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-பொ.கருணாகரமூர்த்தி

நந்தினி சேவியர்
ஓவியம்: எஸ்.நளீம்

2018 ம் ஆண்டு இலங்கைக்கு விடுமுறையில் குடும்பத்துடன் சென்றிருந்தேன். பிள்ளைகளுக்கும் அவர்கள் வளர்ந்தபின்னால் அதுவே முதற்பயணமாதலால்  அதை முழுத்தீவுவதுக்குமான சுற்றுப்பயணமாக அமைத்திருந்ததால் மார்ச் மாதத்தின்  10-13 வரை திருமலையில் தங்குவதாகத் திட்டம். 12ம் தேதி திங்களன்று நந்தினி சேவியரிடம் வருவதாக வாக்களித்திருந்தேன், அன்று காலையில் வடக்குக்கடற்கரை வீதியில் சேவியர் வீட்டில் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு அவர்கள்  டவுணைச் சுற்றிப்பார்க்கவும் தேவையான சிலபொருட்கள் வாங்கவும், சென்றிருந்தார்கள்.

இரண்டறைகளுடன்கூடிய நந்தினியின் எளிமையான வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. அதன் பக்கச்சுவர்களும் தரையும் இன்னும் சாந்திடப்பட வேண்டியிருந்தன.

வதியுமறையில் ஒரு கட்டிலைப்போட்டுப் படுத்திருந்த நந்தினி இன்னுமொரு எழுதுபவனைச் சந்திப்பதில் ஆர்வமாக இருந்தார். அன்று அவர் வீட்டில் அவரது மனைவி மட்டுமிருந்தார், மகள் Stephnie வேலைக்குப் போயிருந்ததாகச் சொன்ன ஞாபகம்.

அன்றுதான் அவரை முதன்முறையாகச் சந்திக்கிறேன், ஆதலால் அவரின் இளவயது வாழ்க்கைபற்றியும், அவரது கல்வி, கலை, இலக்கியம், அரசியல் கோட்பாடுகள் பற்றியெல்லாம் அளவளாவினோம். ஆரம்பக் கல்வியை மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை – மட்டுவில் அ. த. க. பாடசாலையிலும் பின்னர் உயர்வகுப்புக்களை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும்    அதன் பின்னர் வதிரி திருஇருதயக் கல்லூரியிலும் கற்றார்.  அதன்  பின்னர் யாழ்/தொழில்நுட்பக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் தட்டெழுத்திலும், சுருக்கெழுத்திலும் டிப்ளோமா பெற்றார்.

மாணவப்பருவத்திலேயே ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கைகளாலும், மாக்ஸின் பொதுவுடமைக் கோட்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டவர் இலங்கை கம்யூனிஸ்ட் (சீனச்சார்பு) கட்சியின் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு உழைத்தார். இளவயதிலேயே நிறைய வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகிவிட்டிருந்தது. நானும் எழுதலாமேயென்று அவர் 1967 இல் எழுத ஆரம்பித்தபோது  சுஜாதா, புஷ்பாதங்கத்துரை என்று பலரும் பெண்பெயர்களில் எழுதிப்பெயர் பெற்றிருந்தனர். புதுமைப்பித்தனின்  ‘துன்பக்கேணி’ கதையின் நாயகி நந்தினியால் ஈர்க்கப்பட்டிருந்த சேவியரும் ஒரு கவனிப்புவேண்டி ‘நந்தினி சேவியர்’ எனும் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார்.

1967 ம் ஆண்டு ‘சுதந்திரன்’  பத்திரிகையில்’ பாரம்’ எனும் தன் முதற்கதையை நந்தினி சேவியர் எனும் பெயரிலேயே எழுதினார். இதைத் திருமதி எலிச்பெத்ராணி சேவியரே தெரிவித்தார்.

சேவியர் தம்பதியின் வாழ்வு சோகம் மிகுந்தது. அவர்களுக்கு Dany Reginold (18 வயது) என்ற ஆணும், Stephnie (14 வயது) எனும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்,

அவர்கள்  பையனை 14 வருடங்களுக்கு முன்னர்  அரசபயங்கரவாதிகள் கைதுசெய்துகொண்டுபோன தேதியில் (மார்ச் 12) அவரைப்பார்க்க நான் சென்றிருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிவிக்கமுதல் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

தன் குமரானைப் பற்றிய பேச்சு வந்தபோது அவரது குரல் கம்மத்தொடங்கியது. அவனுக்கு இளவயதிலேயே கணினித்துறையில் மிகுந்த ஈடுபாட்டு இருந்ததாகவும், ஊரில் உள்ள பலருக்கும் அவனே கணினியில்வரும் திருத்தங்களை எல்லாம் செம்மை செய்துகொடுப்பதாகவும், அவனுக்கிருந்த அவ்விஷேட அறிவே அவனுக்குக்கூற்றாக அமைந்ததையும் எனக்குச் சொல்லிச்சொல்லி மாய்ந்தார்.

0000000000000000000000

திருமலை இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த Dany Reginold ஊரில் திருஞானசம்பந்தர்வீதியிலிருந்த ஒருவரின் கணினிநிலையத்துக்குச்சென்று கணினிகளைப் பழுதுபார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த ஒருவர் கொண்டுவந்த வித்தியாசமான ஒரு புதியவகைக் கணினியை அவரால் இயங்கவைக்கமுடியாமற்போகவும். அந்தக் கணினிநிலையத்தை நாடியிருக்கிறார். அதன் முகாமையாளர் அதைப்போய்ப்பார்த்துச் சீர்செய்யும்படி Dany Reginold ஐ அவரிடம் அனுப்பியிருக்கிறார்  அங்கேபோன Dany Reginold சிலநொடிகளிலேயே அவர்களது கணினியைச்சோதித்து அதை எப்படி இயக்குவது என்பதைக்கண்டுபிடித்து அவர்களுக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறார். அக்கணினியை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்தவரின் மகனின் பெயரும் தற்செயலாக Reginold ஆகவிருக்க மகிழ்ந்துபோன அவர் தனது மகனுக்கும் கணினித்தொழில்நுட்பந்தான் கற்பிக்க வேண்டும் என்றெல்லாம் இவருக்குச் சொல்லியிருக்கிறார். இது நடந்து ஒருவாரம் கடந்திருக்கும்,  அவ்வெளிநாட்டிலிருந்து திரும்பியவரின்   6 வயதுப்பெண்குழந்தை வர்ஷி காணாமல் போய்விடுகிறது.’ இதற்கிடையில் ஊரில் எவருக்கும் பரிச்சயமில்லாத சில இளைஞர்கள் நந்தினி வீட்டுக்குவந்து ‘நாங்கள் புதிதாக ஒரு கணினிக்கல்விநிலையம் ஆரம்பிக்கவிருக்கிறோம், அதில் உங்கள் மகனை ஆலோசகராகப்பணியாற்ற அனுப்பிவைக்கமுடியுமா’  என்றும் கேட்டுள்ளார்கள். ‘ இல்லை அவன் முதலில் தன் கல்லூரிக்கல்வியை முடிக்கட்டும் அதுபற்றியெல்லாம் பின்னர் யோசிக்கலாம்’ என்றுசொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பிருக்கிறார் நந்தினி. இவ்வேளையில் Reginold க்கு இங்கிலாந்துசென்று கணினி சம்பந்தமான ஒரு டிப்ளோமா கல்விகற்றுவருவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைத்தீவின்  ஒரே தமிழராக அவருக்குக் கிடைக்கிறது.

ஊரிலோ கணினிக்கல்விநிலையம் ஆரம்பிக்கப்போவதாக வந்த இளைஞர்கள்  ‘கருணாவின் அல்லக்கைகள் என்றும், வசதியான வெளிநாட்டிலிருந்து திரும்பியவரிடம்  ‘பணயம்’ பெறுவதற்காகவே அவர்களின் குழந்தையைக் கடத்தியிருக்கிறார்கள் என்கிற பேச்சொன்று ஊரில் கிளம்பியது. அவ்விளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்த தடயங்களைவைத்து கொன்று புதைக்கப்பட்டிருந்த அப்பாவிக்குழந்தை ‘வர்ஷா’வினுடலையும் காவல்துறையே கண்டுபிடித்தது. ஆனால் அல்லக்கைகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

கணினிவீட்டுக்காரர் தம் தொலைபேசியில் யார் யாரிடமெல்லாம் தொலைபேசியிருந்தார்களோ அவர்களில் இளைஞர்களாயிருந்தவர்களில் ஐந்தாறுபேர் காவல்த்துறையின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து Dany Reginold உம் கைதுசெய்யப்பட்டு உப்புவெளிக்காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட 5 விசாரணைக்கைதிகளில் வி.புலிகளெனச் சந்தேகிக்கப்பட்ட இருவர் அங்கிருந்து காணாமற்போயினர். அவர்களில் எவரும் மீண்டும் திரும்பவில்லையாதலால்  Dany Reginold உம் அதையிட்டுப் பயந்துகொண்டிருந்தார்.

இத்தனைக்கும் திருமதி எலிசபெத்ராணி சேவியரே உப்புவெளி காவல்நிலையத்தில் ஒரு சீருடைப் பொலீஸ் ஊழியர்தான். தன் மகனையிட்டுக் கவலையுடனிருந்த அவரைப் பணிபுரியும் சக காவலர்கள்“ ராணி நீ வீணாகக் கவலைப்படாதை, அவங்கள் எல்லாம் புலிப்பெடியள், அதாலதான் மேலதிக விசாரணைக்காக இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள், உன்னுடைய மகன் நல்ல பையனென்று எங்களுக்குத்தெரியும், அவனுக்கு ஆபத்தொன்றும் வராது” என்று ஆறுதலும் சொல்லிக்கொண்டே அவரைத் திருமலையிலிருந்து கந்தளாய் – தேர்நுவர எனும் சிங்களப்பிரதேசத்துக்கு மாற்றம் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள்.

கடற்கரை காவல்நிலையத்தில் தினமும் நந்தினிதான் போய் மகனைப்பார்த்துவிட்டு வருவார். அங்குள்ள காவல்நிலைய அதிகாரிகள் ‘ஐயா நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்……… விரைவில் அவரை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம்’ என்றே நந்தினியையும் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள்.

நந்தினி  மார்ச் – 31 ந்தேதி காலையில் மகனைப்பார்க்கச்சென்றபோது  அவரிடம் Dany Reginold’  அப்பா…. இன்று எனக்கு என்னவோ மனது சமாதானம் இல்லாமல் இருக்கிறது, எனக்காகத்  தேவாலயத்துக்குப்போய் கொஞ்சம் செபம் செய்வீர்களா’வென்று மாக்ஸியரான அவரைக்கேட்கவும் அவ்வாறே செபமும் செய்திருக்கிறார். அன்றே மாலையில் தொலைபேசியில் நந்தினியை வரச்சொல்லி அழைத்த காவல்துறையினர்  ‘உங்கள் மகன் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் புதைத்துவைத்த இடமொன்றைக் காட்டுறேன்  என்றார், நாங்கள் அவரை அங்கே கூட்டிச்சென்றபோது அங்கு எம்மைத்தாக்கவந்த விடுதலைப்புலிகள் அவரையும் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்’ எனத் தெரிவித்தனர். எந்தவொரு தந்தையாலும் செவிமடுக்கமுடியாத  ‘கனல் தகிக்கும் வார்த்தைகள்’ அவை.

என்னிடம் ‘எனக்கு நேர்ந்த இந்தக்கொடுமைகள் எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுத வேண்டும்’ என்றார் நந்தினி.  ‘இல்லை…… அவற்றை நீங்கள் எழுதினாலே இன்னும் யதார்த்தமாகத் துல்லியமான தகவல்களுடனும் இருக்கும்’ என்றேன்.

“ இல்லைப்பா…… என்னால் அதையெல்லாம் எழுத முடியாது……. இடையில் உடைந்துபோய்விடுவேன், அதைப்பூரணமாக எழுதிமுடிக்கும் திராணி எனக்கில்லை”

என்றவருக்கு என்னசொல்லிச் சமாதானப்படுத்துவதென்று எனக்குத்தெரியவில்லை. Dany Reginold ஐத் திட்டமிட்டுக்கொலை செய்த வாசு குணவர்த்தன எனும் SSP தரத்திலிருந்த காவல்அதிகாரி அம்பாந்தோட்டைக்கு மாற்றப்பட்டு அங்கேயும் ஷியாம் என்றொரு சப்பாத்துக்கடைக்காரரையும் சுட்டுக்கொன்ற காட்சி அங்கிருந்த CCTV யில் ஒளிப்பதிவாக்கப்பட்டதால் இப்போது மரணதண்டனைக் கைதியாக வெலிக்கட கொட்டடியில் வைக்கப்பட்டுள்ளார், ஒருநாள் அவரும் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுவிடலாம், யார் கண்டார்?

0000000000000000000000

நந்தினி சேவியர் சிலகாலமாக அவர் தன் முகநூலில் தனக்குப்பிடித்தமான ஈழத்துக்கதைகளின் அறிமுகத்தைச் செய்துவந்ததை அவதானித்திருப்பீர்கள்.

நாம் எப்போதோ பெயர்கள் மறந்துபோய்விட்ட இலக்கியர்களின் படைப்புகளைக்கூட ஒருவகை அர்ப்பணிப்புடன் தேடி எடுத்து அவற்றை எமக்கு ஞாபகப்படுத்தியிருப்பார். கதைகளை அறிமுகஞ்செய்யும்போது   ‘அப்படி ஆரம்பிக்கும் இக்கதை என்றுவிட்டு கதையின் சில ஆரம்பவரிகளயும், இப்படிமுடிகின்றது’ என்று சொல்லிச்சில வரிகளையும் தந்திருப்பார்.

கதைகளை அவர் அறிமுகப்படுத்தும் பாணியில் எனக்குத்திருப்தி இல்லாமலிருக்கவும் அவரிடம்“  இல்லை அது சரியான அறிமுகமில்லைத்தோழரே, முதலில் அக்கதையின் இயங்குதளம் என்ன, ஆசிரியனின் மொழிவீச்சு எப்படி, படைப்பின் அழகியல் எப்படி இருக்கிறது, என்பதைச் சொல்லியபின்னர் வேண்டுமானால் இறுதியாகப் படைப்பின்  ஆரம்பவரிகள் இப்படி, இறுதிவரிகள் இப்படியுள்ளன என்பதையும் சேர்த்து சொல்லலாமே” என்றேன்.

அவர் அதற்கு உடன்படவில்லை. “ ஒரு படைப்பை அதன் ஆரம்ப / இறுதிவரிகளால் எடைபோட்டு அதை வாசிக்க முயலாத வாசகர்களுக்காக நான் அப்பக்கங்களை  எழுதவில்லைத்தோழர்”  என்றார் கறாராக. யாரையும் திருப்திப்படுத்துவதற்காகத் தன் நிலையை விட்டுக்கொடுக்காதவர்  நந்தினி.

அத்துடன் பெரியோரை வியத்தலுமிலமே, எளியோரை இகழ்தல் அதனிலுமிலமே எனும் கொள்கையைக் கடைசிவரையிலும்  கடைப்பிடித்து வாழ்ந்தார்.

திருமலைக்குச் சென்றதற்கும் இரண்டு வருடங்கள் முதல் (2015இல்) பாண்டிருப்பில் உமாவரதராஜனின் ஏற்பாட்டில் எனது இரண்டு நூல்களின் அறிமுகநிகழ்வு நடைபெற்றிருந்தது.  ‘தன் உடல்நிலை காரணமாக அந்நிகழ்வில் அவரால் கலந்துகொள்ளமுடியாதபோதிலும் ஞாபகமாகத் தனக்கு அந்நூல்களை அஞ்சலில் அனுப்பிவைத்தமைக்கு நன்றி’யையும் தெரிவித்தார்.

என்னுடன் நெடுநேரம் உட்கார்ந்து பேசியதால் சற்றுச்சாய்ந்து ஓய்வெடுக்க விரும்பியவர்போலக் காணப்பட்டார். நான் இன்னும் இருந்து பேசிக்கொண்டிருந்தால் அவரால் தூங்கவே முடியாது. அன்று அவரிடமிருந்து விடைபெற்றேன், அதுவே இறுதியான விடையாயுமிருக்கும் என்று அப்போது எனக்குந்தெரியவில்லை.

சேவியர் எனது எழுத்துக்களில் மிகவும் ஆர்வம் காட்டியவர். விரும்பி வாசித்தவர்,  சென்றமாதந்தான் அவருக்கு என்  ‘வனம் திரும்புதலின்’ பிரதியைக்கூட கூரியரில் அனுப்பிவைத்தேன். அதை முழுவதும் படித்திருப்பாரோ தெரியவில்லை. திடுப்பென ஒன்றையும் கூறாமல் கிளம்பிவிட்டார், வலிக்கிறது ஐயே……….

பொ.கருணாகரமூர்த்தி                         

04.10.21 Berlin.

பொ.கருணாகரமூர்த்தி

(Visited 58 times, 1 visits today)