நந்தினியின் இறுதி தசாப்தம்-நந்தினி சேவியர் நினைவுக்குறிப்புகள்-திக்குவல்லை கமால்

திக்குவல்லை கமால் 1967 -2021 ரையிலான இலக்கியக் காலத்திற்குரியவர் நந்தினி சேவியர்.இதில் கடைசிப் பத்தாண்டுகளும் கவனிப்புக் குரியது.அதை நந்தினியின் வெற்றித் தசாப்தம் என்று சொன்னாலும் தவறில்லை.

அவரது நான்கு நூல்களே இன்று எமக்கு எஞ்சியுள்ளன. தேசிய கலை- இலக்கியப்பேரவை வெளியிட்ட அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ (1993) சிறுகதைத்தொகுப்பைத் தவிர ஏனைய மூன்று நூல்களும் பிந்திய பத்தாண்டுகளில்தான் வெளியாகின.

‘நந்தினி சேவியரின் படைப்புக்கள்’ (2014) தமிழ்நாடு விடியல் வெளியீடாக அவரது சிறுகதைகள்-கட்டுரைகள்-நேர்காணல்கள்-கடிதங்கள்-பத்தி எழுத்து -பிறர் கண்ணோட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடங்கிய முக்கியமான தொகுப்பாகும். கொடகே வெளியீடான ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ (2011) இவருக்கு அரச இலக்கிய விருது-கொடகே இலக்கிய விருது-வடமாகாண இலக்கிய விருது போன்றவற் றைப் பெற்றுக் கொடுத்தது.

பெரும் சாதனைக்குரியதாக, அறுநூறு பக்கங்களில் கொடகே வெளியீடாக வந்த ‘பிடித்த சிறுகதை’ (2019) நூலைக் குறிப்பிடலாம்.படித்ததில் பிடித்ததை எழுத வந்த அவர், பிற்பாடு எல்லாச் சிறுகதை எழுத்தாளர்களையும்- ஒரேயொரு சிறுகதை எழுதிப் பிரசுரித்தவறாக இருந்தாலும் கூட – அவர்களையும் எழுத முனைந்தார். இதற்காகக் கடும் சிரமங்களை மேற்கொண்டு அறுநூறுக்கு மேற்பட்ட சிறுகதையாளர்களைத் தந்து சென்றுள்ளார். இருந்தாலும் 400 க்கு மேற்பட்டவர்கள் இன்னும் முகநூல் சுவரிலேயே இருக்கின்றனர். தொகுப்பின் பின்இணைப்பாக 65 கூட்டுத் தொகுப்புக்களின் பட்டியல் ஒன்றையும் சேர்த்துள்ளார்.நமக்குத் தெரிந்த சில இதில் இல்லாவிட்டாலும், நமக்குத் தெரியாத எத்தனையோ அதில் அடக்கம்.அந்த வகையில் பெறுமதி மிக்கது.

அறுபதுகளின் பிற்கூற்றில் இலக்கிய உலகில் புகுந்த இவர், அந்நாட்களில் ஓரிரு கதைகள் எழுதியவர்களையும் நன்கு ஞாபகம் வைத்திருந்தார்.எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலரின் பெயர்களைச் சொல்லக் கேட்டபோது, அதில் மரணித்து பல்லாண்டுகள் கடந்தவர்களும் இருந்தனர். ஆனாலும் விடாப்பிடிதான் அவரோடு தொடர்பிலிருந்த எவரையும் அவர் விட்டுவைக்கவில்லை.அவரது பிடிவாதம் கலந்த தேடலைத்தான் சொல்கிறேன்.

நந்தினி வெளிப்படையாகவே எதையும் பேசும் குணம் கொண்டவர். அது அவரது எழுத்திலும் வருவதுண்டு. அவரது பிடித்த சிறுகதை வரிசையில், அதுவும் அவரது சீனச் சார்பைச் சேர்ந்த ஒருசிலரை கடுமையான வார்த்தைகளைப் பாவித்து எழுதியிருந்ததாக எனக்குப் பட்டது.” கொஞ்சம் நிதானமாக எழுதியிருக்கலாமே “- என்று சொன்னேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

எழுபதுகளின் முற்பகுதியில், சீன இலக்கியங்கள் தேடி யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு புத்தக்க் கடைக்குள் புகுந்தபோது முதன்முதலாக நந்தினி எனக்கு அறிமுகமானார். ஆனால் அந்தச் சந்திப்பு தொடரவில்லை. வடகிழக்கு மாகாணத்தில் கல்விக் கந்தோரில் கடமையாற்றியபோது, நீண்ட இடைவெளிக்குப் பின் திருகோணமலையில் மீண்டும் சந்தித்தேன்.

தொலைபேசி உரையாடல் களின்போது, மனைவி அரச ஊழியம் செய்தும் ஓய்வூதியம் கிடைக்காமை பற்றிக் கவலைப் பட்டதுண்டு. மகளுக்குத் தொழில் வாய்ப்புக் கிடைத்ததை இறுதிக்கட்ட மகிழ்ச்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

நந்தினி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் சம்பந்தப் பட்டிருந்தாரோ இல்லையோ, அவர் ஒரு முற்போக்கு வாதி என்பதில் சந்தேகமில்லை. துன்ப துயரங்கள், இழப்புகள், போராட்டங்களென்று பழகிப்பபோனவர்.

யுத்த சூழல் தணிந்ததும் சிங்கள எழுத்தாளர்களில் ஒரு சாராரிடம், நாங்களாவது ஒன்றிணைவோம் ஏதாவது சாதிப்போம் என்ற உணர்வு மேலோங்கியது. உரையாடல் தொடர்ந்து ஓரளவு சாத்தியமாயிற்று. இதற்குக் கொடகே நிறுவனம் அனுசரணை வழங்கியது. இதன் விளைவாகச் சிங்கள இலக்கியத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுருந்த சகல நடவடிக்கைகளும் தமிழுக்கும் வந்து சேர்ந்தது.தமிழ் நூல் வெளியீடு-சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பு-சாகித்ய நூல் விருது-மூத்த எழுத்தாளர் கௌரவிப்பு-வாழ்நாள் சாதனையாளர் விருது-கையெழுத்து பிரதிப்போட்டி மட்டுமன்றி தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவொன்றையும் நியமித்துக் கொண்டது.

நந்தினி சேவியரும் இதனால் பல நன்மைகளை அடையும் வாய்ப்புப் பெற்றார். சிங்கள எழுத்தாளர்களால் அறியப் பெற்றோர். சிலரோடு சிநேகம் கொண்டார்.நிறுவன நூல் மதிப்பீட்டுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் நந்தினியின் வகிபாகம் நிலையானது.அவரது எழுத்துக்கள்…பணிகள்…    நினைவுகள்…என்றும் வாழும்.

திக்குவல்லை கமால்-14.10.2021-இலங்கை

திக்குவல்லை கமால்
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 59 times, 1 visits today)