விளங்காத வேலை அல்லது உப்பும் வைரமும்-‘குறுக்கும் மறுக்கும் 04’-கருணாகரன்

“தமிழ் இலக்கியச் சூழலில் தீண்டாமையும் சாதியுணர்வும் உண்டா என்று யோசிக்க வேண்டியிருக்கு” என்று ஒரு உரையாடலின்போது சொன்னார் நண்பர் ஒருவர்.

கருணாகரன்உடனே “இதிலென்ன புதினம்? ஈழத்தில் டானியல், டொமினிக் ஜீவா, தெணியான், என்.கே.ரகுநாதன் போன்றோரின் எழுத்துகள் தொடக்கம் தமிழகத்தில் இன்று வலுவடைந்து வரும் தலித் இலக்கியம்வரையில் தீண்டாமையையும் சாதியத்தையும் பற்றித்தானே பேசுகின்றன. தலித் இலக்கியம் இன்று ஒரு புதுப்போக்காகவே வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் புதிய முறையிலான குரல்களும் அனுபவப் பரப்பும் தமிழுக்குக் கிடைத்திருக்கு. சுகிர்தராணி, மணிவண்ணன் மாதிரி ஆட்களெல்லாம் இன்னும் வலுவான முறையில் தங்களையும் தங்களுடைய சமூகத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு சமூகமும் சாதிப் பிரிவினரும் எதிர்கொண்ட, இன்னும் எதிர்கொண்டு கொண்டிருக்கிற பிரச்சினைகளெல்லாம் பேசப்படுகின்றன. சலூன் தொழில் செய்கின்றவர்களின் அனுபவங்களையொட்டிய எழுத்துகள் ஒரு தனிப்பிரிவாகவே இருக்கு. க. வீரபாண்டியனின் “சலூன்” என்ற நாவல், சமான்யனின் “மயிர் வெட்டி”, கலைவாணன் இ.எம்.எஸ்ஸின் “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்ற கவிதைத் தொகுப்புகளையெல்லாம் படித்தீர்கள் என்றால் தீண்டாமையின் கொடுமையையும் அதனுடைய பெருந்துயரத்தையும் உக்கிரமாக உணருவீர்கள். உதாரணமாக, கலைவாணின் ஒரு கவிதையைப் பாருங்கள் –

“செரைக்க போக வேண்டியது தானல
ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்
நீ வழிச்சது போதும்
இவன் பெரிய மயிராண்டி
அந்த மயிரெல்லாம் எனக்குத் தெரியும்

இப்படி சம்பந்தமே இல்லாம
வாய தொறந்தா
ஏம்புல எல்லாத்துக்கும்
எங்கள இழுக்குறிய
மொட்டைப் பயலுகளா”

கருணாகரன்என்றுள்ளது. இப்படித் தங்களைத் தேவையற்ற விதமாக எடுத்ததற்கெல்லாம் மிகச் சாதாரணமாகவே இழிவுக்குள்ளாக்கும் சமூகத்தின் பொதுப்போக்கைப் பற்றியும் பொதுப்புழங்கு மொழியில் எவ்வளவு அநீதி உள்ளுறைந்துள்ளது என்பதைப் பற்றியும் சொல்லி விடுகிறார். இதைச் சொல்வதற்கு அவர் கொண்ட மொழிதான் இங்கே முக்கியமானது. எளிய உரையாடல் போன்ற கட்டமைப்பில் தாம் பேசுகின்ற வார்த்தைகளை அப்படியே கோர்த்து தன்னுடைய, தன்னுடைய சமூகத்தின், அந்தச் சமூகத்தினுடைய வரலாற்றுத் துயரத்தின், அதனுடைய கோபத்தின் கவிதையை உருவாக்குகிறார். இதற்கு இன்னும் இரண்டு கவிதைளைச் சொல்ல வேண்டும் –

(01)
“களை கட்டியிருந்தது
பிச்சாண்டி ஆசாரியின்
கல்யாண வீடு
முதல் பந்தியில
பக்கத்துக்குக் கோவிந்தன் நாயர்
இலைக்குப் பருப்பு வந்தது

இப்பவே யாம்புல இருந்தியன்னு
சோறு விளம்புன ஞானபிறகாசம்
ஓடுங்கள நாசுவ தாயளின்னு
எழுப்பி விட்டான்
என்னையும் என் அம்மையையும்

எல்லா விஷேச வீட்டுலயும்
ஒரு ஞானபிறகாசம் இருப்பான்
எங்களை விரட்டி விடுகதுக்கு”

(02)
‘பிச்சையெடுத்தாலும்
பார்பர் ஷாப் வேலைக்கு
போகக் கூடாதுன்னு
சொல்லிட்டா அம்மா

லாரில கிளியா இருக்கும்போது
விருது நகர் பஸ்ஸ்டாண்டு
குளிரூம்ல

நான் குளிச்ச பொறவு
நீ குளில நாசுவத்தாயளின்னுட்டு
சோப்பு நுரையோடு
என்னை வெளியே வரச் சொல்லி
டிரைவர் குளிக்கப் போனான்

பல்லு தேச்சுட்டு நின்ன
கண்ட பயக்க எல்லாம்
ஒரு மாதிரியா பாக்கானுக

அப்பதான் தோணிச்சு
கெளரவமா
அப்பாக்க வேலைக்கே
போயிருக்கலாமோன்னு ‘

கருணாகரன்இதைப் படிக்கும்போது கண்கலங்காமல், இதயம் கரையாமல், அதிலே தீப்பிடிக்காமல் இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அவன் மனுசனே இல்லை.

இப்படித் தீண்டாமைக்குள்ளே நிகழ்த்தப்படும் அநீதியை அறியும்போது இதையெல்லாம் நாம் தினமும் பொருட்படுத்தாமல்தானே கடந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி ஏற்படும். ஆனால் அப்படி நீங்கள் இலகுவாகக் கடந்து விட முடியாது என்று நமக்குள்ளே ஒரு வலிய குரல் எழுந்தொலிக்கும். அது உண்டாக்கும் பதட்டத்தில் ஆடிப்போய் விடுகிறோம். இந்த மாதிரிக் குரல்களெல்லாம் இன்னும் விரிவடையப் போகின்றன. எல்லோருக்கும் கல்வி என்ற வாய்ப்பும் ஜனநாயக வெளியில் எல்லோருமே பிரவேசிக்க முடியும் என்ற நிலையும் உண்டாக்கிய கொடை இது. இதை இன்னும் இன்றைய தொடர்பூடகங்கள் விரிவாக்கியிருக்கின்றன. இனியினி இந்தக் குரல்களின் ஒலி ஒரு பெரும் பரப்பாக விரியும். புறக்கணிப்பையும் ஒடுக்குமுறையையும் செய்தவர்கள் தங்களுடைய பண்பாட்டுப் பெருமிதங்களையும் திமிரையும் குறித்து வெட்கப்பட வேண்டியதுதான்” என்று இதை விரித்துக்கொண்டிருந்தார் மற்ற நண்பர்.

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு சங்கதி. அது இந்த இலக்கிய வகைக்குள்ளேயே உள்ள சாதிப்பிரிவினை. தீண்டாமை” என்றார் முதலாவது நண்பர்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று உண்மையிலேயே எங்களுக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளங்கிற மாதிரிச் சொல்லுங்கள்” என்றேன் நான்.

“இப்ப பாருங்கள், நீங்கள் சொன்ன இந்த மூன்று கவிதைகளுக்குள்ளேயும் எவ்வளவு பெரிய உண்மைகள் உள்ளன! அதெல்லாம் வெளியே வந்து பேசிறதுக்குத் துடிக்கின்றன. ஒரு பெரிய சமூக வரலாற்று அநீதி அப்படியே எந்தப் பொருட்படுத்தலும் இல்லாமல் தொடரப்படுகிறது என்பதை. இதை இவர்கள் இப்படிச் சொல்லித்தான் நமக்கெல்லாம் தெரிய வேணுமா? அந்தளவுக்கு நம்முடைய தலைக்குள்ளே ஒன்றுமே இல்லையா என்பதை. இப்படியான ஒரு நிலையை, சமூகச் சூழலை வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்கிறோமா? நம்முடைய பண்பாட்டுப் பெருமைகளைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோமா என்பதையெல்லாம் இந்த மூன்று கவிதைகளும் தீவிரமாகச் சொல்லி விடுகின்றன. இந்த மாதிரிக் கவிதைகள் ஏராளம் உண்டு. ஆனால், இதைப் பலரும் படிக்கிறதேயில்லையே. படித்தால்தானே எதையும் தெரிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் முடியும்! பொதுவான வாசகர்களைத் தான் விட்டு விடுவோம். அவர்களுக்கு எது சுவையாக இருக்கோ, எது பழக்கமாக இருக்கோ அதைத்தான் படிப்பார்கள். அது பழக்கத் தோசம். ஆனால்,

இந்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கூட இதையெல்லாம் படிக்கிறதும் இல்லை. இதைப் பற்றி அக்கறைப் படுவதும் இல்லை. கேட்டால் “கவிதை நமக்கு விளங்காது” என்று ஒற்றை வரியில் கடந்து போய் விடுகிறார்கள். நாவலும் சிறுகதையும்தான் உயர்ந்தவை என்ற ஒரு எண்ணத்திலும் நம்பிக்கையிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதில் இயங்குவது பெருமிதமானது, உயர்ந்தது என்ற எண்ணம் வேறு.

கருணாகரன்உண்மையில் கவிதை விளங்காதா? பிடிக்காதா? என்பதுதான் இங்கே பிரச்சினை. இப்ப நீங்கள் மேலே சொன்ன மூன்றும் கவிதைகளா இல்லையா? கவிதைகள்தான் என்றால், அவை புரிகின்றனவா இல்லையா? புரிந்தால்தான் கவிதையா என்ற இன்னொரு விவாதம் இருக்கு. அதைத்தான் ஒரு கதைக்காகத் தள்ளி வைத்துக் கொள்வோம். புரியக்கூடிய கவிதைகளைக் கூடப் படிக்காமல், படிக்க முயற்சிக்காமல் புறக்கணிப்பதேன்? இதுவும் ஒரு வகையான தீண்டாமைதானே! சிறுகதையும் நாவலும்தான் நமக்குப் பிடிக்கும். அதில்தான் நமக்குப் பரிச்சயம் உண்டு என்ற மாதிரிச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்லும்போது கவிதையைக் குறித்த இழக்காரத்தையும் மற்ற வடிவங்களைப் பற்றிய பெருமிதத்தையும் நீங்கள் பார்க்கலாம். இது என்ன மாதிரியான மனோபாவம்? இதைப் போலக்

கவிதையை வாசிக்கிற, எழுதுகிற ஆட்களிலும் சிலர் நாவல், சிறுகதை போன்றவற்றைப் படிப்பது குறைவு. படித்தாலும் அதைப் பொருட்டாகக் கருதிப் பேசுவதுமில்லை. இதெல்லாம் சாதிய உணர்வு போலத்தானே உள்ளது? ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்ளாமல், அங்கீகரிக்காமல்! ஒவ்வொரு தரப்பும் தமக்கு என்ற வகைக்குள் கட்டுப்பட்டு நின்று கொண்டு அதை மட்டுமே திறமென்றும் உச்சமென்றும் கருதுவது எதைக் குறிக்கும்? இதனுடைய மறுபக்கம், மற்றது இழக்கம் என்பதுதானே! இதைத்தான் கேட்டேன், “தமிழ் இலக்கியச் சூழலில் தீண்டாமையும் சாதியுணர்வும் உண்டா? என்று” என விளக்கினார் நண்பர்.

“ஓ. இது வேற பிரச்சினையா?” என்றார் மற்ற நண்பர்.

கருணாகரன்“ம். கவிதையை வாசிக்கிற ஆட்கள் வரவரக் குறைந்து கொண்டு போகுது. எழுதுகிறவர்களின் தொகையைவிட வாசிக்கிறவர்களின் தொகை குறைவு. இதனால்தான் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவதற்குப் பதிப்பகங்களும் வெளியீட்டாளர்களும் தயங்குகிறார்கள் என்றமாதிரியான காரணங்களும் சொல்லப்படுகின்றன. இலக்கியத்தில் எல்லா வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் முக்கியத்துவமும் இருக்கல்லவா! ஓவியத்தைப் பாருங்கள். அதிலே எத்தனை வகையுண்டு? எத்தனை வடிவங்கள்? ஒவ்வொன்றிலும் நுட்பமும் அதற்கான உழைப்பும் உண்டே. ஏன் சினிமாவைக் கூடப் பாருங்கள். எத்தனை விதமான சினிமாக்கள் வருகின்றன. யதார்த்தப்படங்கள். மிகை யதார்த்தப்படங்கள். கேளிக்கைப் படங்கள். பொழுது போக்குப் படங்கள். சீரி்யஸான சினிமாக்கள் என்று எத்தனை வகையுண்டு. அத்தனைக்கும் இடம் உண்டு. அத்தனையும் ஒவ்வொரு வகையில் அதனதன் இடத்தை நிரப்புகின்றன. இலக்கியத்தில் கவிதையும் அப்படித்தான். சிறுகதை, நாவல் போன்றவையும் அப்படித்தான். மற்றத்துறைகளில் இப்படி ஒதுக்கலும் புறக்கணிப்பும் பாராமுகமும் தீண்டாமையும் குறைவு. இலக்கியத்தில்தான் இது அதிகம்.” என்றார் முதலாம் ஆள்.
“விட்டுத் தள்ளுங்கள். புறக்கணிக்கப்பட்டோர் தங்களைச் சிறப்பாக முன்வைக்கவில்லையா? அப்படித் தொடர்ந்து இயங்கியும் முன்வைத்தும் இன்று தங்களை ஒரு அடையாளமாக உருவாக்கியிருக்கிறார்களே! புறக்கணிக்கவும் தீண்டாமலிருக்கவும் முடியாத ஒன்றாகத் தங்களை ஆக்கியிருக்கிறார்களே!! அதைப் போல எதிலும் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் இயங்கினால் அதில் அடையாளப்படுத்த முடியும். அதை நிறுவிக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் குறிப்பிடுகின்ற இந்தச் சாதிய மனோபாவம்தான் இதற்குள்ளும் ஊடாடுகிறதோ என்றொரு சந்தேகம் எனக்கு” என்று சிரித்தார் மற்றவர்.

“இது வேறு. எல்லாவற்றையும் படிக்கின்றவர்கள், ஏற்றுக் கொள்கிறவர்களும் இருக்கிறார்களே. நீங்கள் ஏன் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்களிடம் ஒரு பன்மைப்பண்பாட்டு மனதுண்டு. அவர்கள் எதையும் புறக்கணிப்பது குறைவு. உதாரணமாகத் தமிழ்ச்சூழலிலேயே எஸ்.ராமகிருஸ்ணன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், க.மோகனரங்கன், சுகுமாரன், சல்மா தொடக்கம் அ. யேசுராசா, ஓட்டமாவடி அறபாத், தமிழ்நதி, உமா வரதராஜன், றஸ்மி, ஸர்மிலா ஸெய்யித் எனப் பலர் இருக்கிறார்களே! இவர்கள் இலக்கியத்தின் வெவ்வேறு வடிவங்களிலும் இயங்குவதுடன் எல்லா வடிவங்களிலும் தயக்கமும் தடுமாற்றமும் கூச்சமும் இன்றிப் புழங்குகின்றனர்.

இந்தப் பூமியில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. மலத்தையும் நிலம் ஏற்கும். மலரையும் ஏற்கும். மலருக்கும் முள்ளுக்கும் இடம் உண்டு. இயற்கையின் நியதியும் பூமியின் இயல்பும் அப்படித்தான். இது நமக்கு உணர்த்துவதும் இதுவே. அனைத்துக்கும் இடமளியுங்கள் என்று. எதுவும் ஒன்றிலிருந்து ஒன்று குறைந்ததில்லை. வைரத்தைவிட அதிகம் பயன்படுத்தப்படுவது உப்பு. அதனால் உப்பின் விலை வைரத்தைவிட உயர்வில்லை. பயன்பாட்டில் உப்பு உயர்வாக உள்ளது. விலையில் வைரம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அவ்வளவுதான்” என்றேன் நான்.

இதற்கு மேல் எதைச் சொல்வது?

“தீண்டாமையின் கோடுகள் தொடுவானிற்கு அப்பால் கரைந்து கொண்டிருக்கின்றன! காலடியில் ஏதோ ஒரு முள் குத்திக் கொண்டிருக்கிறது” என்று எதையோ சொல்லிக் கொண்டு போனார்கள் இருவரும்.

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 73 times, 1 visits today)