எனது ஜன்னல்களைச் சாத்துவதற்கு நான் துணியமாட்டேன். எனது ஜன்னல்களை அகல திறந்து வைத்துள்ளேன்-நேர்காணல்-நந்தினி சேவியர்

எனது ஜன்னல்களைச் சாத்துவதற்கு நான் துணியமாட்டேன். எனது ஜன்னல்களை அகல திறந்து வைத்துள்ளேன்

கேள்வி: தங்களது இலக்கிய பிரவேசப் பின்னணி பற்றிக் கூறமுடியுமா?

நந்தினி சேவியர்
ஓவியம்: எஸ்.நளீம்

நந்தினி: கதை கேட்கும் பழக்கம் சிறுவயதிலேயே எனக்கு ஏற்பட்டுவிடடது. எங்களது உறவினரான மறியல்கார அப்பா எனும் ஒருவரிடம் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறேன். அதன் தாக்கமோ என்னவோ கதை ஆர்வம் மேலிட்டது. பாடசாலை நாட்களில் சற்று வாசிப்பு முறையில் நல்ல இலக்கியங்களின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. குமுதம், கல்கியிலிருந்து விடுபட அதுவே எனக்கு உதவியது எனலாம். பின்னர் கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதச் சந்தர்ப்பம் வாய்ந்தது. சில மன நெருடல்களின் வெளிப்பாடே எனது இலக்கிய எழுதுகைக்கான அடிப்படை. உண்மையும் அனுபவமும் என்னை எழுத வைத்தன. எழுத வைத்துக் கொண்டிருக்கின்றன.

கேள்வி: நீங்கள் எழுதத் தொடங்கியமைக்கு உங்களது கல்விப் பின்னணி அல்லது பரம்பரையாக வந்த ஆளுமைத் தொடர்ச்சியும் ஒரு காரணமாக இருந்ததா?

நந்தினி: நான் ஏதோ பெரும் கல்விப் பாரம்பரியத்தில் வந்தவன் என்று கருத வேண்டாம். அதே நேரத்தில் கருவில் திருவுடையானாக வந்தவனும் அல்ல. எனது தாய் தகப்பன் மிகவும் கல்வியறிவு குறைந்தவர்கள். ஒரு சாhரண தொழிலாளியின் மூன்றாவது மகன் நான். அளவயதில் நோய்வாய்ப்பட்டு நோஞ்சானாக இருந்த என்னைப் படிப்பிக்க வேண்டும். கடின வேலைக்கு அவனால் முடியாது என்ற நோக்கில் என்னைப் படிப்பிக்க முனைந்தார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்ததுபோல நானும் க.பொ.த (சாதரணம்) வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க என்னால் முடியவில்லை. அதற்குப் பிறகான எனது வாழ்வு அரசியல் மயப்பட்டதாக மாறிவிட்டது. எனது தகப்பனாரின் தொழிலை நான் பாடசாலை விட்டதும் தொடர்ந்திருக்கின்றேன். வாழ்வில் நெருங்கியழுத்தும் பணச்சுமையிலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற ஆதங்கம் என்னைப் பிடித்துக்கொண்டது. பாராளுமன்ற அரசியலில் ஏற்பட்ட வெறுப்பு, இடது சாரி சிந்தனை, தாழ்த்தப்பட்ட மக்களது ஆலய, தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் என்னைத் தம்பக்கம் ஈர்த்துக் கொண்டன.

ஒரு சுயநல நோக்கோடு அல்லது பெரும் எதிர்பார்ப்போடு அல்லது பிறரது வற்புறுத்தல் காரணமாக நான் இடது சாரி சிந்தனை வயப்படவில்லை. என்னை, சூழலின் தாக்கம் நிர்ப்பந்தமாக இடது சாரி இயக்கத்தின் பக்கம் தள்ளிற்று. எனவே எனது எழுத்துப்பணியை நான் இவ்விதம் தேர்ந்துகொண்டேன்.

கேள்வி: உங்கள் எழுத்துப்பணிக்கு உந்து சக்தியாக, உதவி செய்தோராக யாரைக் கருதுகிறீர்கள்?

நந்தினி: எனது முதல்கதை பிரசுரமாகிய நேரத்தில் நான் இடது சாரி எழுத்தாளர்கள் யாரோடும் அவ்வளவு பரிச்சயமானவனாக இருக்கவில்லை. எனது பரிசுபெற்ற நாவலை நான் எழுதும்போது கூட இத்தகையவர்களின் தொடர்பு எனக்கு இருக்கவில்லை. நான் எனது சுயவாசிப்பின் மூலமே எழுத ஆரம்பித்தேன். பின்னர் செ.யோகநாதன் எனக்குச் சில நல்ல எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்தார் எனலாம்.கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் என்.கே.ரகுநாதன் டானியல் போன்றவர்களின் தொடர்பு இருந்தது. நான் எனது சுயவாசிப்பின் மூலமே எழுத ஆரம்பித்தேன். பின்னர் செ.யோகநாதன் எனக்குச் சில நல்ல எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்தார் எனலாம். கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் என்.கே. ரகுநாதன், டானியல் போன்றவர்களின் தொடர்பு இருந்தது. இருந்தும்கூட அவர்களோடு விமர்சன ரீதியான முரண்பாடு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது.

70-களில் தோன்றிய படைப்பாளிகளிடம் இருந்த சில இலக்கிய அமைப்புக்கள் மூலம் பல நண்பர்களை நான் பெற்றுக்கொண்டேன். டானியல் அன்ரனி, வ.ஐ.ச. ஜெயபாலன், சசி. கிருஸ்ணமூர்த்தி, அ.யேசுராசா, ராதேயன், கேதாரநாதன் போன்றவர்கள் இதற்குள் அடங்குவார்கள். அவர்களிடமும் பலவிதத்தில் உடன்பாடும் முரண்பாடும் என்னளவில் இருந்தது.

எனவே வாசிப்பு அனுபவமே என்னைச் செழுமைப் படுத்திற்று என்று கூறுவேன்.

என்னிடம் பயங்கர வாசிப்பு வெறி இருந்தது. எனது ஊரிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள பாடசாலைக்கு வெறுங்காலுடன் நடந்துபோய்ப் படித்தவன் நான். பஸ்போக்குவரத்து, மின்சாரம், நல்ல பாதைகள், இல்லாத அக்காலத்தில் கைவிளக்கு வெளிச்சத்தில் பல நூல்களையும் கதைப்புத்தகங்களையும் படித்தேன். அத்தோடு நில்லாது நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை போன்ற இடங்களுக்கு நடந்து சென்று நூலகங்களிலிருந்து பசியைப் பாராது நெடுநேரம் வாசித்திருக்கிறேன்.

எஸ்.பொவிலிருந்து செ.கணேசலிங்கன், ஜெயகாந்தன்வரை தமிழிலும், மார்க்சிம் கோர்க்கியிலிருந்து எமிலிஜோலா? தகழி முதல் நிரஞ்சனா வரையும் மொழிபெயர்ப்பின் மூலமும் வெறியுடன் வாசித்தேன். எழுதியதைவிட வாசிப்பில் மகிழ்ச்சி கண்டவன் நான். அதனால்தான் எனது எழுத்தின் தொகை குறைவாக உள்ளது. வாசிப்பின் மூலம் நான் பெற்ற உந்துசக்தி இன்றுவரை என்னைவிட்டு அகலவில்லை. இன்னும் வாசித்தபடியே உள்ளேன்.

கேள்வி: உங்களது வாசிப்பனுபவத்தில் தங்களால் ஆகர்சிக்கப்பட்ட எழுத்துக்களென எவ்வெவற்றை அடையாளப்படுத்துவீர்கள்?

நந்தினி: ஆரம்பத்தில் நானும் சில கவிதைகள் எழுதியது உண்டு. பின்னர் பல கவியரங்குகளில் பங்குபற்றியுள்ளேன். பெரிதாகக் கவிதைகளில் ஆர்வமில்லாவிடத்தும் சில்லையூர்செல்வராசன், முருகையன், சுபத்திரன், நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன்றோரின் கவிதைகள் பிடித்திருந்தது. பின்னாளில் புதுவையின் கவிதைகளிலும் அ.யேசுராசா ச.வி, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரனிலும் விருப்பு ஏற்பட்டது. சோலைக்கிளி, இளவாலை விஜயேந்திரன் போன்றோரிலும் ஒருவித விருப்பு இருக்கிறது.

சிறுகதைத்துறையில் ஆரம்பகால டானியல், அ.முத்துலிங்கம், பின்னர் கெ.கதிர்காமநாதன், யோகநாதன் பின்னர் மன்சூர் சட்டநாதன், உமாவரதராஜன், ரஞ்சகுமார், எஸ்.எல்.எம் ஹனீபா இப்போது ஈழத்தில் எழுதும் புதிய தலைமுறையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றேன். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் ஷோபாசக்தி கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தியை குறிப்பிலாம்.

நாடகம் சார்ந்த வெளிப்பாடுகள்பற்றிச் சொல்லப்போனால் எப்போது பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக நாடகம் வைக்கப்பட்டதோ அப்போது நாடகம் என்பது செத்துப்போய்விட்டது என்பதே என் அபிப்பிராயம். சிறுகதை, நாவல், கவிதைக்கு இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவேன். இன்றுவரை எனக்கு விருப்பான படைப்புகளாக மேற்குறித்த கவிஞர்களின் சில கவிதைத் தொகுப்புகளையும், எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதியையும் நாவல்களையும் இந்தியாவின் பிறமாநில எழுத்துக்களையும் குறிப்பிடலாம்.

கேள்வி: தங்களது வாழ்வில் இலக்கியப்பணியில் தங்கள் எதிர்கொண்ட சவால்கள் அல்லது அங்கீகாரம் என்ன என்பதைக்கூறமுடியுமா ?

நந்தினி:எனது சிறுகதை ஒன்றுக்காகப் புலனாய்வுத்துறையினால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவன் நான். பலவிதமான நிகராகரிப்புக்களைச் சந்தித்தவன். அதையிட்டு நான் அலட்டிக்கொள்ளாவிட்டாலும், கண்டிப்பாக இதனைக் குறிப்பி வேண்டியுள்ளது. ஈழநாடு 10-ஆம் ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் எனக்குப் பாராட்டுப் பரிசு கிடைத்தது. போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு நடாத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கு எனக்கு அழைப்பு விடப்படவில்லை.அப்போது எனக்கு வயது 19.

நெல்லியடி கட்டைவேலி ப.நோ.கூ. சங்கம் வடமராட்சி எழுத்தாளர்களின் எழுத்துக்களை ‘உயிர்ப்புக்கள்’ எனும் பெயரில் வெளியிடடது. வடமராட்சியைச் சேர்ந்தவனான எனது கதை அதில் சேர்க்கப்படவில்லை. எனது முதல் கதை சுதந்திரனில்தான் பிரசுரமானது. அதில் நான் ஐந்து கதைகள் எழுதியிருந்தேன். சுதந்திரன் கதைகள் தொகுப்பில் எனது கதை இடம்பெறவில்லை. இதேபோல் அத்தொகுப்பாளர் தொகுத்த ஒன்னொரு சஞ்சிகையின் சிறுகதைத்தொகுப்பிலும் எனது கதை இடம்பெறவில்லை. இவ்வளவிற்கும் அந்தச் சஞ்சிகையில் வெளிவராத எனது சிறுகதை அவ்வாண்டில் வந்த சிறுகதைகளில் தரமானது என்று ஒரு விமர்சகரால் பாராட்டப்பட்டு அச்சஞ்சிகையிலேயே எழுதப்பட்டிருந்தது.இப்படியான பல புறக்கணிப்புகளை சந்தித்தேன், சந்தித்து வருகின்றேன்.

1974-இல் பேராதனை பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் நடாத்திய குறுநாவல் போட்டியில் எனக்கு முதல்பரிசு தங்கப்பதக்கம் கிடைத்தது. அப்போது நான் ஒரு தொழில்ச்சாலையில் பயிலுனராகக் கடமையாற்ரிக் கொண்டிருந்தேன். பிரயாணச் செலவுக்கு மிகுந்த சிரமத்துடன் ஒருவரிடம் கடன் வாங்கி பேராதனைக்குச் சென்றேன். புதுவை இரத்தினதுரைக்கு கவிதைக்கான முதல்பரிசும், டானியல் அன்ரனிக்கு சிறுகதைக்கான முதல்பரிசும் கிடைத்தது.

மிகுந்த கரகோசத்தின் மத்தியிலே தங்கப்பதக்கம் பேராசிரியர் க.வித்தியானந்தனால் எனக்கு அளிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை கண்டியில்  ஒரு நகைக்கடையில் அதனை ரூ150-க்கு விற்றேன். எனக்கு ஏற்பட்ட பயணச்செலவை ஈடுபட்டவும், கடனத் திருப்ப அடைக்கவும் அதனை நான் பயன்படுத்தினேன். இன்று தமது விருதுகளையும் பொன்னாடைகளையும் காட்சிப்படுத்தி வைத்துள்ள படைப்பாளிகளுக்காக இதைச் சொல்ல விளைந்தேன்.

இன்னுமொரு வேடிக்கை, எனது ஈழநாடு நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவலுக்காகப் பரிசுத்தொகை 250 ரூபாவை நான் கிட்டத்தட்ட 3 வருடங்களின் பின்னர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெற்றுக்கொண்டேன். மாதா மாதம் 25 ரூபா வீதம் 10 மாதங்களில் அது எனக்கு வழங்கப்பட்டது. கஸ்டம், துன்பம், வறுமை என்பவை பற்றி எனக்குத் தெரியும். அதிலிருந்து விடுபட வேண்டியே எனது எத்தனிப்புகள் எப்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதீத கற்பனைகள், அற்புதமான மனிதர்கள், பற்றியெல்லாம் என்னால் சிந்திக்க முடிவதில்லை.

எனது ஜன்னல்களைச் சாத்துவதற்கு நான் துணியமாட்டேன். எனது ஜன்னல்களை அகல திறந்து வைத்துள்ளேன். அதனால் என் கண்களில் சிக்குபவை நல்லனவும், கெட்டனவும்தான். துயரங்களின் விடிவு எனக்கும் என்னோடு கூட நடப்பவர்களுக்கும் தேவைப்படுகிறது. அதற்காக எனது பேனையை நான் திறந்து வைத்திருக்கிறேன்.

1983-ல் எனது சிறுகதைத்தொகுதி வெளிவந்தது. ஒரு நிர்பந்தம் காரணமாக அதை வெளியீடாகக் கொடுத்தேன். விபவியின் அவ்வாண்டின் சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான விருதினை அது வென்றது. பலவிதமான விமர்சனங்களையும் நான் பெற்றுக்கொண்டேன். வடபிரதேச உள்ளுராட்சித் திணைக்களம் நடாத்திய போட்டியிலும் அந்தத் தொகுதிக்குப் பரிசு கிடைத்தது. இது ஒன்றும் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னையம் ஒரு நல்ல எழுத்தாளரென்று ஒரு சிலர் ஏற்றிருக்கின்றார்கள் என்பதற்காகச் சொல்கின்றேன்.

கேள்வி: உங்களது எழுத்துகள் அதிகமாக வெளிவருகுதில்லை என்கிற குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில்?

நந்தினி : அதிகம் எழுதுவதில் எனக்கு நாட்டமில்லை. 1983 கலவரத்தில் எனக்கேற்பட்ட சில அனுபவங்கள் 2003-இல் தான் என்னால் எழுத முடிந்தது.

தயாரிப்பு அந்தரம் எதுவும் எனக்கில்லை. ஒரு கதையை எழுதும்போது நான் பயத்துடன்தான் எழுதுகிறேன். இக்கதை நன்றாக வருமா என்கின்ற தயக்கமே அது. நான் முதல் கதை எழுதும்போது என்ன மனநிலையோடு அக்கதையை எழுதினேனோ அதே மனநிலையுடன்தான் இப்போதும் ஒரு கதையை எழுதத் தொடங்குகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இன்னும் ஒரு ஆரம்ப எழுத்தாளனாகவே என்னை எண்ணிக்கொள்ளுகிறேன்.

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் தங்களது அரசியல் இலக்கிய நிலைப்பாடுபற்றிக் கூறமுடியுமா?

நந்தினி : இந்த நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சுலபமாகத் தீர்ந்துவிடக் கூடியதெனச் சொல்ல முடியாது. பேரினவாத, குறுந்தேசியவாத சக்திகளின் ஆதிக்கத்துள் தம்மைப் பிணித்துக் கொண்டுள்ளவர்கள் தமது இலாப அரசியலைக் கொண்டு நடத்த எமது பிரச்சனைகளை ஒரு சாட்டுக்காகத் தூக்கியிருக்கிறார்கள். எனவே இந்த நிலையில் சாதுரியமாக நடந்து நமது இலக்கை அடைவது என்பது சாத்தியப்படுமா என்பதே இப்போதுள்ள பிரச்சனை. எனவே நாம் விலைபோகாத நிலைப்பாட்டில் நிதானமாகப் பயணிக்க வேண்டும். சர்வதேச பாடங்களை நாம் படிப்பினையாகக் கொண்டு எமது வழி தொடர வேண்டும்.

பாராளுமன்ற அரசியலின் பங்கலோட்டுத்தனம் அம்பலமாகியுள்ளதை மீண்டும் ஒருமுறை நாம் கண்டிருக்கின்றோம். பிரதேச வாதத்தைத் தூண்டி நம்மைத் துண்டாடும்  சக்திகளையும் இனங்கண்டுள்ளோம். இன, மத, மொழி, பிரிவினையைத் தூண்டும் சக்திகளும் இவையேதான். இவற்றிற்கெதிராக நல்ல சக்திகளை ஐக்கியப்படுத்தவும், போரிடவும் கூடிய இலக்கியங்களை நாம் படைக்க வேண்டும்.

கேள்வி: இதுவரை காலம் வெளிவந்த இலக்கியங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் எடுத்தாளப்பட்ட முறைகளும், அவ்வகை இலக்கியங்களின் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்களும் பற்றிக் கூறமுடியுமா? இவ்வகை இலக்கியங்கள்தலித்’  இலக்கியமென இன்று வகைப்படுத்தப்படுகின்றனவே? இவைபற்றிய உங்களது கருத்துக்கள் என்ன?

நந்தினி : ஒடுக்கப்பட்ட மக்கள் எனப்படும்போது சாதிரீதியாக ஒடுக்கபட்டோரைப் பற்றி நீங்கள் கேட்பதாக நான் கருதுகிறேன். வடபிரதேசத்தில் சாதிரீதியாக ஒடுக்கபட்டோர் பள்ளர், பறையர், நளவர், அம்பட்டர், வண்ணாரென ஐந்து சாதியாக ‘பஞ்சமர்’ என அடைமொழியிட்டுக் கூறுவார்கள். பள்ளர் சமூகத்துள், பறையர் சமூகத்துள் அல்லது நளவர் சமூகத்துக்குள் பல பிரிவுகள் உண்டு. ஒரே இனமாக இருந்தாலும் கலியாண உறவுகள், நன்மை தீமைகளில் ஒரே சாதிக்குள் பல பிணக்குகளை அவர்கள் கொண்டிருந்தார்கள். கொண்டிருக்கிறார்கள்.

பள்ளர், நளவர், பறையருள் ஆர் சாதியில் உயர்ந்தவர் என்ற பாகுபாடும் இப்போது இருக்கிறது. இவர்களுக்குத் தலைமுடி வெட்டவோ, அல்லது துணி வெளுக்கவோ இந்த வண்ணான், அம்பட்டர் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளாளரிடம் குடிமைகளாக இருந்த இவ்வகை ஐந்து சாதியினரிடமும் ஒரு ஐக்கியம் பேணப்படவில்லை. பள்ளர், நளவர், பறையருக்குத் துணிவெளுக்க தனியே ஒரு சாதி இருந்தது. அதனைத் ‘துரும்பர்’ என்று சொல்வார்கள். இவர்கள் ஒரு விதத்தில் பள்ளர், நளவர், பறையரின் குடிமைகளாக இருந்தனர். நானறிந்தவகையில் நொடுங்காலம் பள்ளர், பறையர், நளவருக்கு தலைமுடி வெட்ட ஆளில்லாதிருந்தது. அப்படியொரு நிலைந்தபோது இந்தியாவிலிருந்து வந்த அருந்ததியர் சமூகத்தவர்களில் ஒருசிலர் சவரத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்கள்.

வடமராட்சியில் பள்ளர் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய பிரிவாகிய ஒரு பகுதியினைச் சேர்ந்த ஒருவர் ஏதோ ஒரு குற்றத்திற்காகச் சிறை சென்றபோது அங்குப் பழகியவந்த தலைமயிர் வெட்டும் கலையை ஊருக்குள் செய்யப் புகுந்து, ‘அம்பட்டக்கந்தன்’ எனப் பெயர் பெற்று ஒதுக்கபட்டதை நானறிவேன். பின்னர் இந்தத் துரும்பு சமூகத்தவர்களில் பலர் சிகை அலங்கரிப்பு தொழிலைப் பயின்று இன்றுவரை தொடர்வதையும் நானறிவேன். இவைபற்றிக் கூறும்போது ஓர் உண்மையை நாம் மறக்க முடியாதுள்ளது.

சாதியில் குறைந்து படித்து முன்னேறிய சிலர் உத்தியோகம் பெற்று தம்மை வெள்ளாளராகப் பாவித்து, தனது சமூகத்தினரை ஒதுக்கி அல்லது தாம் ஒதுங்கி வாழ்கின்ற நிலையும் இருக்கிறது.

ஆனால் அடிப்படையில், சமூக விடுதலை வேண்டியோர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆகர்சத்தால் ஆரம்பத்தில் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ என்ற ஒன்றை ஏற்படுத்தி ஆலய தேனீர்கடைப் பிரவேசத்தை செய்தனர். இந்த உத்வேகம் யாழ்ப்பாணத்தில் வில்லூன்றி மயானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  மரணமான முதலி சின்னத்தம்பியின் மரணத்தோடு பெரிதாக வளர்ந்தது. எம்.சி.சுப்பிரமணியம் போன்றோரும் ஒடுக்கபட்டோர் மத்தியிலிருந்து இலக்கியவாதிகளாக முகிழ்ந்த எஸ்.பொனனுத்துரை – டானியல், டொமினிக் ஜீவா, என்கே.ரகுநாதன் போன்றோரும் இதற்குள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

இந்த நிலையில் ஒரு மாற்றம் 1966-களில் ஆரம்பிக்கிறது. ‘சாதி அமைப்புத்தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என்ற கோசத்துடன் அக்டோபர் 21-இல் சுன்னாகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் அது தடுக்கப்பட்ட நிகழ்வுகளுக்குப் பின்னர் நீண்டகாலம் ஒழிப்பு வெகுஜன இயக்கம் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்டது. ‘அடிக்கு அடி’ எனும் இலட்சியத்துடன் உருவான இவ்வியக்கம் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம், பன்றித்தலைச்சிஅ ம்மன் ஆலயப்பிரவேச போராட்டங்களையும் நிச்சாமம், அச்சுவேலி, கொடிகாமம், கன்பொல்லையெனச் சாதியத்திற்கெதிரான போராட்டங்களையும் நடாத்தியது. பிரசித்தி பெற்ற கலை இலக்கியங்கள் இக்கால கட்டத்தில் உருவாகின. டானியலின் பஞ்சமர் வரிசை நாவலர்கள்,  ‘கந்தன் கருணை’ நாடகம், கவிஞர்கள் சுபத்திரன் கணேசவேல் போன்றோரின் கவிதைகள், பெனடிற்பாலன் போன்றோரின் சிறுகதைகள் பல வெளிவந்தன. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தோளோடு தோள் கொடுத்துப் போராடிய உயர் சமூகத்தவர்களையும், முஸ்லீம் தோழர்களையும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தன்னுள் கொண்டிருந்தது. இன்று தமிழ் பேசும் மக்களின் போராட்டங்களுக்கு முதல் அத்தியாயமாக அல்லது முன்னுரையாக அப்போராட்டங்களை இனங்காண முடியும்.

இலக்கிய ரீதியாக எம்மால் செய்ய முடிந்தது பெரிதெனக் கூறிக்கொள்ள அல்லது பெருமிதப்பட என்னால் முடியவில்லை. எங்கள் மத்தியிலே புரையோடிப்போயுள்ள சாதிமுறை இன்னும் மிகவும் வலிமையோடு இருப்பதை நான் அனுபவ ரீதியாக உணர்கிறேன். இன்னும் வடபகுதியின் கோவில்களின் கதவுகள் அடைக்கப்பட்டே இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் கூட இந்தளவு ஒதுக்கப்படும் தன்மைகள் இருப்பதை அறிகிறேன். தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் புலம் பெயர்ந்து ஒதுக்கப்பட்ட தொழில் செய்தாலும், சாதிபார்க்கும் ஒரு நிலை இருக்கிறது. இன்னும் சாதிக்குள் சாதி இருக்கிறது. இவற்றைப் பற்றி வெளிவந்த இலக்கியம் குறைவு.

டானியல் தனது சமூகத்தைப் பற்றி எழுதவில்லையெனக் குற்றஞ்சாட்டப்படுகின்றார். எஸ்.பொ தனது சாதியை விட்டு உயர் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்து பெரிய சாதிக்காரனாகி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு.டொமினிக் ஜீவா மல்லிகை ஆசிரியராக அறியப்பட்டதை விடச் சமூகம் சார்ந்த எழுத்தால் அறியப்பட்டது மிகமிகக் குறைவு. என்னைப்பொறுத்தவரையில் சமூக உணர்வு, சமூக விடுதலை பிரக்ஞையெல்லாம்  எமது எழுத்தாளர்களுக்கு இப்போது அருகிவிட்டதாகவே படுகின்றது. அங்கீகாரத்துக்கும், சமூக அந்தஸ்துக்கும் சாதியையும் இலக்கியத்தையும் பயன்படுத்தும் போக்கிற்கு நமது எழுத்தாளர்களும் ஆள்போட்டு விடக் கூடாது என்பதில் நான் ஒரு கடும் போக்காளனாக இருக்கின்றேன்.

விடுதலை என்பது சாதி, இன, மத வர்க்க ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இருக்க வேண்டும். ஒரு உண்மையான மக்கள் இலக்கிய படைப்பாளி இதனை ஏற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும்.

தலித் இலக்கியம் என்று எமது எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கவில்லை.ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதியபோது அவற்றை ‘வர்க்க இலக்கியமாகவே ‘படைத்தார்கள். எனவே ஈழத்து இலக்கியம் ஒருகாலத்தில் ‘இழிசனர்’ இலக்கியம் எனச் சனாதனிகளால் பார்க்கப்பட்டபோதும் ‘மக்கள் இலக்கியமாகவே’ இன்னும் பேசப்படுகின்றது.

இன்று தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறை மிகைப்பட்டு இருப்பதினால் சாதிப்பிரச்சனை வெளியே தெரியாது அமுக்கப் பட்டு இருக்கிறது.ஆயினும் அது உள்ளரப் புகைந்து கொண்டு இருக்கிறது. இதனை என்னால் பகிரங்கமாகவும் அனுபவபூர்வமாகவும் சொல்ல முடியும்.

கேள்வி: இறுதியாக இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் ஆலோசனைகள் என்ன?

நந்தினி : நான் அறிவுரை கூறுமளவுக்கு பெரும் அறிஞன் அல்ல. ஆயினும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேற்பட்ட வாசிப்பு அனுபவமுடையவன் என்ற முறையில் சில விசயங்களைக் கூற முடியும். நிறைய வாசியுங்கள். தேர்ந்து வாசியுங்கள். இலக்கியத்தில் புதிய உத்திகளைக் கையாளுங்கள். அவை மக்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கட்டும். மேதைமை மிக்கவர்களுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் படைப்பு முயற்சியில் ஈடுபடாதீர்கள். உங்களது படைப்பின் முதல் வாசனாக வாசகியாக நீங்களே இருங்கள். உங்களது படைப்புக்கள் உங்களுக்குப் புரிந்தால் அதுவே உமக்கு வெற்றி.

நல்ல திரைப்படங்கள், நல்ல சஞ்சிகைகளை, தொலைக்காட்சிப் படங்களைப் பாருங்கள். அவைபற்றிக் கருத்தாடுங்கள். முக்கியமாக எழுதுங்கள். திரும்பத் திரும்ப எழுதுங்கள். இதுவே உங்களுக்கு எனது அன்பான ஆலோசனையாகும்.

00000000000000000000000000

நந்தினி சேவியர் பற்றிய சிறுகுறிப்பு :

இவர் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தேவசகாயம், றோசம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வர். நெல்லியடி, திரு இருதயப் பள்ளியிலும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியிலும், கொக்குவில் தொழிநுட்ப கல்லூரியிலும் கல்வி பயின்றவர். இவர் சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதை எழுதுவதில் சிறப்பான இடத்தை வகிக்கிறார். கட்சி நிலைப்பாட்டுக் கப்பால் மார்க்சிய சித்தாந்தத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். சாதிக கொடுமைக்கெதிரான போராட்டங்களில், இவர் பங்குகொண்டிருக்கிறார் என்பதை இவரது படைப்புகளிலும் நேர்காணல்களிலும் இனங்காண முடியும். படைப்பிலக்கியத்தில் உண்மையும், எளிமையும் இவரது சிறப்பு.

இன்பராஜன்

நன்றி : கலைமுகம்-இலங்கை

இதழ் 15-2014

தட்டச்சில் உதவி : தேசிகன் ராஜகோபாலன்

00000000000000000000000000

பிற்குறிப்பு : கலைமுகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எமிலின் அனுமதியுடன் இந்த நேர்காணல் மீள் கவனக்குவிப்பு செய்யப்படுகின்றது. இந்த நேர்காணலை எமது கவனத்துக்கு கொண்டுவந்த மேமன் கவி அவர்களுக்கும் எமது நன்றிகள்

நடுகுழுமம் 15 ஐப்பசி 2021

நடு லோகோ

 

(Visited 118 times, 1 visits today)