ஆசிரியர்குறிப்பு

 

தலைகுனிந்த ஈழத்து இலக்கியப்பரப்பும் மண்டியிட்ட எழுதுகோல் முனையும்

 

ஆசிரியர் குறிப்புவணக்கம் வாசகர்களே ,

முதன்முதலாக ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக உங்களிடம் தொடர்பாடுவதில் நாம் பேருவகை அடையவில்லை .கருத்தியல் வறட்சி நிலைகள் அதனுடாகக் கிளர்ந்தெழுந்த வன்முறை உளப்பாங்குகள் தாயகத்தின் வடக்குப் பகுதியில் மீண்டும் தலைவிரித்தாடுவதை வெஞ்சினம் கொண்டு நோக்குகின்றோம்.

ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பை இருண்ட காலம் ஒன்று ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது ஒற்றைப்படைத்தன்மையான எழுதுகோல்களே கோலாட்சி செய்து கொண்டிருந்தன. மாறாக எழுதிய எழுதுகோல்களின் முனைகள் துப்பாக்கிகளால் சிதைக்கப்பட்டன.இத்தகைய கருத்தியல் வறட்சி போக்குகளால் பல எழுதுகோல்கள் தம்மை மௌனமாக்கிக் கொண்டன. 2009 களிற்குப் பின்னர் ஈழத்து எழுத்துப் பரப்பில் ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவதாகவும் ஓர் படைப்பாளிக்குரிய படைப்புச்சுதந்திரங்கள் காத்திரமான நிலையில் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் தாயகத்தின் பல பகுதிகளில் “இருண்டகாலம்” விதைத்துச் சென்ற கருத்தியல் வறட்சி மனோபாவம் இன்றும் மறையாது ஆழமாக வேரோடியிருப்பதை, ஊடகவியலாளர் அருளினியன் ஊடகவியலாளர் சந்திப்பிலே தனது நேர்காணல் ஒன்றிற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டதன் ஊடாக எம்மால் உணரமுடிகின்றது.

தொழில் நுட்ப வளர்ச்சிகளினால் அண்மைக்காலமாக ஓர் படைப்பு வெளியாக முன்னரே அது குறித்து ஆருடங்கள் கூறப்படுவதும், படைப்பாளி சார்ந்து இருக்கின்ற இலக்கிய அரசியல் அல்லது குழுமச்செயற்பாடுகள் காரணமாக படைப்பாளிக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற “இலக்கியக்கலகங்கள்” பிரசித்தி பெற்றிருக்கின்றன.இத்தகைய இலக்கியக் கலகங்கள் ஒருவகையில் படைப்பாளிக்கு இலவசவிளம்பரமாகவும் அவனது படைப்பின் விற்பனையை கூட்டுவதாகவும் அமைவதை இந்த இலக்கியக் கலகக்காரர்கள் ஏனோ உணருவதில்லை.அதே வேளையில் இந்தக்கலகமானது வெறும் காழ்ப்புணர்வில் உருவாக்கப்பட்டு “கேரளா டயரீஸ்” இன் அட்டைப்படம் கணனியின் துணைகொண்டு மாற்றியமைக்கப்பட்டு பல அப்பாவி இளையவர்களை அருளினியனுக்கு எதிராகத் தூண்டி விட்டு ஓர் படைப்பு வெளியீட்டு நிகழ்வையே தடுத்து நிறுத்தி வைக்கும் அளவுக்கு பரிணாமம் பெற்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அருளினியனது நூல் வெளியிட்டை முடக்குமளவு மூர்க்கமான கலகக்காரர்களின் பகைப்புலங்களை எடுத்து நோக்கினால், அருளினியனது படைப்பான “கேரளா டயரீஸ்” ஆறுமுகநாவலரின் கறுப்பு பக்கங்களை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. இந்த கேள்விக்குட்படுத்தலானது அறுமுகநாவலரின் அடிபொடிகளான “சனாதனானிகளை” கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருக்கின்றது.ஏனெனில் “யாழ்மையவாதமும்” அதன் கைப்பிள்ளையான “யாழ்மேட்டிமையும்” ஆறுமுகநாவலரின் சாதீயம் தொடர்பாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களிலேயே வளர்க்கப்பட்ட கருத்துருவாக்கமாகும். நூல் வெளியீட்டு நிகழ்விற்கு அனுமதி வழங்கிய யாழ்இந்துக்கல்லூரி பின்னர் இந்த சனாதனானிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்ததன் விளைவாக தனது வரலாற்றில் கறுப்புப் பக்கத்தை வரைந்துள்ளமை கடுங்கண்டனத்துக்குரியது.

000000000000000000

ஒரு படைப்பாளியே தன்னை சுற்றி இருக்கின்ற சமூகத்தின் மறுபக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றான். அதற்கு அவன் கொடுக்கின்ற விலைகளும் அதிகம். ஆனால் அதற்காக அவன் யாரிடமும் பகிரங்கமாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு தனது படைப்பை வெளிக்கொண்டுவந்ததாக சரித்திரம் இல்லை. இத்தகைய போக்கு சங்ககாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள ஓர் விடயமாகும்.ஓர் படைப்பாளியின் படைப்புக்கு அச்சுறுத்தல் வரும் பொழுதோ அல்லது கொலை மிரட்டல் வரும்பொழுதோ அவன் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.அவன் தனது படைப்பையே முற்றுமுழுதாக நிராகரித்து தன்னையும் தனது எழுத்தையும் காக்கத்தவறிய சமூகத்தில் தனது எழுதுகோலை மௌனிக்க செய்வதேயாகும். இந்த விடயத்தில் அருளினியன் ஓர் படைப்பாளியின் அறத்தை மீறிப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதன் ஊடாகப் படைப்பாளிகளது படைப்புச் சுதந்திரத்தைக் கேலிப்பொருளாக்கி இருக்கின்றார். இப்படியான வேலைகளை “எழுத்து விபச்சாரர்களே” செய்வர். நூல் வெளியீட்டுக்காக தனது முன்னைய படைப்புக்காக பகிரங்கமாக மண்டியிட்டு மன்னிப்புகேட்கின்ற அருள்இனியனது போக்கானது ஈழத்து இலக்கிய படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சாவு மணியாகும்.

000000000000000000000

நடு லோகோஒருவரது படைப்பை வெளியிடாது முடக்குதல், அதற்காக உள்ளடி வேலைகளை செய்தல், படைப்பாளிக்கு உயிர் மனரீதியாக அச்சுறுத்தல்களை விடுத்து படைப்பாளியைப் பணிய வைத்தல் போன்ற செயற்பாடுகள் ஒருபுறத்திலும்,அழுத்தங்களுக்கு அஞ்சி மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பது போன்றவை மற்றதொருபுறத்திலும், ஈழத்து எழுத்துப்பரப்புக்கு வருங்காலங்களில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவல்லன. இத்தகைய இருவகையான இழிபோக்குகளை நடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

நடு குழுமம்

(Visited 65 times, 1 visits today)