விக்கிரகம்-கவிதை-கருணாகரன்

 விக்கிரகம்

கருணாகரன்

வந்த நண்பனைத் தேடினேன்
கழிப்பறையில் உரையாடிக்கொண்டிருந்தான்
கதவைத் திறந்து “வெளியே வா“ என்றழைத்தபோது
“நீ கதவைத்திறந்தது குற்றம்“ என்றான்
பிறகு,
அதைப்பற்றிய விவாதத்திலேயே முடிந்தது அன்றைய நாள்
அப்படியே அந்த உறவும் முறிந்து போயிற்று.
அத்தனை விவாதத்தின் பின்னும்
கழிப்பறையில் எதற்காக உறங்கினான் என்று தெரியவில்லை இன்னும்
“கழிப்பறைக்கும் கர்ப்பக்கிரகத்துக்கும் வித்தியாசங்களில்லை
கழிப்பறையே சுகத்தை அளிக்குமிடம்
கழிப்பின்றிச் சுகமில்லை….“
என்றெல்லாம் எழுதி வைத்திருக்கும் அவன்
“ஒருபோதும் தான் கழிப்பதில்லை“ என்றும்
“தனக்கு கழிப்புவழி இல்லை“யென்றும் குறிப்பிட்டிருந்தான்.
“கழிப்புவழியற்றதே விக்கிரகம்
விக்கிரகமே வழிபடு தெய்வம்“ என்றெண்ணினான்போலும்.

000000000000000000

சரித்திரம்

 

சரித்திரத்தின் காலடிகள் ரகசியம் மிக்கவை
ஒரு போது அம்பும் வில்லும்
இன்னொரு போது வாளும் கேடயமும்
பிறகு துப்பாக்கியும் பீரங்கியும்
மாடங்களும் அந்தப்புரங்களும்
ஆடல்மகளிரும் சபைப் புலவர்களும்….
எப்போதும் மணிமகுடங்களும் சிம்மாசனமும்
வரலாற்றின் வழி ரொம்ப அழகாகவும் பெருமையாகவும்தானிருக்கிறது
தலைவர்களும் தளபதிகளுமாக.
சரித்திரத்தின் பேரேடுகளில்
சனங்களைக் காணவில்லை
அவர் பசித்திருந்த நாட்களும்
வழியழியத் தவித்திருந்த நாட்களும் கூட இல்லை
அவர்கள் இருப்பிடங்களின் சாயலுமில்லை.
சரித்திரத்தின் காலடிகள் ரகசியம் மிக்கவை
குரோதமானவையும் கூட
பொய்யும் வர்ணனைகளும் சாகஸமும்
அதிகாரமும் கண்ணீரும் நிரம்பியவை.
இப்படியே காலப் பெருவழியில்
அழியும் சுவடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
அதில் உன் தந்தையின் காலடியும் தாயின் நிழலும்தான்
பிறகொருநாள் உன் முகமும் உன் குழந்தையின் பெயரும்தான்.
00 – 00

கருணாகரன், இலங்கை

கருணாகரன்

(Visited 58 times, 1 visits today)