‘தடுமாற்றங்களின் பதற்றம்’-குறுக்கும் மறுக்கும் 03-கருணாகரன்

ஈழத்தமிழ் இலக்கியத்தில் செயற்படுவோரிடத்திலும் அதையொட்டிய செயற்பாட்டுத்தளத்திலும் தடுமாற்றங்கள் நிறைய உண்டு என்பதற்கு கடந்த “நடு”இதழில் நான் எழுதிய தன் மோகத்தின் அபத்தம்” என்ற கட்டுரையையொட்டி முகநூல் பக்கங்களிலும் பிற இடங்களிலும் பகிரப்பட்ட விடயங்கள் சான்று. முக்கியமாக அந்தக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தையும் அதில் முன்வைக்கப்பட்ட அடிப்படையான விடயங்களையும் சிலர் புரிந்து கொள்ளாமல் வேறு எதையோவெல்லாம் பேசியிருக்கிறார்கள். அல்லது புரிந்து கொள்வதற்குத் தவறுகின்றனர். இதனால் கட்டுரை சுட்டிய  பொருட்பரப்புக்கு வெளியே தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் மனத்தாங்கல்களையும் தவறான முறையில் இறக்கி வைக்க முற்பட்டுள்ளனர். குறிப்பாக அந்தக் கட்டுரையில் வகை மாதிரிக்குக் குறிப்பிடப்பட்ட பெயர்களைப் பட்டியலாக்கக் குறைபாடாக உணர்ந்து, அதைப்பற்றிய கண்டனங்களையும் கேலிப்படுத்தல்களையும் செய்துள்ளனர் சிலர்.

கருணாகரன்தமிழ் இலக்கியத்தில் ஈழத்தில் தான் இலக்கியப் பட்டியல் மோகம் தலை விரித்து ஆடுகிறது. அண்மையில் இந்த மோகத்தை மீளவும் புதுப்பித்து இருக்கிறார் கவிஞர் கருணாகரன் அவர்கள். ஈழத்து படைப்பாளிகள் மீதான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து எழுதி இருக்கும் பகுதியில் சில படைப்பாளிகள் பெயர்கள் மட்டும் இடம் பெற்றிருக்கிறது. பல படைப்பாளிகளின் பெயர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அல்லது மறைக்கப்பட்டிருகிறது. இவர் பட்டியலிட்ட எத்தனை பெயர்கள் இப்போதும் இயங்குகிறார்கள்? ஒரு படைப்புடன் அல்லது எழுத்தாளர் என்ற பெயருடன் இயங்கி புதைந்து போனவர்கள் தான் அதிகமாக அடங்கி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் படைப்பாளிகள் எத்தனை பேர் மற்றப் படைப்பாளிகள் மீதும் படைப்புகள் மீதும் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்? (கருணாகரன் இதுவரை எத்தனை படைப்பாளிகளின் படைப்புகள் மீது விமர்சனங்கள், கருத்துக்கள் முன் வைத்திருக்கிறார்?) ஒருவர் ஒரு ஆய்வுக் கருத்துக்களை முன் வைக்கும்போது ஆழமாகத் தேடித் தெளிவடைந்து முன் வைக்க வேண்டும். தவிர அவசரத்தில் கருத்துக்கள் முன் வைப்பது சிறந்ததாக அமையாது. உதாரணத்திற்கு புலம் பெயர் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் நோயல் நடேசன் பெயரை மறந்திருப்பிருப்பது ஏளனத்திற்குரியது. இவ்வாறான பட்டியல் மோகத்தால் தொடர்ந்து இயங்குவர்கள் மத்தியில் இலக்கியத்தின் மீதான சலிப்புத் தன்மை ஏற்படுத்தி விடுகிறது.”பட்டியல் மோகத்தால் அழியும் எழுத்து” என்று கூறியிருக்கிறார் கோ. நாதன்.

இதை வழிமொழிவதாக எல்லாருமே ஒருவகை மென்டல்கள்தான்” என்று பரதன் நவரத்தினமும் கருணாகரனின் கட்டுரை ஒரு வெள்ளாட்டு மேய்ச்சல்தான்” என ஆஸி கந்தராஜாவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப்போல ராஜ் கவுதமன் என்ற முகநூல் நண்பர் ஒருவரும் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தில்தான் இலக்கியப் பட்டியல் மோகம் தலைவிரித்து ஆடுகிறது எனும் கோ. நாதனின் கருத்து சரியானது. இத்தகைய பட்டியல் போடுதல்கள் எமது இலக்கியப் பாலங்களை உடைத்தே விடும்” என்று தன்னுடைய பதிவில் (பதட்டத்தோடு) குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புரிதலும் பார்வையும்  என்னுடைய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட விடயத்தின் அடிப்படை உண்மையையும் நியாயத்தையும் அதற்கான விவாதத் திசையையும் மாற்றி விடக்கூடியன. ஏற்கனவே அந்தக் கட்டுரையில் நம்முடைய சூழலில் நிலவுகின்ற கவலைக்குரிய பல விடயங்களுடன் கவனப்படுத்தப்பட வேண்டிய முக்கியமான பத்துக் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவர்களுடைய கருத்துகளைப் படிக்கும்போது மேலும் பல பத்துக் குறைபாடுகளையும் சூழலில் உள்ள யதார்த்தங்களையும் நாம் பட்டியலிட்டுக் காட்டத்தான் வேண்டும் போலுள்ளது.

அந்தக் கட்டுரையானது பிரதிகளை விரிந்த தளத்தில் வாசிப்பது, விமர்சனங்களை முன்வைக்க வேண்டியிருப்பது, எழுத்தாளர்களை (பிரதியாக்குநர்களை ) அல்லது கலை வெளிப்பாட்டாளர்களைக் கவனம் கொள்வது, கவனப்படுத்துவது, அவர்களுடைய தகுதியை – பெறுமதியை மதிப்பது, கௌரவிப்பது, அதன் மூலமாக அவற்றை உருவாக்கியோரையும் அவற்றையும் சமூகமயமாக்குவது, அதன் வழியாக சமூகத்தைப் பண்படுத்துவது, விரிவாக்குவது போன்ற செயற்பாடுகளின் தேவையையும் அது போதாமையாக உள்ளதையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டது. அதற்கு உதாரணப்படுத்தத் தேவையான எழுத்தாளர்களின் பெயர்களையும் சில விருதுகளையுமே குறிப்பிட்டிருந்தேன். இதன்போது வகை மாதிரிக்குப் பொருத்தமான பெயர்களிற் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்களைப் “….போன்றோரையும்….” “…போன்றோரின்….” பிரதிகளையும் என்றே எழுதியிருந்தேன்.

இதில் மேற்படி நண்பர்கள் கருதுவதைப்போல பட்டியற்படுத்தும் அடிப்படை எங்கே உண்டு? “போன்றோர்”, “போன்றவை” என்றால் இவர்களைப்போல அல்லது இவற்றைப் போல இன்னும் உண்டு, மேலும் உள்ளன என்றே பொருளாகும் அல்லவா! இதைக் கடந்து அப்படிப் பட்டியற்படுத்துவதாகக் கருதினாலும் கூட, அந்த இடத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்களுடன் “…ஆகியோர்…” – “….ஆகியன…” என்று வந்திருந்தால்தான், அந்தப்பட்டியலில் உள்ளோர் மட்டுமே அல்லது அவற்றில் குறிப்பிடப்பட்டவை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டதாகக் கருதலாம். ஆனால் அப்படி எந்தச் சொல்லும் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. தவிர, கட்டுரையின் உள்ளடக்கமோ தொனியோ பட்டியல்படுத்துவதற்கான அடிப்படைகள் எதனையும் கொண்டதல்ல. அதன் பேசு பொருளும் நோக்கும் வேறு. இது வேறு.

இதைப்போலவே தமிழ்நாட்டிலும் கனடாவிலும் அளிக்கப்படும் சில விருதுகளின் பெயர்களையும் உதாரணப்படுத்தும்போது “…..எனப் பல தரப்புகளின் விருதுகள்” எனவும் விமர்சனங்களை முன்வைப்போரைப்பற்றிச் சொல்லுகையில் “….போன்ற பலருடைய விமர்சனங்கள், கவனத்தைக் கோரும் கட்டுரைகள்…” எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலும் எந்த இடத்திலும் “இவை மட்டுமே” என்றோ “ஆகியவை” என்றோ “… ஆகியோர்….” எனவோ குறிப்பிடப்படவில்லை. எனவே இந்தக் குற்றச்சாட்டையும் தவறான புரிதலையும் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களின்  பெயர்களை விட சாத்திரி, நடேசன், ஆஸி. கந்தராஜா, பொ. கருணாகரமூர்த்தி, தாமரைச்செல்வி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,  அ. இரவி, ஆழியாள், உமா வரதராஜன், சோலைக்கிளி, சித்தாந்தன் லெ.முருகபூபதி போன்ற மேலும் சிலர் தமிழகச் சூழலில் அறியப்பட்டோராக உள்ளனர் என்பது உண்மையே. அதைப்போல விருதளிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் பலவுமுண்டு. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடவில்லை என்பதற்காக அவர்களையோ அவற்றையோ குறைத்து மதிப்பிடுவதோ புறக்கணிப்பதோ  நோக்கமில்லை. ஆற்றலுள்ளோரையும் திறனுடைய அமைப்புகளையும் எவரும் எந்த நிலையிலும் புறக்கணிக்கவோ மறைக்கவோ முடியாது. “சூரியனைக் கைகளால் மறைக்க முடியாது” என்ற அறியப்பட்ட உண்மையையே இங்கே மீள நினைவூட்ட வேண்டியுள்ளது.

ஆகவே ஈழம் மற்றும் புலம்பெயர் சூழலில் இருந்து வருகின்ற எழுத்துகளைப் பற்றிய விமர்சனங்கள், அறிமுகங்கள், மதிப்பீடுகளை முன்வைப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போதும் சில பெயர்களை வகைமாதிரியாகக் குறிப்பிட்டுள்ளேனே தவிர, குறிப்பிட்ட பெயர்கள் மட்டும்தான் இதில் இயங்குகின்றனர், ஏனையோர் மறைக்கப்படுகின்றனர் என்றில்லை. அப்படியென்றால் அவை பற்றிய முழுமையான ஆராய்ச்சியுடன் வேறான பொருட்பரப்பில் அதைப்பற்றி எழுத வேண்டும். அது வேறு. இது வேறு.

இங்கே என்னுடைய கட்டுரையை அணுகுவதில் அடிப்படையான இரண்டு தவறுகள் நடந்துள்ளன. ஒன்று கட்டுரை பேசிய அடிப்படையான பிரதிகளை வாசிப்பது, விமர்சிப்பது, எழுத்தாளர்களை (பிரதியாக்குநர்களை ) அல்லது கலை வெளிப்பாட்டாளர்களைக் கவனம் கொள்வது, கவனப்படுத்துவது, அவர்களுடைய தகுதியை – பெறுமதியை மதிப்பது, கௌரவிப்பது, அதன் மூலமாக அவற்றை உருவாக்கியோரையும் அவற்றையும் சமூகமயமாக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறை கொள்வதைத் தொடர்ந்தும் மறுதலிக்க முற்படுவது. இரண்டாவது, பட்டியல் தொடர்பான பதட்டத்தை முன்னிறுத்தி விவாதத்தை வேறு திசையில் நகர்த்துவது. இவை இரண்டும் மிகப் பிழையானவை. இது கட்டுரை வலியுறுத்துகின்ற, எதிர்பார்க்கின்ற சாதகமான விளைவுகளுக்குப் பதிலாக பாதகமான அம்சங்களை மேலும் உருவாக்கக் கூடியன. எனவேதான் இந்தப் பதிற்குறிப்பை இங்கே எழுத வேண்டியுள்ளது.

உண்மையில் கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதைப்பற்றிக் குறிப்பிட்டோரும் பேசியோரும் உள்ளனர். உதாரணமாகஇலங்கை இலக்கியப் பரப்பின் – சூழமைவின் குறுக்குவெட்டுமுகம் கட்டுரையில் அழகாகக் கவனப்படுத்தப்பட்டிருக்கிறது. வாசக மனநிலை, விமர்சனப் போக்குகள், பதிப்பு முயற்சிகளின் நிலவரம், பல விடயங்களில் புலப்படும் போதாமைகள், கடக்க வேண்டிய விடயங்கள், கவனத்தைக் குவிக்க வேண்டிய அம்சங்கள், விருதுகள், படைப்பூக்கத்தின் தேக்க நிலை… இப்படி ஏராளம் விடயங்கள். சுயவிமர்சனத்தின தேவையை ஆழ்ந்து வலியுறுத்துகிறார். தமிழகம் இலங்கையைத் தாழ்வாகப் பார்த்த ஒரு காலம் இருந்தது. இப்போது அதில் குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றம் இருப்பதை கட்டுரையாளர் சுட்டிக் காட்டுவது உண்மையே. நமது தேக்கநிலை, சோம்பல், போதிய உழைப்பின்மை, உட்சுருங்கும் மனநிலை என்பவற்றில் மாற்றம் வேண்டும். கட்டுரை குறித்துக் காட்டும் விடயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. நமது இலக்கிய வெளி விரிய வேண்டும். உள்ளடக்கமும் எடுத்துரைப்பு முறையும் பாரிய மாற்றத்தை வேண்டி நிற்கிறது. இதை விவாதமாக மாற்றுவோம். ஈழத்து இலக்கிய வெளிக்கு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் தேவை”

என்கிறார் சிராஜ் மஷ்ஹூர். இவ்வாறு வேறு சிலரும் கூறியுள்ளனர். இதுதான் எதிர்பார்க்கப்பட்டது. இதுவே சரியான புரிதலுமாகும். இவ்வாறான நேர்நிலைச் சிந்தனையே சூழலை வளப்படுத்தும். அதற்கான தூண்டுதல்களைப் பல தளங்களிலும் உருவாக்கும்.

மாறாக நமது கலை, இலக்கிய வெளியும் அதற்கான செயற்பாட்டு வெளியும் போதாமைகளுடன் நீடிப்பதும் அதற்கான காரணங்களைக் கண்டு சீராக்கத் தவறுவதும் நம்மைப் பின்னடைவு நிலையிலேயே வைத்துக் கொள்ளும். இதை விடப் பாதகமானது எல்லாவற்றையும் குழப்பங்களுக்குவதாகும். இதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்களும் கவிஞர்களும் தமிழகத்தை மையப்படுத்திச் சிந்திக்கவும் செயற்படவும் முயன்று கொண்டிருக்கிறார்கள். எங்கே தங்களுக்கான கவனம் அதிகமாகக் குவிகிறதோ அத்திசையில் ஈர்ப்புக் கொள்வது இயல்புதானே. யுத்த காலத்தில் அப்படிச் செயற்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. யுத்தத்துக்குப் பிந்திய சூழலிலும் இது தொடரத்தான் வேணுமா? அது தேவைதானா என்ற கேள்வி உண்டு. யுத்த காலத்தில் நெருக்கடிகளுக்குள் இயங்கிய யாழ் இலக்கிய வட்டம், தகவம், இலங்கை இலக்கியப் பேரவை போன்ற பல அமைப்புகள் யுத்தத்திற்குப் பின்னர் கவலைக்குரிய வகையில் செயலற்று உறைந்து விட்டன. புதிய அமைப்புகள் எதுவும் தோன்றியதாகவும் இல்லை. ஆனால் அப்படியான ஊக்க அமைப்புகள் வேண்டும், ஊக்கச் செயற்பாடுகள் அவசியம் என நொயல் நடேசன் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனக்குத் தெரிய நடேசன் இப்படியான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தார். இந்த நோக்கில் கிழக்கிலே “மொழி விருது” என்ற பேரில் அதை வழங்குவதற்கான ஒரு  அமைப்பை கவிஞர்கள் அனார், நபீல், கதீர் போன்றோர் ஆரம்பித்தனர். மேலும் நடேசன், முருகபூபதி, இளங்கோ, சி. ரமேஸ், செ.யோகராசா, புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், வதிரி. சி. ரவீந்திரன், இயல்வாணன், ந.குகபரன், த. கலாமணி, செல்வமனோகரன், அருண்மொழிவர்மன், தெளிவத்தை யோசப், தி. ஞானசேகரன், கே.எஸ். சிவகுமாரன் போன்றோர் பிற எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத்துகளைப் பற்றியும் தங்கள் பார்வையை முன்வைத்து வருகின்றனர். இதற்கான இவர்களுடைய  உழைப்பும் கரிசனையும் பாராட்டுக்குரியது. இவையே வேண்டப்படுவன. இது மேலும் விரிவாக வேண்டும்.

என்னுடைய கட்டுரை சாராம்சப்படுத்திய விடயத்தையொட்டிப் பேசிய நண்பர்களில் பலரும் தேவைப்படும் செயலூக்கத்தைப்பற்றியும் செயற்பாட்டியக்கங்கள் அல்லது பொருத்தமான அமைப்புகளைப் பற்றியும் சிந்திக்கின்றனர் என்பது மகிழ்ச்சி. இது விளைவாக மாறினால் இரண்டிப்புச் சந்தோசம். ஏனென்றால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து வாழ்க்கையையும் கலை வெளிப்பாடுகளையும் செயற்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டவர்கள் முதுமை எய்திய நிலையில் உள்ளனர். இவர்களை வாழும் காலத்திலேயே கௌரவிப்பது அவசியமானது. தெணியான், தெளிவத்தை யோசேப், நந்தினி சேவியர், குழந்தை ம.சண்முகலிங்கம், அ.யேசுராசா, தி. ஞானசேகரன், எம்.ஏ.நுஃமான், எஸ்.எல்.எம் ஹனீபா, சி.சிவசேகரம், பவானி, க. சட்டநாதன், குப்பிளான் ஐ. சண்முகன், ஐ. சாந்தன், கோகிலா மகேந்திரன், அந்தனி ஜீவா, கே. எஸ். சிவகுமாரன், க. தணிகாசலம், சி. மௌனகுரு, சித்திரலேகா, திக்வல்லை  கமால், கே.ஆர். டேவிட், வ.ஐ.ச. ஜெயபாலன் எனப்பலர் உள்ளனர். இவர்களுக்கான மதிப்பளித்தல்களைச் செய்வதன் மூலம் இன்றைய தலைமுறையினரிடத்தில் இவர்களை மீள் நிலைப்படுத்த முடியும். கூடவே இவர்களுடைய பங்களிப்புகளைப் பற்றிய மீள்பார்வைகளைச் செய்வதும் நிகழும். இது ஒரு நல்விளைவல்லவா. இவ்வாறே வருகின்ற பிரதிகள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும் தேவையானது. இது எழுத்துப் பரப்பை வளப்படுத்துவதோடு அதைப் பரவலாக்கம் செய்வதற்கும் உதவும்.

இவற்றைக் குறித்துக் கவனம் செலுத்துவதே தேவைப்படுவது. மாறாக மைதானத்தில் ஓடுகின்றவருக்கு குறுக்காக  ஓடித் திசை திசைதிருப்புவதல்ல. அது ஒரு திடீர்க்கவனத்தை உண்டாக்குமே தவிர, வெற்றிக்கு உதவாது. பெறுமதியைத் தராது.

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 91 times, 1 visits today)