இரவைச் சேகரித்தவன்-கவிதை-கருணாகரன்

இரவைச் சேகரித்தவன்

கருணாகரன்
பிருந்தாஜினி பிரபாகரன்

தூக்கமற்ற இரவில்தான்
ஒரு போர் தொடங்கியதும்
முடிந்ததும்.
பார்த்தீர்களா
வரலாறு
தூக்கமற்ற இரவிலேயே தொடங்கி முடிந்திருக்கிறது.

இடையில் அது
ஆயிரமாயிரம் தூக்கமற்ற இரவுகளை
ஒவ்வொருவருடைய கால்களிலும்
கைகளிலும் திணித்தது.
பலருடைய நெஞ்சிலே
அது தீயாகக் கொழுந்து விட்டெரிந்தது
பலருடைய கண்களிலும் அது துயரில் கரைந்தது.

நானே தூக்கமற்ற இரவில்
பல ஆண்டுகளாக நடந்திருக்கிறேன்
எல்லாம் முடிந்து சாம்பலும் புதைகுழிகளும்
துயர் மேடுகளுமாயிற்று.
தூக்கமற்ற இரவோ முடியாமல்
நம்முடைய நெஞ்சிலும் எரிந்து கொண்டிருக்கிறது
நம் கண்களில் துயராக ஊறிக் கொண்டிருக்கிறது.

000000000000000000000000000

தூக்கமில்லாத இரவு

ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுத்திருக்கிறது
ஆலைகளில் விழித்திருக்கிறது
அவளோடு விழித்திருந்து
புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறது.
நாடகத்தை ஒத்திகை பார்க்கிறது
சமயங்களில் அதை நிகழ்த்திக் காட்டுகிறது.
இரவிரவாக உன்மத்தம் கொண்டு பாடுகிறது
வானத்தை அலங்கரிக்கிறது
நட்சத்திரங்களில் விளக்கேற்றுகிறது
கடலில்
அலைகளின் மீதேறிச் சவாரி செய்கிறது
தோட்டத்திலே காவலிருக்கிறது
சாலைகளில் பயணிக்கிறது
இரவுச் சோதனைக்காக காவலரோடு
ரோந்து போகிறது
இறந்து போனவரின் அருகில் விடிய விடிய
துணையிருக்கிறது
பறவைகளை உறங்க வைக்கிறது
எங்கோ தூரத்தில் ஒலிக்கும் பாடலைத்
தனியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது
தனித்திருந்து
தொலைந்து போநன கணவனுக்காக
அழுது கொண்டிருப்பவளின் அருகே
ஆதரவோடிருக்கிறது
போராளிகளோடு விழித்திருக்கிறது
சிப்பாய்களோடு காவலிருக்கிறது
நீயும் நானும் பேசிக் கொண்டிருக்கும்போது
அருகிருந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது
ரகசியங்களைக் காக்கிறது
உன்னோடும் என்னோடும் பேசிக் கொண்டிருக்கிறது
திருட்டு முத்தங்களை ருசிக்கிறது
புணர்ச்சியை வேடிக்கை பார்க்கிறது
பைத்தியக்காரனோடு அலைகிறது
காலையில் சூரியனை அழைத்து வருகிறது
பூக்களை மலர்விக்கிறது
தன்னுள்தானே எரிந்து கொண்டும்
குளிர்ந்து கொண்டுமிருக்கிறது
என் அந்தரங்கத்தை அதனிடம் தந்து
தூக்கமற்ற இரவை நான் முத்தமிட்டேன்

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 97 times, 1 visits today)