இரவைச் சேகரித்தவன் 02-கவிதை-கருணாகரன்

கருணாகரன்

தூக்கமில்லா இரவில்தான்
அந்த முற்றுகை நடந்தது
முற்றுகையிலிருந்து
முதல் வேட்டொலி கிளம்பவும்
அவர்கள்
பதறிச் சடுதியாகவே
தூக்கமில்லா இரவின் கிடங்கினுள்ளே வீழ்ந்தனர்.

தூக்கமில்லா இரவு
சட்டென
நம்மையெல்லாம் முற்றுகையிட்டுத்
தன்னுடைய மாபெரும் குழியினுள்ளே வீழ்த்தியது.

அன்றிரவு முழுவதும்
தூக்கமில்லாத இரவின் மீது
நாமும்
எங்களின் மீது தூக்கமில்லாத இரவும்
மாறி மாறித் தாக்கும்
மாபெரும் சமர் நடந்தது.

முடியாத சமர்
தொடர்ந்தும் மூன்று தூக்கமில்லாத இரவுகளில்
வளர்ந்தது.

மூன்று இரவுகளும் முடிய
கொய்யப்பட்ட தலைகளும் சிதறிய மெய்களுமாகப்
புழுத்துக் கிடந்தது திடல்
இரவும்தான்.

யாரை யார் வென்றோம்
யாரை யார் கொன்றோம்
என்றறிய முன்
எல்லோரையும் கொன்றும் வென்றும் சிரிக்கிறது
தூக்கமில்லாத இரவு.

0000000000000000000000000000000

தூக்கமற்ற இரவின் படுக்கையை
யார் திருடிச் சென்றது?
பாயுமில்லாமல் படுக்கையுமில்லாமல்
இப்படித் திருதிருவென
முழித்துக் கொண்டு
அங்குமிங்குமாக பைத்தியம் பிடித்து அலைவதும்
இடையிடையே என்னையே அது
உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதையும்
எத்தனை நாட்களுக்குத்தான் சகித்துக் கொள்வது?

இதை யாரிடம் முறையிடுவது?
இன்றும் அது என்னோடு கூடவேயிருக்கிறது
ஒரு காவல்காரனைப் போலவும்
வேவுக்காரனைப் போலவும்.

தப்பிச் செல்லும் வழிகள் எதுவும் எனக்குப் புரியவில்லை
எல்லா வழி வரைபடங்களையும்
அள்ளி
தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு
அழிச்சாட்டியம் செய்யும் வன்மத்தோடு
என்னையே அது பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த வேட்டை நாயிடமிருந்து
எப்படித் தப்பிச் செல்வது
எந்தத் துப்பறியும் படங்களிலும்
ஒரு வழியும் காண்பிக்கப்படவில்லை.

தூக்கமில்லாத இரவின் சிறையினுள்ளே
வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய தலையை
மீட்டெடுப்பதற்காகத் தூக்கமில்லாதிருக்கிறேன்
இரவு முழுவதும்.

0000000000000000000000000000000

தூங்கா இரவும் நானும் நண்பர்களாகி விட்டோம்
இனி எதற்கும் முடியாதெனும் போது
உண்டாகும் சமாதானத்தைக் குறித்து
உங்களிடம் பேதங்களும் போதங்களுமிருக்கலாம்
நானோ தூக்கத்தை யாசிக்கும் குழந்தை
மாத்திரைகளில்
தஞ்சமடைவதை விடவும்
தூங்கா இரவோடு சிநேகமாகி விடலாம்,
அது யுக வரமல்லவா.

ஆனால் அப்பொழுதுதான்
நான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருந்தது
அதுவும் இரவில்.

கனவின் வெளிகளைக் கடந்து
இமைக்க மறுக்கும் கண்களைச் சுமந்து கொண்டு
கடலலையும் மலைகளையும்
ஆற்றையும்
பெருந்தெருக்களையும்
உனக்கும் எனக்கும் வஞ்சமிழைத்த
உன்னோடும் என்னோடும் சிநேகமாயிருந்த
மனிதர்களையும்
கடக்க முடியாமல் கடந்து செல்ல
அங்கே என்னை வரவேற்றது தூங்காத இரவு

வா,

உனக்கொரு அருமையான விருந்தை வைக்கிறேன்
இரவிரவாக நாம் அதைக் கொண்டாடலாம் என்ற போது
எனக்கு மூன்றே மூன்று தெரிவுகளிருந்தன
ஒன்று அதை இறுக அணைத்து முத்தமிடுவது
மற்றது அதைக் குத்திக் கொன்று போடுவது
மூன்றாவது அதைக் கரைத்து மதுவாகப் பருகி விடுவது.

ஆனால் எதையும் நான் செய்யவில்லை
அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்
விடியும் வரை.

0000000000000000000000000000000

தூக்கமற்ற இரவைத் தோற்கடிப்பதற்காக
மருத்துவர் மாத்திரைகளால் ஒரு பொறியை வைத்தார்
எந்தப் பொறியிலும் சிக்காமலே
தந்திரமாகத் தப்பிய தூக்கமற்ற இரவு
என்னை அழைத்துக் கொண்டு வந்தது உன்னிடம்.

என்ன ஆச்சரியம்
நீயும் ஒரு தூக்கமற்ற இரவிடம் சிக்கியிருந்தாய்.

நாமிருவரும் ஒருவரையொருவர் ஆழமாகப்
பார்த்துக் கொண்டிருந்ததை
நம்முடைய தூக்கமற்ற இரவு கண்காணித்தது.
ஆனாலுமது
எங்களைக் குறித்து எந்தப் புகாரையும் கொள்ளவில்லை
நாங்கள் எதையோ பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்

வானம் நிறம் மாறி
நட்சத்திரங்கள் ஒளியிழந்து வெளிறி
பறவைகளும் பூக்களும் ஆழ்துயில் கலைந்து
உலகமொரு புதிய கோலத்தை வரையும் வரையில்
நாம் பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும்
முத்தமிட்டுக் கொண்டுமிருந்தோம்.
தூக்கமற்ற இரவு
களைத்து
சலிப்போடு தூங்கச் சென்றது.

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 131 times, 1 visits today)