வாடகை வீடு -இலக்கம் பதினெட்டு-றஹீமா பைஸல்

றஹீமா பைஸல்

இந்த வீட்டைப் பிரிந்து போவதென்பது,
உன்னை இழந்த
கடுங்குளிர் வெள்ளிக்கிழமை இரவின்
பாதித் துயரத்தாலானது!

இம்மாதம்
பதினாராம் திகதியோடு
இந்தப் பதினெட்டாம் இலக்க வீட்டில்
எனக்குக் கடைசிநாள்!

சமையலறையின்
பெரிய
கண்ணாடி யன்னல்களுக்குள் தெரியும்
குளிரில் இலை உதிர்த்த
ஓங்கி உயர்ந்த மரங்களில்
குருத்து இலைகள் துளிர்க்கும்
இளவேனிற்கால நாளொன்றில்
கருவறையில் வேரோடி வளர்ந்தாய்,.

முன் வாசல் முற்றத்தில்
“பிளாக்தோர்ன்” மரம் முழுக்க
கிளைக்குக்கிளை
வெள்ளைப் பூப் பூத்திருந்தது.

குரல்வளைப் பூக்கள் உடைந்து
இரத்தம் கசியும்
இடைவிடாத வாந்தியும் மயக்கமுமாய்,

பாதி உசிரோடு
உன் உயிர் சுமந்த என்னையும் உன்னையும்
இந்த வீடுதான் சுமந்திருந்தது.

உன்னைப் பிரசவித்தேன்!
அந்தக் காயத்தின் வலியெல்லாம்
இந்த வீடறியும்.
இதே வீட்டில்
வெறும் பதினொரு மாதக் குழந்தையாய்
உன்னைப் பிரிந்தேன்.

அந்தக் காயத்தின் வலியெல்லாம்
இந்த வீடறியும்.
இந்த வீடு
எவ்வளவுக்கெவ்வளவு விசாலமானதோ
அவ்வளவுக்கவ்வளவு
சிரிப்பொலிகளால் நிறைந்திருந்தது
கண்ணீரால் நிறைந்திருந்தது
ஏமாற்றங்களால் உடைந்திருந்தது

நீ இல்லாத
வீட்டின் அறைகள் எங்கும்
உன் நினைவுகளின் வாசனை!
கடைசி மூச்சுக் காற்றின் வாசனையை
உயிர் பிரியும் மெல்லிய ஓசையை,

இரவில்
கனவில்
கால்களைச் சுற்றிய
ஒளிரும் மின்மினிப் பூச்சியை.

பின் ஒரு நாள்
கனவில் தோன்றிய
சிறு தங்கப் பிறை நிலவை,.
இந்த
வீடு முழுக்க
நூற்றுச் சொச்சம் நினைவின் தடயங்கள்,

உன் தொட்டில் கிடந்த அதே இடத்தில்
கட்டிலை நகர்த்திப் போட்டு
உறங்கிப் பழகிய எனக்கு
இனியிங்கு அனுமதியில்லை.

வாடைகைக்கு வீடு கொடுப்பவர்கள்
எப்போது வேண்டுமானலும்
நம்மை வெளியேற்றக்கூடும்
அங்கு
உணர்வுகளுக்கு இடமில்லை.

நான், நீ, நாம்
என வாழ்ந்த இந்த வீட்டில்
யார் யாரோ வந்து வாழக்கூடும்.

இந்த வீட்டின் வாசனைத் தேர்வுகள் மாறக்கூடும்.

இந்த வீட்டின் வாசனையை,
இந்த வீட்டின் கிறுக்கல்களை,
அறை முழுவதுமாய் நிரம்பி வழியும்
ஞாபகங்களை,

யார் யாரோ வந்து வாழ்ந்து
மாற்றி எழுதக்கூடும்.
நான் போகிறேன்!

இந்த உலகமே ஒரு வாடகை வீடு தான்
என்று உணரும் போது,
நான் அமைதி கொள்கிறேன்.
நாம் வாழ்ந்த இந்த வீட்டின் சாயலில்
சுவனத்தில்
உன்னோடு சேர்த்து
ஒரு வீடு பார்த்து வை.
இந்த உலகத்தில் வாழமுடியாது போன
அந்த வாழ்வின் மிச்சத்தை
நாமங்கு வாழ்வோம்.

அங்கிருந்து யாரும்
நம்மை வெளியேற்ற முடியாது,
அங்கிருக்கும் நமக்கு
பிரிவே கிடையாது..!!!!

றஹீமா பைஸல்-ஐக்கிய இராச்சியம்

றஹீமா பைஸல்

 

 

(Visited 456 times, 1 visits today)
 
றஹீமா பைஸல்

இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன-கவிதை-றஹீமா பைஸல் ( அறிமுகம் )

இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன என் மரணம் என் மனம் விரும்புவதைப் போலிருக்க ஆசைப்பட்டேன் ……! தேதி குறித்த நாளொன்றில்… இலையுதிர்கால இலைகளைப் போல இந்த உசிர் பிரிய…….. இலந்தை இலைக்குளியல் வெள்ளைக் […]