காடுலாவுகாதை பாகம் 24- தொடர்கதை-தமிழ்க்கவி

செத்தபிறகு அப்பாத்தைக்கு இந்த மரியாதையா? ஆனால் அவா இவ்வளவு நாளும் பாயில கிடக்கயுக்க என்ன நாத்தம் உவ்வேக் …லெச்சிமிக்கு அந்த ஆச்சரியம்தான்.

“ஏனப்பு மாப்பாண முதலிக்கு வாழுங்காலத்தில ஒரு மரியாதையுமில்ல”

“இப்ப உதெல்லாம் பாக்கிறேல்லத்தானே ஆனா செத்தபிறகாவது அந்த மரியாதையக் குடுக்க வேணுந்தானே இதுதானே கடைசி.”

தமிழ்க்கவி“பாவம் கட்டாடி ஒடியோடி எவ்வளவு கஸ்ரப்படுறார்.”

“நாங்கள் வேண்டாமெண்டாலும் அவன் விடமாட்டான். அவனுக்கு அதுக்கான வெகுமதி இருக்குத்தானே. இப்பிடி காலத்தில அவன் வாங்கினாத்தானே” இதொண்டும் அவர்களுக்கு விளங்க முதலே,

‘காணும் நீங்கள் உள்ளுக்க போங்கோ’ என்று அவர்களை கலைத்துவிட்டு கந்தப்பு சுடலைக்கு செல்வோருடன் இணைந்து கொண்டான். பெண்கள் இன்னும் வீதியில் வட்டமாக இருந்து அழுது கொண்டிருந்தார்கள். நவமணியக்கா சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து எல்லோர் மீதும் தெளித்து விட்டாள். அந்தளவில் அழுதவர்கள் எழுந்து வளவிற்குள் போகிறவர்கள் போக மீதமுள்ளவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

சுடலையிலிருந்து ஆட்கள் வருமுன் வீடெல்லாம் சாணிதெளித்து அனைவரும் குளித்து முழுகி கட்டாடி கொண்டு வந்து கொடுத்த மாற்றுத் துணியை அணிந்து கொண்டனர். சின்னத்தம்பியின் மனைவி மட்டும் படலையடியில் ஒரு உலக்கையை வைத்துக் கொண்டு வாளியில் தண்ணீரும் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். சின்னத்தம்பி வந்ததும் அவனது காலைக்கட்டிக்கொண்டு அழுதாள். பின் அவன் கால்களைக் கழுவிக் கொண்டு உலக்கையை கடந்து உள்ளே சென்றான்.

கிளியன் வீட்டிலிருந்து சோறும் கறியும் கட்டி வந்தது. பொன்னிப்பெத்தாவின் உடலைக் கிடத்தியிருந்த இடத்தில் ஒரு விளக்கு வைத்து இளநீர் கொத்தி வைத்து, கொண்டு வந்த சோற்றிலும் கொஞ்சம் படைத்த பின் இருந்தவர்களுக்கு கிளியனும் பாறியக்கையுமாக கொண்டுவந்த உணவை பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டபின் கடகப்பெட்டியையும் வாளிகளையும் கழுவி எடுத்துச் சென்றனர்.

ஊரவர்கள் முறை வைத்துக் கொண்டு காடாத்துவரை மூன்று வேளை உணவையும் கொண்டுவந்து பரிமாறினர். தொலைவிலிருந்து வந்த உறவினர்கள் காடாத்துவரை நிற்க வேண்டும் என்பது மரபு. முன்றாம்நாள் காடாத்தலாம் என்றார் சுந்தரத்தார்.

“காடாத்து செத்த கணக்கோ எடுத்த கணக்கோ” என்று கேட்டான் சின்னத்தம்பி.  “எடுத்த கணக்குத்தான் நெருப்பும் நூர வேணுமெல்லெ, மற்ற சடங்கெல்லாம் செத்த கணக்குத்தான்.” சுந்தரத்தார் விளக்கினார்.

காடாத்துக்கென ஒரு பானையில் அரிசி மரக்கறி எல்லாம்போட்டு ஒரே அவியலாக சோறாக்கி பானையோடு எடுத்துக் கொடுத்தனர். “ஒரு மூண்டு பால் ரொட்டியும் அதோட வை” எண்டா செல்லம்மாக்கா. ஆண்கள் கத்தி வாளி என்பவற்றுடன் சோற்றுப்பானை, பால் ரொட்டி, சுருட்டு, பீடி, நெருப்பெட்டி, வெற்றிலை பாக்கு எல்லாம் எடுத்துக் கொண்டு சுடலைக்கு வெளிக்கிட, பெண்கள் வாசலில் இருந்து ஒப்பாரி வைத்து அனுப்பினார்கள்.

அதன்பின் ஊர் பெண்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் ஒவ்வொருவர்கையிலும் ஒரு பொருட்கள் நிரம்பிய பை இருந்தது. அதில் அரிசி, தேங்காய், மரக்கறிவகைகள் என்பன இருந்தன. அவர்களை பந்தலில் எதிர் கொண்டு அந்தப்பையை வாங்க பாப்பாத்தியும் பாக்கியமும் நின்றார்கள். வந்தபெண்கள் கூடி சமையலை செய்தார்கள். படையல் சாப்பாடு எல்லாம் முடிந்தது. இதேபோல எட்டுச் செலவும் செய்தனர். எட்டுக்கு சகல காய்கறி பழங்கள், மச்சம், மாமிசம் என எல்லா உணவு வகைகளும் வைத்துப் படைக்க வேண்டும். அப்பம், தோசை, புட்டு, போன்றவை, கடைகளில் விற்கும் லொசிஞ்சர்கள், பிஸ்கற்றுகள், கேக், லொட்டு லொசுக்கு எல்லாம் படைத்தார்கள். அது இரவுப்படையல். எல்லாம் முடிந்து மறுநாள் பந்தலுக்குள் ஐயாத்துரை சுந்தரம் கார்த்தியேசர் எல்லாரும் இருக்க கந்தப்பு மெதுவாக வந்து,

“ஐயாத்துரையண்ணை செத்தவீடு காடாத்து எட்டுச் சிலவெல்லாத்தையும் ஒருக்கா கணக்குப்பாரண்ணை”  என்றான்.

“ஏன்ராப்பா என்ன அவசரம்?” என்றார் அவர்.

“இல்லையண்ணை நாலு பெரியமனிசரா கணக்கைப்பாத்திட்டா அண்ணரும் சின்னத்தம்பியும் போக முதல் அவயட பங்க கேக்கலாம். கிணத்து வெட்டுக்கு வச்சிருந்த காசண்ணை … கணக்கை மூண்டாப் போடுங்க”

கந்தப்பு நசுங்கிப் பேசிய போதுதான் ஐயாத்துரைக்கும் மாணிக்கத்துக்கும் வெளிச்சது.

மாணிக்கம் கவனமாக கணக்கை கூட்டினார். சாப்பாட்டுச்செலவு இல்லை எல்லாம் ஊரவை செய்தது. பந்தல் பாடை பெட்டி இதுகளும் ஊர் கூடி முடிச்சதுதான் காசில்ல. கட்டாடி , மினாசி, பாரியாரி இவங்கட காசும் அவங்கட சாராயச் சிலவும்தான் எல்லாம் வள்ளிசாக்கூட்டி மாணிக்கம் தொகையை சொன்னான்,

“தொண்ணூறு ரூவா பதினைஞ்சு சேம்.”

“ஆளுக்கு முப்பது ரூவா. எங்க முத்துக்குமாருவக் கூப்பிடு. முத்துக்குமாரு முத்துக் குமாரு…இங்ஙினதான நிண்டான்பாவி.  எடேய் முத்துக்குமாரு ரோட்டில நிக்கிறானோ பார்” அவனெங்க அங்க நிண்டான். அவன் எப்பவோ போய்விட்டான் சின்னத்தம்பி.. உன்ர பங்கு முப்பது ரூவா.” என்றார் சுந்தரம்.

சின்னத்ம்பி பதினைந்து ரூபாவை கொண்டு வந்து வைத்தான்.” என்னிட்ட இவளதான் இருக்கு நான் பிறகு நாலைஞ்சுநாளால மிச்சக்காசைத்தாறன்’ என்றான்.

அவன் மிச்சக்காசை தரவேயில்லை. முத்துக்குமாரு வரவேயில்லை. கந்தப்பு ஒரு வாரமாக கவலையோடு திரிந்தான். பின்னர் பழையபடி உழைக்க ஆரம்பித்தான். பொன்னிப் பெத்தாவுக்;கு இன்றுவரை அந்தியேட்டி செய்யவேயில்லை.

கந்தப்பு செத்த வீட்டு ஆரவாரத்தில் நிற்க கமத்துக்குள்ள குத்தகைக்காரரும் கவனம் செலுத்தவில்லை. அன்றைக்குத்தான் தோட்டத்தை பார்க்கப் பொன மணியன் வந்து மச்சானிடம்,

“அத்தான் பின்வளவுக்க மூண்டுபட்டுக்கம்பியும் அறுந்து கிடக்கு. கள்ளர் மரவள்ளிக்கிழங்கை புடுங்கியிருக்கிறாங்கள்போல. ஏன் தெரியா புடுங்கின மரங்களை எறிஞ்சு போட்டு போயிருக்கிறாங்கள்.”

கந்தப்பு அதிர்ந்தான்.

“எட பாழ்படுவானே…….. ஆனையடா. ஆனை வந்திட்டுது.”

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 39 times, 1 visits today)