நல்லவர்கள்-சிறுகதை-தமிழ்க்கவி

“சித்திரைப்பட்டம் வெங்காயம் வைச்சா நல்ல விலைதான். ஆனா விளைச்சல் வாச்சான் தேச்சான்தான்.

சித்திரை சிறுமாரியெண்டு சொல்லுறது. இருந்தாப்போல மழை வந்து நிண்டிடும். லாவத்தைப்பாராம வைகாசிக்கு வைப்பமப்பா.”

நவமணி சொல்லுறதைக் கேட்ட சுந்தரத்துக்கு அதில உள்ள ஞாயம் சரியெண்டு பட்டாலும். ஆசைவிடவில்லை,

“சரியப்பா ஐஞ்சந்தர் விதைக்காயையும் நடவெண்டே சொல்லுறன். ஒரு ரெண்டந்தர் காயை  சித்திரைக்கு நடுவம். மற்றத நீ சொல்லுற மாதிரி வைகாசிப்பட்டம் நடலாம்.”

“என்னமோ போங்கோ……… ‘ஏழை சொன்னா இரப்புணி சொல்லுக் கேளாதாம்’ நவமணி கதைய விட்டாள்.

சுந்தரம் மறுநாளே பட்டிக்குப் பின்புறமிருந்த மாட்டெருவை அள்ளி தோட்டத்துக்குள் பரவத் தொடங்கினான். புழுதிபட உழவு செய்த நிலம். தயாராக இருந்தது. மறுநாள் பாடசாலை விடுமுறை. வீட்டில் பிள்ளைகளும் நின்றதால் கூலியயில்லாமலே பாத்திகட்டி முடிந்தது. பாத்திக்கு நீர்பாச்சுமுன் வெங்காயம் நடுவதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய வேலைக்கு அளவான நிலத்தைத்தான் நீர்பாய்ச்சி தயாராக்க வேண்டும். மேலதிகமாக நனைத்து விட்டு அது நடாமல் காய்ந்து போனால் அதை திருப்பி உழவு செய்து பாத்தி கட்ட வேண்டியதாகிவிடும்.

“மெய்யே………… எத்தினை பேர் வருகினம் ?”

“ஆரப்பா…………. தைலம்மாவும் சின்னாத்தாளும் வருவினம். வீட்டில பிள்ளையளும் நிக்கினந்தானே ஒரு நாலு கன்னைக்கு தண்ணிவிடுங்க.” நவமணி சொல்லிக் கொண்டிருக்க மணியன் எங்கிருந்தோ வந்தான்.

“என்னத்தான்……. வெங்காயம் நடப்போறியளோ………..?” என்றபடி சுந்தரத்தை நோக்கிப் போனான்.

அவன் நவமணியின் கடைசித்தம்பி. சிறு வயதிலேயே தாயை இழந்து போனான். இவர்கள் தான் அவனை வளர்த்தார்கள். என்றாலும் அவனுக்கு வயது வரத்  தனியாக தொழில் தேடிக்கொண்டு போய்விட்டான். இப்படி அப்பப்ப வந்து போவான்.

“அக்காச்சி நானும் ரெண்டந்தர் விதைவெங்காயம் எடுத்திருக்கிறன். உவள் சாம்பவியின்ர தோட்டத்தில இடங்கேட்டனான். ஓமெண்டவள். நடப்போறன்.”

மணியன் தனியாகத்தான் வாழ்ந்தாலும் நல்ல பிரயாசை உள்ளவன். வெளியேறிய கொஞ்ச நாட்களுக்குள்ளேயே நிரந்தரமான வேலையொன்றை தேடிக்கொண்டு அதோடு கூடவே இப்படி உபரியாகவும் பணம் சம்பாதிக்க பறந்தான். அவனை அவனுடைய நண்பர்கள் காசுப்பிசாசு என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். கைநிறைய சம்பளம் பீடி சிகரட், வெத்திலை பாக்கு எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. தண்ணியடிப்பதுகூட கிடையாது. நாக்குக்கு ருசியாக சாப்பாடு இருந்தால் அதுவே போதும். தனிமனிதன். ‘கொட்டல்’ சாப்பாடு எத்தினை நாளைக்கு? ஒரு கலியாணத்தை முடிச்சிட்டா…அவனுக்கு பெண்கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு உறவினர்கள் முன்நின்றனர்.

கமலா அவனுக்கு இப்போது சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அப்படியொன்றும் அழகில்லை அவனது அண்ணன் கல்யாணம் செய்த பெண்ணின் தங்கை.  தாய் தந்தையர் இல்லை. கொஞ்சம் பூர்வீக சொத்து இருந்தது. என்றாலும் படிப்பு பூச்சியம்தான். சின்ன வயதிலிருந்தே அநாதை விடுதியில் வளர்ந்தவள். இப்போது இங்கே அக்காளுடன் வந்திருந்தாள். அதனால்தானோ என்னவோ விவேகமற்றவளாயும் இருந்தாள். யார் சொன்னாலும் அடிமைபோல கேட்டு நடந்தாள். வளர்ப்பு அப்படி.

மணியத்தின் திருமணப்பேச்சு எழுந்தபோது நவமணி நாசூக்காக கேட்கத்தவறவில்லை.

“மெய்யே தம்பி………. முறைப் பொம்பிளை……. பாவம் தாய்தேப்பன் இல்லாதது. வாழ்க்கை குடுத்தா புண்ணியம்.”

“அக்காச்சி…………. உந்தக்கதை கதைச்சா நான் இனி இஞ்ச வரமாட்டன். என்னமாதிரி இடங்களில இருந்தெல்லாங் கேட்டு வந்தவை நான் அதுகளிலயே நுணுக்கம் பாக்கிறனான். இதுக்கை இவளுக்கு என்னக்கட்டுறதுக்கு என்ன தகுதியிருக்கெண்டு கேக்கிறாய்?” அவனுக்கு கோபத்தில் வார்த்தை தடுமாறியது.

நவமணி அத்தோடு விட்டுவிட்டாள். மணியனுக்கு ஒரு அரசியல் கட்சியிடம் தீவிர ஈடுபாடு வந்துவிட்டது. அவன் அதில பகிரங்கமாக தொண்டனாக சேர்ந்து கடமையாற்றிக் கொண்டிருந்தான்.

கார்த்திகை மாதத்தில் ஓருநாள்……….யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களுடைய கைவிட்டுப்போன உறவுக்காரர்கள் பலகாரப் பெட்டியுடன் வந்தனர். சுந்தரம் அதிசயித்தான்.

“உங்கட மணியன என்ர மகளுக்கு ஒப்பேத்தியிருக்கிறம். இந்தமாசக் கடைசியில கலியாணம் செய்ய நினைக்கிறம். இனி நீங்கதானே அவரை வளத்து ஆளாக்கினது. உங்களயும் ஒரு வார்த்தை கேப்பமெண்டு………….”

“எல்லாஞ் சரி அவன் ஓமெண்ண வேணுமே?” சுந்தரம்.

“ஐயோ……….. அதெல்லாம் அவர் பொம்பிளையப்பாத்து ஓமெண்டிட்டார். நாங்கள் முற்றாக்கிப்போட்டம்.”

‘ஒ…அப்ப சும்மா ஒப்புக்குச் சப்பாணியாத்தான் நாங்கள்.’ சுந்தரம் நினைத்தாலும் அதை வெளியில் சொல்லவில்லை. ஆனால் நவமணிக்கு நல்ல சந்தோசம். ஏதோ தன் தம்பிக்கு ‘ஒரு வாழ்க்கை அமைஞ்சாக் காணும்’ என்ற வகையில் அது இருந்தது. ஆனால் மணியம் அப்படி நினைக்கவில்லை. அந்தமாதத்தில் நவமணி தன் மகளிடம் ஒரு ரவிக்கை தைச்சு கையில் இருபக்கமும் பூப்போட்டு தரச்சொன்னாள்.

“என்னடா இது பொதுவா மற்றவை அலங்காரம் பண்ணினாலே நாக்கு வளைக்கிற அம்மா தனக்கு பூப்போட்ட ரவிக்கை கேக்கிறா.” என்று சாம்பவி அதிசயித்தாலும் அம்மா கேட்டபடி ஒரு லதாபப்ரிக் துணியில ரவிக்கை தைச்சு, ரெண்டு கைக்கும் கீழஇருந்து மேல படருற மாதிரி அழகான பூக்கொடி கீறி நல்ல பேடட் கலர் நூலால் பல வண்ணம் கலந்து தைத்தாள். சட்டையின் அழகு பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது. நவமணியும் அதை தடவிப்பார்த்து வெகுவாக ரசித்தாள். தன்தாய் இப்படி ரசிப்பதை சாம்பவி அதிசயமாக பார்த்து,

“எங்க போட இந்த சட்டை?” என்று கேட்கவே செய்தாள்.

“வேற எங்கடி நான் போகப்போறன். மாமாவுக்கு சம்பந்தம் கூடி வந்திருக்காம். கலியாண வீட்டுக்கு சொல்ல வருவினம். அதான் போட்டுக்கொண்டு போக விலைகூடின துணி இல்லாட்டியும் இப்பிடி வேலைப்பாடுள்ள துணியாப் போட்டுக்கொண்டு போவமெண்டு…….”

வெங்காயத்துக்கு தண்ணி பாய்ச்சிக்கொண்டே மணியன்ர வாழ்க்கைய நினைச்சுப்பார்த்த நவமணி ஒரு பெரு மூச்சு விட்டாள். அவள் அவ்வளவு ஆசையாக காத்திருந்தும் மணியனுடைய கலியாணம் அவர்களுக்கு தெரியாமலே முடிந்து போனது. பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நவமணிக்கும். அவளுடைய இரு தம்பியருக்கும் சேர்த்து பாட்டியால் வழங்கப்பட்ட சொரியல் காணியில் ஒரு சின்ன கொட்டில் போட்டு அதில் தனது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தான். அவனது மனைவி என்னவோ அழகாகத்தான் இருந்தாள். இருந்துமென்ன அவளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியவில்லை. குழந்தையைப்போல வளர்த்திருந்தார்கள். இதனால் அவளுடைய தாயும் அவளுடைய வீட்டுக்கு அடிக்கடி வரவேண்டி யதாகப் போயிற்று. சமைக்கவோ துணி துவைக்கவோ தெரியவில்லை. தன் வீடுவாசலை சுத்தமாக வைத்திருக்கத் தெரியவில்லை. அவள் நடப்பதுகூட ஒரு மாதிரி தவளை பாய்வது போல தாண்டித்தாண்டித்தான் இருந்தது.

பெண்பார்க்கும் படலத்தில்  இந்தியர்களைப்போல பாடத்தெரியுமா? ஆடத்தெரியுமா? காது கேக்குமா நடந்து காட்டுவாளா? என்றெல்லாம் கேட்கும் வழக்கம் நம்மவர்களிடம் இல்லாமல் போனதற்காக மணியன் பெரிதும் வருந்தினான். அதற்கு முன் பார்த்த பெண்களையெல்லாம் அவளுக்கு பல்லு மிதப்பு, இவளுக்கு காது கேளாதாம், அவள் முதல் ஆரோடயோ கதைச்சவளாம், இவளின்ர தமையன் கீழ்சாதியக் கட்டியிருக்கிறானாம், ஏன்று பலபல நொட்டைகள் சொல்லியே ஒதுக்கினவன். இப்போது அந்தப்பாவமெல்லாம் அவனைச் சூழ்ந்து நின்று வருத்துவது போல உணர்ந்தான். அவனுக்கு மனைவியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. நிண்டா உதை, இருந்தா மிதி எண்டவாறே அவளை நடத்தினான். என்றாலும் அவள் கர்ப்பமாக தவறவில்லை ஆறாவதுமாதம் தாய்க்காரி தன்னோடு மகளை ஊருக்கு கூட்டிச் சென்றுவிட்டாள். இவன் விவாகரத்து வழக்கைப் போட்டான்.

“இந்தமுறை ஆருக்கு வோட்டுப்போடப்போறியள் அக்காச்சி.” மணியன் நவமணியைக்கேட்டான். சுந்தரத்தின் வீட்டில் அவன்,  அவனுடைய மனைவி, மூத்தமகள், இளையவள், அவர்களது கணவன்மார் என ஐந்துவாக்குகள் இருந்தன. இவன் தன்னுடைய கட்சிக்கு வலுச்சேர்க்கவே கேட்டான். அவன் எவ்வளவுதான் அவளை அலட்சியப்படுத்தினாலும் அவளுக்கு அவன்மேல் அளவற்ற பாசம் இருந்தது. தாய் இறந்த போது அவனுக்கு இரண்டு வயதுதான் நவமணிதான் அவனை பார்த்து வளர்த்தவள். ஆனால் மணியம் தனியாக

உழைக்கப்போனதும் அவளை அலட்சியம் செய்தான். அவளுக்கு சொல்லாமலே திருமணஞ்செய்தான். இப்ப விவாகரத்து வழக்கைப்போட்டுவிட்டுத்  தந்திரமாக அக்காளுடன் உறவு கொண்டாடி வந்தான். சுந்தரத்துக்கு அவனை கண்ணில காட்டக்கூடாது. ஆனாலும் நவமணி வாய்திறந்தால் அவனால் எதிர்த்து பேசமுடியாது. ஊருக்குள் மணியனுக்கு நல்ல பெயர் .குடி சூதில்லை. கடன்கிடன் இல்லை. தானும் தன்பாடும். அப்பாவி மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாது. ஆரோடயும் தன்னும் சோலிசுறட்டில்ல. ஆரைக்கண்டாலும் பணிவான ஒரு சிரிப்பு, இதுதான் மணியம்.

மணியம் சொன்னது போலவே சாம்பவியின் நிலத்தில் ஒரு ஆயிரங்கண்டுத்தரை எடுத்து உழுது பண்படுத்தி வெங்காயம் நடுவதற்கு ஆவன செய்தான். அவனது வேலைகளை சாம்பவி முன்நின்று செய்தாள். என்றாலும் அவனுடைய உடைமைகளை தன் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் வீட்டிலேயே வைத்திருந்தான். அந்த வீடும் மிக அருகிலேயே இருந்தது. காலையில் தன் மிதிவண்டியில் ஒருசாக்கு விதை வெங்காயத்தை கொண்டு வந்து சாம்பவியின் வீட்டில் போட்ட மணியம் அவளுடன் சேர்ந்து வெங்காயம் நடுவதற்காக நீர்பாச்சினான். சுந்தரம் எதையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நவமணி கூடமாட ஓத்தாசை செய்தாள். அவர்களுடைய வெங்காயம் நட்டு நான்கு நாட்களாகிவிட்டன. இவர்கள் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். தெருவில் மணியம் சார்ந்துள்ள கட்சிக்காரர்கள் மாலையில் தாம் நடாத்தப்போகும் பிரச்சாரக் கூட்டத்துக்கான அறிவித்தலை ஓலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டு போனார்கள். மணியம் நீர் இறைத்து முடிந்ததும் சாம்பவியிடம்,

“நாளைக்கு எனக்கு வழக்கு. நான் யாழ்ப்பாணம் போறன். எனக்கு வெங்காயம் நட வேண்டாம். நீ இருக்கிற வெங்காயத்தையும் வதனியக்காட்ட கிடக்கிற காயையும் கொண்டு வந்து நடு. நட்டு நீ எடு.” என்றான்.

“ஏன் மாமா………….. நீங்க கஸ்டப்பட்டு உழுதுபோட்டு விடுறியள்? நான் நட்டுத்தாறன். நீங்க

வழக்கப்பாத்திட்டு வந்து கவனிங்க.” சாம்பவி மாமாவுக்காகப்  பரிதாபப்பட்டாள்.

‘பாவம் மாமா. ஒருவருசமா வழக்கு நடக்குது. இந்தமுறை தீர்ப்பெண்டமாதிரி சொல்லுகினம். கடவுளே நல்ல முடிவா கிடைக்கோணும். ’மனதுக்குள் பிராத்தித்தாள். மணியம் ஒரு புன்னகையோடு அதை நிராகரித்தான்.

“இல்லம்மா நான் வரமாட்டன். அங்கதான் இருக்கவேண்டி வரும். அது எனக்கு விருப்பமில்ல. அதோட நான் வதனியக்காட்ட சொல்லுறன். என்ர கட்டில் அங்க கிடக்கு. அதையும் நீ கொண்டு வா. நீதானேயடி என்னை பாத்தாய். எல்லாம் உனக்குத்தான். சரிசரி எனக்கு யாழ்தேவிக்கு நேரமாகுது வாறன்.” என்றவன் கிணற்றடிக்கு விரைந்தான். குளிக்கிற சத்தம் வந்தது. அதன்பிறகு அவன் புறப்படுமுன் அவளிடம்,

“மறக்காம தம்பிராசாவுக்கு வோட்டுப் போடுங்கோ’ என்றான். அவள் பதில் சொல்லுமுன்

போய்விட்டான். அவள் கிணற்றடிக்கு போகும் போது நவமணி எதிர்ப்பட்டாள்.

“மாமா யாழ்ப்பாணம் போகுதாம்” எனறாள்.

“ஓமடி எல்லாங் கேள்விப்பட்டன். வெங்காயத்தை உன்னை வையெண்டானாம்.”

“வழக்கெண்டு போறாராம். வரமாட்டாராம்”.

‘ஙா…………. பெண்டிலோட சேந்து வாழச் சொல்லி தீர்ப்பாகப் போகுது போல. பாத்துக்கட்டின

பொம்புளதானே. இவன் வேண்டாமெண்டு விட்டா அவளையென்ன உப்புக்கண்டம் போடுறதே…….? ங..அதுகும்

நல்ல பருத்துறைச் சந்தைக்காறியிட்டயோ……….?”

காலையில் நிலைமை மாறிவிட்டதால் மாலையில் பாத்தி நனைக்க சாம்பவி முயலவில்லை. நாளைக்கு பாப்பம். யாரோ இருவர் வளவுக்குள் வந்தனர்.

“என்ன ஆரைப்பாக்கவேணும்” என நவமணிதான் கேட்டாள்.

“இல்லையம்மா கூட்டம் நடக்கிற இடத்தில தோரணங் கட்ட ஒரு தென்னங்குருத்து தாறியளே…….?”என்றான் அவர்களில் ஒருவன்.

“ஙா…அந்தா இவர் நிக்கிறார். சொல்லிப்போட்டு வெட்டுங்க. கேட்டா தருவார்.” அவள் கணவனைக் கைகாட்டி விட்டாள். அவர்கள் சுந்தரத்தின் அனுமதியோடு குருத்து வெட்ட மரத்தில் ஏறும் போது மணியன் திரும்பி வந்தான். தன் நினைவில்லாத அளவுக்கு குடித்திருந்தான். அவன் குடிப்பதையே யாரும் பார்த்தில்லை. அதனால் மிக புதினமாகத்தான் அவனை பார்த்தனர். நடக்கும்போதே தடுமாறி நடந்து வந்தவன், கிணற்றடி கடந்து அங்குநின்ற ஒரு தென்னை மரத்தைப்பிடித்து தன்னை சுதாரித்துக் கொண்டாலும் நிலத்தில் வீழ்ந்தான். மரத்தில் குருத்து வெட்டிக் கொண்டிருந்தவன் விரைந்து இறங்கினான். மற்றவன் ஓடி வந்து மணியனைத் தாங்கினான். “அண்ணை…….. மணியண்ணை……” அவன் பதறினான்.“

“என்ன……….. மாமாவே குடிச்சிட்டு…”சாம்பவி பதறினாள்.

“அக்கா…சாராயங் குடிக்கேல்லயக்கா……….. வேற ஏதோ குடிச்சிருக்கிறார். தமரோன்

மணக்குதக்கா……….” அவனைத் தாங்கிப் பிடித்தவன் அலறினான்.

“ம்…அது அதுதான் குடிச்சிட்டன்.” குழறலாக வந்தது அவன் குரல். கண்கள் சொருகிச் சொருகி இறுகின.

“அய்யோ………. ஓடிவாங்கோ மாமா விழுந்திட்டார்” சாம்பவி குரல் வைத்தாள். இரண்டொரு நிமிடத்துள் சனம் கூடிவிட்டாலும்  மணியன் தன் உயிரை வைத்திருக்கவில்லை.

“பாவி பெரியாக்கள மேவாம தன்ர பாட்டுக்கு போய் இடிகிணத்துக்க விழுந்தானே… இண்டைக்கு உயிருக்கே இயமனாப்போச்சே………….அய்யோ நான் பெத்த பெருமையென்ன பேரிட்ட நேத்தியென்ன….நான் வளத்த பெருமையென்ன வரிசையிட்ட நேர்த்தியென்ன………… என்ர ராசா……… நீ மாறுகரை வேட்டி கட்டி மணக்கும் சாந்து பொட்டு வைச்சு நூறுகாதம்தான் நடந்தா….என்ர ஐயா நூறு கண்கள் பாத்திருக்கும் நடையோ அழகு ரதம்…” நவமணி நிலத்தில் விழந்து புரண்டழுதாள்.

“ச்சை என்னமாதிரி பெடியன். ஏனிந்த முடிவெடுத்தான்?”

“பேயன்…….. வேண்டாமெண்டா விட்டிட்டு இருக்கிறதுதானே? அதுக்கேன் இப்பிடி அநியாயாமா உயிரைவிட.”

“சுசுசுக். மலையான மலை இப்பிடி சாஞ்சிட்டானே.”

“தங்கமான பெடியனப்பா. ஒரு சோலியில்லாதவன். அநியாயச்சாவு.”

“என்ன அழகான பெடியன்…. தங்கமான குணம். கைகழுவித் தொடவேணும்.”

மரண விசாரணைகள் முடிந்து பெருவாரியான மக்களும் கட்சித் தொண்டர்களும் அனுதாப உரை கூற அவனது சடலம் சுடலை நோக்கிப்பயணமானது. வீட்டில் எல்லோருமே இடிந்து போய் இருந்தார்கள். ஆயிற்று காடாத்து எட்டு செய்தாயிற்று. அந்தியேட்டி செய்ய ஆறுமாதம் போகவேணுமாம். வீடு இயல்புக்கு வந்து விட்டது. சாம்பவி தண்ணீர்பாய்ச்சி நட்ட வெண்காயம் விளைந்து நல்ல விலைக்குப்போயிற்று. வதனி மணியனுடைய உடைமைகள் அனைத்தையம் சாம்பவியிடம் கொடுத்துவிட்டாள். நவமணியும் சோகத்தை மறந்துவிட்டாள். ஆனால் அவனுக்கு அன்றாடம் சமைத்துப்போட்ட கமலா மட்டும் இன்னும் அவனை மறக்க முடியாமல் தவித்தாள். மத்தியானப் பொழுதில் அவன் சாப்பிட வரும்போது அவள்தான் உணவு பரிமாறுவாள். ஒருகாலத்தில் அவனைக்கல்யாணம் செய்ய அவளுக்கு தகுதி உண்டா என்று மணியன் நவமணியிடம் கேட்டதும் அவளுக்குத் தெரியாது. ஆனால்,

“எனக்கு விவாகரத்து ஆகப்போகுது. அதுக்குப்பிறகு நான் உன்னைத்தான் கட்டுவன்” என்று மணியன் சொன்னதை அவள் நம்பியிருந்தாள். அவள் தன் அடிவயிற்றை தடவிப்பார்த்தாள். இன்னும் பருக்கவில்லை என்றாலும் பாரமாக இருந்தது. இப்ப ரெண்டு மாசமா வீட்டுக்கு தூரமாகயில்லை. அதாலதான் பாரமா இருக்கோ…அதன் பின் விளைவுகள பற்றி அவளுக்கு எதுவும் புரியாது. மணியத்தான் நல்லவர். ஏன் செத்தார் ?

தமிழ்க்கவி- இலங்கை

தமிழ்க்கவி

(Visited 314 times, 1 visits today)