காடுலாவு காதை பாகம் 20-தொடர்கதை-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

ஆழமற்ற அந்த கடல் நீரில். நல்லுச்சாமியை சுப்பம்மா இறுகப்பிடித்திருந்தாள். ராமசாமி ஓடிச்சென்று அவனை கைகளில் கோலிப் பிடித்தான். மெதுவாகவும் நடக்கும் நிலையில் அவன் இல்லை, ஒரளவு இழுத்தவாறே அவனை தீடைக்கு கொண்டு சென்றனர். சுப்பம்மா பின்னால் அவனை தாங்கியவாறே நீரில் தத்தித்தத்தி பின் தொடர்ந்தாள். தீடையேறியதும் நல்லச்சாமியை உட்காரவைத்தார்கள்.

அங்கு நின்றவர்களில் முன்னர் பலதடவை வந்து போன அனுபவம் உள்ளவன் ஒருவன் இருந்தான்.

“இப்டியே உக்காந்துக்கோங்க, கொஞ்சம் இருட்டினப்பறம் போய்க்கலாம். கரையில காவலுக்கு போலீசு நிப்பாய்ங்க” என்றான்.

உட்கார்ந்த நல்லு சாமி நீட்டி நிமிர்ந்து படுத்தான். ஒரு படங்கைப் போட்டு அவனை போர்த்தப்பொன சுப்பம்மா அவனத வெறித்த பார்வையில் சந்தேகப்பட்டு பதற்றமானாள்.

“என்னங்க ஏங்க…சின்ராசப்பா…!எதுனாச்சும் வேணுமா..? ஏங்க” அவன் அசைவற்று  “ஙே’யென்று கிடந்தான். பக்கத்தில் நின்ற ஓருவர் கிட்ட வந்து குனிந்து பார்த்தார். பின் மற்றவர்களை அர்த்தத்தோடு பார்த்தார். பின் உதட்டைப் பிதுக்கினார்.

சுப்பம்மா நல்லுச்சாமியை உலுப்பி எழுப்ப முயன்றாள். விம்மலும், அழுகையுமாக அவள் தவிப்பதை தாளாமல் ஒரவர் அவளிடம்,

“ஏம்மா….ஒம்புருசன் அம்புட்டுதாம்மா…யாராச்சும் கூட வந்தாங்களா?”

“த்தா …இவெந்தான்” என்றொருவன் ராமசாமியை கைகாட்டினான். ராமசாமி தோளிலிருந்த துண்டை வாயில் அழுத்தி அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தான். பேரிடியாய் அவன்மீது விழுந்த சுமையை அவனால் தாங்க முடியுமா……?

“வாப்பா நமக்கு அம்பிட்டு நேரமில்ல, பொணத்தை பெதைச்சிரலாம். என்றவாறே அவன் கைகளால் மணiலில் குழிபறித்தான். நின்றவர்களும் அவனுடன் கூடி கிண்டினார்கள். ராமசாமி நல்லுசாமியின் உடலை குழியில் போட்டான். அவனுடைய எண்ணங்கள் கனவுகள் எதிர்காலம் அனைத்தும் அந்தக்குழியில் விழுந்தது.

இருபதே வயதான ராமசாமி. நான்கு பிள்ளைகளுக்கு தந்தை சுப்பம்மா இனி அவனுக்கு தாரம். இதுதான் பண்ணையாரின் தீர்ப்பு. தென்னிந்தியாவிலிருந்து ஏலவே வந்திருந்த மக்கள் குழுக்களுக்கு தன்னிச்சையாகவே ஒரு தலைமை உருவாகியிருந்தது. அவர்கள் மண்ணின் எச்சமாக பண்ணையார்கள் ஆனார்கள்.

“பொளைக்க வந்த எடம். அவிங்க எங்க போவாய்ங்க.? நீ இன்னோரு கண்ணாலம் பண்ணிக்க போறவந்தானே….. இந்தக்குடும்பத்தை நீதாம்பா ஏத்துக்கணும்.”

மூன்று வருடங்களில் சுப்பம்மா ராமசாமிக்கும் இரண்டு பையன்களைப் பெற்றாள். சின்னராசுவை  ஒரு அரசியல் வாதியின் வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்துவிட்டான். மற்றவன் செல்வராசு யாழ்ப்பாணத்தில் ஒரு சைக்கிள்கடையில் வேலைக்கு சேர்த்து விடப்பட்டான். மற்றவன் ஒரு தியேட்டர் முதலாளி விட்டில் குழந்தை பார்த்துக் கொள்ள சேர்த்து விடப்பட்டான். நாலாவது வரதன். அவன் இன்னும் மழலையாக இருந்ததால் அருகில் ஒரு பாடசாலைக்கு படிக்கப்போனான். சுப்பம்மா இப்போது பிறந்த பிள்ளைகளை மரநிழலில் கொண்டுவந்து விட்டுவிட்டு தோட்டத்தில் வேலை செய்தாள். ராமசாமி கிணற்றில் வேலை செய்தான்.

கிணறு பதினெட்டு முழம் இறங்கியபோது கருங்கற் பாறை குறுக்கிட்டது.

“வெடிவச்சிரலாம். மௌலானா கடையில டைனமெட் இருக்கு. அப்பிடியே திரியும் கெற்பும் வாங்கிட்டா வெடிவச்சிப் பௌந்திரலாம்.” என்றான் குஞ்சுப்பிள்ளை.

மறுநாளே கந்தப்பு மேலும் ஒரு நகையை தம்பிஐயா கடையில் அடகு வைத்துவிட் டுப் பக்கத்திலேயே மௌலானா கடையில் வெடிவைப்பதற்கான டைனமற், திரி கெற்பு எல்லாவற்றையும் வாங்கிவந்தான்.

அவற்றைக்கண்ட லெச்சிமி ஆவென வாயைப்பிளந்தாள். ‘ஏயப்பா…. எவ்வளவ சக்கரை’

“ச்சீ தொடாதை, அது வெடிமருந்து, நஞ்சு. கிணத்துக்க கல்லுடைக்க. அதை தொட்டுக்கிட்ட வாயில வச்சிராதை. செத்துப் போவாய்”

“இந்தக்கயறு……..?” கந்தப்பு சிரித்தவாறே, “ அது கயிறில்ல திரி” என்றவன் எல்லாவற்றையும் பக்குவமாக எடுத்து ஒரு பக்கீஸ் பெட்டியில் வைத்து மூடினான்.

மறுநாள் ஜம்பர் கம்பிகளுடன் கந்தப்பு, ராமசாமி, குஞ்சுப்பிள்ளை ஆகியோர் கிணற்றில் இறங்கினார்கள். குஞ்சுப்பிள்ளை வாகானதாக தேர்ந்தெடுத்து கொடுத்த இடங்களில் குழி போடத்தொடங்கினர். நீரை ஊற்றி ஊற்றி ஜம்பரை சுத்தியலால் அடித்து இறக்க கருங்கல் தூசாகி களியாக வெளியே வந்தது. ஒரடி ஒன்றரை அடி என குழிகள் போட்டதும் அவற்றை ஈரமற்றதாக்கி டைனமெற்றை அதில் செருகும்போதே அனைவரும் வீட்டுக்கு ஓடிவிட்டார்கள். கந்தப்பு கிணற்றிலிருந்து மேலே ஏறியதும் “ கல்வெடிஈஈஈஈஇய்….கல்வெடிய்ய்ய்ய்க”; என்று இயன்றளவு உரத்து குரல்வைத்தான். இந்த சத்தம் கேட்டதும் அயலவர்களும் தத்தம் கூரைகளுக்கு கீழ் போய்விடுவர். குஞ்சுப்பிள்ளைதான் வெடிமருந்து நிபுணர் அவர்மேலேறி கூரைக்குள் வரும்வரை பற்றக்கூடியளவு திரியை பொருத்தி அதில் தீயை வைத்திருப்பார். கொட்டிலுக்குள் அவர் வந்த சில நிமிடங்களில் ‘டமார்’ என வெடி வெடிக்கும். கற்கள் தூள் பறக்கும். மாங்காய் தேங்காயளவான கற்கள் முமு கூரையிலும் விழும். ஒரு வெடிதான் வெடித்தது. மீண்டும் கல்வெடீ…..ய் கல்வெடீடீடீ…ய்.” என்று கத்தினான் கந்தப்பு. இன்னும் சில விநாடிகளில்அடுத்த வெடிகளும் டமார்டமார்  என்று பெரும் சத்தத்துடன் வெடித்தன. எல்லோரும் கிணற்றை நோக்கி ஓடினர். கிணற்றுள் ஒரு சுவர்போல பிளந்த பாறைகள் குவித்து கிடந்தன. தென்கிழக்கு மூலையில் கொளகொளவென சத்தம் வந்து கொண்டிருந்தது. கிடுகிடுவென எல்லோரும் கிணற்றில் இறங்கினர்.

“அப்பூ ….நான்நான் நானும்” லெச்சிமி கத்தினாள். கந்தப்பு கயிற்றில் இறங்கிக் கொண்டிருந்தான். “பொறு ஏணிய சேதமோண்டு பாத்திட்டு சொல்லுறன் சிலநேரம் வெடியில அறுந்திருக்கும்.” என்றபடி அவன் கீழிறங்கினான். கீழிறங்கியதும் ஏணியை அசைத்துப்பார்த்தான். கொஞ்சம் பிணங்கியிருந்தது நல்ல வேளை சேதமில்லை. பின்னர் மேல்நோக்கி. “ ஙா…மெதுவா பாத்திறங்கு” என்றான். அதற்குள் சத்தம் வந்த இடத்தில் குவித்து கிடந்த பெரிய பாறைகளை நகர்த்தும் முயற்சியில் ராமசாமியும் குஞ்சுப்பிள்ளையும் ஈடுபட்டிருந்தனர். கந்தப்புவும் அலவாங்கை எடுத்து மிண்டி போட்டு கிழப்பினால்….என்ன ஆச்சரியம்.  “ஓ…மாரியம்மாளே வைரவா…”என்று கத்தினான் கந்தப்பு. நிலத்திலிருந்து குபுகுபுவென பொங்கிய அருமையான ஊற்று ஒரடிக்கு மேலாக பீச்சியடித்துக் கொண்டிருந்தது.

கந்தப்புவின் உடல் நடுங்கியது அதிர்ச்சியா மகிழ்ச்சியா ?இதற்குள்லட்சுமி கீழே இறங்கி பாறைகளைக் கடந்து அப்புவை நெருங்கி வந்தாள். கந்தக நெடி மூக்கை எரிய வைத்தது.

அண்ணே இன்னம் ரெண்டு வெடி வெச்சிட்ட தண்ணி அசைக்க முடியாதண்ணே”என்றான் குஞ்சுப்பிள்ளை.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 71 times, 1 visits today)