தர்மம்-சிறுகதை-ஸிந்து ஜா

ஸிந்துஜா
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

சாம்பு முதல் தடவை அந்த சம்பவத்தைப் பார்த்தான். அன்று அவன் கூடத்தை ஒட்டியிருந்த முன்னறையில் உட்கார்ந்திருந்தான். வழக்கத்துக்கு விரோதமாகக் காலை ஏழரை ஆகியும் வெயிலின் உக்கிரம் தெருக்களைத் தீண்டாமலிருந்தது.  சாம்பு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து தெரிந்த  திண்ணையிலும்,வாசல் மரங்களிலும் நிழல்தான் சுப்புக் கோனார் வீட்டுப் பசு மாடு போலப் படுத்துக் கிடந்தது. அவன் கையில் இருந்த பாடப் புத்தகத்தைப் பிரித்தான். சாம்பு சேதுபதியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறான். அவன் பார்வை எதேச்சையாக வாசலைப் பார்த்த போது திண்ணையில் உட்கார்ந்திருந்த தந்தை தெரிந்தார். அவருக்கு எதிரே ஒருவன் பவ்வியமாகக் குனிந்து நின்று கொண்டிருந்தான். கம்பனியில் வேலை பார்ப்பவனாக இருக்கும்.

சாம்பு பார்த்துக் கொண்டிருந்த போதே அந்த வேலையாள் தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்துப் பிரித்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து சாம்புவின் அப்பாவிடம் கொடுத்தான். மகாதேவன் அவன் கொடுத்த கசங்கிய தாள்களை எண்ணிப் பார்த்தார். சாம்புவுக்கு அவன் இருந்த இடத்திலிருந்து பத்து ரூபாய்த் தாள்கள் தெரிந்தன. எண்ணுவதை அவர் முடித்த போது சாம்புவுக்கு அது முப்பது  ரூபாய் என்று தெரிந்தது. அந்த வேலையாள் அவரிடமிருந்து கடன் வாங்கியிருப்பவனாயிருக்கலாம், திருப்பித் தந்து கொண்டிருக்கிறான் என்று சாம்பு நினைத்தான்..   .

மகாதேவன் வந்தவனைப் பார்த்து ‘நீ போகலாம்’ என்பது போலத் தலையை அசைத்தார். அவன் அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியே சென்றான். அவர் திண்ணையிலிருந்து எழுந்ததைப் பார்த்த சாம்பு தலையைக் குனிந்து கொண்டு “கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் பெரும்பாலான மக்கள் இடம் பெயர்வதால், இது மக்கள் நெரிசலையும், வசதிப் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகின்றது. இந்த இடப்பெயர்வு நகர விரிவாக்கத்தை….” என்று சத்தம் போட்டுப் படித்தான். மகாதேவன் அவனைக் கடந்து செல்கையில் அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே போனார். கூடத்தின் வலது மூலையில் இருந்த காட்ரேஜ் பீரோவைத் திறக்கும் சத்தம் சாம்புவுக்குக் கேட்டது.

நாலைந்து நாள் கழிந்து இரண்டாவது தடவை நடந்த போது  அவனது கட்புலனைத் தவிர செவிப்புலனும் அறிதலில் இடம் பெற்றது.

அன்று மாலை நான்கு மணி இருக்கும். வாசலில் “சாமி!” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சாம்பு அப்போது அவனது அம்மாவிடம் “இன்னிக்கி ஞாயித்துக்கிழமை. பஜ்ஜி போட்டுத் தா” என்று சமைய லறையில் அடம் பிடித்துக் கொண்டிருந்தான். “அடச்சீ , சும்மா கிட. நேத்துதான் ரெண்டு சேர் எண்ணையைக் காலி பண்ணி பக்கோடா போட்டு அதுக்கப்புறம் அப்பளாம் வடாம் வேறே பொரிச்சு…. இப்பிடி நீ எண்ணெய் குடிச்சா செல்லத்தம்மன் கோயில் செக்குக்கு வாரம் ரெண்டு தடவை போய் வாங்கிண்டு வரணும். போ,போய் விளையாடிட்டு வா” என்று அதட்டி விட்டு செல்லம்மா வாசலில் வந்திருப்பது யார் என்று பார்க்கச் சென்றாள். கூடவே அவள் பின்னால் சாம்புவும் போனான்.

“யாருப்பா?” என்றாள் வந்தவனிடம். அவன் கிழிந்த டிராயரும் அழுக்கான சட்டையும் அணிந்திருந்தான். வாரப்படாத தலை, சோர்வுற் றிருந்த முகத்தில் தாடி இருந்தது.

“சாமி இருக்காங்களா?” என்று கேட்டான் அவன்.

“சித்தே இரு ” என்று சொல்லி விட்டு செல்லம்மா உள்ளே சென்றாள்.

சாம்பு விளையாடக்  கிளம்பினான். பட்டோடி செஞ்சுரி போட்டதைப்  பற்றி நாணுவிடம் சொல்லி அவனை வெறுப்பேத்த வேண்டும். நாணுவுக்குப் பட்டோடியைப் பிடிக்காது. நாணுவோட ஹீரோ உம்ரீகர். அடிச்சா பேட்டுக்கு வலிக்குமோன்னு தடவிண்டு உம்ரீகர்  உக்காந் திருக்கான்னு நாணுகிட்டே அலப்பறை கொடுக்கணும் என்று நினைத்தபடி அவன் வாசலுக்கு வந்தான். அப்போது எதிர் வீட்டு உமா அங்கு வந்தாள். “டேய் சாம்பு உங்கம்மா கிட்டே இந்த கல்கியைக்   கொடுடா” என்று சொல்லி அந்த வார இதழை அவன் கையில் திணித்து விட்டுச் சென்றாள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தலைக் கொன்றாக வாரப் பத்திரிகைகளை வாங்கி அவர்களுக்குள் படிக்கக் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சாம்புவுக்குக் கல்கியைப்  பார்த்ததும்  வாண்டு மாமாவின் படக் கதையைப் படிக்கும் ஆசை பீறிட்டு எழுந்தது. அவன் சத்தமில்லாமல் அவனது படிப்பறைக்குச் சென்று  கல்கியைப் பிரித்தான்.

“என்ன மாடசாமி, இந்த நேரத்திலே வந்திருக்கே?” என்று கேட்டுக் கொண்டே மகாதேவன் வாசல் பக்கம் செல்வது சாம்புவுக்குக் கேட்டது. அவனது அறைக் கதவு மூலம் அவர் திண்ணையில் உட்கார்வது தெரிந்தது.

“சாமி, லோனு வேணும்” என்று சொல்லியபடி அந்த மனிதன் அவரிடம் கலியாணப் பத்திரிகையைத் தந்தான். கூடவே நான்கைந்து நாளுக்கு  முன்னால்  நடந்தது போலவே வந்த ஆள் தன் டிராயர் பாக்கெட்டி லிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

மகாதேவன் அவனிடம் “பதினஞ்சு  ரூபாதானேடா இருக்கு?” என்றார்.

“ஆமாஞ் சாமி. பொறட்ட முடியலே. அப்புறமா குடுத்துர்றேன்” என்றான்.

“அதெல்லாம் காரியத்துக்கு ஆகாது. உன் ஒருத்தனுக்குப் பாவம்னு பாத்தேன்னா நாளைக்கு எல்லாப் பயல்களும் இப்பிடியே ஆரமிச்சுடு வான்கள். நீ போய் இன்னொரு பதினஞ்சைக்  கொண்டா.  பி.எப் பணம் உனக்கு வந்தப்பறம் மிச்சம் முப்பதை வாங்கிக்கிறேன். நாளைக்கிக்  கொண்டு வந்து தரியா?” என்று கேட்டார் மகாதேவன்.

அவன் தலையைச் சொறிந்து கொண்டே “சரி சாமி” என்றான்.

சாம்புவுக்கு ஒரு மாதம் முன்பு வரை பி.எப். என்றால் என்னவென்று தெரியாது. மூன்றாவது வீட்டில் இருக்கும் அவன் சிநேகிதிஆனந்தாவின் அப்பா சுப்பாமணி  ஒரு நாள் மகாதேவனைத் தேடி வந்தார். இருவரும் ஒரே கம்பனியில்தான் வேலை பார்த்தார்கள்.

அவர் சாம்புவின் அப்பாவைப் பார்த்து “அய்யர் ! எனக்கு நீர் அர்ஜன்ட்டா ஒரு ஹெல்ப் பண்ணணுமே” என்றார்.

‘கடன் கேட்டால் இல்லை’யென்ற முகத்தை வைத்துக் கொண்டு  மகாதேவன் அவரைப்  பார்த்தார்.

“ஒரு கல்யாண லோன் போடலாம்னு பாக்கறேன்” என்றார் சுப்பாமணி.

“யாருக்குக் கல்யாணம்? அபிக்குத் திகைஞ்சுடுத்தா?” என்று கேட்டுக் கொண்டே செல்லம்மா வந்தாள் சமையல் உள்ளிலிருந்து. அபி சுப்பா மணியின் தங்கை. அவளுக்கும் நாலு  வருஷமாக வரன் தேடுகிறார்கள்.

“அவ்வளவு அதிர்ஷ்டம் நமக்கெல்லாம் அடிச்சிருமா? நானென்ன மகாதேவய்யரா? பொண் ஜாதகக் கட்டை எடுத்த உடனே வந்த முதல் வரனே மாப்பிள்ளையாகி விட்டானே!” என்று சிரித்தார்.

“எல்லாம் வேளை வந்துடுத்துன்னா யாரும் நிறுத்த முடியாது. இருங்கோ. காப்பி கொண்டு வரேன்” என்று உள்ளே சென்றாள். ஆறு மாதங்களுக்கு முன்புதான் சாம்புவின் அக்கா கிரிஜாவுக்குக் கல்யாணம் ஆயிற்று.

“பி.எப்.லே ஒரு கல்யாண லோன் போடலாம்னு…”என்று சுப்பாமணி  அய்யரைப் பார்த்தார். “ஒரு கல்யாணப் பத்திரிகையை வச்சுண்டு வாங்கிடலாம்னு எல்லாரும் சொல்றாளே!”

“கல்யாணம் இல்லாமே கல்யாண லோன் உமக்குக் கூட வேணுமா?”

“நம்ப கம்பனியிலேயே கல்யாணத்துக்குன்னு பி.எப்.லே கல்யாண லோன் வாங்கின ஒரே ஆசாமி நீர்தான் ஓய்! எல்லாரும்உம்மை மாதிரி இருந்துட்டா அப்புறம் மகாதேவனுக்குன்னு என்ன தனி கியாதி இருக்கு சொல்லும் !” என்றார் சுப்பாமணி.

“நம்ம பேக்டரிலே இருக்கற தோசிப் பயல்கள்தான் கல்யாண லோன்னு மேலே விழுந்து பிடுங்கி வாங்கிண்டு போறான்கள். அப்பறம் ஒரே  மாசத்திலே எல்லாத்தையும் கள்ளுக்கடையிலேயும் சாராயக் கடையிலேயும் கொட்டிட்டு  அலையறான்கள் ” என்றார் மகாதேவன்.

“எனக்குப் பணம் வேண்டப்படறது இந்த ரெண்டு கடைக்கும் இல்லேங்காணும்” என்று சுப்பாமணி சிரித்தார். “நாகமலை புதுக்கோட்டைலே ரெண்டரை சென்ட் எடம் வாங்கினேன். அங்க யூனிவர்சிட்டி வரப் போறதுன்னு பேச்சு பலமா அடிபட்டுண்டு இருக்கேன்னு. ஒரு பத்து வருஷங் கழிச்சு வெலை ஏறாதான்னு ஒரு நப்பாசைதான். அதுக்குக்  கொஞ்சம் மிச்சப் பணம் கட்டணும். வட்டி கொடுங்கிற கடனுக்குப் போய் நிப்பானேன்னு இந்த லோன் போடறேன். இந்த பி.எப் லோன்னா வட்டி கண்ராவியை கட்டிண்டு இருக்க

வேண்டாமே.  அதுக்குத்தான்.”

“சரி, கையிலே பத்திரிக்கை இருக்கா?”

“இருக்கு.”

“அப்ப நாளைக்குக்  காத்தாலே பதினோரு மணிக்குள்ளே அப்ளிகேஷனை என்கிட்டே கொண்டு வந்து கொடும். நாளைக்கு ஒரு பதினஞ்சு அப்ளிகேஷனை அனுப்பறேன். முன்னெல்லாம் பி.எப். ஆபீஸ்லே ரெண்டு நாளைக்கி  மூணு நாளைக்கி ஒரு தரம் வாங்கிண்டு இருந்தான்கள். இப்ப பதினஞ்சு நாளைக்கி ஒரு தரம்தான் அனுப்பணும்னு ஆர்டர் போட்டுட்டான்.”

“அய்யர் ! முகஸ்துதி பண்றேன்னு நினைக்காதீம்! நம்ப ஆபீஸ்லே நீர் ஒருத்தர் நிர்வாகம் பண்ணலேன்னா ஸ்தம்பிச்சுப் போயிடும். பெரியவர் தெரியாமலா உம்மை அக்கவுண்ட்ஸ் அட்மின் ரெண்டையும் பாத்துக் கோன்னு விட்டுருக்கார் !” என்றார் சுப்பாமணி.

அவர் விடை பெற்றுப் போன பிறகு சாம்பு “அப்பா, பி.எப்.லோன்னா என்ன?” என்று கேட்டான்.

அவர் அவனைக் கனிவுடன் பார்த்தார். “எல்லாரும் அவா ஆயுசு பூரா வேலை பாக்க முடியாதுடா கண்ணா. அதனாலே வேலை பாக்கற இடத்திலே இத்தனை வயசுக்கு அப்புறம் நீ வேலை பார்க்க வேண்டாம்னு சொல்லிடுவா. வேலை பாக்கறப்போ மாசா மாசம் நமக்கு சம்பளம் வரதோன்னோ? அது வேலையை விட்டதுக்கு அப்புறம் கிடைக்காது. அப்ப மாசச் செலவுக்கு என்ன பண்ணறது? அதுக்காக வேலை பாக்கறப்போ மாசா மாசம் நம்ப சம்பளத்துலேந்து தனியா கவர்மெண்டுகிட்டே சேமிப்புன்னு கொடுத்து வச்சா ரிட்டையராகறப்போ மாசா மாசம் அது பென்ஷனா நமக்கு வரும். இப்போதைக்கு இதைத்  தெரிஞ்சிண்டா போதும்” என்று நிறுத்தினார்.

அப்பா அவருடைய ஆபீஸ் வேலையைத்தானே பார்க்கிறார்? அதற்கு எதற்கு அவருக்குப் பணம் கொண்டு வந்து தருகிறார்கள்? அப்படிக் கொடுக்க வேண்டியது என்றால் ஆபீஸிலேயே கொடுத்து விடலாமே? எதற்கு வீட்டுக்கு வந்து தருகிறார்கள்? கேள்விகள் சாம்புவைக் குடைந்தன. இதற்கு முன்னால் இப்படி நடந்ததில்லை என்று சாம்பு நினைத்தான். மகாதேவன் அதே பி.எப். வேலைக்கு சுப்பாமணி மாமாவிடமிருந்து ஏன் பணம் வாங்கிக் கொள்ள வில்லை? நண்பர், தெரிந்தவர் என்றா?

பணம் வாங்கிக் கொண்டதைப் பார்த்ததிலும், கேட்டதிலுமிருந்து சாம்புவுக்கு ஓர் இனம்தெரியாத பயமும் கவலையும் ஏற்பட்டன. அவன் வயதுக்கேற்ப இருந்த புத்திசாலித்தனமும் தெளிவும் தன் அப்பா செய்தது எளிதாக ஒத்துக் கொள்ள முடியாத ஒரு செயலென்று அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஏன்தான் அவர் அப்படிப் பணத்தை ஏழைகள் போலக் காணப்பட்டவர்களிடமிருந்து வாங்கினாரோ , அதை ஏன்தான் நான் பார்த்தேனோ, பேசினதை யெல்லாம் கேட்டேனோ என்று அவன் தன்னையே நொந்து கொண்டான்.

அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை மத்தியானமும் ஒரு மணி நடக்கும் நேரம் நீதி போதனை வகுப்பு (அதற்கு நீ போ கிளாஸ் என்று சாம்புவின் நண்பன் சுதாகர் பேர் வைத்து விட்டான்) நினைவுக்கு வந்தது. ராமநாதன் சார்தான் அந்த வகுப்பை நடத்துவார். அவரேதான் ஸ்கூலில் பி.டி. மாஸ்டரும் கூட. பையன்கள் நீ போ. கிளாசுக்கு ஒழுங்கா வரலேன்னா அவரு உன்னைப் பி.டி பி.டின்னு பிடிச்சிருவாரு என்று அவர்களுக்குள் கேலி செய்து கொள்வார்கள். ஆனால் அவருடைய நீதி போதனை வகுப்பை யாரும் தவற  விட்டதில்லை. கதையும் போதனையுமாக வகுப்பை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்லுவார்.

ஒரு மாதம் முன்பு அவர் தர்மம் பற்றி வகுப்பெடுத்தார். “நாம பிச்சைக்காரனுக்குப் பணம் போட்டா  தர்மம் பண்ணிட்டோம்னு நினைச்சுப் பெருமைப்படறோம். ஆனா அது இல்லே தர்மம். அது ஒரு நல்ல காரியம். அதுக்காக பெருமைப்பட்டுக்கலாம். ஆனா தர்மங்கிறது நாம எல்லாரும் எப்படி வாழறோங்கறது. கடமையைச் செய்யணும், சட்டத்துக்குப்  பயப்படணும். பொய் சொல்லாம திருடாம ஏமாத்தாம இருக்கணும். மத்தவாளை சந்தோஷப்படுத்தற மாதிரி நேர்மையா நடந்துக்கணும் இப்படின்னு இன்னும் எவ்வளவோ சொல்லிண்டு போகலாம். மொத்தத்திலே உத்தமமானவாளா இருக்கறதுதான் தர்மம். வேத காலத்திலே ஒரு நாய் இப்பிடி ஆனஸ்ட்டா , ஒழுக்கமா இருந்துருக்குன்னு தெரியுமாடா உனக்கு ? டேய் கலியமூர்த்தி, நீ அன்னிக்கிக் கோபாலன் பேனாவை எடுத்து உன்னோடதுன்னு சொல்லி ஆட்டங்காமிச்சியே. உனக்குத்தான் இந்த நாய்க் கதை” என்று நிறுத்தினார்.

கலியமூர்த்தி ‘திரு’ ‘திரு’ வென்று முழித்துக் கொண்டு எழுந்து நின்றான். “உக்காரு  உக்காரு . நீ தூங்கிண்டு இருந்தியோன்னு பாத்தேன்” என்றார் சார். வகுப்பு லேசாக சிரித்தது. கலியமூர்த்தியும் சிரித்துக் கொண்டே  உட்கார்ந்தான்.

“ஆமா. பாணீங்கற அசுரா இந்திரனோட தேவலோகத்திலேர்ந்து பசுக்களைத் திருடிண்டு போயிட்டான்கள்.  அதைத் திருப்பிக் கொடுன்னு கேக்க சரமாங்கற தன்னோட நாயை இந்திரன் அனுப்பறான்.  காடு, மலை, நதி எல்லாத்தையும் தாண்டிப்  போய் அசுரன்களைப் பாத்து திருடியதை வாபஸ் கொடுன்னு சரமா கேக்கறது. அவாளோட  ராஜாசொல்றான்: நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்து சேந்திருக்கே. உனக்கு நான் பசுக்களைத் தரேன். உன்னை என் சகோதரியா ஏத்துக்கறேன். அதனாலே உனக்கு ராஜ்யத்திலேயும் பங்கு உண்டு. நீ  எங்களோடேயே  இருந்துடுங் கறான். அது சொல்லறது. நீ எனக்குக் கொடுக்க வேண்டாததைக் கொடுக்கறதும் தப்பு, அதை நான் வாங்கிக்கிறதும் தப்பு. நீ  பண்ணறது இந்திரனுக்கு ரொம்ப கோபத்தைக் கொடுக்கும், வீணா அழிஞ்சு போகாதேன்னு அவன் கொடுக்கறதை வாங்கிக்க மறுக்கறது. லஞ்சம் வாங்கக் கூடாது; கொடுக்கவும் கூடாதுன்னு ஆயிரமாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒரு நாய்க்குத் தெரிஞ்சது  ஆனா இன்னிக்கி இருக்கிற மனுஷாளுக்குத் தெரியலையே. நீங்க எல்லாரும் மேலே வர வேண்டியவா. இந்த ,மாதிரி விஷயங்கள்லே ‘நோ’ சொல்றதுக்கு கத்துக்கணும். தப்புத்தண்டாவையெல்லாம் பக்கத்திலேயே சேக்கக் கூடாது. புரிஞ்சுதா?” என்றார்…

சாம்புவுக்கு தன் அப்பா செய்வதும் பாணீ செய்ததும் ஒன்றுதானா என்று சந்தேகம் ஏற்பட்டது. அதை இனிமேலும் அவர் தொடராது இருக்கும்படி தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது.ஆனால் அவரிடம் அவன் போய் எப்படிச் சொல்ல முடியும்? அவர் அவனைத் திட்டினால்?  அடித்தால்? இதற்கு முன்னால்  அவர் சுப்பாமணி யிடமும், சொந்தக்காரர்களிடமும் பலதடவை சொல்லியதை அவன் கேட்டிருக்கிறான். “செல்லம்மா மாரி ஒரு ஃபைனான்ஸ் மினிஸ்டர் எனக்குக் கிடைச்சது ரொம்ப அதிர்ஷ்டம் ஒய்!” என்று பேசிக் கொண்டேகண்ணைச் சிமிட்டுவார். “நா அவகிட்டே  இன்னிக்கு சம்பாசிச்சது ஒரு ரூபாதான்னு  கொடுத்தா, அவ எல்லா செலவும் போக ராத்திரி மிச்சம் ஓரணா இல்லை ஒண்ணரையனான்னு கணக்கு காமிப்பா. அதனாலே எனக்கு வரது போறும். பணத்தோட பின்னாலே ஓடிப் போக மாட்டேன்.”

ஆனால் அப்படிப்பட்டவர்.திடீரென்று எப்படி இப்படி மாறிப் போனார்? அவர் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? மற்றவர்களின் மதிப்பைப் பெறுவதற்காகச் சொன்னாரா? இப்போது அவரை ஓட வைப்பது எது?

அம்மாவிடம் போய்க் கேட்கலாமா என்று நினைத்தான் சாம்பு. ஆனால் அப்பா தரும் பணத்தை அவள்தான் வாங்கி பீரோவில் வைக்கிறாள். அவளிடம் சொன்னால் ‘அப்பாவையே கேள்வி கேக்கற அளவுக்கு அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டியா? உள்ளே போய் ஒழுங்கா பாடத்தைப் படிச்சு முன்னேறப் பாரு’ என்று வார்த்தைகளாலேயே அவனை வெளுத்து விடுவாள். ‘அப்பாவைப் பற்றி அப்படிக் கேட்டு விட்டாயே!’ என்று அவன் கூடப் பேசாமல் கூட இருந்து விடுவாள். அவளும் அவர் செய்வது சரியென்று நம்புகிறாளா?

அன்றிரவு மகாதேவனும் செல்லம்மாவும் மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மணி பத்திருக்கும். கீழே கூடத்தில் வழக்கம் போல ஒன்பது மணிக்கே படுக்கையில் போய் சாம்பு விழுந்து விட்டான்.

இரவு அடர்த்தியாக ஊரின் மேல் படர்ந்திருந்தது. மொட்டை மாடியில் வழக்கமாக வீசும் காற்றின் மீது இயற்கை மனஸ்தாபம் கொண்டு விட்டது போல மரங்களும் செடிகளும் அசையாமல் நின்றன. ஆள் நடமாட்டம் குன்றி தெரு அமைதியைக் காக்கப் புறப்பட்டாற் போலிருந்தது. இரவில் அவ்வப்போது ஒன்றிரண்டு பறவைகள் இசைக்கும் கீதம் கூட அன்று கேட்கவில்லை.

“உலகம் பூரா நிம்மதியா சத்தமில்லாம இருக்கு. என்னைத் தவிர” என்றார் மகாதேவன்.

“எதுக்கு இப்படியெல்லாம் பேசணும்?” என்று அவரது கையைப் பற்றித் தனதுடன்  இணைத்துக் கொண்டாள் அவர் மனைவி.

“தப்பு செய்யறோம்னு ஆதிலேர்ந்து புகட்டின பாடம் மனசை அழுத்திண்டேயிருக்கு. ஆனா நீ  ஒரு தப்பும் செய்யலே ன்னு மூளை என்னைத் தைரியப்படுத்திண்டு இருக்கு. இப்பிடித்  திரிசங்குவோட சிநேகிதனா ஆவேன்னு நினைச்சுக் கூடப் பாத்ததில்லே” என்று வறட்சியாகச் சிரித்தார்.

செல்லம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

“சின்ன வயசிலே எங்கப்பா திடீர்னு போயிட்டார். நாலு குழந்தைகள், எங்கம்மா, பாட்டி ன்னு பெரிய குடும்பம். அவர் ஒண்ணும் சொத்து சேத்து வக்யலே  அதனாலே வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்தற பாரம் என் பத்தொம்பது வயசிலேயே விழுந்துடுத்து. எனக்கு முப்பது வயசாற வரையிலும் சம்பாதிச்சதெல்லாம் குடும்ப செலவுன்னு போயிடும். எனக்கு அடுத்த ரெண்டு தம்பிகள் வேலைக்குப் போக ஆரமிச்சதுக்கு அப்பறம்தான் செலவு போகக் கொஞ்சம் கையிலே மிஞ்சினது. நான், என் வேலை அது கொடுக்கற சம்பளம் அதிலிருந்து செலவுன்னுதான் ஆறு மாசம்  மின்னே வரைக்கும் காலேட்சபம் நடந்துண்டு இருந்தது. வெளியாள் கிட்டேயிருந்து ஒரு கடன் கிடையாது, வேறே வழியிலே என்னிக்கும் பண வரவு இருந்ததில்லே” என்று நிறுத்தினார்.

“எதுக்கு இப்போ இந்த தெரிஞ்ச பழங்கதையெல்லாம்?” என்று செல்லம்மா அவரை லேசாகக் கடிந்து கொண்டாள்.

“இப்போ சொல்லப் போறதுதான் புதுக்கதை செல்லா!” என்றார் மகாதேவன். “ஆறு மாசம்னு ஏன் சொன்னேன்?அப்போதான் கிரியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அவ கல்யாணத்துக்காக அவ பிறக்கறதுக்கு மின்னாடியிருந்தே சவரனும் வெள்ளிப் பாத்திரமும், பித்தளை சாமானுமா கொஞ்சம் கொஞ்சமா சேத்து  வச்ச  பணத்திலேந்து வாங்கி வச்சோம். கல்யாணம் நடத்தறதுக்கு மண்டபம், ரெண்டு நாள் வாத்தியார் சம்பாவனை, நாதசுரக்காராளுக்கு கொடுக்க வேண்டியது, பொண்ணு மாப்பிள்ளைக்குத் தவிர  சொந்த ஜனத்துக்கும் சேத்து  ஜவுளி, ரெண்டு நாள் கல்யாணத்துக்கு மூணு வேளை டிபன் சாப்பாடுன்னு மட்டுமில்லாமே வரதட்சணைக்கும் சேத்து கையிலே காசா தனியா வச்சிருந்தேன். பி.எப். பணம் நம்ம பணம்தானேன்னு லோன் போட்டு எடுத்தேன். ஒருத்தர் கிட்டே போய்க் காசுக்குன்னு நிக்கப்படாதுன்னுதான் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி நாம குடும்பம் நடத்தினோம்”.

பேசுவதை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கூஜாவிலிருந்து நீரை எடுத்துக் குடித்தார்.

“அதான் கல்யாணமெல்லாம்  நன்னா நடந்து, வந்தவா போனவா எல்லாரும் திருப்தியா சந்தோஷமா திரும்பிப் போனாளே!” என்றாள் செல்லம்மா.

“ஆமா. அதுவரைக்கும்தான் உனக்குத் தெரியும். கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம் நான் கடன்காரனாயிட்டேன்னு உனக்குத் தெரியாதே?”

“என்னது?”

“ஆமா. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாலே ராமச்சந்திரன் கிட்டே போனேன். எட்டாயிரம் கடன் கொடுடான்னு கேட்டு.”

“யாரு உங்க ஆபீஸ் கேஷியர் ராமச்சந்திரன் கிட்டேயா?”

“வேறே யாரு? அவன்தான் வட்டிக்கு கொடுக்கற சைடு பிசினஸ்லே ஜமாய்ச்சிண்டு இருக்கானே. பாக்டரியிலே இருக்கற முன்னூறு பேர்லே  முக்காவாசிப் பேருக்கு அவன்தான் கடன் கொடுக்கற.தரும ராஜாம் பான்கள். தருமத்தை வட்டிக்கு விடற ராஜா!””

“ஆனா எல்லா செலவுக்கும் பணம் கையிலே இருக்கறதாத்தானே சொல்லிண்டு இருந்தேள்?” ஆச்சரியமும் கவலையாக செல்லம்மா கணவனைப் பார்த்தாள்.

“ரெண்டு விஷயம் நம்ம கையை மீறிப் போயிடுத்து. வரதட்சிணைன்னு மூவாயிரம் எடுத்து வச்சிருந்தேன். அதை இன்னும் அஞ்சாயிரம் ஜாஸ்தி பண்ணிட்டார் சம்பந்தி. ‘பையன் ஸ்கூட்டர் வாங்கறான்.  அதுக்காக கொஞ்சம் கூடக்  கொடுக்கணும்; உங்க பொண்ணுதானே நாளைக்கு அதை என்ஜாய் பண்ணப்போறா’ன்னு பிடுங்கினுட்டார். இதுநாள் வரைக்கும் நடராஜா சர்வீஸிலே வளர்ந்து  எம் பொண்ணு உம்ம  பையனைவிட ஹெல்தியாதானேய்யா  இருக்கான்னு வாயிலே வந்துடுத்து. அடக்கிண்டேன். ‘பையன் ஏதோ நன்னா படிச்சிருக்கான், நல்ல வேலையிலே இருக்கான்’னுதானே அவா கேட்டதுக்கெல்லாம்  ஒத்துண்டேன். கடைசியிலே அந்தப் பிராமணன் வழிஞ்சுட்டார். அதுக்கப்புறம் மாப்பிள்ளை சைடுலேந்து அம்பது பேர் வருவான்னா. கடைசியிலே மாப்பிள்ளை அழைப்புக்கு எழுபத்தியஞ்சுலேந்து நூறு வரைக்கும் வருவான்னு மாப்பிள்ளையோட அண்ணா வந்து சொன்னான். மறுநாள்  கல்யாணத்துக்கும் அதே கதைதான். உள்ளூர்லே மாப்பிள்ளை பாத்தா கூட்டம் வந்து இப்படித்தான் அள்ளும். என்ன பண்ணறது?”

செல்லம்மா “இதை ஏன் நீங்க அப்பவே சொல்லலே?” என்று சற்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“இப்ப வர்ற கோபம் அப்பவும் உனக்கு வந்திருக்கும். ஆனா நாம ரெண்டு பேரும் வேறே என்ன செஞ்சிருக்க முடியும்? கடன் வாங்கிப் பொண்ணைக் கரையேத்தறதைத் தவிர. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் வரை பாத்தேன். ராமச்சந்திரன் கிட்டேயிருந்து வாங்கின கடனுக்கு வட்டி குடுக்கறதுக்கே திணற வேண்டியதா இருந்தது. இன்னி வரைக்கும் நியாயமா ஒழுங்கா நடந்து வந்ததுக்கு இது என்ன கஷ்டகாலம்னு கடவுள் ஏன் என்னைப் புலம்ப வச்சிட்டான்னு என்னையே கேட்டுண்டேன். நான்  ரிட்டயராக இன்னும் அஞ்சாறு வருஷம் இருக்கு. அதுலே கிரிஜா கல்யாணத்துக்கு அப்புறம் முன்னே மாதிரி மாச சம்பளத்திலிருந்து வரதிலே சேத்து வச்சா சாம்பு படிப்புக்கு ஆகும்னு கணக்குப்  போட்டிருந்தேன். அது நடக்காது போல. எல்லாம் தப்புக் கணக்காப் போயிடுத்து” என்றார்.

“அப்ப நீங்க மாசா மாசம் ராமச்சந்திரன் கடனுக்கு வட்டியை மாத்திரம் கட்டிண்டு இருந்தா கடனை எப்போ திருப்பறது?” என்றாள் செல்லம்மா கவலையுடன்.

“பெரிய கேள்விதான். சங்கராச்சாரியார் கல்யாணத்தில் வரதட்சிணை வாங்கறது மகா பாபம்னார். குலகுரு வார்த்தையையே மீறி ஒவ்வொருத்தனும் வாங்கறான். போறாததுக்கு  அவர் போட்டோவைப் போட்டு அவரோட ஆசீர்வாதத்தோட இந்தக்    கல்யாணம்னு வரச் சொல்லி பத்திரிக்கை கொடுக்கிறான். கவர்மெண்ட் வரதட்சிணை வாங்கினா ஜெயிலுக்குப் போகணும்னு சட்டம் போடறது. அதைக் காலாலே மிதிச்சி வரதட்சணை வாங்கிக் குற்றவாளியா நின்னுண்டே  கல்யாணம் பண்றான். அவன் குற்றவாளியா இருந்தும் அவன் மேலே யாரும் கேஸ் போடறதில்லே. இங்கே எல்லாருமே புறம்பா நடக்கறப்போ நான் மட்டும் எதுக்கு சுருங்கிண்டு கிடக்கணும்?  சம்பளம் குடுக்கறவனுக்கும் என் கஷ்டம் தெரியாது. தெரிஞ்சாலும் ஒண்ணு பண்ண மாட்டான். அப்போ நானே என் வித்தையைக் காமிச்சு சம்பாதிச்சுக்க வேண்டியதுதான். இதிலே தர்மம் ஒழுக்கம் எல்லாம் எங்கே இருந்து வரது? வந்தாலும் அதை ஏன் நான் கவனிக்கணும்? அதான் கையை நீட்டி வாங்க ஆரமிச்சேன். ராமச்சந்திரன் கடனை அடிக்கிற வரைக்கும் நான் இப்படி  வாங்கறதை நிறுத்த மாட்டேன்.இந்த மாதிரி கை நீட்டி வாங்கறதுதான்  இப்போ என்னோட தர்மம்” என்றார் மகாதேவன்.

அப்போது மொட்டை மாடியில் குளிர்ந்த காற்று வீசிற்று. வீட்டைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து வந்த அது தோட்டத்திலிருந்த  நித்திய மல்லிக் கொடியில் அன்று சாயங்காலம் பூத்திருந்த பூக்களின் வாசனையையும் கொண்டு வந்தது. வானத்திலிருந்து சிறு விளக்குகள் அவர்களைப் பார்த்துக் கண்சிமிட்டின. இரவில் இனிமையாகப் பாடும் பெயர் தெரியாப் பறவையின் குரலும் கேட்டது.

ஸிந்து ஜா-இந்தியா 

ஸிந்து ஜா

(Visited 105 times, 1 visits today)