நீறு பூத்த நெருப்பு -சிறுகதை- ஸிந்து ஜா

ஸிந்துஜாமுத்துராமு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கச் சென்றபோது அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்தான். ஏதோ அவனை எதிர்பார்த்துக் காத்துக்  கொண்டிருந்ததைப் போல முத்துவைப் பார்த்ததும்  “சரி, போகலாமா?” என்று கேட்டான்,

அவர்கள் லிப்ட் அருகே வந்த போது அங்கே சந்திரிகா நின்று கொண்டிருந்தாள். முத்துராமுவைப்  பார்த்ததும்  இதழ் பிரியாமல் புன்னகை பூத்தாள். அவள் தட்சிணா பக்கம் திரும்பவில்லை. உண்மையில் தட்சிணா மூலம்தான் அவள் முத்துராமுவுக்குப் பழக்கமானது. ரோஸ் கலரில் புடவை அணிந்திருந்தாள். இடுப்பருகே இறக்கிக் கட்டியிருந்தாள். முத்துராமுவின் பார்வை அங்கு சென்று விட்டு மீண்ட போது சந்திரிகா லிப்ட் இறங்கும் மாடிகளின் சிவப்பு நிற நம்பர்களில் கவனத்தைச் செலுத்தியிருந்தாள். அவளது இயல்பான அலட்சியத்தின்  சமிக்ஞை.

லிப்ட் வந்ததும் மூவரும் உள்ளே புகுந்து கொண்டார்கள். வேறு யாரும் உள்ளே இல்லை. ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே போகும் நேரத்துக்குள் ஏற்பட்ட மௌனத்தைத் தாங்க முடியாதவள் போல சந்திரிகா “நல்லாயிருக்கீங்களா?” என்று முத்துராமுவைப்  பார்த்துக் கேட்டாள்.

அவன் “சௌக்கியம்தான்” என்று பதில் அளித்தான்..அவள் சுகத்தைப் பற்றிக் கேட்க அவன் வாயெடுக்கும் முன் லிப்ட் கீழே வந்து நின்று விட்டது. சந்திரிகா வெளியே வந்து திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். முத்துவும்  தட்சிணாவும் வெளியே வந்து அலுவலகக் கட்டிடத்தின் வாசல் முன் நின்றார்கள். சாயங்காலத்தின் அலுப்பைச் சுமந்தபடி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

முத்துராமு “எங்க போகலாம்?” என்று கேட்டான்.

“பதினெட்டாம் கிராஸ் ?” என்றவன் “முத்து, ஒரு நிமிஷம். டாய்லட்

போயிட்டு வந்திர்றேன்” என்று சொல்லி விட்டு வந்த வழியே கட்டிடத்துக்குள் சென்றான். கீழ்த் தளத்திலேயே ஓய்வறைகள் இருந்தன.

முத்து சந்திரிகாவைப் பற்றி நினைத்தான்….

அவள் இரு வாரங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு மாலையில் அவனைத் தேடிக் கொண்டு அவனது அலுவலகத்துக்கு வந்தாள். சல்வார் கமீசில் உயரமாகக் கொடியைப் போல இருந்தாள்  வழக்கம் போல அதிக அலங்காரங்களற்று முகம் இருந்தது. ‘என் நெற்றியையும் கண்ணையும் மூக்கையும் உதட்டையும் செய்தவன் செய்யும் போதே சரியாகப் பிடித்து வைத்து விட்ட பின் வேறு என்ன வேண்டிக்கிடக்கு ? என்று சொல்வது போல இருந்தாள். அவளை உட்காரச் சொல்லி விட்டுத் தேனீர் வரவழைத்தான். அவள் பேச்சை ஆரம்பிக்கக் காத்திருந்தான்.

“முத்து, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். அவசரமா இருபதாயிரம் வேணும். ஐயாயிரம் ஐயாயிரமா நாலு மாசத்திலே திருப்பிக் குடுத்துடறேன்”  என்றாள் சுற்றி வளைக்காமல். முகத்தில் படிந்திருந்த வேர்வைத் துளிகளைக் கர்சீப்பால் துடைத்துக் கொண்டாள்.

“எப்ப வேணும் ?” என்று முத்து கேட்டான்.

அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். சொல்லவும் சொல்லி விட்டாள்: “ஏன் எதுக்குன்னு கேக்கவே இல்லியே?”

முத்து சிரித்தான். “சொல்லணும்னு நினைச்சா நீங்களே சொல்லிடுவீங்களே” என்றான்.

“நாளைக்கு சாயங்காலம் இந்த நேரத்துக்குள்ளே கிடைச்சிருச்சின்னா நல்லா இருக்கும்” என்றாள் சந்திரிகா. அவன் சீட்டை விட்டு எழுந்தான்.

“சரி வாங்க. இதுக்காக நாளைக்கு ஒரு அலைச்சல் வேணாம். ஏடிஎம்லே பணம் எடுத்துத் தரேன்.”

இருவரும் கிளம்பினார்கள். நல்ல நேரத்திலேயே  அவென்யூ ரோடில் கூட்டம் தாங்க முடியாது.  இப்போது வீடு திரும்பும் ஜனங்களும்,

ஷாப்பிங் வந்தவர்களும், தெருக்கடைக்காரர்களும் என வீதி முழுதும் மனிதர்களால் நிரம்பி வழிவது போதாதென்று இரண்டு சக்கர

மூன்று சக்கர வாகனங்களும் போய் வருவோரை அலைக்கழித்தன. எப்படித்தான் ஒரு நாளைப்போல் இங்கே இப்படியொரு மகாமகக் கூட்டமோ? முத்துவின் இடது பக்கமாகச் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த சந்திரிகாவை எதிரே வந்த ஒருவன் இடித்துக் கொண்டு போனான். அவனைத் திரும்பிப் பார்த்துத் திட்டக்கூட முடியாதபடி வெள்ளமாய் முன்னும் பின்னும்  மனிதக் கூட்டம். முத்து அவளிடம் தனக்கு வலது பக்கமாக வரும்படி சொன்னான்.  அங்கு பிளாட்பாரக் கடைகள் ஓர் அரணைப் போல் நின்றன. ஆனால் கிடைத்த சிறு இடத்தில் அவள் அவனுடன் நடந்து வர வேண்டியிருந்ததால் அவள் உடல் அவன் மீது மோதியபடி இருந்தது.

“நான் உங்க கையைப் பிடிச்சிக்கிறேன் முத்து. கீழே தள்ளி விட்டுடுவாங்க போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே அவன் பதிலுக்கு காத்திராமல் அவள் தனது இடது கையால் அவனது வலது கையைப் பற்றிக் கொண்டாள்.

அவன்  ஏ டி எம் முக்குள் நுழைந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். கொஞ்ச தூரம் நடந்ததும் காமத் ஹோட்டல் எதிர்ப்பட்டது.

“ஏதாவது சாப்பிடலாமா ?” என்று முத்து கேட்டான்.

“எனக்கும் பசிக்குது” என்றாள் அவள். உள்ளே சென்று மாடியில் உட்கார்ந்தார்கள். பாஸந்தி, மசால் தோசை, காப்பிக்கு ஆர்டர் கொடுத்தான். டேபிள் மேல் வைத்திருந்த அவளது இடதுகையில் வாட்சின் கறுப்பு ஸ்ட்ராப் அவளது மேனியின் வண்ணத்தைத் தூக்கிக் காட்டியது. நீண்ட மெல்லிய விரல்கள் பிஞ்சு வெண்டைக்காயை சவாலுக்கு அழைப்பன போலிருந்தன

“இன்னிக்கி ராத்திரி வேற ஒண்ணும் சாப்பிட வேணாம்.”

“பத்து மணிக்கு மறுபடியும் வயித்திலே மணி அடிக்கறப்போ இப்பிடிச் சொல்ல முடியாது” என்றான் அவன்.

“எங்க ஹாஸ்டல்லே ஒம்பது மணிக்கு சாப்பாட்டுக் கடையை மூடிருவாங்க” என்று சிரித்தாள்.

அதன் பிறகு அவர்கள் அவளுடைய ஹாஸ்டல் பற்றி, அவளுடைய ஆபீஸ் பற்றி, முத்துவின் ஊரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  வெளியே வந்ததும் முத்து அவளுக்கு  ஓலா பிடித்துக் கொடுத்தான். அவள் நன்றி தெரிவித்து விட்டுக் கார்க் கதவைத் திறந்தாள். உள்ளே ஏறுமுன் “அப்புறம் பாக்கலாம்” என்றாள்.

‘எப்ப ?’ என்று வாய் வரைக்கும் வந்து விட்ட வார்த்தையை அவன் கஷ்டப்பட்டு அமுக்கிக் கொண்டான். “ஓ எஸ். பார்ப்போம்.”

அச்சமயம் கூட்டம் குறைந்து அவெனியூ ரோடில் சவுகரியமாக நடந்து போக இடம் கிடைத்தது. முத்து சந்திரிகாவைப் பற்றி நினைத்தபடி சென்றான். அன்று அவர்கள் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு முறை கூட அவர்கள் பேச்சில் தட்சிணா வரவில்லை என்று திடீரென்று அவனுக்குத் தோன்றிற்று. தட்சிணா ஊரில் இல்லை. சொந்த வேலையாக ஒரு மாதம் லீவில் போவதாய்ச் சொல்லி விட்டுத்தான் போனான். சந்திரிகாவும் தட்சிணாவும் ஒரே ஊர்க்காரர்கள் மட்டுமின்றி இருவருக்கும்  நெருங்கிய பழக்கம் என்று முத்துவுக்குத்  தெரியும். சில வார இறுதிகளில் அவர்கள் இருவரும் ஜோடியாக வெளியூர் சென்று தங்கி இருந்து விட்டு வந்திருக்கிறார்கள்….

“போகலாமா ?” என்று திரும்பி வந்த தட்சிணாவின் குரல் கேட்டது. அவர்கள் இருவரும் பிளாட்பாரத்தில் நடந்தார்கள். எட்டாவது மெயினில் பலசரக்கு ஸ்டோர்ஸ், போட்டோ ஸ்டூடியோ, ஜெராக்ஸ் ஷாப், பெரிய கறுப்புச் சட்டியில் பஜ்ஜி போண்டா வடை சிப்ஸ் போட்டுக் கொண்டிருந்த கடை என்ற வரிசைகளைக் கடந்து  பார் இருந்த கட்டிடத்தை நெருங்கினார்கள். உள்ளே ஓடிய நடைபாதையில் சென்று இடப்பக்கம் திரும்பிப் படிக்கட்டுகளிலேறி மாடியில் இருந்த ஹாலில் நுழைந்தார்கள். ஹாலில் மிதமான கூட்டமும்,  எண்ணெய் நெடியும் லிக்கர்  வாசனையும், பரவியிருந்தன

அவர்கள்  வழக்கமாக உட்காரும் இடம் காலியாக இருந்தது. எதிரெதிரே உட்கார்ந்து கொண்டார்கள். வழக்கம் போல தட்சிணா பிராந்திக்கும் முத்து ஜின்னுக்கும் ஆர்டர் செய்தார்கள்.

“நீ எப்ப ஊர்லேந்து வந்தே ? ஒரு மாசம் லீவில் போறேன்னுட்டு இருபது நாள்லயே திரும்பிட்டியே? காலேலே டிபன் சாப்பிட மெஸ்ஸுக்குப் போனப்போ மேனேஜர் சொன்னாரு, இந்த மாதிரி நீ திரும்பி வந்திட்டேன்னு.  ஒரு சான்ஸ் எடுத்துதான் உன் ஆபீஸ்லே நுழைஞ்சு பாத்தேன்” என்றான் முத்து.

“ஆமா. போன வேலை ஆகலே. எங்கப்பாகிட்டேந்து நிலத்தை வாங்கறேன்னு சொன்னவன், கடைசி நேரத்திலே வர வேண்டிய பணம் வரலேன்னுட்டான். அங்க கிராமத்திலே எவ்வளவு நாள் தடுமாறிக்கிட்டு உக்காந்திருக்கிறது? ஆறு, குளம், வயக்காடு தோட்டமா ஜிலுஜிலுன்னு இருந்த ஊரைப்  பாழடிச்சாச்சு. இளவட்டப் பசங்களும்  சினிமால பசேல்னு  வர்ற கிராமத்தைப் பாத்தா போறும்ன்னு மெட்ராசு பெங்களூரு அய்தராபாத்துன்னு கூலி வேலைக்குக் கிளம்பி வந்துட்டாங்க. அத விடு. இங்க என்னா விசேஷம்?” என்று கேட்டான் தட்சிணா.

பணியாள் பிராந்தி, ஜின் அடங்கிய இரண்டு கிளாஸ்களையும் சிப்ஸ், வறுத்த கடலை நிரம்பிய ஒரு தட்டையும் கொண்டு வந்து அவர்கள் மேஜை மீது வைத்து விட்டுச் சென்றான்.

“நீ ஊருக்குப் போயி ரெண்டு நாள் கழிச்சு சந்திரிகா என் ஆபீசுக்கு வந்திருந்தா” என்றான் முத்து.

“என்னவாம் ?” என்றபடி தட்சிணா தட்டில் இருந்த சிப்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். தனது கிளாஸை எடுத்து “சியர்ஸ்” என்று உயர்த்தி ஒரு மடக்கு அருந்தினான்.

“பணம் அவசரமா வேணும்னு கேட்டு வந்தா. இருபதாயிரம் ரூபாய் வேணும்னா. நான் ஏடிஎம்முக்குப் போய் எடுத்துக் கொடுத்தேன்.”

“சே, ஹாரிபிள் ! ஏமாத்தறதுக்கும் ஒரு எல்லையே இல்லியா?” என்றான் தட்சிணா. முத்து வாயருகே கொண்டு சென்ற கிளாஸைக் கையில் வைத்தபடி நண்பனைப் பார்த்தான்.

தட்சிணா தனது கிளாஸைத் தூக்கிக் காண்பித்தான். “பாரேன், நம்ம பிராண்டோட வேறே என்னவோ கச்சடாவைக் கலந்து கொடுத்திருக்கான். பினாயில் வாசனை அடிக்கிது” என்று கிளாஸைக் கீழே வைத்தான். முத்துவைப் பார்த்து “போதாதுக்கு அளவை வேறே கொறச்சுக் கொடுத்திருக்கான் ராஸ்கல் !”

முத்து தனது கிளாஸைப் பார்த்தான். அளவு சரியாக இருந்தது போலத்தான் அவனுக்குத் தோன்றிற்று. ஆனால் தட்சிணா சொல்லுவது போல இப்போது தரம் சற்றுத் தாழ்ந்துதான் இருக்கிறது. முன்பு செகண்ட்ஸ் கிடைத்துக் கொண்டிருந்த போது இந்தக் கடைக்காரர்கள் தரத்தில் கை வைக்காமல் இருந்தார்கள்.

தட்சிணா அவனிடம் “ம், சொல்லு நீ அவ கேட்டபணத்தைக் கொடுத்தியா?” என்று கேட்டான்.

“ஆமா.”

” நீ ஒரு முட்டாள்.”

“ஏன் ?”

“அந்தப் பணம் உனக்கு கிடைக்க சான்ஸே இல்லே” என்றான். முத்து அவனைப் பார்த்தான்.

“லாஸ்ட் ஒன் இயரா அவ என் கிட்டே வாங்கற பணத்தை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கறதே இல்லே”

“அவ உனக்கு ரொம்ப வேண்டியவளாச்சே, நான் உன்னோட நெருங்கின பிரெண்ட்ன்னுதான் வந்து கேக்கறான்னு கொடுத்தேன்.”

“உன்னை முன்னாலேயே நான் வார்ன் பண்ணியிருக்கணும்” என்றான் தட்சிணா. “அவ உங்கிட்ட பணம் கேட்டு வந்தப்ப என்னைப் பத்தி ஏதாச்சும் சொன்னாளா?”

“இல்ல. உன்னைப் பத்தி பேச்சே வரலே. நீ ஊர்ல இல்லேன்னு தான் என்கிட்டே வந்து பணம் கேக்கறான்னு நான் நினைச்சேன்”

என்றான் முத்து.

“என்னைப் பத்திப் பேச்சு எப்பிடி வரும் ? நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதுக்குத் தானே இந்த வாய்க்காத் தகராறு எல்லாம் !” என்றான் தட்சிணா.”ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம்னா போனாப் போகுதுன்னு விட்டிறலாம்.”

முத்து தான் இப்போது என்ன சொல்ல வேண்டும் என்று தட்சிணா எதிர்பார்க்கிறான் என்று நினைத்தான்.

தட்சிணா அவனிடம் “சுளையா அம்பதாயிரம்” என்றான் தட்சிணா.

“என்னது ?”

“ஆமா. கடன் வாங்கிக் கொடுத்தேன்.. ஒரு வருஷம்  ஆயிருச்சு. ஒரு பைசா திரும்ப வரலே. தெரிஞ்சவள்னு ஒரு பேப்பர் கூட வாங்காம முட்டாள் மாதிரி கொடுத்தேன். இப்ப நான் அந்தக் கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்கேன். அசலை எப்போ எப்படி அடைக்கப்போறேன்னு எனக்கே தெரியாது.”

அப்போது பணியாள் அவர்களிடம் வந்து வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டான்.இல்லையென்று அவனைப் போகச் சொல்லி விட்டு தட்சிணா முத்துவிடம் “இந்தப் பினாயிலைக் குடிக்க முடியாது.  வைக்கிங் போகலாம் வா. ஆனா அவன் பேண்ட்டை உருவி விட்டிருவான். போனாப் போகட்டும். என்னிக்கோ ஒரு நா தானே செலவழிக்கிறோம் ! நல்ல ஸ்டஃப்பாவது கெடைக்கும்” என்றான். பிறகு “ஒரு நிமிஷம் இரு. நான் இந்த மானேஜர் கிட்டே போயி நாக்கைப்  பிடுங்கிக்கிற மாதிரி ரெண்டு வார்த்தை கேட்டுட்டு வரேன்” என்று எழுந்து சென்றான்.

முத்துவுக்கு மனது அலை பாய்ந்தது. அன்று அவெனியூ ரோடில் சந்திரிகாவைக் காரில் ஏற்றி விட்ட பின்பு தனியாகத் திரும்புகையில் சந்திரிகாவுக்கும் தட்சிணாவுக்கும் இடையில் ஏதோ திரை விழுந்து விட்டது போல அவனுக்குத் தோன்றியது. ஆனால் உடனே அவன் மனம் ‘சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது’ என்று அதை மறுதலித்தது.

தன்னைத் தட்சிணாவின்  நெருங்கிய நண்பன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டுதான் சந்திரிகா வந்து பணம் வாங்கிக் கொண்டாள் என்று அவனது மனம் அப்போது சமாதானம் சொன்னது.

ஆனால் அதுவும் இன்று அவர்கள் இருவரையும் லிப்ட் அருகில் பார்த்த போது சந்திரிகா தட்சிணாவைத் தவிர்த்து விட்டு தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்ததும்,லிப்டில் தன்னிடம் மட்டும் விசாரித்ததும் எதைக் குறிக்கின்றன? அதே போலத்  தன்னைத் தேடிக் கொண்டு வந்து சந்திரிகா கடன் வாங்கியதை பற்றித் தட்சிணாவிடம் சொன்ன போது முதலில் அவன் ஏன் காதில் விழாதது போல் இருக்க வேண்டும்? ஏனோ முத்துவுக்குத் திடீரென்று அன்று அவெனியூ ரோடில் சந்திரிகா தன்னுடன் உடல் உராய நடந்து வந்தது நினைவுக்கு வந்தது…

திரும்பி வந்த தட்சிணா முத்துவின் எதிரே உட்கார்ந்து கொண்டான்.

“மானேஜர் காலா விழாத குறையா மன்னிப்புக் கேட்டான். சார், நீங்க நம்மளோட லாங் டைம் கஸ்டமர். என்னமோ தப்பு நடந்திருச்சு. பாக்டரிலேந்தே அப்பப்போ  இந்த மாதிரி சரக்கு அனுப்பிச்சிடறாங்க. என்ன செய்யுறது? உங்களுக்கு இப்ப கொடுத்ததுக்கு  பில் போட

மாட்டாங்க. நீங்க போயி வேற ஆர்டர் பண்ணுங்க. நான் சொல்லுறேன்னான்” என்று சிரித்தான் தட்சிணா.

அப்போது அவனது கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்து விட்டு “சொல்லு கண்ணம்மா. என்ன விஷயம்?” என்றான் தட்சிணா.

மறுபக்கப் பேச்சைக் கேட்டு விட்டு “ஓ, அப்பிடியா? மத்தியானம் நாம லஞ்சுக்குப் போனப்போ நீ இதப்பத்தி ஒண்ணும் சொல்லலியே? சரி, இப்ப நீ எங்கே இருக்கே? ரூமுக்கு வந்திட்டியா? அப்ப ஒண்ணு பண்ணு. சாம்ராட் ஓட்டலுக்கு வந்துடறியா? உங்க ரூமுக்குப் பக்கத்திலே தானே நட்ராஜ் தியேட்டரு?  ஆமா. அங்கதான். நான் இன்னும் கால் மணிலே அங்க வந்திர்றேன். சரியா?” என்று போனை அணைத்தான்.

பிறகு முத்துவைப் பார்த்து “கிளம்பறதுக்கு முன்னாலே ஒரு ரவுண்டு போடலாமா?” என்று கேட்டபடியே பணியாளை அழைத்தான். இருவருக்கும் லார்ஜ் கொண்டு வரச் சொன்னான்.

கண்ணம்மா என்று தட்சிணா அழைத்த பத்மா  தன் அலுவலகத்தில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவள் என்று மூன்று மாதத்துக்கு முன்பு முத்துவிடம் தட்சிணா சொல்லியிருந்தான். அவள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள், இங்கு வந்தும்  யாருடனும் அதிகமாகப் பேச்சு வைத்துக் கொள்ளாதவள் என்றும் அவன் முத்துவிடம் ஒருமுறை சொன்னான்.அப்படிப் பழக்கம் வைத்துக் கொள்ளாதவள் இன்று தட்சிணாவுடன் மத்தியானம் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போயிருக்கிறாள்.  இப்போது அவசரமாக தட்சிணாவை வரச் சொல்லுகிறாள். அவனும் அவளைக் கண்ணம்மா என்று செல்லமாகக் கூப்பிடுகிறான்.

பணியாள் இரண்டு கிளாஸ்களில் லிக்கர் எடுத்துக் கொண்டு வந்தான். கூடவே ஒரு பிளேட் ஆனியன் பஜ்ஜியும் கொண்டு வந்து வைத்தான்.

தட்சிணா தன் கிளாஸை எடுத்து அருந்தி விட்டு “இப்ப பார், எவ்வளவு சூப்பராயிருக்குன்னு” என்று சிரித்தான். ஆனியன் பஜ்ஜியை எடுத்துத் தின்றான். முத்து அவனுக்கு வந்த ஜின்னை எடுத்து அருந்தினான். அது முன் போலவேதான் இருந்தது.

“உன் பணம் உனக்கு ஒழுங்கா வந்து சேரணுமேன்னுதான் எனக்கு இப்ப கவலை” என்றான் தட்சிணா.

“நீ சொல்றதை எல்லாம் என்னாலே நம்பவே முடியலை. நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஒத்துமையாத்தானே இருந்தீங்க?” என்றான் முத்து. அவன் கண்களிலும் முகத்திலும் படர்ந்து நின்ற ஆச்சரியத்தைத் தட்சிணா இமைக்காமல் பார்த்தான்.

பிறகு ” நாங்க ரெண்டு பேரும் வெளியூருக்கெல்லாம் போயி தங்கிட்டு வந்ததைச் சொல்லுறியா?” என்று கேட்டான். கூச்சத்தை உண்டாக்கிய அந்தக் கேள்விக்கு முத்து விடையளிக்கவில்லை.

“ரெண்டு பேரும் கலியாணம் செஞ்சுக்கத்தானே போறோம்னு அப்பிடி இருந்தோம்.”

முத்துவுக்குப் புரியவில்லை. கலியாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குதானே பணம் கொடுத்தான்? அது கடன் வாங்கிக் கொடுத்தாலும் கூட நாளை இருவரும் மணம் செய்து கொண்ட பின் இருவரின் சம்பாத்தியத்தில்தானே குடும்பம் நடத்தப் போகிறார்கள்? இதற்குள் எப்படி மனஸ்தாபம் உள்ளே நுழைந்தது?  ஒருவேளை பத்மா …?

தன் முகத்தில் அவநம்பிக்கையின் சுவடு எதுவும் தெரியாமல் இருப்பதற்காக  முத்து பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

தட்சிணா முத்துவிடம் “நீ அந்த சந்திரிகாகிட்டே ஜாக்கிரதையா இருந்துக்க. அவளுக்கு பணத்தை வாங்கத்தான் தெரியும். இதுக்கு மேலே சொல்ல வேணாம்னு பாக்கறேன்” என்றான். முத்து ஏதோ சொல்ல வாயெடுத்தான். அப்போது தட்சிணாவின் கைபேசி ஒலித்தது.

எடுத்தவன் “ஹலோ, நான் கிளம்பிட்டேன். வந்துகிட்டே இருக்கேன்” என்று போனை அணைத்தான்.

“அப்ப நான் கிளம்பட்டா? நீ பில் செட்டில் பண்ணிருவேல்லே!”

முத்து தலையை ஆட்டினான்.பணியாளைக் கூப்பிட்டு பில் கொண்டு வரச்  சொன்னான். மாடிப்படியில் தட்சிணா இறங்கிச் செல்வது தெரிந்தது. முத்து தன் கைபேசியை எடுத்துப்  போன் செய்தான்.

மறுமுனையில் “சந்திரிகா ஹியர்” என்று கேட்டது.

“ஹலோ, நாலு மாசம் டயம் வேணும்னு சொல்லிட்டு பாதிப் பணத்தை இன்னிக்கிக் காலேலயே பேங்குல போட்ருக்கீங்க. திடீர்னு எங்கேர்ந்துடா பத்தாயிரம் ரூபாய் கிரெடிட்ன்னு பேங்க் அக்கவுண்டப் பாத்தா பணம் போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சுது. உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமில்லையா?”” என்று கேட்டான் முத்து அவளிடம்.

சந்திரிகா சிரிக்கும் குரல் கேட்டது. “திடீர்னு ஆபீஸ்ல  இன்சென்டிவ் போனஸ்னு கொடுத்தாங்க. அதுலேந்து கொஞ்சத்தைக் கொடுத்துடலாம்னுதான் போட்டேன்” என்றாள்.

“ஓ, அப்படியா ? வெரி குட். பை தி வே, சந்திரிகா ! நீங்க ஃப்ரீயா இருந்தா இன்னிக்கி ஈவினிங் நாம மீட் பண்ணலாமா?” என்று கேட்டான் முத்துராமு.

“ஒய் நாட் ?” என்றாள் சந்திரிகா.

ஸிந்துஜா-இந்தியா 

ஸிந்துஜா

(Visited 78 times, 1 visits today)