சூழ்-சிறுகதை-ஸிந்துஜா

ஸிந்து ஜா
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்

சம்பத்தும் ராணியும் ஏழு மணிக்கு வெளியே கிளம்பிய போது ஹாலில் சோபாவில் சாய்ந்தபடி வரதன் சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருந்தார். அவரருகில் சென்று, “அப்பா, இது என்ன நூத்தியஞ்சாவது தடவையா?” என்று புத்தகத்தைக் காட்டிச் சிரித்தான்.

அவர் தலையைத் தூக்கி அவனைப் பார்த்து, “நூத்தி ஆறாவது தடவை” என்றார்.

“பொழுதைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளணுமே.”

“நாங்க மார்க்கெட்டுக்குப் போய் காய் வாங்கிட்டு வந்திடறோம்” என்றாள் ராணி. அவர் தலையசைத்தார்.

ராணி போகும் வழியில் “உங்கப்பாவைப் பாக்கத்தான் எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்றாள்.

“ஆமா. என்ன பண்ணுறதுன்னு எனக்கும் தெரியலே.”

“பகல்லயாச்சும் என்னமோ புஸ்தகம் படிக்கிறாங்க. டி.வி.லே நியூஸ் கேக்குறாங்க, சினிமா பாக்குறாங்க, சாயுங்காலந்தான் எப்பிடிப் பொழுதோட கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க.  அப்பிடியும் இன்னிக்கி  நாலு மணிக்கு வெளிய போயிட்டு ஆறரைக்குதான் திரும்பி வந்தாங்க.”

“எங்க போனாங்களாம்?”

“அவருகிட்டே ‘எங்கேப்பா போனீங்க? ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆயிருச்சே, இன்னும் வரலியே’ன்னு எனக்கு கவலையாயிருச்சுன்னேன்.

‘நான் என்ன பாப்பாவா?’ன்னு சிரிக்கிறாங்க. கோயிலுக்குப் போயிட்டு வந்தாங்களாம்.”

“என்னது? கோயிலுக்கா?”

“ஆமாங்கறேன். கேட்டா எட்டாங் கிராஸ் என்ன, பதினொன்னாங் கிராஸ் என்ன, பதினேழாம் கிராஸ் என்னன்னு அலைஞ்சு திரிஞ்சிட்டு வீட்டுக்கு வந்திருக்காங்க”  என்று சிரிப்பும் வியப்புமாகச் சொன்னாள் ராணி.

ராணி சொன்ன இடங்களில் எல்லாம் சிவனும், சக்தியும், ராகவேந்திரரும், விநாயகரும் அனுமாரும்  வேணுகோபாலசாமியும் பரவிக் கிடந்தார்கள். வரதனா, மதுரை வரதனா கோயில் குளங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்? சம்பத் நம்பாதவன் போல மனைவியைப் பார்த்தான்.

அவள் “எங்கிட்டே பிரசாதம்னு நாலஞ்சு கோயில் விபூதியும்,குங்குமமும், பூவும் கொண்டு வந்து கொடுத்தப்புறம்தான் தெரிஞ்சிச்சு” என்றாள்.

அவர் எப்போதும் கோயில் குளம் என்றால் ஒதுங்கி விடுவார் என்று  சம்பத்துக்குத் தெரியும். மீனாட்சி கல்யாணம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என்று ஊரே அமர்க்களப்படும் விசேஷங்களுக்கு வெளியூர்களில் இருந்து உறவு ஜனம்  அவர்கள் வீட்டில் வந்து குழுமும். இருக்கும் வீடு பத்தாது என்று ராத்திரி படுத்துக் கொள்ளப் பக்கத்து வீட்டு ஜெகதீசன், எதிர் வீட்டு முனுசாமி ஆகியோர்  அவரவர் வீடுகளில் இடம் தருவார்கள். தஞ்சாவூரிலிருந்து காரை எடுத்துக்கொண்டு வரும் சீனு சித்தப்பா “அண்ணே, நீங்களும் வாங்களேன். நடந்தா போறோம்? கார்ல  போயிட்டு கார்லியே திரும்பிடலாம். மீனாச்சி கலியாணம் பாக்கக்  கொடுத்து வச்சிருக்கணும்” என்று கெஞ்சுவார்

“நீ கொடுத்து வச்சவனாப் போயி பாத்துட்டு வா. என்னைய விட்டிரு. ஆயிரம் பேரா கோயிலை ரொப்பி மூச்சு முட்டிகிட்டு போயி இடிபடணுமா? வெள்ளிக்கிழமையாப் பாத்து வாங்கடே. அப்பதான் நான் அருள் பண்ணுவேன்னு அம்பாள் சொல்லிச்சா? நான் சனிக்கிழமை மீனாச்சியைப் போய்ப் பாக்குறேன். அப்ப நாலு பேர்தான் இருப்பான். ஆயிரம் குரல விட நாலு குரல்தான் அம்மனுக்கும் நல்லா கேக்கும். என்ன சொல்லுறே?” என்று சீனு சித்தப்பாவின் வாயை அடைத்து விடுவார்.

அந்த வரதனா கோயில்ளுக்குப் போனார் என்று ராணி சொல்கிறாள்?

சம்பத்வரதனை பெங்களூருக்குக் கூட்டி வந்து ஒரு வாரமாகிறது. ஒரு பத்து இருபது நாள் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கிறார். அவனது படிப்பு முடிந்ததும் சம்பத் வேலையென்று மதுரையை விட்டு வெளியே வர வேண்டியதாயிற்று.  அவனது அம்மா மரணத்துடன் கைகுலுக்கிக் கொண்டு ஆறு மாதம் முன்பு பிரிந்து விட்டாள். மதுரையோடு ஒட்டிக் கொண்டிருந்த வரதன் தான் ஒண்டியாகவே இருந்து கொள்வேன் என்று சம்பத்துடன் வந்து இருக்க மறுத்து விட்டார். அக்கம் பக்கத்தில் அவர் வயதுக்காரர்கள், கொஞ்சம் வயது குறைந்தவர்கள், இளைஞர்கள், யுவதிகளென்று எல்லோரும் அவருக்கு நண்பர்கள்தான்.

‘அவுங்கள்ளாம்  எனக்கு சொந்தத்துக்கு மேலே’ என்றார் சம்பத்திடம் ஒருநாள். சூழ்ந்திருப்பவர்கள்  நாளின் வெவ்வேறு நேரங்களில் அவரைச் சுற்றி வந்து பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். தினசரி மாலையில் சம்பத்தின் வீட்டு வாசல்  திண்ணையில் பயங்கர அரட்டைக் கச்சேரி நடந்தது.

“தாத்தாவோட பேசிட்டிருந்தா நேரம் போறதே  தெரியறதில்லே அங்கிள்” என்று பாத்திமாவில் படித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண் அனசூயா அவரைக் கூட்டிக் கொண்டு போவதற்காக சம்பத் மதுரை வந்திருந்த  போது சொன்னாள்.

“ஆமா நேத்து  உங்கிட்டே அடிச்சு விட்டுகிட்டு இருந்தாரே?” என்றான் சம்பத் சிரித்தபடி. முந்தின தினம் வாசல் திண்ணையில் ஒரு கூட்டம் சேர்ந்து  சினிமா, பாலிடிக்ஸ், டி.வி. பத்திரிகை, மதம்  ஃபேஷன் என்று வர்சயா வர்சயா இல்லாமல் வரதனுடன் பேசிக் கொண்டிருந்தது. சம்பத்தும் அந்தக் கூட்டத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“தாத்தா நீங்க ஜோ பைடன் ஜனாதிபதியா ஆன அன்னிக்கி அந்த ஃபங்க்ஷனைப் பாத்தீங்களா?” என்று அனசூயா கேட்டாள்.

“அவனுக்கு என்னை விடப் பதினஞ்சு வயசு ஜாஸ்தி. அந்த எம்பத்தி அஞ்சு வயசு குமரனோட பங்க்ஷன்தான் நான் பாக்காமப் பாழாப் போச்சு போ” என்றார் வரதன்.

“தாத்தா , இப்போ உங்களுக்கு அறுபது வயசு இருக்குமா?” என்று கேட்டாள் அனசூயா.

“இன்னும் இருபது வயசு குறைச்சுக் கேளேன்” என்று சிரித்தான் சம்பத்.

“அவருக்கு இப்போ எழுபது ஆகுது.”

வரதன் அவன் பேச்சால் காயமுற்றவர் போல சம்பத்தைப் பார்த்தார்.

“பைடனுக்கு எழுபத்தி எட்டு வயசுதானே ஆகுது” என்றார்  இரண்டு வீடு தள்ளியிருக்கும் சாமிநாதன். அவர் வரதனுடன் காலேஜில் கூடப் படித்தவர்.

“என்னை விடப்  பெரியவன்தானேய்யா?”

“ஆனா பிரசிடெண்டா ஆன அன்னிக்கே பதினஞ்சு ஆர்டர்ஸ்லே கையெழுத்துப் போட்டாராமே !” என்றாள் அனசூயா.

“ஆமா. ஒரு கையிலே கைத்தடி. கீழே விழுந்துறாம இருக்க இன்னொரு

கையிலே பேனாவைப் பிடிச்சிகிட்டு கையெழுத்துப் போட்டான்!”  என்றார் வரதன்.

எல்லோரும் சிரித்தார்கள். ‘உங்களுக்கு இது எப்படித் தெரியும்?’ என்று யாரும் கேட்கவில்லை.

பேச்சு திடீரென்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து மதுரையைத் தொட்டது.

“நாளைக்குத் தெப்பம். ஒரே கூட்டமா இருக்கும், போலாமா? ஜாலியா இருக்கும்” என்று சம்பத்தின் வீட்டு மாடியில் இருக்கும் வாசு, அனசூயாவிடம் கேட்டான்.

“இங்கேந்து நாம ஒரு கேங்கா போலாமா ! நீங்க வரீங்களா தாத்தா?” என்று அனசூயா வரதனிடம் கேட்டாள்.

“தெப்பத்துக்கு வர்ற கூட்டம்லாம்  என்ன கூட்டம்? கூட்டம்னா எதிர்சேவைக்கு வர்றதைப் பாக்கணும்” என்றார் கோடி வீட்டில் இருந்த சுப்பையா..

“ஆனா தாத்தாதான் அங்கிளோட ரெண்டு நாள்லே பெங்களூருக்குப் போயிடுவாரே ! அப்புறம் எங்கே  எதிர்சேவை?” என்றான் வாசு.

“பெங்களூர்லே எல்லாம் பத்து நாள், மிஞ்சிப் போனா இருபது நாள் அவ்வளவுதான்” என்றார் வரதன் பிள்ளையைப் பார்த்தபடி.

“அப்ப நீங்க வந்தப்புறம் நாம எல்லாரும் சேர்ந்து எதிர்சேவைக்குப் போயி கள்ளழகருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வரலாம்” என்று சிரித்தாள் அனசூயா.

“கள்ளழகர்தான் நம்மூரோட மொதல் பாலிடீஷியன்” என்றார் வரதன்.

“என்னது?”

“பின்னே? எதிர்சேவைக்கு வர்ற கூட்டத்தைப் பாத்திருக்கியா? பத்துப் பன்னெண்டு மைலுக்கு ஜனங்க தலைதான் தெரியும். பெரிய ஊர்வலம். தலைவர் வராருன்னு இன்னிக்கு வருஷத்திலே பாதிநாள் கட்சி ஊர்வலம்னு கூட்டமா  வாறாங்களே, நீ பாத்திருக்கேல்ல? அதுக்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்ம கள்ளழகருதான்.”

“நீங்களும் பேசாம பாலிடிக்ஸுக்குப் போயிருக்கணும் தாத்தா!” என்றாள் அனசூயா சிரித்தபடி.

“அவர சினிமால நடிக்கக் கூப்பிட்டாங்களே” என்றார் சாமித்துரை.

கூடியிருந்த அனைவரும் வரதனின் வாயைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

“நிஜமாவா?” என்று தாங்க முடியாத ஆச்சரியத்துடன் அனசூயா வரதனைப் பார்த்தாள்.

“நீங்க சினிமாலே நடிச்சிருக்கீங்களா?”  வாசு அதிர்ச்சியுடன் கேட்டான்.

வரதன் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தார்.

“சும்மா ரீல் விடாதீங்க சார்” என்று சுப்பையாவும் சிரித்தார் சாமித்துரையைப் பார்த்து.

“இல்ல. அது நெஜந்தான். ஆனா அந்த நாப்பது வருஷத்துக்கு முந்தின கதை எதுக்கு இப்ப? ” என்றார் வரதன். சம்பத்துக்கு இந்த விஷயம் முன்னாலேயே தெரியும் என்று அவன் சும்மா இருந்தான்.

“வாவ்!”  என்றாள் அனசூயா கைகளைத் தட்டியபடி. “என்ன படத்துக்கு தாத்தா?”

“கூப்பிட்டாங்க. ஆனா நாந்தான் முடியாதின்னுட்டேன்.”

“ஏன் தாத்தா?”

“கமலஹாசனுக்கு அப்பாவா நடிக்கிறியான்னு கேட்டான்.”

“அதனாலென்ன?” என்றான் வாசு அதிருப்தியோடு.

“டேய், கமலஹாசன் ஆயிரத்தித் தொளாயிரத்து அம்பத்து நாலு. நான் ஆயிரத்தித் தொளாயிரத்து அம்பது. நாலு வயசு வித்தியாசத்துக்கு நான் அப்பாவா?” என்று கேட்டார் வரதன்.

“சே, நல்ல சான்சைக் கெடுத்திட்டீங்க” என்றான் வாசு விடாமல்.

“எனக்கு பதில் சொல்றேன்னு காதலிக்க நேரமில்லைலே முத்துராமன் நடிக்கலையான்னு அவங்க கேட்டாங்க” என்றார் வரதன்.

“அதானே!” என்றார் சுப்பையா.

“அதுக்கப்புறம் நானும் சரின்னேன். ஆனா ஒரு கண்டிஷன்னு.”

“அது என்னது?”

“கமலுக்கு ஜோடியா ஸ்ரீதேவின்னா எனக்கு ஜோடியா சில்க்ஸ்மிதாவைப் போடுன்னேன். மாட்டேனுட்டாங்க !”

‘ஹோ ஹோ’வென்று எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள்.

அனசூயா சம்பத்தைப் பார்த்து “அங்கிள்! இது ரீல்தானே?” என்று கத்தினாள்.

“அவனுக்கு என்ன தெரியும்? அப்ப  அவன் பொறக்கக் கூட இல்லே” என்றார் வரதன்.

“ஆனா, எங்கம்மா சொல்லியிருக்காங்க. சினிமாலே நடிக்கிறியான்னு கேட்டது வரைக்கும்தான் நெஜம்” என்று சம்பத் சிரித்தான்.

மதுரையில் இருக்கிற வரை ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பேச்சும் சிரிப்புமாகப் போய்க் கொண்டிருந்ததை சம்பத் பார்த்தான்.

மறுநாள் சம்பத் ஆபீசுக்குக் கிளம்பும் போது வரதன் ஹாலில் டி. வி. பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தார்.

“நேத்து கோயிலுக்கெல்லாம் போனீங்களாமே!” என்றான் சம்பத்.

“ஆமா. பொழுதே போகல. சரி, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமுன்னு வெளிய போனேன். வயசானவங்க  ஈவினிங்கல நம்ப ஊர் ஆடி வீதில கூட்டமா உக்காந்து பேசிகிட்டிருப்பாங்கல்ல? அதுமாதிரி இங்க கோயில்ல  யாராச்சும் கிடைப்பாங்களான்னு பாக்கப் போனேன். பூ விக்குற அம்மா, அர்ச்சனை சாமான் விக்கறவன், கோயில்லஇருந்த அய்யரு இவுங்களை விட்டா நாலைஞ்சு தலைதான் தெரிஞ்சுச்சு” என்றார் டி.வி. யை அணைத்து விட்டு எழுந்தபடி.

சம்பத் அன்று மாலை ஆபிசிலிருந்து சீக்கிரம் கிளம்பி விட்டான்.  அவன் மல்லேஸ்வரம் இரண்டாவது கிராஸ் அருகே  ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்டு மந்திரி மாலுக்குச் சென்றான். மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் அவனுடைய உடைகளை மாற்றம் செய்யக் கொடுத்திருந்தான். வாங்கிக் கொண்டு திரும்புகையில் மால் வாசலில் அவனது நண்பன் சேகர் நிற்பதைப் பார்த்தான். சேகர் மல்லேஸ்வரம் சர்க்கிள் அருகே ஆடிட்டிங் பிராக்டிஸ் செய்கிறான்.

சேகர் அவனைப் பார்த்து “வாட் எ சர்ப்ரைஸ்! இப்பதான் உங்கப்பாவைப் பாத்தேன். கால்மணி கழிச்சு நீ வந்து நிக்கறே” என்று சிரித்தான்.

“எங்கப்பாவையா? இங்கியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சம்பத்.

“இங்கதான். பார்க்குக்கு உள்ளாற போயிருக்காரு” என்று எதிர்ப்புறத்தில் இருந்த பாஷ்யம் பார்க்கைக் காண்பித்தான். “அஞ்சு நிமிஷம் பேசினாரு. பார்க்குக்குப் போயிட்டிருக்கேன்னாரு. வாங்க ஒரு காப்பி குடிக்கலாம்னேன். காப்பில்லாம் இப்பதான் வீட்டிலே குடிச்சேன். நீ ஒரு நா வீட்டுக்கு வான்னு சொல்லிட்டு பார்க்குள்ளாற போயிட்டாரு.”

சம்பத்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சரி, உங்கப்பாதான் வரலே. நீயாவது வா. மங்களூர் பஜ்ஜி ஒரு கை பாக்கலாம்” என்று சேகர் அவனை இழுத்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போனான். சாப்பிடும் போது சம்பத்தின் நினைவில் அப்பாதான்  இருந்தார். யாரையாவது சிநேகம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்று இங்கே வந்திருக்கிறாரா? ஆட்கள் புடை சூழ  அவர் பேச்சை ரசிக்கும் மதுரையைப் பெங்களூருக்குக் கொண்டு வர விரும்புகிறாரா?

சாப்பிட்டு முடிந்ததும் சேகர் தனக்கு ஆபீசில் வேலை இருக்கிறது என்று விடை பெற்றுக் கொண்டு போனான். சம்பத்துக்கு ஆர்வமும் குறுகுறுப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. அவன் பார்க் உள்ளே சென்றான். அரசாங்கம் செடி கொடி மரங்களை இன்னும் பராமரித்துப் பார்க்கைப் பார்க்காக வைத்திருந்தது. இடது மூலையில் எதிரெதிரே போடப்பட்டிருந்த கல் பெஞ்சுகளில் சில நடுத்தர வயதுக்காரர்களும் சற்று வயதானவர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சம்பத் வரதனைத் தேடினான். அவரது நீல முழங்கைச் சட்டை அவரைக் காட்டிக் கொடுத்தது. அவன் நின்ற இடத்திலிருந்து அவரது முதுகு தெரிந்தது. அவன் வலது பக்கம் சென்று விளக்கு எரியாத ஓர் இடத்திலிருந்த கல்பெஞ்சில் உட்கார்ந்தான். அங்கிருந்து வரதனின் முகம் பக்கவாட்டில் தெரிந்தது.

அவன் அங்கே ஒல்லியான மனிதர் ஒருவர் கையை வீசி உரக்கப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். வரதன் குறுக்கிட்டு அவரிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ஆனால் அந்த மனிதர் வரதனைப் பேசாமல் இருங்கள் என்று  சைகை காண்பித்து விட்டு மேலே பேசிக் கொண்டிருந்தார். மேலும் ஒன்றிரண்டு பேர் குறுக்கே விழுந்த போது அந்த ஒல்லியான மனிதர் தடை எதுவும் சொல்லவில்லை. வரதன் எதுவும் பேசாமல் அவர்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அவர் அங்கே வராமலிருந்திருக்கலாம் என்று சம்பத் நினைத்தான். அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. வரதனிடம் போய்த் தன்னுடன் வீட்டுக்கு வரும்படி  கூப்பிடலாமா என்று நினைத்தான். பிறகு அவர் தன் போக்கில் அங்கிருந்து விட்டு வரட்டும் என்று நினைத்தபடி எழுந்து வெளியே வந்தான்.

ராணியிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று அவன் வீட்டுக்குள் நுழைந்த போது அவள் போனில் பேசிக் கொண்டிருந்தாள். ராணி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் அவள் சென்னையில் உள்ள தங்கையுடன் பேசுவது தெரிந்தது. எப்போது பேச ஆரம்பித்தாளோ என்று சம்பத் நினைத்தான். இப்போதுதான் ஆரம்பித்தது என்றால் அடுத்த ஒரு மணி நேரம் பேச்சு போகும். அவள் தங்கை சென்னை டெலிபோன்சில் அதிகாரியாக இருந்தாள்! அவன் ராணியைப் பார்த்துக் கையசைத்து விட்டுத் தனது அறைக்குச் சென்றான்.

முக்கால் மணி கழித்து அழைப்பு மணி ஒலித்தது. தான் வந்ததுக்குப் பிறகு இவ்வளவு நேரம் வரதன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே சம்பத் கதவைத் திறந்தான். ராணி அவர் வருவதை பார்த்துப் போனைக் கீழே வைத்து விட்டு “இன்னிக்கும் ரெண்டு மணி நேரம் ஆயிருச்சே!. வேறே வேறே கோயிலா?” என்று சிரித்தாள்.

“அதையேன் கேக்கறே ராணி?” என்று அவர் அவளருகே சென்றார். “இன்னிக்கி பாஷ்யம் பார்க்கு விசிட்.”

“அப்பிடியா? இவ்வளவு லேட்டா வரீங்க? பேச ஆள் கிடைச்சிட்டாங்களா?”

“அங்கே யாரோ ஒருத்தரு பாலிடிக்ஸ் பேசிகிட்டு இருந்தாரு. இப்பல்லாம் பிள்ளைங்க அவுங்க அப்பாக்களை விட ரொம்ப கெட்டிக்காராங்களா ஆயிட்டாங்கன்னாரு. சுதந்திரம் கிடைச்சதிலிருந்து இன்னிக்கி வரைக்கும்  இந்த ஏரியா கவுன்சிலரோட குடும்பத்திலேந்துதான் யாராவது ஒருத்தர் கவுன்சிலரா இருக்காராம். இப்ப இருக்கற பிள்ளை அவனோட அப்பாவை விட ரொம்ப கெட்டிக்காரன்னு புகழ்ந்து சொல்லிட்டிருந்தாரு. நான் அதெல்லாம் இல்லே. அப்பாதான் கெட்டிக்காரரு. அவருக்கப்புறம் அவரு மகன்தான பதவியில இருக்கணும், ஜனங்களோட பழகணும்,  அதுனாலே அவரே மகனை கெட்டிக்காரனா உலகத்துக்கு காமிச்சு விட்டுருவாருன்னு சொல்லப் பாத்தேன். ஆனா அந்த ஆள் என்னைப் பேச விடல அதுக்கப்புறம் கூட்டம் கலைஞ்சப்போ என் பக்கத்திலே இருந்தவரு

‘நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு?’னு கேட்டாரு. இன்னும் ரெண்டு மூணு பேரும் என்னைப் பாத்திட்டிருந்தாங்க” என்றார்.

சம்பத்தும் ராணியும் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள்.

“நான் அவங்ககிட்டே இப்ப உங்ககிட்ட சொன்னதைச் சொன்னேன். இந்த அப்பா பிள்ளை கெட்டிக்காரத்தனத்தையெல்லாம் அந்தக் காலத்திலேயே செஞ்சு வச்சுட்டாங்க. ராமாயணக் காலத்துலேந்து இருக்கேன்னேன் ! ‘இது என்ன புதுக்கதை?’ன்னாரு என் பக்கத்திலே இருந்தவரு. ‘ஆமாம் சார். தசரதனுக்கு  அறுபதாயிரம் பொண்டாட்டிங்க. ஆனா ராமன் ஏகபத்தினி விரதன், இல்லியான்னேன்.”

ராணியும் சம்பத்தும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

“ஒத்தரு நீங்க நாளைக்கும் பார்க்குக்கு வருவீங்களான்னு கேட்டாரு. அதுக்குள்ளே இன்னொருத்தரு கண்டிப்பா வந்திருங்கன்னாரு.  என் பக்கத்துல  உக்காந்திருந்தவரு அட்ரஸ் குடுங்க. நான் நாளைக்கி வந்து உங்களை என் வண்டியிலே கூட்டிட்டுப் போறேன்னாரு” என்று சிரித்தார் வரதன். வரதன் இருபது நாளுக்கும் மேலே பெங்களூரில் தங்குவார் என்று சம்பத் அப்போது நினைத்தான்.

ஸிந்துஜா-இந்தியா

ஸிந்து ஜா

(Visited 36 times, 1 visits today)