அப்(பப்)பா….!-சிறுகதை-உஷா

உஷா
ஓவியம் : டீன் கபூர்

மழை கொட்டிக் கொண்டிருந்தது. கார்க்கண்ணாடிகளை நோக்கி ஆக்ரோஷமாக விழுந்த மழைத்தளிகள் வேட்கை தணிந்து படபடத்து அடங்கின. தன் கவனம் முழுவதையும் பாதையில் செலுத்திய அந்த ஓட்டுனரின் திறமைக்கு மழையும் காற்றும்  சவாலாகவே  இருந்தது. இன்னொரு சமயமாக இருந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதோ ஒரு பரவசம் பொங்க  வசு மழையின் அழகை ரசித்துக் கொண்டே   பயணித்திருப்பாள். எப்படியாவது இருட்டும் முன்னர் கொழும்பைச் சென்றடைந்து விட வேண்டும் என்கின்ற எண்ணமே இப்போது மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.  “இங்க  ஏன் அப்பா  தனிய இருக்கிறீங்க?  ஏதாவது என்றால் உதவிக்கு கஷ்டமில்லையா.?”  சொல்லி முடிப்பதற்குள் தன் வழக்கமான  ‘ஹே..ஹே.. ‘ என்ற கிண்டல் சிரிப்புடன்,

“அப்பாவைப் பற்றி என்னடா நினைச்சாய்..!?  கீர்த்தியடா ! கீர்த்தி வர்மன்!! எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை!. அதோட இங்கயிருக்கிற என்ர friends-ஐப் பற்றி என்ன நினைச்சாய்!? எனக்காக உயிரையும் குடுப்பாங்கள் தெரியுமா?” என்று அப்பா தன் பிரதாபங்களைத் தொடங்க, அவர் போக்கில் அவரை விடாமல் எதற்காக நாம் வீணாய் வாயைக் கொடுத்தோம் என்றாகிவிட்டது வசுவுக்கு.

நெடுநேரமாய் வாகனம் ஊர்ந்து கொண்டு போவது போலத் தோன்றவே ஓட்டுனரிடம் என்ன நடந்தது என்று அவள் விசாரித்தாள். ஏதோ வீதி விபத்தாம். விரைவில் வேறொரு புது வழியால் சுற்றிக் கொண்டு சென்று விடலாம் என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றார் அவளின் அவசரத்தைப் புரிந்து கொண்டிருந்த அந்த வயதான ஒட்டுனர். என்ன தான் நம் உயிரைக் கொடுத்து முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நிகழ்வதெதுவும் நம் கைவசம் இல்லை என்ற நிஜம் உறைக்கையில் தான் பதட்டப் படுவதால் ஆகப் போவது எதுவும் இல்லை என்ற நிதானம் பிறக்கிறது. பல மணி நேரமாய் இருக்கையின் நுனியிலேயே உட்கார்ந்திருந்த சிரமத்தைச் சட்டென உணர்ந்தவள் ஆழமானதொரு பெருமூச்சையெறிந்து இருக்கையில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

இக்கட்டான இந்த நேரத்தில் கூட வசுவால் அப்பா பற்றிய எண்ணங்களைத் தவிர்க்க முடியவில்லை. இதுவே அப்பாவாக இருந்தால் இப்படி எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தானும் படபடத்துத் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பதட்டப்பட வைத்து விடுவார். பயணம் தாமதமாவதற்காக ஓட்டுனரைத் திட்டி, அதற்குக் காரணமாக இருக்கும் வாகன விதிமுறைகளை விமர்ச்சித்து அவற்றுக்குக்குக் காரணமாக இருக்கும் இந்நாட்டு அரசியலைக் காரசாரமாகக் குறை கூறி..  பாரபட்சமின்றி எல்லோரையும் காய்ச்சி எடுத்தும் தீராது அவரது பதட்டம். நல்ல வேளையாக நாம் இந்த குணத்தில் அவரைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அம்மாவின் கதை வேறு. வசுவுக்கு நினைவு தெரிந்தவரை அம்மா குழப்பங்களாகவே வாழ்ந்து குழப்பத்திலேயே இறந்தும் போனாள். எந்த நேரமும் அப்பாவைப் பற்றியே ‘ஏன் இப்படிப் பேசினார்.. எதற்காக இப்படி நடந்து கொண்டார் அப்போது என்ன நினைத்திருப்பார்…தவறு என்னிடமோ?  என்ன தவறு செய்தேன்..?’ என்றெல்லாம் புலம்பியபடியே அவளின் இறுதி நாட்கள் கழிந்தன. அவள் பேச முடியாமல் போன கடைசி நாட்களிலும் கூட இது போன்ற கேள்விகளே அம்மாவின் விழிகளோரம் தேங்கியிருந்ததாய் வசுவுக்குத் தோன்றியது, வாழ வேண்டிய காலத்தை எல்லாம் இவரைப் புரிந்து கொள்ளும் முயற்சியிலேயே கரைத்து விட்ட அம்மா  திடீரென்று அதிசயமாக விழித்துக் கொண்டாற்போல ஒரு கட்டத்தில்  தனியாகப் பிரிந்து வந்தும் கூட அதே குழப்பங்கள் அதன்பின் அவளை ஒரு சில மாதங்கள் தான் வாழ வைத்தன. அம்மாவின் காலம் முடிந்து விட்டது. ஆனால் வசுவுக்கும் கூடத் தான் புரியவில்லை. பல கேள்விகள் மனதில் தூங்கிக் கிடந்தன. அம்மாவை அப்பா நேசித்தாரா இல்லையா? அம்மாவின் பிரிவு இவரை பாதித்திருக்கிறதா இல்லையா? இவருடைய மணவாழ்க்கை திருப்திகரமாக அமைந்ததா இல்லையா?  இவருடைய மனதில் இன்னும்  நிறைவேறாத ஆசைகள் ஏதும் இருக்கின்றனவா? குழம்புவதில் இப்போது  நம் முறையோ?, கூடாது.

அம்மாவிடம் புகுந்து கொண்டிருந்த அந்தக் கெட்ட ஆவி  கூடுவிட்டு என்னுள் கூடு பாய அனுமதிக்கவே கூடாது என்று அவள் சுதாரித்துக் கொள்ளவும்,

“இன்னும் 5 நிமிஷம் தான் மகள். வேறு பாதை எடுத்திரலாம்!” என்கிறார் ஓட்டுனர். காலநிலையும் வீதி நிலவரமும் பாவம் கடமையுணர்வுள்ள அந்த மனிதரின் கவனத்தை எவ்வளவு நேரமாகக் கட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மை புரிய,

“பரவாயில்லை.. இருட்டும் மழையுமா இருக்கு. நீங்கள் நிதானமாக ஒட்டுங்கோ ஐயா..”

சாலையில் இன்னமும் வாகனங்கள்  ஊர்ந்த வண்ணமே இருந்தாலும் மழை மட்டும் வெகுவாகக் குறைந்திருந்தது. தாமதமாவதைத் தெரிவிக்கக் கைத்தொலைபேசியிலிருந்து அப்பாவையும், அப்பாவின் நண்பரையும் தொடர்பு கொள்ள முயன்றாள். எவரிடமிருந்தும் பதில் இல்லை. மக்னுஸ் வேறு பதிலளிக்கவில்லை. சில மணி நேரமாக இருந்தாலும் உலகத்துடன் எந்தத் தொடர்புகளுமற்று நெடுங்காலமாய் எங்கோ  நடுக்காட்டில் தனியாக விடப் பட்டாற் போலிருந்தது வசுவுக்கு. உள்ளூர எழுந்த கணநேர நடுக்கத்தை மறக்க கவனத்தை ஜன்னலுக்கு வெளியே செலுத்த முயன்றாள். தெருவோரக்கடைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. தனியே ஹோட்டல் அறையில் மாட்டிக் கொண்டிருக்கும் மக்னுஸ் ஒரு கணம் நினைவில் வந்தான்.

“நோர்வேஜியனா!? என்ன சொல்லிறாய் நீ? ஏன்.. இங்கை பிறந்த ஒரு தமிழ்ப் பெடியன் கிடைக்கேலயா உனக்கு…. !?” வழக்கம் போலப் பதட்டத்தில் உளறினார் தான் என்றாலும் எப்போதும் போலன்றி அப்போது ஏனோ வசுவுக்கு கோபம் பீறிட்டது.

“என்னப்பா இது ..உங்கட லொஜிக்?  இங்க பிறந்த தமிழ்ப்பெடியங்களைக் கணக்குப் பாத்து, சாதி, பரம்பரை, காசு எண்டு கூட்டிக் கழிச்சு மிஞ்சின ஆளாப் பாத்துக் கல்யாணம் கட்டச் சொல்லிறீங்களா… !? ” என்று உரக்கக் கேட்டவள், “உங்களைப் போலை……”  என்று கடைசியில் மெல்லமாக முணுமுணுத்தாள். அந்த முணுமுணுப்பு அவருக்குக் கேட்டதா, இல்லையேல் கேட்டும் அதைச் சட்டை செய்யவில்லையா என்று தெரியவில்லை. இங்கு பிறந்த ஏனைய தமிழ்ப் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் வசு யாழ்ப்பாணத் தமிழர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றியெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருப்பவள். வெகு சரளமாகத் தமிழ் பேசவும் செய்வாள், புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலாவது தலைமுறையினைச் சேர்ந்தவளாய், பெரியவர்களால் நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்களை ஏற்றுக்கொள்ளத் தன்னால் இயலவில்லை என்பதை அவள் பலமுறை தன் தந்தையின் தலைக்குள் புகுத்த முயன்றிருக்கிறாள். இருந்தும் கூட, தனக்கு இயல்பாக ஒரு தமிழனிடமே காதல் உணர்வுகள் ஏற்படக் கூடும் என்று நினைத்திருந்தவளுக்கு மக்னுஸ் மேல் காதல் பிறந்தது அவளே எதிர்பாராத ஒன்று தான். தனக்குப் பிடித்தவன், தன்மேல் அளவு கடந்த அன்பைச் செலுத்துபவன் வேற்று மொழிக்காரனாய் இருப்பதற்கு அவள் என்ன தான் செய்ய முடியும்!?

வசு  தன் முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டாள் என்பது நன்றாகத் தெரிந்திருந்ததால் அதன் பிறகு அப்பா அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசாமல் விட்டு விட்டார்.

‘தன் முழங்கால் வலியோடு பல மணிநேர விமானப்பயணம் வசதிப்படாது நோர்வேயிலேயே நண்பர்களுடன் திருமணத்தை முடித்துக் கொள்’ என்ற தன் வார்த்தைகளை வசு மதிக்கவில்லையாம். முகத்தைச் சிடு சிடுவென்று வைத்துக் கொண்டு ஒரு முழு நீள விமானப்பயணம்.

“நீங்கள் இங்க ஓய்வெடுத்துக் கொள்ளுங்கோ அப்பா. நான் போட்டு வாறேன்.” மிக மிக எளிமையாகத் தானும் மக்னுஸும் மட்டும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு தாய்நாட்டின் அழகிய இடங்களையெல்லாம் அவனுடன் சுற்றிப் பார்த்து விட்டு வரும் எண்ணத்தில் இருந்த வசு,  எத்தனையோ முறை தன் தந்தையிடம் எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

“அப்பன் நான் உயிரோடை இருக்க, நீ அனாதை போலத் தனியப் போய் கல்யாணம் கட்டப் போறியா?”

வசுவுக்குச் சிரிப்பு வந்தது. காரணம் இந்த வார்த்தைகள் அவரிடமிருந்து அவள் எதிர்பார்த்தது தான். அப்பா எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன சொல்வார் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது.  ஒரு தந்தையாக, கணவனாக, மகனாக தான் செய்ய வேண்டிய கடமைகள், தனக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்று காலங்காலமாகத் அவர் கேட்டு அறிந்த சில விஷயங்கள் ஒரு பட்டியலாக அவருள்ளே ஆழமாக வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. எந்தக் காலத்திலும்,  எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவரால் வேறு மாதிரியாகச் சிந்திக்க முடியாது.  தற்செயலாக ஏதும் நிகழும் பட்சத்தில் ஒரு தந்தையாக. அல்ல, நடைமுறைக்கு ஏற்றவாறு ஒரு மனிதனாகச் சிந்தித்து அவர் நடந்து கொண்டாலே போதுமானதாகத் தோன்றும் வசுவுக்கு.

விமானப் பயணத்தின் போது மறந்தும் கூட அப்பாவின் அமைதிக்கான காரணத்தைக் கேட்டு விடக் கூடாது என்பதில் வசு கவனமாக இருந்தாள். அவருடைய அகராதிப்பபடி இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வேஷம் இது தான் . காரணம் கேட்டால் அவருக்கே தெரியுமோ என்னவோ. காரணம் கேட்டால் சட்டென்று ஏதாவது  கற்பனையில் கண்டுபிடித்துப் புதிதாக ஒரு பஞ்சாயத்துக்கு வருவார். எதற்கு வீண் வம்பு என வசு ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

அவர்கள் தரையிறங்கிய நேரம் அந்த விமான நிலயம் பாதி இருளில் இன்னமும் தூங்கிக் கொண்டு தான் இருந்தது. நேரத்தைப் பற்றிய உணர்வின்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுங்கப்பகுதியைக்  கடந்து இருண்டதொரு வாயிலினூடாக வெளியே சென்றார்கள். தன் தாய்நாட்டில் காலை வைத்தது தான் தாமதம். அப்பாவின் மௌனவிரதம் தடாலடியாய்க் கலைந்தது. நொடிக்கொரு தடவை கைக்குட்டையினால் பின்னங்கழுத்தைத் துடைத்தபடி ‘சே என்ன வெக்கை…’ என்று முகத்தைச் சுழித்தார். அனாவசியமாய்த் தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் கடந்து சென்றவர்களிடம் நேரம் கேட்டார். பிரயாணக் களைப்பும், தூக்கக் கலக்கமுமாய் அவளுக்கு விரைவில் அந்த விமான நிலயத்தை விட்டு வெளியேறினால் போதும் என்றிருந்தது. அளவான  மின்சார வெளிச்சத்தில் அதிகாலை அமைதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் உரக்கப் பேசியபடி ஓரிரண்டு பெண்கள் காக்கிநிற மேலுடையுடன் மலசலகூடங்களைக் கழுவுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வசு மலசலகூடத்திற்குச் சென்று திரும்பிய போது அப்பா அந்தப் பெண்களிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். வசு அவரை அண்மிக்கையில் “ஐ ஆம் கீர்த்தி வர்மன்!! வை ஷுட் ஐ ? “என்று எகத்தாளமாகச் சிரிப்பதைத் தான் கேட்க முடிந்தது. அவர்களது பயணப்பெட்டிகளைச் சுமந்து வந்தவர்களுடனும் அப்பா ஆங்கிலம் தான் பேசினார். கூடுதலாக 100 ரூபாயை அவர்களின் கையில் திணித்தார். அவர்களின் பார்வையில் அவர் சட்டென ஒரு சீமைத்துரையாக உயர  அவையே போதுமானதாக இருந்தது. சராசரித் தமிழ்ப் பெண்கள் போல நீ தான் எல்லாம் என்று அம்மாவும் இவரிடம் சரணாகதி அடைந்திருந்தால் இவரிடமுள்ள இந்த ஈகை, இரக்க குணம் எல்லாவற்றையும் அவளும் கண்டிருக்கக் கூடும்.

“தனிய வரேக்கை கண்டபடி காசைக் குடுக்காத. ஏமாத்துக்காரப் பயலுகள்” என்று வேறு வசுவுக்கு அறிவுரை கூறினார். duty freeக்குள் நுழைந்ததும் அங்கு வேலை செய்த ஒரு சிங்களப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு விட்டார். ரெண்டு ‘போத்தல்’ எடுக்கவென்று உள்ளே நுழைந்தவர் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த அந்தப் பெண்ணிடம், தனக்குத் தெரிந்த அரைகுறை சிங்களத்துடன் ஆங்கிலத்தையும் கலந்து நோர்வேஜிய மக்கள், அங்குள்ள காலநிலை, கீர்த்திவர்மன்.. அதுதான்.. அவரின் பொழுதுபோக்குகள் என எல்லாவற்றையும் அளந்து கொண்டிருக்க, அந்தப் பெண்  வாடிக்கையாளர்களிடம்  காட்டவேண்டிய பொறுமை கருதி அவரிடம் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது வசுவுக்கு. ‘அப்பா ப்ளீஸ்.. .’ அவமானமாக இருந்தது அவளுக்கு.  3, 4 வயதில் பார்த்த போதும் இவர் இப்படித் தான் இருந்ததாக ஞாபகம். முப்பது வருடங்கள் ஆகியும் தன் மகளின் முகத்தைப் பார்த்து அவளின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ளும் தன்மை கீர்த்தி வர்மனிடம் இல்லை.

கண்டவர்கள், அங்கு பணி புரிந்தோர் என்று எல்லோரிடமும் சிரித்துப் பேசி விட்டு கடந்து சென்றதும்  அவர்களைத் திட்டித் தீர்த்தார். எல்லாமே தன் பழைய உறவுகள், நட்புகளைக் காணும் வரை தான். அவர்களை அழைத்துச் செல்ல அப்பாவின் தம்பியும் நண்பர்களும் வாகனத்துடன் வந்திருந்தார்கள். அவர்களைக் கண்டதுமே வசுவை மறந்து அவர்களுடன் அவர் படு பிசியாகி விட்டார். ஒரு சில நாளாவது தன் தம்பியுடன் தங்க வேண்டும் என்ற அப்பாவின் நிர்ப்பந்தத்தை வசுவால் மீற முடியவில்லை.

அப்பாவின் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள் அவையாகத் தான் இருக்க வேண்டும். அங்கு இருக்கும் வரை குளித்துப் பளிச்சென்று உடுத்திக் கொண்டு தினம் ஒரு உறவினரிடம் சென்று சாவகாசமாக மணிக்கணக்கில் உட்கார்ந்து, ‘கீர்த்தி என்றால் சும்மாவா…?’ என்று ஒரு மகாத்மாவின் இடத்தில் தன்னை நிறுத்தி வைத்துக்கொண்டு, உலகத்திலேயே தான் மட்டும் தான் ஒரு கௌரவமான தொழிலில் இருப்பது போல், எவருக்கும் புரியாத தன் வேலை நுணுக்கங்களை விபரமாகப் பேசியபடி, தன்னைப் போல் வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நீள நீளமாய் அறிவுரைகள் கூறியபடி தன்னை மறந்த ஒரு நிலையில் இருப்பார்.. மரியாதை கருதியோ அவர் மேலுள்ள அன்பாலோ, அல்லது போகும்போது அவர் கொடுக்கப் போகும் பணம், பரிசுப் பொருள் போன்றவற்றிற்காகவோ  திறந்த வாய் மூடாமல்  அவர் சொல்வதையெல்லாம் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். காப்பாற்றி விடுவிக்க எந்த தெய்வம் வரும் என்று வேண்டியபடியே  வேறு வழியின்றி அவற்றையெல்லாம் வசு கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். இந்த முறை அந்த அனாதரட்சகன் மக்னுஸ் தான். மக்னுஸ்சிற்கு இந்த நாடும் மொழியும் புதிது என்ற காரணத்தைக் கூறி அப்பாவிடம் விரைவிலேயே விடை பெற முடிந்தது. அவரும் அவ்வளவு இலகுவில் அவரது அபிமானிகளை விட்டு அசைவதாகத் தெரியவில்லை.

அப்பா அவளுக்கு அங்கு மிகவும் அன்னியமாய்த் தெரிந்தார்.  ஓய்வாக, வயதுக்கேற்ற நிதானமுடையவராக, மிகவும் பக்குவமுள்ள ஒரு பெரிய மனிதராக.. இது போல் அவரை அவள் முன்னொருபோதும்  கண்டதில்லை,  நேரெதிரே நாற்காலியைப் போட்டுக் கொண்டு பல மணி நேரம் உட்கார்ந்து பேசும் இந்த அப்பாவை அவள் வீட்டில் கண்டறிந்ததில்லை. அவருடன் கூட உட்கார்ந்து பேசும் தகுதியற்றவர்களா அம்மாவும் நானும்..? ஏன் இந்த வேறுபாடு..?  நம்மைத் தன்னுடன் சரி சமமாகப் பேச விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? சமுதாய நலனில் அக்கறையுள்ள, தெளிவான அரசியல் கண்ணோட்டம் கொண்ட பெண் என்று பள்ளியில் பெயரெடுத்த வசுவை ‘இதெல்லாம் உனக்குப் புரியாது..’  என்பதுபோல் அப்பா தவிர்த்து விடுவதை இளம் வயதில் மிகப் பெரிய அவமானமாகக் கருதினாள் வசு. சின்ன வயதில் கூட ‘பள்ளிக்கூடம் எப்பிடிப் போகுது…? படிக்கிறியா…? போய் உக்காந்து படி!’ என்பது போன்ற, குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சுவாரஸ்யமற்ற வார்த்தைகளைத் தவிர வசுவிடம் அவர் வேறு எதுவும் பேசியதில்லை. ஆனால் அறிவுரை வழங்குவதற்கு மட்டும் என்றுமே அவர் நேர காலம், யார் எவர், அவசியமா இல்லையா என்ற பாரபட்சங்கள் பார்த்ததில்லை.

குளியலறை வாசலிலும், அப்பாவின் அறைக்கதவருகிலும் தொலைபேசியிலுமே அம்மா அப்பாவுடன் பேசுவதை அவள் பார்த்திருக்கிறாள். அப்பாவுக்கு அம்மாவிடம் அந்த அவசியம் கூட இருந்ததில்லை. அவர் தன் உறவினர்களுடன் இப்படி இழைந்திருப்பது வசுவுக்கு மகிழ்ச்சி தான் . உறவு என்பது கொடுப்பதும் பெறுவதுமாகவல்லவா இருக்க வேண்டும்? இது என்ன விதமான பாசம் என்பது தான் அவளுக்குப் புரியவில்லை.

இப்போது கோவிட் வைரஸின் பாதிப்பால் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருப்பதாக அவருடைய தம்பி தொலைபேசியில் அறிவிக்க.. இதோ வசுவும் புறப்பட்டு விட்டாள். அவரைப் பார்க்க அனுமதி இருக்காது. ஆனாலும் ஒரு மகளாய் நான் அங்கு இருந்தே ஆக வேண்டும் என்று மக்னுஸூக்கு எடுத்துக் கூறிச் சமாதானப்படுத்தி விட்டுப் புறப்பட்டு விட்டாள். அப்பாவின் ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், நீரிழிவு நோய் என்று அவர் சுமக்கும் எல்லா வியாதிகளும் நினைவில் வந்து அவளை பயமுறுத்தின. உண்மையோ இல்லையோ, என் திருமணத்திற்குத் தானும் கூட இருக்க வேண்டும் என்று இந்த வயோதிப காலத்தில் அவ்வளவு தூரம் முழங்கால் வலியுடன்  பயணித்து இங்கு வந்தார். நம் ஒரே உறவு இவர் தான். அம்மா இல்லாத எனக்கு இப்போது  அப்பாவும் இல்லாமல் போய் விடுமோ…? வசுவின் கண்கள் குளமாகின. ஆஸ்பத்திரியை வந்தடைந்த போது இரவு 11 மணியாகிக் கொண்டிருந்தது. தொலைபேசி மூலம் எவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் உள்ளுர பயந்து கொண்டே வந்த வசுவுக்கு அங்கு அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த அப்பாவின் தம்பியைப் பார்த்ததும் சட்டென்று ஏனோ அழுகை வந்தது. அவர் அவளைப் பார்த்து மெல்லியதாய்ப் புன்னகைத்து, ” அண்ணா இப்ப ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டாராம். பிராண வாயு இல்லாமல் சுவாசிக்கலாம் எண்டு சொல்லிப் போட்டினம். phone-இல கதைக்கிறியா..?” என்றபடி வசுவின் பதிலுக்காகக் காத்திராமல் கைத்தொலைபேசியை அவளின் கையில் கொடுத்தார். கைகள் நடுங்கத் தொலைபேசியை வாங்கி ‘அப்பா….’ என்றவளின் குரல் அவளையறியாமல் தழுதழுத்தது.  மறு முனையில் “ஹேஹே….” என்ற அப்பாவின்  வழக்கமான எகத்தாளச் சிரிப்பு.

உஷா –நோர்வே

உஷா

(Visited 100 times, 1 visits today)
 

2 thoughts on “அப்(பப்)பா….!-சிறுகதை-உஷா”

Comments are closed.