தானாய் வருவதில்லை-சிறுகதை-உஷா

உஷா
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

கோடையில் மழை தனி அழகு தான். காரின் வைப்பர் ஒவ்வொரு தடவை அசையும் போதும் வித விதமான கோலங்களாய் கண்ணாடியில் கலைந்து போகின்ற மழைத்துளிகளை வேடிக்கை பார்த்தவாறு வந்த மாயாவைத் திடுக்கிட வைத்தது அவன் குரல். “எப்ப பாத்தாலும் பெடியளோடை football விளையாடிக் கொண்டு திரியிறாள். ஒழுங்கா வளக்கத் தெரியாமல் அவளைக் கெடுத்து வச்சிருக்கிறாய்…!”

சீற்றத்துடன் வெளிப்பட்டது கதிரின் குரல்தான்.மகளைப் பற்றித் தான் அவன் பேசுகிறான் என்று புரிய அவளுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன.ஒருவரைச் சீண்டி விடும் வார்த்தைகள்…  குறி தவறாமல் அவை அவளைத் தாக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.தன் சீற்றத்தை இவ்வாறு அவள் வசம் இடம் மாற்றி விட்டால் அத்துடன் அவன் பொறுப்புத் தீர்ந்து விடும்.

பக்குவமாகச் செதுக்கப்படும் ஒரு சிற்பத்தை அதன் அழகு கெடாமல் எப்படி வடிவமைக்கலாம் என்பது மாயாவின் கனவும் நினைவுமாக இருக்கிறதே.

இருவரும் வெளியே புறப்படும் போது இரண்டு ஆண் நண்பர்களுடன் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் “டாம் அன்ட் ஜெர்ரி” பார்க்கிறாள் மகள். அவளை என்ன கேட்க முடியும்?.. அதைப் பெண் நண்பர்களுடன் பார்த்தாலென்ன என்றா…? foot ball ஆடாதே பரதநாட்டியம் கற்றுக்கொள் என்று தன் பிள்ளைக்கு உபதேசம் செய்வது எத்தனை முட்டாள்த்தனம்!? எப்போதுமே தனித்தவளாய் குருட்டு யோசனைகளுடன் இருக்கும் மகள் இப்போது சமீப காலமாகத் தான் கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறாள் என்பதில் மனம் லேசாகி விட்டிருந்தது.

ஏதேதோ சொல்லிவிட மனம் பரபரத்தாலும் இப்போதெல்லாம்  சட்டென வார்த்தைகளைப் பிறர் மேல்த் துப்பக்கூடாது என்கிற பாடத்தைக் கதிரிடமிருந்து தான் அவள் கற்றுக் கொண்டிருந்தாள்.

அந்த தேவாலயத்தை வந்தடைந்ததும் அவசர அவசரமாகத் தன் எண்ணங்களைத் துடைத்து உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டவள்  இயல்பானதொரு புன்னகையைத் தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டாள்.நண்பி யென்னி ஓடோடி வந்து வரவேற்றாள். யென்னியின் தங்கைக்குத் தான் இன்று திருமணம்.

அத்தனை கூட்டம் இல்லை.மணமக்களுக்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமே அங்கு சூழ்ந்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பியானோ இசையின் பின்னணியில், நண்டும் சிண்டுமாய் சில குழந்தைகள் சூழ மணமக்கள் உள்ளே நுழைந்தனர். அதில் ஒரு பையன் அவர்கள் இருவருக்கும் பிறந்தவன். மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.யென்னியின் பெற்றோர் ஒருவர் கையை ஓருவர் பற்றிக் கொண்டு தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். மணமகனின் முந்தைய உறவுக்குப் பிறந்த மூத்த பையன் மிகுந்த பொறுப்புணர்வுடன் திருமணத்தை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தான். எல்லோர் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி.

“பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு கல்யாணம் கட்டி வைக்குதுகள்… நல்ல கலாச்சாரம்.!” நக்கலாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான் கதிர்.

000000000000000

“எங்களுக்கு நெருக்கமான ஒண்டு ரெண்டு பேர் போதும் அப்பா..” என்று மாயா எவ்வளவோ தூரம் எடுத்துச் சொல்லியும் தன் ஒரே மகளை  ஊரார், உறவினர் வந்திருந்து வாயார வாழ்த்த வேண்டும் என்றெல்லாம் பல காரணங்கள் கூறி அவளுடைய திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார் அப்பா.

“கல்யாணத்தைக் கொழும்பில வைக்க விடேல்லை.. எல்லாருக்கும் அது பெரிய ஏமாற்றம்”இது கதிரின் மூத்த சகோதரன்.

“இப்ப கல்யாணத்துக்கு இவனுக்கு என்ன அவசரமாம்…?! சின்னவன்ர படிப்பை முடிச்சிட்டு ஒரு நல்ல இடத்திலை நாங்க பாத்துச் செய்து வைக்க மாட்டோமே?” இது மாப்பிள்ளை பக்கத்து “நெருங்கிய” சொந்தமொன்றாம்.

“ஏதாவது குடுத்தினமோ.. அல்லாட்டி பொம்பிளை வெறுங்கையை வீசிக்கொண்டு வருகுதோ..?.”

“மூத்தவளுக்கு கதிர் தான் பாத்துப் பாத்து எல்லாம் செய்து கல்யாணம் கட்டிக் குடுத்தவன். இப்ப அவளுக்கு 9 மாசமாகுது.தான் நிண்டு தன்ர தம்பிக்குச் செய்ய வேண்டிய  கல்யாணம்.வர முடியேல்லயே  எண்டு அக்காக்காரி ஒரே அழுது கொண்டிருக்கிறாளாம்.”

“கதிருக்குத்  துப்பரவா மனம் சரியில்லை.இரவு முழுக்கப் புலம்பினபடி….”

“அங்க. அந்தத் தட்டோட நிக்கிற மொட்டையர் தான் பொம்பிளையின்ர தகப்பனாம். பார் சிரிப்பை. ஒரு சதம் செலவில்லாமல் மகளைத் தள்ளி விட்டிட்ட சந்தோஷம்.”

அந்தத் திருமணமண்டபத்தில் அன்று ஆங்காங்கே கேட்டது போக மாயாவின் காதுகளுக்கு வந்து சேர்ந்த சங்கதிகள் இவை. அங்கு வந்திருந்த இருநூறுக்கும் மேற்பட்ட சொந்த பந்தங்களுள் தன்னை மனதார வாழ்த்தியவர்கள் தன் பெற்றோர் மட்டுமே எனத் தோன்றியது அவளுக்கு. பொய்யான சிரிப்புகள், வயிற்றெரிச்சல்கள், வசைகள், போலியான அக்கறைகளுக்குள்  கழுத்தை நீட்டி அன்று ஒரு தாலியை அவள் வாங்கிக் கொண்ட போது  ஏதோ தவறைச் செய்து விட்டாற் போல அவமானத்தில் மனம் கூனிக் குறுகிப் போனது.

ஐந்து வருடங்கள் காதலித்த கணவன் அன்று கூடி நின்ற மற்ற மனிதர்களை விடவும் அன்னியனாய்த் தெரிந்தான். எல்லாவற்றுக்கு் மேலாக, திருமணத்திற்கு முதல் இரண்டு நாட்களிலிருந்து கதிர் அவளுடன் முகம் குடுத்துப் பேசுவதையே நிறுத்தியிருந்தான். இந்த உலகில் ஏதோ தன்னந் தனியாகத் தான் மட்டும் விடப் பட்டாற் போல மணவறையில் உட்கார்ந்தபடி புகைப்படத்திற்காகப் போலியாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்தவர்களை  மனப்புழுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் மாயாவின் நினைவில் ஒரு கறுத்த தினமாகவே  இருந்தது..

000000000000000

விருந்துபசாரம் முடியும் தறுவாயில் மணமகன் பேச்சு. அமைதியான சூழலாக இருந்தாலும் உணர்ச்சிகள் மிகையாகவிருந்த அந்தத்  தருணம் கனமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவித்தது.

“12 வருடங்களுக்கு முன் அன்னியும் நானும் ஒருவருக்காக ஒருவர் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்ட போது நாம் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தோம். இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின்னும் அந்த உணர்வில் எந்தவொரு மாற்றம் இல்லாததால் திடீர்  என்று ஒரு நாள் நாம் திருமணம் செய்து கொண்டால் என்ன என்கிற மர்மமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அதையே அன்று டாய்லெட்டில் உட்கார்ந்திருந்த போது அன்னியும் யோசித்ததாகச் சொன்னது தான்……அன்றிலிருந்து ஐந்து மாதங்களாக இந்தத் திருமணத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு இன்று செயல்படுத்தும் பெருமை முழுக்க முழுக்க அன்னியையே சேரும்.” அவன் பேசப் பேச உணர்ச்சி வசப்பட்டவர்களாய் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இடையிடையே  சிரிப்பொலி மண்டபத்தை நிறைத்தது. மணமக்கள் அடிக்கடிக் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். நெகிழ்ச்சியுடன் யென்னி தன் சகோதரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

மணமகளின் முன்னைய காதலனுக்குப் பிறந்த 15 வயதான மகள் பியானோ வாசித்தாள். மணமகனும் மணமகளும் ஒவ்வொரு மேசையாகச் சென்று உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “எத்தனையோ உணர்வுகள்…என் வாழ்க்கையின் உன்னதமான தருணம் இன்று.. இது போல ஒரு நாளும் நான் உணர்ச்சிவசப்பட்டதில்லை…” என்று கூறி உரக்கச் சிரித்தான் மணமகன். அவனுடைய நெகிழ்ச்சி மாயாவையும் தொற்றிக் கொண்டது. வீடு திரும்பும் போதும் அவள் தன் பிரமிப்பிலிருந்து விடுபடவில்லை.  ஒருவருக்கு இன்னொருவரிடம் காலம் கடந்தும் வாழும்  அன்பு, மரியாதை, நேர்மை என்பவற்றை எந்த விதமான வெளிப்பூச்சுகளுமின்றி நன்றியுணர்வுடன் பரிமாறிக் கொள்ளப்பட்ட  ஒரு நிகழ்வாகவே அது அவளுக்குத் தெரிந்தது.

000000000000000

“இப்ப என்ன அவசரம்…?”இது பொறுமையிழந்த கதிர்.

“எத்தனையோ தரம் பேசிய விஷயம் தானே… அப்பாவின் நிலமை தெரியாதா…? அம்மாவுக்கும் இப்ப 70 வயசாச்சு. தங்களுக்குப் பிறகு நான் தனிச்சுப் போவேன் எண்டு பயப்பிடுகினம்”

“ரண்டு தரம் ஹார்ட் அட்டாக் வந்த மனுசன்  எண்டு சொல்லிறாய். எனக்குத் தெரிஞ்சு 5 வருஷமா ஆள் கல்லு மாதிரித் தான் இருக்குது. லேசில மண்டையைப் போடிற ஆளாத் தெரியேல்ல…”

சுரீரென்று மாயாவிற்குக் கோபம் வந்த ஞாபகம். அந்த வயதிற்கேயுரிய ரோஷம். பேச்சுத் திசை மாறித் திக்குத் தெரியாமல் எங்கெங்கோ சென்று மீண்டு வர…..

“எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு…” என்றான் கதிர்.

“கடமைகளை முடிச்சுக் கொண்டு போறதுக்கு உன்னைக் காசி ராமேஸ்வரமா போகச் சொல்லிறன்? கல்யாணம் தானே.. உன் கடமைகளுக்கு அதனால என்ன தடை வரப் போகுது….?

“உனக்கு ஒரு நிரந்தர வருமானம் இல்லை…!”.

“உனக்கு இருக்குத் தானே… நீ எப்பவும் போல உன்னைப் பார்த்துக் கொள். என் வாழ்க்கைக்குத் தேவையானதை நான் உழைத்துக் கொள்வேன். உனக்கு பாரமாக இருப்பேன் என்ற பயம் உனக்கு வேண்டாம்”

000000000000000

எத்தனை முட்டாள்த்தனமான பேச்சு. அந்த வயதில் அந்த சந்தர்ப்பத்தில் அவளால் வேறு எப்படியும் பேசியிருக்க முடியாது தான். ஆரம்பமே தவறாவது என்பது இப்படித் தானோ என்று அதன் பின்னர் மாயா தனக்குள் அடிக்கடி  நினைத்துக் கொண்டிருக்கிறாள்.அன்று மாயாவின் பதிலில் கதிர் திருப்தியடைந்ததால் தான் அவர்களது திருமணம் நடந்தது. 5 வருட உறவு. நோர்வேயிற்கு அவனிடம் வந்து சேர்ந்து 2 வருடங்கள் இருந்தும், அவனைக் கடத்திப் போய்க் கட்டாயத் திருமணம் செய்து கொண்டு விட்டாற் போன்றதொரு அசிங்கமான உணர்வு அவளிடம் எப்போதுமே தோன்றும்.

காதல் மயக்கத்தில் உளறிய ஒருவனுக்குத் தன் முடிவில் உறுதி இல்லை.பிறர் சொல்வதில் எல்லாம் நியாயமிருப்பதாக அவனுக்குத் தோன்றும் பட்சத்தில் அவளை  விட்டுக் கொடுக்காமல் அவன் பேசுவானா என்ன? ஒரு திருமணம் தவறாகிப் போவதற்குக் காரணங்களாக எதையெதையோ கூறுவார்கள். ஏற்கனவே எடுத்த தன் முடிவுகளை தினமும் சந்தேகித்தபடி இருப்பவர்களால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எத்தனை பேர் புரிந்து கொள்வார்வார்களோ!

“இறங்கு!”

திடுக்கிட்டவளாய்த் திரும்பிய போது சிடுசிடுவென்ற முகத்துடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்  கதிர். ஏதோ ஒரு அருவருப்பான விலங்கொன்று தன் மேலேறி அசிங்கம் பண்ணி விட்டாற் போல முகத்தில் இத்தனை வெறுப்பை இவனால் எப்படிக் காட்ட முடிகிறது என்ற பதட்டம் அவளைக் காரிலிருந்து அவசரமாக வெளியே தள்ளியது.

இறங்கி நடந்தபோது ஆச்சர்யமாக வாசலில் ஒரு ஹிஜாப் போட்ட பெண் மகளிடம் பேசி விடை பெற்றுக் கொண்டு போவதைக் கண்டதும் மாயா அர்த்தபுஷ்டியுடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.அவன் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

உடை மாற்றிக் கொண்டு தேநீர் தயாரித்தவள் வந்து வரவேற்பறையில் உட்கார்ந்த போது மகள் வழக்கம் போலத் தொலைபேசியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.ஒரு தேநீர்க் கோப்பையை அவளை நோக்கி நகர்த்தியபடி,

“என்னடா புது ஃப்ரெண்டா? நான் கண்டதில்லையே…..?” என்றாள். சட்டென்று தொலைபேசியை மூலையில் போட்டு விட்டு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு தன் தாயைக் கட்டிக் கொண்டாள் பெண்.  “அம்மா… அப்பாவோட என்னால கதைக்கேலாது. வெனஸ்ஸாவில நான் சரியான அன்பு வைச்சிருக்கிறன்.உங்களுக்குக் கூட இது விளங்குமோ தெரியாது….

நான் எப்பவும் உங்கட அதே மகள் தானம்மா.காதல், கல்யாணம் என்று வந்தால் மட்டும் தான் ஒரு ஆம்பிளையை என்னால நினைச்சுப் பாக்க முடியேல்ல.வெனஸ்ஸாவுககு என்னில எவ்வளவு அக்கறை தெரியுமா. உங்களையும் அப்பாவையும் தவிர என்னில பாசம் வெச்சிருக்கிற என் நலனை விரும்பிற ஒரே ஜீவன்.ஐ லவ் யூமா. என்னால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது.நீங்க பழக்கப்பட்ட கலாச்சாரத்தை நான் மதிக்கிறேன். உங்களைச் சங்கடப் படுத்திற மாதிரி நான் எதுவும் செய்யவே மாட்டேன். அதைப்போலை அப்பாவயும் கல்யாணம்…அது இதுவெண்டு என்னைச் சங்கடப் படுத்த வேண்டாம் எண்டு சொல்லுங்கம்மா..” என்கிறாள்.

ஒரு தாயாகத் தன் பிள்ளையின் வளர்ச்சியுடன்  பிரதிபலித்த உணர்வுகளை அவ்வப்போது அவதானித்துச் சிரமத்துடன் அவற்றைக் கிரகித்துக் கொண்டதன் விளைவாக மாயாவிடம் பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.தன் தாயின் மௌளத்தைப் புரிந்து கொள்ளாதவளாய் மகள் தொடர்ந்தாள்.

“அப்பா பயப்பிடுகிற மாதிரி foot ball விளையாடிறதாலையும் கட்டையாத் தலைமயிரை வெட்டி வெச்சிருக்கிறதாலயும் நான் ஆம்பிளையா மாறிப்போகப்போறதில்லை.உங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம். இது எனக்குள்ள நான் உணர்ந்த மாற்றம்.அதை நான் ஏற்றுக்கொண்டமாதிரி அவ்வளவு ஈஸியா உங்களால ஏற்றுக் கொள்ள முடியாம இருக்கலாம்.எல்லாருக்குள்ளயும் ஆண்மை, பெண்மை ரெண்டுமே இருக்குது.பெண்கள் தங்கள் பெண்மையை மட்டும் தான் வெளிப்படுத்த நினைக்கினம்.ஆண்கள் மேக்கப் பண்ணிக் கொள்வதையோ,கண்ணீர் விடுவதையோ பெண்களுக்குரிய குணம் என்று வெட்கப்பட்டு  மறைத்து தங்களுக்குள்ள இருக்கிற ஆண்மையை மட்டும் காட்டுகினம்.ஆனால் gender பற்றிய புரிந்துணர்வு இருக்கிற என்னைப் போல ஆக்களுக்கு எங்களிடமுள்ள ஆண்மை, பெண்மை ரெண்டை  வெளிப்படுத்துவதிலும் தயக்கம் எதுவும் இல்லை, அவ்வளவு தான்”

மிகவும் தீட்சண்யமான குரலில்  மகள் பேசப் பேச எப்போதும் போல மாயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் உணர்வுகள் பற்றிய தெளிவான புரிதல். அது போலவே பிறர் உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்த இக் காலத்துக் குழந்தைகள் வியக்க வைக்கிறார்கள் என்றெண்ணினாள்.

மாயாவின் மனதில் எந்த விதமான குழப்பமும் இல்லை. தன்னுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருந்த மகளை விலக்கி அன்பாக அணைத்து முத்தமிட்டவள் மனதில் கதிர் ஒரு நொடியில் வந்து போனானலும்,” எதைப் பற்றியும் கவலைப்படாத. என்னவாயிருந்தாலும் அம்மா உன்னோடு எப்பவும் கூட இருப்பேன் கண்ணா.. போ. போய் சந்தோஷமா இரு என்று மகளின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து விட்டுத் தேநீர்க் கோப்பைகள் இரண்டையும் எடுத்துக் கொண்டு  சமையலறைக்குச் சென்றாள்.

உஷாநோர்வே

உஷா

(Visited 127 times, 1 visits today)