இப்படியும் சிலர்-சிறுகதை-பிரேமா

பிரேமா
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

ம்மா ஒரு ஆச்சி வந்திருக்காவோ உன்னய தேடி…நான் உள்ள கூப்பிட்டு உட்காரவச்சிருக்கேன் வா மா”…என அம்மாவிடம், கூறிக்கொண்டே சென்றேன்…

“யாருன்னு ஆவலாய் வந்த என் அன்னையிடம் என்ன உன் மவளுக்கு தான் என்னய நியாவம் இல்ல உனக்குமா…என அந்த ஆச்சி கேட்டாள்…”

“அப்புறம் ஆச்சியே சொன்னாள்…நான் தான்மா பார்வதி…நியாவம் வந்துட்டுதா…”

“அம்மா நீங்களா…ஆளே அடையாளம் தெரியல அதான் கொஞ்சம் யோசிச்சுட்டேன்..மன்னிச்சுடுங்க மா…நல்லா இருக்கீயளா…யேன்மா தளர்ந்து போயிட்டியேளே…இப்போ நீங்க கல்லிடைல இல்லியா…இங்க தான் இருக்கியளோ…”என என் அன்னை கூற…

“யேட்டி இங்கவா…யாருன்னு தெரியாதாடே பார்வதி ஆச்சி…”

வியப்பில் விரிந்தன என் விழிகள். “ஆச்சி நீங்களா…பாத்தவுடனே எனக்கு நியாவம் வரல…மன்னிச்சுடுங்க ஆச்சி…நல்லா இருக்கீயளா…?”

எங்க அம்மா அவுகளுக்கு காபி ஆத்திக் கொடுத்துட்டே பேச ஆரம்பிச்சாவோ…வழக்கமாய் பெரியவக பேசும் போது உள்ளே போயிடுவேன் அன்னைக்கு என்னமோ அந்த ஆச்சிய பாக்கையிலேயே காலஞ்சென்ற என் ஆச்சி நியாவம் வந்துட்டுது…சரின்னு நானும் இருந்துட்டேன்…

வாஞ்சையாய் என் கரம் கோர்த்தப்படியே பார்வதிமா தொடர்ந்தார்,”இல்லமா இங்கதான் இருக்கேன்…ஏதோ இருக்கேன்…அவுக போயிட்டப்புறம் மகன் வீட்டுல தான் இருக்கேன்…மருமவ ரொம்ப நல்லவ…விரக்தியாய் அந்தாச்சி சொன்னதிலேயே புரிஞ்சிட்டு அவுக மருமக எப்படின்னு…”

“கொஞ்ச நாளைக்கு நல்லாத்தான் கவனிச்சா…அப்புறம் கொஞ்ச கொஞ்சமா விட்டேத்தியா பேச ஆரம்பிச்சா மரியாதையே இல்லாம…நானும் எதுக்கு இவுகளுக்கு பாரமா இருக்கனும்னு வேலைக்குப் போனேன் தறிச்செட்டுக்கு…அங்க நடந்தது தான் பெருங்கூத்து…என் சம்மந்தாரியும் அங்க வேலைப்பாத்துட்டு இருந்தாவோ…என்ன இங்க இருக்கீயன்னு கேட்டேன்…அவுக மவன் வீட்டிலயும் இதே கதை தான் சொன்னாவோ…என் விதியை நினைச்சு சிரிக்கதா அழுவுததான்னு தெரியலே…”

“அப்புறமும் நான் கொண்டு வர காசயும் வாங்கிவச்சுட்டு சாப்பாடும் போடமாட்டா என் மருமவ…கொஞ்ச நாளு சென்னு என்னால முன்ன மாறி வேலைக்குப் போவ முடியல…அப்புறம் என் நிலமை இதவிட மோசம் என் மவனுக்கும் மருமவளுக்கு என்னால நிதம் சண்டை வர ஆரம்பிச்சுட்டு அப்புறம் ஒரு நாள் என்னய அடிச்சே அந்த வீட்ட விட்டு அனுப்பிட்டான்…”

அதை கேட்ட அந்த கணம் என் விழிகளும் என் அன்னையின் விழியும் நனைந்து போயின…

அப்புறம் பக்கத்துவீட்டுக் காரவுளாம் என் மவனை திட்டியிருப்பாவோ போலுக்க…எனக்கு போக்கிடம் கிடையாது…பஸ் ஸ்டாண்ட் ல போய் கிடந்தேன்…அவனும் எல்லாப்புறமும் தேடிட்டு அப்புறமா அங்க வந்தான்…நான் வரமாட்டேன்னே வம்படியா கூட்டிட்டுப் போனான்… அவுக (வீட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடமாட்டாவோ அந்த காலத்து பெரியவுக இப்படி தான் பொதுவா கூப்பிடுவாவோ )இருந்தா இப்படி இவன்கிட்ட கஞ்சிக்கு நான் நிக்கணுமா சொல்லு என என் அம்மாவிடம் கேட்டுவிட்டு..கண்ணத் துடைச்சிட்டே ஆச்சி தொடர்ந்தாள்…

“பக்கத்து வீட்டுக்காரவோ சொன்னாவளே தான் கூட்டிட்டு வந்தானே ஒழிஞ்சு என்மேல உள்ள பாசத்திலலாம் கூட்டிட்டு வரல…அதுக்கப்புறவும் என் மருமவலாம் மாறவே இல்ல…அவ பிள்ளைகளை கண்ணுல காட்டமாட்டா…

நான் வாட்டிக்கு ஓரத்தில செவனேனு இருந்திடுவேன்…வேற என்னெய்ய சொல்லுத…நான் வாங்கி வந்த வரம்…என் மவ அப்பபோ வந்தா காசு கொடுப்பா…

அவ வெளியூர்ல இருக்கால அவ வீட்டுலேயே அவ மாமியா,மாமனார் நாத்தனார்மார்களோட இருக்கா இல்லாட்டினாலும் அவ வீட்டிலயாச்சும் செத்த இருந்துட்டு வருவேன் அதுக்கும் வழியில்ல…அவ கொடுக்க காசயும் என் மருமவ பாத்தா வாங்கிகிடுவா…ஏதோ நான் மறைச்சு வச்சுட்டாதான் உண்டு…இன்னைக்கு என்னமோ உன் நியாவம் வந்துச்சு அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாமேனு வந்தேன்…”.  எங்க அம்மா அவுக கையில சில ரூவாய்களை திணித்தார்…வச்சுக்கோங்கோ நானும் உங்கட மவ மாறி தானே…என் அம்மா கூறினார்…

கொஞ்ச நேரத்தில அந்த ஆச்சி கிளம்பிட்டாவோ…ஆனா ஆச்சி சொன்ன வார்த்தையில இருந்து என்னால வெளிய வரவே முடியல…என் அம்மாவிடம் இப்படியும் இருப்பாங்களாமா …அப்பா வந்தவுடனும் விடல சொல்லி புலம்பி தீர்த்தேன்…வயதாகிப் போனபின்பு குழந்தையாய் மாறிவிட்ட பலர்…அந்த வெள்ளந்தி சிரிப்பு மனதில் தேக்கிவைத்த வேதனையின்னூடே…பார்வதி ஆச்சிதான் பல நாட்கள் என் மனதில் நின்றாள்…

கொஞ்ச நாளைக்குபிறவு என் அம்மா கொஞ்சம் டல்லா இருக்காப்ல தெரிஞ்சது…என்னன்னு தெரிஞ்சுக்க கிட்டப்போனேன்…

“என்னம்மா ஆச்சு யேன் இப்படி இருக்கீயன்னு கேட்டேன்…”

“நாம வீட்டுக்கு அன்னைக்கு ஒரு ஆச்சி வந்துச்சுல…நியாவம் இருக்கா…”

“எப்படிமா மறப்பேன்…பார்வதி ஆச்சிதானே நல்லா நியாவம் இருக்கு…அவுகளுக்கு என்ன…”

“அந்த ஆச்சி தவறிட்டு…”

“என்னமா சொல்லுத…இது எப்போ நடந்துச்சு…?”

“எப்போன்னு எனக்கும் தெரியல…ஆனா இப்போ தான் எனக்கும் விவரம் தெரியும்…என அம்மா சொன்னாவோ…”

“பஸ் ஸ்டாண்ட்-ல செத்து கிடந்தாவாளாம்…யாரோ பாத்து சொல்லித்தான் அவுக மகனுக்கே தெரியுமாம்…”

எனக்கு ஏதோ மாதிரி ஆகிட்டு…சாமி… இப்படியும் சில மனிதர்களா…அத்தன வருஷம் கஷ்டப்பட்டு பெத்து வளத்தவகளுக்கு நல்லா மரியாதை கொடுக்காணுவளே…அவுகளுக்கும் நாளைக்கு இதே நிலைம தான்னு நினைப்பாவளா மாட்டாவளா…அந்த மாதிரி மருமவமார்களை பாத்தாலே வெறுப்பு தான் வருது….எனக்கு கோவமாய் வந்தது….நான் யாரிடம் காட்ட முடியும்….இது நான் சந்தித்த நிஜக்கதை ஒரு வருடம் இருக்கும் இது நடந்து…ஆனால் இன்னைக்கும் சில ஆச்சிமார்கள பாக்கிறப்போ எனக்கு இது நியாவம் வாராம இருக்காது…

இப்படியும் சிலர் இருக்காவோ எல்லாரையும் சொல்லல…அவுகளாம் மாறுவாவளான்னு தெரியல…ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்…நீ வைத்த வினையொன்று உன்னை தாக்க காத்திருக்கும்…தாமதாகலாம்…ஆனால் நிச்சயம் அதன் பலனை நீ அனுபவித்தே தீர்வாய்..

பிரேமா-இந்தியா

பிரேமா

(Visited 95 times, 1 visits today)