நிலோஃபர்-சிறுகதை-பாக்கியசெல்வி

பாக்கியசெல்வி
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

ழகான மாலை வேளையில் கதிரவனின் மஞ்சள் ஒளியில் மழைத்துளிகள் தங்கக் கம்பிகளாய் மின்னத் தன் வீட்டு பக்கத்தில் ஓடும் ஓடையின் மெல்லிய ஓசையில் அங்கு அமர்ந்திருந்த உள்ளான் நாரை இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் நிலோஃபர்.

‘நிலோஃபர் என்ன பண்ணிட்டு இருக்க. நேரமாகுது வரலையா?’ என்று சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது.’வந்துட்டேன்’ என்று அவசர அவசரமாகத்  தாவணி போட்டுக் கொண்டே அம்மாவிடம் சென்று,

‘நான் ரெடி’ என்றாள்.

‘எப்படியோ ஒரு வழியாக உங்க பாட்டியைச் சம்மதிக்க வைக்கிறது பெரிய பாடா போச்சு.’

‘என்னம்மா நீ ட்யூஷன் படிக்கிறது ஒரு தப்பா? எனக்கு மேத்ஸ் தெரியல.  அதனாலதான் டியூஷன் வேண்டும் என்று சொன்னேன்.’

சரி எப்படியோ பாட்டி தலைய ஆட்டிட்டாங்க. நீ போய் அப்துல எழுப்பு.’ என்றார் அம்மா.

அவள் நோஸ்ஃபீஸ் போட்டுக்கொண்டே முதல் அறையை நோக்கிச் சென்றாள்.  அப்துலுக்கு தனியறை.அந்த அறையைச் சுற்றி சுற்றி கலர் கலர் படமாக ஒட்டி, மேஜை மேலே எல்லாம் கலைத்துப் போட்டுத் தலையணை ஒரு பக்கம் போர்வை ஒரு பக்கம் எனக் கலைந்து கிடக்கும். அப்துல் அவளுடைய அத்தை மகன்.அவனிடம் பாட்டி இருக்கும்பொழுது சரியாகப் பேசமாட்டாள்.மற்றபடி அவனைப் பார்த்தால் அவளுக்குப்  பொறாமையாக இருக்கும்.அவன் மட்டும் இந்த வீட்டில் செல்லப் பையன்.அவன் சொல்றதுதான் எல்லாம் பாட்டிக்கு வேதவாக்கு. அவன் அறைக் கதவைத் தட்டி,அம்மா கூப்புடுறாங்க. டியூஷனுக்கு என்னையும் அழைத்துச் செல்ல உன்னை ரெடியாகச் சொன்னார்கள்’ என்றாள்.’வரேன் போ……’ என்ற ஒற்ற வார்த்தையில் பதில் கிடைத்தது.

அவளுடைய பெஸ்ட் பிரண்ட் அவளுடைய அம்மாதான். எதுவும் திட்டமாட்டார்கள். பாட்டி வந்துவிட்டார்கள். அப்துல், நிலோஃபர், அம்மா,  மூன்று பேரும் பக்கத்து தெருவில் இருக்கும் டியூசன் மிஸ் வீட்டிற்கு சென்றார்கள்.  உள்ளே நுழையும் போதே அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. சோபாவில் அவளைப் போல ஒரு பெண்ணும் பக்கத்தில் மிஸ்சும் உட்கார்ந்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். கீழே இரண்டு பையன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.அவளால் நம்பவே முடியவில்லை.அவளுடைய வீட்டில் சோபாவில் யாரும் இல்லாதபோது தான் உட்கார முடியும். பாட்டி இருந்தார் என்றால் ஹால் பக்கம் கூடப் போக முடியாது. ஒருமுறை அப்துல் கீழே உட்கார்ந்து இருக்க இவள் சோபாவில் உட்கார்ந்து விட்டாள்.அவ்வளவுதான்,பாட்டி பேசிய வசை பாட்டிற்குப் பஞ்சமே இல்லை.அவள் மன கண்ணோட்டத்தில் இது எல்லாம் நினைவுக்கு வர, டியூசன் மிஸ், ‘வாங்க உள்ளே’ என்று குரல் கொடுக்க நிலோஃபர் சுய நினைவுக்கு வந்தாள்.

‘குட் ஈவினிங் மிஸ்’ என்றாள்.

‘இவளோட அம்மா நான்.அப்துல் வீட்டிலிருந்து வருகிறேன். அவனுடைய அத்தை நான்.என் பொண்ணுக்கு கணக்குப் பாடம் கொஞ்சம் வரல, அதனால உங்களைப் பார்க்க வந்தேன்’ என்றார்அம்மா.

“என்னமா படிக்கிற?”

“பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.”

“சரிங்க விட்டுட்டுப் போங்க 8 மணிக்கு அனுப்பிவிடுகிறேன்.”

“இல்ல நானே வந்து கூட்டிட்டுப் போகிறேன்”என்றாள் அம்மா. மிஸ் அவளைக் கூப்பிட்டு ‘என்ன நல்லா படிப்பியா?’ என்று கேட்டார். ‘உன்னுடைய நோட்டை காட்டு’ என்று பார்த்தார்கள்.’அழகாக எழுதி இருக்கிறாய்‌. நீ அழகாக இருப்பாயா?’ என்று கிண்டல் செய்தபடி அவள் நிமிர்ந்து பார்த்தார்கள். அவளுடைய கண்களில் ஒருவித சிரிப்பும் பயமும் இருந்தது. ‘உன் முகத்திரையை எடுத்து வைத்து விட்டு ஃப்ரீயாக உட்கார்ந்து படிக்கலாம்’ என்றார்கள்.உடனே அவள் அப்துல் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.’ஏன் அப்துல பார்க்கிற?’

‘எங்க வீட்ல வெளியில எங்க போனாலும் நோஸ்பீஸ் கழட்ட கூடாது.’  ‘சரி உன் இஷ்டம் படி’ என்றார் மிஸ். ‘இப்போ கூடப் பரவாயில்லை மழை காலம். வெயில எப்படி இந்த டிரஸ் போட்டுக்கொண்டு இருப்ப?’ சொல்லிக்கொண்டே அவளைப் பக்கத்தில் அழைத்துச் சோபாவில் உட்கார வைத்துக் கணக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.டியூஷன் முடிந்து வீட்டிற்கு அம்மா அழைத்துச் சென்றார்கள்.

பாட்டி, பெருசா படிச்சிட்டப் போ.இத்தனை மணிக்குப் பொண்ணுங்க வெளியில என்ன வேலை? நாலுப் பேரு வேற மாதிரி பேசுவாங்க’ என்றார்.இப்படியே வாழ்நாள் முழுவதும் இவங்க வசைப்பாட்டை வாங்க வெச்சிட்டு அவர் நல்லா வெளிநாட்டில் போய் இருக்காரு மனசுக்குள்ளே புலம்பிக்கொண்டே சாப்பாட்டை எடுத்து வைத்தாள் அம்மா.

‘அம்மா……… எனக்கு இப்பப்பசி இல்ல. பிறகு சாப்பிடுகிறேன்.’ என்று சொன்னாள் நிலோஃபர்.

‘சரியா போச்சுப்போஅதற்கும் எதுனா சொல்லணுமா? வேற வேலை இல்ல,வந்து சாப்பிடு.

சாப்பிட்டு விட்டுத் தூங்கும்போது, ‘அம்மா இந்தப் பாட்டி ஏன் இப்படி இருக்காங்க? எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக்கொண்டே இருக்காங்க’ என்று கேட்டுக் கொண்டே தூங்கிப் போனாள். ஒரு நாள்  டியூசன் மிஸ் குழந்தைக்குப் பிறந்தநாள், அதனால எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாங்க. நிலோஃபர் மட்டும் அதைப் பேப்பரில் எடுத்து வைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த மிஸ் ‘சாப்பிடலையா?’ என்று கேட்டார்கள். ‘நோஸ் பீஸ்  கழட்டணும். அதனால நான் வீட்டுலப் போய்ச் சாப்பிடுகிறேன்’ என்று சொன்னாள்.

‘ஆமாம் நானும் தான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். நோஸ்பிஸை கழட்டுப் பாக்கலாம்.’ என்று சொன்னார் டியூசன் மிஸ்.

அவள் உடனே அப்துல் பக்கம் திரும்பினாள்.

மிஸ் அப்துல்லை பார்த்து, ‘உன்னை ஏன் பார்க்கிறாள்?’  என்று கேட்டார்கள்.

‘எனக்குத் தெரியாது’ என்று தோள்பட்டையை தூக்கி விட்டான். மிஸ் வலுக்கட்டாயமாகக் கழட்ட வைத்துவிட்டார்கள். சூப்பர் இவ்வளவு கலரா அழகாய் இருக்க.எல்லோரும் சிரித்தார்கள். ‘அமைதியா இருங்க. நீ சாப்பிடுமா’ என்றார்.

டியூசன் முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் பாட்டியிடம் சென்று, ‘இவ நோஸ்பிஸ் இல்லாம படிக்கிறாள்’ என்று அப்துல் சொன்னான்.

‘எவ்வளவுதான் என்ன சொன்னாலும் திருந்த மாட்டீங்க அம்மாவும் பொண்ணும். டியூஷனிலிருந்து நிறுத்திவிடு. படிச்சி சம்பாதிக்க போறா பாரு’. என்று சொல்லிட்டாங்க பாட்டி.நிலோஃபர் எவ்வளவு சொல்லியும் கேட்கல.அன்று இரவு அழுது கொண்டே தூங்கி விட்டாள்.மறு நாள் மாலை அம்மாவும் பொண்ணும் டியூசன் மிஸ் வீட்டிற்கு போக வெளியே வரும்பொழுது,

‘படிச்சி கிழிச்ச வேலைக்குப் போயி எதுவும் ஆகப்போவதில்லை’ என்று திட்டி ‘உள்ளே போங்க’ என்றார் பாட்டி.

வேறு வழி இல்லாமல் திரும்பவும் வீட்டிற்குள் சென்று விட்டார்கள். ‘படிக்கிறது ஒரு தப்பாம்மா?’ என்று அழுது புலம்பி விக்கி விக்கி, ‘நான் ஒன்னும் பண்ணல.மிஸ் தான் கழட்ட சொன்னார்கள்.’என்று ஏதோ அம்மாவிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.அம்மா அவளைச் சமாதானப் படுத்தவே முடியல.அன்றிரவு அம்மா அப்பாவிடம் போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.

“நான் இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன்.பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க,பாப்பாவிடம் போன் கொடு” என்றார்.

‘நான் சீக்கிரம் வருகிறேன்’ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அழுதுக்கொண்டேஇருந்தாள் நிலோஃபர்.தினமும் பள்ளியிலிருந்து வந்தவுடன் படிக்க ஆரம்பித்தாள் இரவு 10 மணிவரை படித்தாள்.அப்துல் இடம் பேசுவதையே நிறுத்தி விட்டாள்.பரீட்சையும் வந்துவிட்டது.’பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கு’ என்று அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லி அருகில் அழைத்துச் சென்றார்கள். ‘எழுதிக் கிழிச்சிட்ட போ ‘என்றார்

அப்துல்-ம் நிலோஃபரும் பரீட்சை எழுதினார்கள்.பரீட்சையின் முடிவும் வந்துவிட்டது. அப்துல் 768 மார்க்கும் நிலோஃபர் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் மதிப்பெண்ணையும் பெற்றிருந்தாள். பாட்டிக்கு ஒரே கோபம். ‘இவ படிச்சி என்ன ஆகப்போகுது? அவன் மார்க் வாங்கி இருந்தாக்கூட ஊட்டுக்கு சம்பாதித்து கொடுத்திருப்பான்’ என்று சொல்லிக்கொண்டே நியூஸ் பேப்பருக்கு பேட்டி கொடுத்தாங்க.அவள் அப்பா இன்னும் 20 நாளில் வந்து விடுவேன் என்று கூறினார். ‘நான் வந்து எங்குப் படிக்க வைப்பது என்று அம்மாவிடம் பேசிக் கொள்கிறேன். நீ எதுவும் பேச வேண்டாம்’ என்று தன் மனைவியிடம் சொன்னார்.

அவரும் வந்து விட்டார். பாட்டி சொன்னாங்க, ‘அப்து-ல எஸ்.ஆர்.எம்-ல சேர்த்திட்டு இவள அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி கொடுத்துடு’ என்றார்கள்.அவள் அப்பாவைப் பார்த்தாள்.

‘கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிவிடும்.நான் பேசி நல்ல ஸ்கூல்ல உன்ன சேர்கிறேன்.பொறுமையாய் இரு. என்றார்.

ஒரு நாள் காலேஜில் சேர்ப்பதற்கு அப்துல அழைத்துக்கொண்டு எல்லோரும் செல்லலாம் என்று அப்பா சொன்னார்.அப்போது பாட்டி, ‘எனக்கு உடம்பு முடியல, நீ அப்துல் அவளும் போயிட்டு வாங்க. நிலோஃபர் என்னோட இருக்கட்டும்.’என்றார் வேறு வழி இல்லாமல் அவர்கள் மூவரும் காரில் சென்று விட்டார்கள் நிலோஃபர் குளித்துவிட்டு சுடிதார் போட்டுக் கொண்டு இருந்தாள்.அப்போது திடீரென்று பெரிய சத்தம் கேட்டது அவசரமாக வெளியே ஓடிவந்து பார்த்தாள்.பாட்டி கீழே விழுந்து கிடந்தார்.வேகமாகச் சென்று பார்த்தபொழுது அவர் சுய நினைவு இல்லாமல் கிடந்தார்.என்ன செய்வது என்று தெரியாமல் அவள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி அழுத்திப் பார்த்தாள்.தூக்கினாள்,  அவளால் முடியவில்லை.அப்படியே பாட்டியை விட்டுவிட்டு தெருமுனையில் இருக்கும் கார் ஸ்டாண்டுக்கு  ஓடிப் போகிறாள். அவளின் கையும்  முகமும் அந்தக் காலை வெய்யிலில் ஒரு நிமிடம் கூசியது.கார்கள் நிறுத்திய இடத்தில் ஓர் அண்ணனிடம்,’ எங்க பாட்டி கீழே விழுந்துட்டாங்க.கொஞ்சம் கார் எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு போகணும். சீக்கிரம் வாங்க’. என்றாள்.அங்கு இருந்த ஒரு பெரியவர்,

‘நீ எந்த ஏரியா மா? எந்த வீடு? என்று கேட்டார்.இந்தத் தெரு தான், ஆறாவது வீடு என்றாள்.’பார்த்ததே இல்லையே’ என்று சொல்லிக் கொண்டே காரைப் பின்னுக்கு எடுத்து வந்து ‘ஏறுமா’ என்று சொன்னார். அவசரமாக ஏறிக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.அந்த டிரைவரும் அவளும் சேர்ந்து பாட்டியைத் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்.போகும்போது அப்பாவிற்கு போன் போட்டுச் சொல்லி ‘மகாலட்சுமி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறேன்’ என்றாள்.இரண்டு மணி நேரம் ஆகியும் எதுவும் சொல்லவில்லை, டிரைவரும் கூடவே இருந்தார்.

‘அப்பா வந்தவுடன் உங்களுக்கு அதிகமாகப் பணம் வாங்கிக் கொடுக்கிறேன் என்றாள்.என்ன தாயி பணமா முக்கியம்.உசுறு தான் முக்கியம்.’ என்றார் டிரைவர்.அப்பா அம்மா வந்துவிட்டார்கள் நிலோஃபர் கண்ணில் தண்ணீர் வந்தது. ‘என்னவென்று ஒன்றுமே சொல்லவில்லை டாக்டர்’ என்றாள்.

அப்பா டாக்டரிடம் சென்று பேசினார்.’சின்னப்பொண்ணு அவர்களிடம் எப்படி சொல்வது என்று இருந்தேன்.சரியான நேரத்தில் வந்ததால் அவங்க உயிருக்கு ஆபத்து இல்லை.ஆனால் அவர்களால் வாய் பேசக் கொஞ்ச நாள் ஆகும் என்று டாக்டர் சொன்னார்.

நான்கைந்து வாரங்கள் போனபிறகு லேசாக மூடிய கண்ணைத் திறந்தார் பாட்டி. ஒரு கண் மட்டும் சின்னதாய் இருந்தது . பாட்டியின் கண்கள் சுற்றி தேடி பார்த்தது. அப்துல்லும் அப்பாவும் இருந்தார்கள் எதையோ பேச நினைத்து ஒரு கையில் லேசாக அசைத்தார்.’ஏம்மா என்ன வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அம்மாவும் நிலோஃபரும் உள்ளே வந்தார்கள். பாட்டியின் கண்கள் நிலோஃபரை பார்த்துக்கொண்டு இருந்தது.

‘வா வாப்பாட்டி ஒன்னத்தான் பார்த்துகிட்டே இருக்காங்க’ என்றார் அப்பா.  நிலோஃபர் கிட்ட வந்து ‘என்ன பாட்டி’ என்ற அந்த ஒற்றை வார்த்தையில் பாட்டியின் கண் ஓரங்களிலிருந்து நன்றியோடு கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அந்தக் கண்ணீருக்குள் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருந்தது. பாட்டி லேசாகப் பேச முயற்சி செய்தார். வார்த்தை புரியவில்லை நிலோபரின் கையைத் தன் வலது கையால் அழுத்திப் பற்றினார். மகனிடம் திக்கி திக்கி சொன்னாள் பாட்டி, படி….டிக்க வை.

பாக்கியசெல்விஇந்தியா

 

(Visited 188 times, 1 visits today)