தேஃஸுரேய்-சிறுகதை-மிஸ்பாஹுல் ஹக்

மிஸ்பாஹுல் ஹக்
ஓவியம் : டீன் கபூர்

இந்த இரவும் அதே இரண்டு குழந்தை தேவதைகள் புன்னகை சிந்தியபடி அவளிடம் இறங்கிவந்தன. வெண்மையான பிரகாசமிக்க முகங்கள், சிவந்த உதடுகள். தூய்ந்த குழந்தை புன்னகை.  கண்களை மூடிக்கொண்டு அந்த தேவதைகளைக் கண்டு புன்னகைத்தாள். அவள் முகத்தில் பூரிப்பு மலர்ந்தது. கைகள் இரண்டினதும் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து மடித்து இறுக்கி தான் மார்பில் அழுத்தியபடி அவர்களிடம் அவள் மானசீகமாக மன்றாடினாள்,

“தேவதைகளே என்னை சீக்கிரமே பெரியவளாக ஆக்கி விடுங்கள் அல்லது இங்கிருந்து காப்பாற்றுங்கள், சாக்லேட்டுகள் நிரம்பிய பனிவிழும் உலகின் ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை நடக்கும் இடத்திற்கு என்னை தூக்கி சென்றுவிடுங்கள், இந்த கிறிஸ்மஸ்ஸிற்காவது ஒரு தாத்தாவை இங்கே அனுப்பிவிடுங்கள். நிறைய புத்தகங்கள் இருக்கும் ஒரு அறையில் என்னை உறங்கவிடுங்கள்”

மானசீகமாக மன்றாடினாலும் அவள் உதடுகள் ஒரு ஏக்கத்தில் விசும்பிக் கொண்டிருந்தன.

அவள் கற்பனைகளில் இருந்து தேவதைகள் கலைந்ததும், வண்ண வண்ண விளக்குகள் பூத்த ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்து வளர்ந்தது. அந்த மரத்தில் உருசிறுத்த நட்சத்திரங்கள் மின்னின. பனிவிழும் ஒரு இரவு வெளியே தனித்திருக்க, வானத்தில் இருந்து வெள்ளையும் சிவப்பும் சூடிய தாத்தா மான் வண்டியில் வந்து குழந்தைகள் உறங்கும் வீடுகளில் ஒரு மூடை நிறைய பரிசில்கள் வைத்துவிட்டும் போகும் காட்சி விரிந்தது.  அந்த மூடை அவள் கொக்கோ சுமந்துவரும் கனத்த மூடை போல இருந்தது.  அதுபோல கணக்கும் என அவள் நினைத்தாள்.

“ஏன் எந்த நத்தார் தாத்தாவும் இங்கே வருவதே இல்லை,

பரிசில்கள் நிரம்பிய ஒரு பொதியை ஏன் நம் வீடுகளில் யாருமே வைத்துவிட்டு மறைவதில்லை…  ஒரு விளையாட்டு பொருளாவது, ஒரு சாக்லேட்டாவது.

ஏன் எங்கள் வீடுகள் நிரம்ப புத்தகங்களே இல்லை.

ஏன் இங்கே நத்தார் மரங்கள் முளைப்பதே இல்லை..

நத்தார் தாத்தா வரும் பனிவிழும் உலகம் சுவரக்கத்தில் இருக்கிறதோ..

சுவர்க்கத்தின் குழந்தைகள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்”

ஆழ்மனதில் விரிந்த அவள் கேள்விகள் வழியே அந்த இரவிலும் உறங்கிப்போனாள்.

“தேஃஸுரேய்.. தேஃஸுரேய்”

தோள்களை பிடித்து பலமாக குலுக்கியதில் அவள்  விழித்துக்கொண்ட போது, பிரான்ஸுவாவின் குரல் கேட்டது, கண்கள் திறந்த அவள் பார்த்த போது அவன் நின்றிருந்தான். தலை மழித்து கருத்த மெலிந்த உடல், ஆங்காங்கே கிழிந்து ஓட்டை விழுந்த டீசேர்ட்டும், காற்சட்டையும்,ஒரு எழும்புக்கூட்டை கருப்பு நிற தோல் போர்த்தியது  போல அவன் தேய்ந்திருந்தான்.

“எழும்பு, நேரம் ஆகிவிட்டது”

வானம் கருப்பில் இருந்து மெல்லிய நீலம் ஏறியிருந்தது, சற்றே நாழிகைகளில் புலர்கதிர்கள் அந்த ஐவரிகாஸ்டின் காடுகளின் மேல் மெல்ல மலர்ந்து விரிந்து விடும். அவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். வலதுகாலின் முட்டியில் வந்திருந்த புண் மெல்லிய அரிப்போடு வலிப்பதாக தோன்றியது. ஆட்காட்டி விரலால் விரிந்திருந்த அந்த காயத்தின் விளிம்பை ஒரு வட்டம் போல மெல்லமாக வருடினாள். கொஞ்சம் இதாமாக இருந்தது. அரிப்பை தீர்க்க சொறிய வேண்டும் போல இருந்தது அவளுக்கு. காயத்தில் மஞ்சள் நிறத்தில் சலம் படலாமக பரவி காய்ந்த்திருந்த்து. அதே போல இன்னொரு காயம் அதே காலில் கணுக்காலிலும் இருந்து. அதையும் மெல்ல வருடிக் கொடுத்தாள். அங்கே அவளை யாருமே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் மருந்திட்டு விடப்போவதில்லை. அதுவாக காய்ந்தால்தான் உண்டு. இதற்கு மருந்திட வேண்டும் என்று கூட அவளுக்கு தெரியாமலே இருக்கலாம். அவளோடு இருந்த எல்லா குழந்தைகளுக்கும் இதேதான். எல்லோருக்குமே எங்கோ ஒரு இடத்தில் புண்கள் வந்துகொண்டே தான் இருந்தது.

அவளுக்கு அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது, கடைசியாக அவள் கண்ட தன் இரண்டுவயது சகோதரனின் முகம் நினைவில் வந்தது. அப்பாவை நினைக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

‘எல்லோரும் கிளம்புங்கள்’ என்ற  பிரான்ஸுவாவின் குரல் கேட்டதும் அவள் சட்டென்று எழுந்து கொண்டாள், அவள் உறங்கிய இடத்தில் தலைமாட்டில் இருந்த நீண்ட வாள்போன்ற கூரிய கத்தியையும், பெரிய சாக்குப்பையையும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவளோடு பெபியோலாவும் புறப்பட்டாள். அவர்களோடு சேர்த்து பதினெட்டு குழந்தைகளையும் இருவர் இருவராக அந்த கொக்கோ நரகத்தின் ஒவ்வொரு திசைக்கும் அனுப்பினான். பிரான்ஸுவா ஒரு  ஜோஃபிலின் உருவத்தில் தோன்றினான் அந்த குழந்தைகளுக்கு.

அவள் அணிந்திருக்கும் சட்டையை எத்தனை நாட்களாக போட்டிருக்கிறாள் என்று அவளுக்கு நினைவில் இல்லை. அவளிடம் இன்னும் மூன்று சட்டைகள் இருக்கின்றன. அவள் இங்கே வந்து சேர்ந்தபோது அல்லது அவளை பிடித்துக்கொண்டுவந்து இங்கே விட்டபோது அவள் கைகளில் பலவந்தமாக அஸீஸ் திணித்துவிட்டு போன பையில் இருந்தது அந்த ஆடைகள். அந்த பையை அவளது அப்பா அவனிடம் கொடுத்திருந்தார். குளிப்பதைப் பற்றி, ஆடைகள் மாற்றுவதைப் பற்றி அங்கிருந்த யாருமே யோசிப்பதில்லை. எப்போதாவது பிரான்ஸுவா சொன்னால் எல்லோரும் குளிப்பார்கள், ஆடைகளை கழுவிக் கொள்வார்கள். இருக்கும் இன்னொரு ஆடையை அணிந்துக் கொள்வார்கள்.

பிரான்ஸுவாவினதும் முதலாளி, கிறிஸ்துமஸ்க்கு நாட்கள் நெருங்கும் போது பெரிய ஒரு பொதியை கொண்டுவந்து கொடுப்பார். அதில் எங்கிருந்தோ வேறு குழந்தைகள் பாவித்து எறியாமல் பெருமனம் கொண்டு கொடை கொடுத்த  பழைய ஆடைகள் நிறைந்துக் கிடக்கும். அதுவும் ஏதாவது தொண்டு நிறுவனங்கள் கொடுத்தாதாக இருக்கும். அதிலிருக்கும் ஆடைகளை பிரான்ஸுவா ஒவ்வொரு குழந்தைக்கும் பிரித்துக் கொடுப்பான். அளவாக இருக்கிறதோ இல்லையோ கொடை கொடுத்த சுவர்க்கத்தின் குழந்தைகளை நினைத்து இந்த குழந்தைகள் பிதாவிடம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.  அப்போது மைக்கேல் பிதாவின் பாதத்தின் அடியில் நின்று புன்னகை செய்வான்.

அவளும் பெபியோலாவும் அந்த கொக்கோ காட்டின் வழியே செருப்புகள் பழக்கப்பாடாத வெற்று கால்களோடு நடந்தார்கள். கற்கள் குத்துவதை பற்றியும், முட்கள் பாதங்களை கிழிப்பதைப் பற்றியும் அவர்கள் கால்கள் வருந்துவதே இல்லை. அதைவிட சகித்துக்கொள்ள இன்னும் கடினமானஎத்தனையோ வலிகள் இருந்தன. ஆங்காங்கே முளைவிட்டு வளர்ந்த செடிகளை புதர்களை அவர்கள் கையில் இருக்கும்  வாளால் வெட்டி வீழ்த்தினார்கள். அது போகிற போக்கில் செய்ய வேண்டி இருந்த இதர பணி. தேவையான பக்குவத்தில் முதிர்ந்திருந்த கொக்கோ காய்களை வெட்டி அந்த பைகளில் நிரப்பிக் கொண்டே வந்தார்கள். ஒவ்வொரு காய்களாக அந்த மூடையின் கனம் ஏறிக்கொண்டே வந்தது. அவளது தோற்பட்டை வலிக்க ஆரம்பித்து. ஏற்கனவே ஐந்து மூடைகள் நிரப்பி கொண்டு போய் கொட்டிவிட்டு வந்துவிட்டார்கள். இது அவர்களுடைய ஆறாவது தவணை. இன்னும் இரண்டு சுற்று அடித்துவிட்டால் இன்றைய நாளின் அறுவடையை முடித்துவிடலாம் போலிருந்தது. அவள் நத்தார் தாத்தாவை நினைத்துக் கொண்டாள். இப்படி ஒரு சுமையாகத்தானே அந்த பரிசுப் பொதி இருக்கும். வலி பொறுக்க முடியாமல் பெருகியபோது மூடையை கீழே வைத்துவிட்டாள். பெபியோலாவும் மூடையை அவள் அருகில் இறக்கிவிட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு ஒரு மரத்தின் கீழே சட்டையை உயர்த்தி குந்திக்கொண்டாள்.

தேஃஸுரேய் களைப்போடு அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தாள். தங்க நிறம் மறைந்து தெளிந்த நீலத்தில் வானம் விரிந்திருந்த்து. மேகங்களுக்கும் அந்த ஆபிரிக்காவின் மணம் பிடிக்காததுபோல எங்கோ சென்றுவிட்டிருந்தன. கொக்கோ மரங்களுக்கு நடுவில் ஆங்காங்கே தீவைத்து எரித்து சாகடிக்கப்பட்ட காட்டின் பெரு மரங்கள் கிளைகள் இழந்து, சிதைந்துபோன சிலுவைகள் என ஓங்கிநீண்டு, தன் கரங்களை மேகங்களின் பால் அழைப்பதைப் போல அசைவற்று கிடந்தன. கொக்கோ மரங்களிற்கு மேல் நிற்கும் அந்த பட்டை மரங்கள், அந்த காட்டிற்குள் எதிர்காலம் சிதைந்து நிற்கும் குழந்தைகளின் இருப்பை, அவர்களின் துயரங்களை, கடவுளிடம் சொல்வதைப் போல, இனிக்க இனிக்க சாக்லேட்டு சாப்பிட்டு மகிழும் இன்னொரு உலகத்தில் வாழும் மனிதர்களிடம் பறை சாற்றுவதைப் போல அந்த மரங்கள் ஐவரிகாஸ்டின் நிலவெளிகள் எங்கும் படர்ந்து அடிமைகளின் சாட்சியாக நின்றிருந்தன.

தேஃஸுரேய்வின் ஒன்பதாம் பிறந்த நாளிற்கு  மறுநாள்தான் அவளது தந்தை அவளை அஸீஸிடம் கொண்டுவந்து விட்டான். அவள் அந்த பிறந்த நாளில் அவளாக குதூகலித்து திரிந்தாளே தவிர அங்கே அதை கொண்டாட்டமாக்க யாருமே இருக்கவில்லை. அவளது பிறந்த நாளை நியாபகத்தில் வைத்து அதற்காக நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தவள் அம்மாவிடமும் தந்தையிடமும் ஏதாவது பரிசில் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு சாக்லேட்டாவது வாங்கிக் கேட்டாள். கொக்கோ தோட்டங்கள் செறிந்த அவளது பூமியில் சாக்லேட் சாப்பிட்டவர்கள் யாருமே இல்லை. அவள் கேட்ட அவளுடைய எந்த  நண்பர்களும் சாக்லேட் என்பதை வாழ்நாளில் சுவைத்தே இருக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் கூட. அத்தியாவசியம் உணவுக்கு கூட அங்கிருந்த மனிதர்களின் வருவாய் போதவே இல்லை. பின் ஒரு ஆடம்பரமான ஒரு துண்டு இனிப்பு  கிடைக்குமா என்ன.

அவளைப்போலவே அதுவரை அவளது அப்பாவும் அவளது வயதை எண்ணி வைத்துகொண்டிருந்திருக்கலாம். நாளை செகுவா போய் சாக்லேட் வாங்கித் தருகிறேன் என அவளது அந்த பிறந்த நாளில் சொன்ன தந்தை அடுத்த நாள் காலையிலேயே அவளை அழைத்துக்கொண்டு புறப்பாட்டார். அவளுக்கு மிகக்குதூகலமாக இருந்தது. அவள் விடைபெறும் போது அம்மா அவளை அழைத்து கட்டியணைத்து முத்தமிட்டாள். அவள் வறண்ட கன்னங்களில் வழிந்த கண்ணீரின் உப்புச்சுவை தேஃஸுரேய்வின்உதடுகளில் பட்டு கரித்தது. அம்மா எதற்காக அழுகிறாள் என்று அவளுக்கு அப்போது புரியவே இல்லை.

அவள் இருந்த கிராமத்தில் அவர்களால் நெருங்க முடிகிற சிறுபட்டணம் செகுவா, நானூறு மைல்கள் வரை தொலைவில் இருந்தது. அங்கிருந்துதான் பல கொக்கோ பண்ணைகளுக்கு அடிமைகளாக்க குழந்தைகளை கடத்திக் கொண்டிருந்தார்கள். செகுவாவில் தரகர்கள் நிறைந்துக் கிடப்பார்கள். பல இடங்களில் இருந்தும் பெற்றோர் குழந்தைகளை இங்கே கொண்டுவந்து விற்றுவிடுவார்கள். அதற்காக கொடுக்கிற பணத்தை தவிர வேறு ஊதியங்கள் குழந்தைகளுக்கு கிடையாது. மூன்றோ நான்கோ வருடங்களுக்கு அடிமைகளாக எப்படிவேண்டுமானாலும் நிலஉரிமையாளர்கள் அந்த குழந்தைகளை வேலை வாங்கிக்கொள்ள முடியும். பல போது குழந்தை கடத்துபவர்களிடம் இருந்தும் தரகர்கள் குழந்தைகளை வாங்குவதும் உண்டு. செகுவாவை வந்து சேர்கிற வரை அவள் கற்பனையில் ஒரு சாக்லேட்டை வளர்த்துக் கொண்டே வந்தாள். அதன் வடிவத்தை வளர்க்க முடிந்ததே தவிர அதன் சுவையை அவளால் வளர்க்க முடியவில்லை. சாக்லேட்டை பற்றி அவளுக்கு சொன்ன பள்ளித் தோழி நெஃலிக்குக் கூட அதன் சுவையை விவரிக்க தெரியவில்லை.

செகுவா பட்டணத்தை அவர்கள் நெருங்கிய போது, ஆங்காங்கே சிறுவர்கள் வீறிட்டு அழும் சப்தம் கேட்டது. மணல் தரை விரிந்த பட்டணத்தின் பொதுப் பேரூந்து நிலையமே குழந்தை தொழிலாளர்களை கடத்தும் மத்தியமாக இருந்தது. சிறு சிறு கடைகள். பட்டணம் என்கிற வரையறைக்கும் வளராத ஒரு கிராமத்தின் சந்தியை கூட தொட்டுவிடாத வசதிகள் கொண்டது அந்த பட்டணம். தேஃஸுரேவுக்கு பீதிகிளம்பியது. காணாமல் போன அண்ணன் அவளுக்கு நினைவிற்கு வந்தாள், அயல் வீடுகளில் திடீர் என மாயமான குழந்தைகள் நியாபகம் வந்தார்கள். குழந்தைகளை கொக்கோ பண்ணைகளுக்காக கடத்துவதை அவள் அறிந்தே இருந்தாள். இருந்தாலும் தன் அப்பன் தன்னை விற்றுவிடுவான் என அவள் நினைக்கவே இல்லை.

அவளை அஸீஸிடம் கொடுத்தபோது அவளுக்கு எல்லாமுமே புரிந்துவிட்டது. அவள் வீரிட்டு அலற ஆரம்பித்தாள், அவர்கள் கைகளில் இருந்து விலகி ஓட முனைந்தாள். அஸீஸின் கிடுக்குப் பிடியில் அவளால் எதுவும் செய்து தப்பிக்க முடியவே இல்லை. இருநூற்றி நாற்பது யூரோக்கள் கேட்ட அப்பாவுக்கு பெண் பிள்ளை என்பதால் அவ்வளவு எல்லாம்  தரமுடியாது என்று சொல்லியவன், பேரம் பேசலில் கடைசியாக வெறும் நூற்று தொன்னூற்று ஐந்து யூரோக்கள் கொடுத்துவிட்டு அவளை வாங்கிச் சென்றான்.

பெபியோலா தன் இயற்கைக்கடனை முடித்துக் கொண்டு வந்ததும், மூடைகளை ஒரு கையால் பிடித்து தூக்கி வளைத்து முதுகில் வைத்து மீண்டும் இருவரும் சுமந்தார்கள். அவளுக்கு மீண்டும் தோற்பட்டை அதீதமாக வலித்து. பாதி குனிந்து நிலத்தைப் பார்த்தபடியே இருவர் முகத்தையும் இருவரும் பார்க்காமலே பேசிக்கொண்டு நடந்தார்கள். வலி தாளமுடியாதபோது கொஞ்சம் கீழே வைப்பதும் பின்பு மூடையை கட்டிப் பிடித்து தூக்கி கொஞ்ச தூரம் நடப்பதும் அவர்கள் இருவருக்கும் மூச்சு வாங்கியது. தேஃஸுரேய்வின் தாய் மொழி பிரஞ்சு, இங்கிருக்கும் பல குழந்தைகளுக்கு பிரஞ்சு தெரியாது, உள்ளூர் மொழிகள் பேசினார்கள். பெபியோலாவுக்கு பிரஞ்சோடு ஒரு உள்ளூர் மொழியும் தெரிந்திருந்தது. பல நேரங்களில் தேஃஸுரேய்வின் மொழிபெயர்ப்பாளர் அவள் தான். பெபியோலாவுக்கு இவளை விட இரண்டு வயது அதிகம். அவ்வப்போது உள்ளூர் மொழிகளின் சில வார்த்தைகளை அவளுக்கு சொல்லிகொடுப்பாள். அவளுக்கு தெரிந்த கொஞ்ச ஆங்கில வார்த்தைகள் இதுவரைக்கும் அங்கே தேவைப்பட்டதே இல்லை.

பணிகள் முடியும் ஒய்வுநேரங்களில் சில போது தனிமையில் ஒதுங்கி, தரையில் குந்தியிருந்து மண்ணில் விரல்களால் தான் பள்ளிக் கூடத்தில் படித்த  எழுத்துக்களை நினைவில் கொண்டுவந்து அதன் உச்சரிப்பை சொல்லியபடியே கீறிப்பார்ப்பாள். பாடசாலை நினைவுகள் அவளுக்குள் மீளும். உதிர்ந்துவிழும் மண் சுவர்கள், ஓட்டை விழுந்த கூரை, மண் தரை, கீழே அமர்ந்து அவர்கள் கற்கும் வகுப்பறை, ரஹீனா ஆசிரியையின் முகம், அவளுக்குள் கனவுகள் விதைத்த நெஃலியின் முகம், அவளது அண்ணா… அண்ணாவின் முகம் வந்ததும் அந்த நிகழ்வு அப்படியே கண்முன் வந்து நிற்கும், பள்ளிக் கூடத்தை துப்பரவு செய்யும் ஒரு நாளில் நீண்ட வாளால் அவனது இடது காலில் வெட்டு விழுந்து தசையும் சதையும் விரிந்து இரத்தம் பீறிட அவன் கதறி கதறி அழும் அந்த காட்சி, விரல்களால் அவள் மண்ணை கிழித்து எழுதிய எழுத்துக்களின் கோடுகள் அவன் காலில் விழுந்த வெட்டைப்போல விரிந்து கிடப்பதைக் கண்டதும் எழுந்து ஓடுவாள். பெபியோலாவிடம் கதறிக் கதறி அழுவாள். அப்படி அவள் கதறும்போது சுருள் சுருளாக பாதிமுடி தொங்கும் அவள் பின் மண்டையில் பிரான்ஸுவா ஓங்கி ஒரு அடி விடுவான். அப்படியே அவளது சப்தம் அடங்கி விசும்பும் ஏக்கம் திக்கித்திக்கி வெளிவரும்.

உலகின் பெரும்பகுதி சாக்லேட்டுக்களை சாப்பிட்டுத் தீர்க்கும் ஐரோப்பாவுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் நீங்கள் சாப்பிடும் இனிப்பான சாக்லேட்டுகளில் ஆப்பிரிக்காவின் குழந்தைகளின் குருதி கலக்கப்படவில்லை, அவர்களுக்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ள சாக்லேட் உற்பத்தி செய்யும் பன்னாட்டு பெருநிறுவனங்கள் உருவாக்கிய ஒரு தொண்டு நிறுவனம் கிளம்பிவந்து நாங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டுகிறோம், வைத்தியசாலைகள் கட்டுகிறோம். நாங்கள் ஈட்டும் கொழுத்த இலாபத்தில் ஆபிரிக்காவின் குழந்தைகளுக்காக பெரும் பகுதியை செலவு செய்கின்றோம் என ஒரு பிம்பத்தை உருவாக்கி, காணொளிகள் எடுத்து இனி நீங்கள் குற்ற உணர்ச்சியற்று நிம்மதியாக சாக்லேட் சாப்பிடலாம் என உலகத்திற்கு காட்டிவிட்டு பாதிவழியிலேயே கைவிட்ட பாடசாலைகளில் ஒன்று அவளுடையது.

வறுமை நிறைந்த அரசாங்கங்களாலும் பள்ளிக்கூடங்களைக் கட்டவும், ஆசிரியர்களை பணிக்கமர்த்தவும் முடிவதில்லை. அங்கிருக்கும் மனிதர்களே முடிந்த அளவு களிமண் கொண்டு அறைகள் கட்டிக் கொண்டு முடிந்ததை கொடுத்து ஆசிரியர்களுக்கு ஊதியமும் கொடுக்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாத பெரும் நிதிச் சுமை. கல்வியின் விலை மிகப்பெரிது. வாங்க முடியாது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை விற்க  வேண்டிய அளவுக்கு. அப்படியொரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது சாக்லேட் நிறுவனங்கள்.

அவளது அண்ணனின் காலில் விழுந்த வெட்டுக்காயத்திற்குக் மருத்துவம் பார்க்க கட்டணம் கொடுக்க கூடிய வசதிகூட அம்மா அப்பாவுக்கோ இருக்கவில்லை. நெஃலியின் மூத்த அண்ணன்தான் செலவுகளை பொறுப்பேற்றான்.

அல்லாடித் தள்ளாடி அன்றைய நாளுக்குரிய அறுவடையை சுமந்து கொண்டு அந்த கொக்கோ பண்ணையின் ஒவ்வொரு புறத்திலிருந்தும் அந்த குழந்தைகள் வந்து ஓரிடத்தில் எல்லாவற்றையும் கொட்டினார்கள். வயதில் மூத்தவர்களாக இருந்த சில ஆண் இளவல்கள் பணிக்கமர்த்தப்பட்ட குழந்தைகள்  சரியாக கொக்கோக்களை ஆய்ந்து முடிக்கிறார்களா, வேலைகள் சரியாக நடக்கிறதா என நோட்டம் விட அந்த பண்ணையின் எல்லா திசைகளிலும் சுற்றிவருவார்கள்.

தேஃஸுரேயுவும் பெபியோலா அவர்கள் அறுவடைகளை கொண்டுவந்து கொட்டினார்கள், பசியும் களைப்பும் அவர்களை வாட்டி எடுத்தது. தாகத்தால் நாவு வரண்டது. தண்ணீரை வயிறுமுட்ட அருந்தி அமர்ந்தார்கள். தேஃஸுரே தன் காலில் இருந்த காயத்தை வருடிக்கொடுத்தாள். பிரான்ஸுவாவும் அவனுக்கு உதவியாக இன்னொரு இளவலும் சேர்ந்து அதே கொக்கோக் காடுகளில் விளையும் கிழங்குகளை சுட்டு வைத்திருப்பான். அதையும் அந்த குழந்தைகள் தேடி பிடுங்கி வரவேண்டும். நாளிற்கு இரண்டு வேலை உணவு கிடைக்கும். அதுவும் அங்கே கிடைக்கும் கிழங்குகளும் சில பழங்களும் மட்டும் தான். மதியம் சாப்பாட்டிற்கு மேலே அவர்கள் ஆய்ந்து வந்த கொக்கோ பழங்களை உடைத்து அதன் கொட்டைகளை பரத்தி வெய்யிலில் காய வைக்க வேண்டும். முன்னைய நாட்களில் காயவைத்து காய்ந்த கொட்டைகளை மூடைகளில் கட்டி தயார் படுத்தி வைக்க வேண்டும், அப்படியே அவர்களது நாள் முடிந்துவிடும். குறிப்பிட்ட சில வருடங்கள் எந்த ஊதியமும் இல்லாமல் வெறும் உணவுக்காக அடிமை வேலை செய்யும் குழந்தைகளில் ஒரு வயதை எட்டிய ஆண்களுக்கு தனியாக கொக்கோ விவசாயம் செய்துகொள்ள சிறு நிலத்துண்டு கிடைக்கும். அதுவும் ஐவரிகாஸ்டின் இயற்கை காடுகளை அழித்து  சட்டவிரோதமாக பிடித்துக் கொள்ளும் நிலங்கள். அந்த சட்டவிரோதமும் நாட்டின் பெரும் பகுதி நிலத்தை அழித்து அபகரித்து நடக்கிறபோதும் அது ரகசியமாக நடப்பதாக நாங்கள் நம்பவேண்டும்.

தேஃஸுரே காண விரும்புகின்ற கனவுகள் மிக விசாலமானவை, சிறகிழந்த ஒரு பருந்தைப் போல அங்கே அடைப்பட்டுக் கிடந்தாள். அவள் கனவுகளில் கதைகளைக் கேட்க பெபியோலாவுக்கு மிகப் பிடித்தமாய் இருந்தது. கற்பனையை விரித்து தேஃஸுரே சொல்லும் எதையும் அவளாள் கானமுடியாத போதும் அவளுக்கு அது பிடித்திருந்தது. “தேஃஸுரேயுவுக்கு இரண்டு சிறகுகள் கொடுத்துவிடு கர்த்தாவே”  என நாளும் அவள் பிரார்த்தித்தாள். அப்படி தேஃஸுரேயுவுக்கு சிறகுகள் கிடைத்தாள் தானும் அவள் சொல்லும் உலகத்திற்கு அவளோடு சென்றுவிடலாம் என்று நம்பினாள்.

தாய் தந்தையிடமிருந்து தங்களைப் பிரித்து, எதிர்காலத்தை பறித்து, கனவுகள் சிதைத்து, தங்களை  கசக்கிபிழிந்து கொக்கோ கொட்டைகளை எதற்காக எடுத்துச் செல்கிறார்கள் என்பதை பெபியோலாவிற்கு தேஃஸுரேயே சொன்னாள். எப்படி செய்கிறார்கள் என்பதெல்லாம் அந்த குழந்தை புத்திக்கு புரியாத போதும், என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. இந்த நரகத்தில் இருந்து கொண்டு செல்லும் ஒரு கொட்டை, சுவர்க்கத்தின் கொண்டாட்டமாக மாற்றப்படுகிறது. ஒரு சாக்லேட் எப்படி சுவைக்கும் என்பதை பெபியோலாவால் யோசிக்கவே முடியவில்லை. சுட்டு சாப்பிடும் வாழைப்பழம்போல் இனிக்கும் என நினைத்தாள். தேஃஸுரேவுக்கும் அதேதான்.

வெள்ளை குழந்தைகள் வாழும் சுவர்க்கலோகத்தில் எப்படி நத்தார் கொண்டாடப்படுகிறது என்பதை அவள் மனக்கண்ணில் இருக்கும் காட்சியை பெபியோலாவிற்கு விவரணை செய்வாள், கைகளை விரித்து ஆட்டி, சைகைகள் செய்து, அவளது வெண்மையான அகலவிரிந்த கண்களை இன்னும் அகலவிரித்து, உதடுகள் பிதுக்கி விபரிப்பாள். பெபியோலாவினால் அதை கற்பனை செய்ய முடியாது. ஆனாலும் ஆசையோடு கேட்டுக் கொண்டே இருப்பாள்.

“உனக்கு மட்டும் இதுவெல்லாம் எப்படி தெரியும்” என ஒரு முறை பெபியோலா தேஃஸுரேயிடம் கேட்டாள். அவளிடம் மட்டும் கனவுகள் வந்து குவிகின்ற தைரியம் பெபியோலாவால் புரிந்துகொள்ள முடியவே இல்லை.

“நெஃலியிடமிருந்துதான். அவள் எனக்கு நிறைய நிறைய கதைகள் சொல்லுவாள்”

“ஆஹ், அவளுக்கு எப்படி எல்லாமே தெரியும், உன் தோழியா அவள்.. எங்கிருக்கிறாள் அவள்”

“அவளும் நானும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம், பக்கத்து பக்கத்து குடில், ஒரே பள்ளிக் கூடம். இப்போது அவள் வீட்டில் இருப்பாளாக்கும். அவள் அண்ணன் இருக்கும் வரை அவளை நன்றாக பார்த்துக் கொள்வான். அவனிடம் இருந்துதான் அவளுக்கும்’”

“அவனுக்கு எப்படி தெரியும்”

“தெரியாது, யார் யாரோ பெரிய ஆபிசர்கள் அவனை வந்து அவ்வப்போது சந்திப்பார்கள். வெள்ளைக் காரர்கள் ஒரு முறை அவனோடு வந்தார்கள். கமராக்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு, நாங்கள் பயந்து விட்டோம். என் அண்ணாவை அப்பா கொண்டுபோன நாளில் அவன் வந்து அப்பாவோடு சண்டையிட்டான். அவ்வப்போது ஊரில் உள்ள பலர் சேர்ந்து அவனை அடிப்பார்கள். பாவம் நெல்சன் அண்ணா. என்னுடைய அண்ணன் கால் வெட்டிப்பட்டு கதறிக் கிடந்தபோது அவர்தான் தூக்கிக் கொண்டு ஓடியது. அப்பா கூட வரவில்லை.”

பெபியோலா கண்களை அகலவிரித்தபடி அவளை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

தங்கள் கொழுத்த இலாபத்திற்காக குழந்தைகளை அடிமைகளாக பணிக்கமர்த்தி குறைந்த விலையில் கொக்கோவை வாங்குவதற்காக பன்னாட்டு பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குழந்தை தொழிலார்கள் முறைமையை எதிர்த்து இயங்கும் ஐரோப்பாவின் சில தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் உள்ளூர் ஊடகவியளார் நெல்சன். இருபதை கடந்த துடிப்பான இளைஞன். மாலியிலும்,  ஐவரிகாஸ்டிலும் நடக்கும் இந்த குழந்தை கடத்தல்களையும், இயற்கை சுரண்டல்களையும் வெளியுலகத்திற்கு அவ்வப்போது கொண்டுவரும் பெரும் பணியில் அவனுக்கு பெரும் பங்கிருக்கிறது.

அப்படி எதுவுமே இல்லை என இனிப்பான சாக்லேட்டின் கருப்பு சுவையை, நிறுவனங்கள் மறைக்க எத்துனை பிரயத்தனம் எடுத்த போதிலும் அதன் உண்மைப் பக்கங்களை வெளிக்காட்டி தங்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள் நெல்சன்கள். கருப்பு குழந்தைகளின் குருதி கலந்திருக்கிறது என்று  தெரிந்தாலும் சாக்லேட் சாப்பிடாமல் விடுவோமா என்ன. பல போராட்டங்களால் மாலியில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஐவரிகாஸ்டில் நிலைமை அப்படியே தான்.

மீண்டும் என்ன கேட்க வேண்டும் என தெரியாமலே பெபியோலா கையில் இருந்த சிறு குச்சியால் நிலத்தில் கிறுக்கியவண்ணம் யோசனையில் நீண்டாள்.

“நெஃலி எனக்கு அழாகான ஒரு ஓவியம் காட்டினாள்”

தேஃஸுரே மௌனம் களைந்து சொன்னபோது, அது என்ன என்கிற ஆர்வத்தோடு பெபியோலா அவளை பார்த்தாள்.

“அழகான ஒரு படம். அதில் இரண்டு காட்சிகள். ஒன்றில் வண்ண வண்ண விளக்குகளும், அலங்காரங்களும் சோடிக்கப்பட்ட ஒரு நத்தார் மரம். அவ்வளவு அழகு. பக்கத்தில் ஒரு ஜன்னல். வெளியே துளித்துளியாய் பனிவிழும் இரவு. மரத்திற்கு பக்கத்தில் ஒரு மேஜை. ரோஜா நிறத்தில் இரண்டு அடுக்கில் ஒரு கேக். பக்கத்தில் கூடை நிறைய சாக்லேட்டுகள். நிறைய தின்பண்டங்கள். அதன் மேற்சுவரில் ஹேப்பி எக்ச்மஸ் என்று எழுத்துக்கள்”

“அடுத்த படத்தில்”

“ஒரு கட்டில், இதாமான பஞ்சு மெத்தை விரித்த ஒரு கட்டில். வண்ணம் பூசிய ஒரு அறை. அழகான விளக்குகள், படிக்கும் மேஜை பக்கத்தில் கதிரை. நிறைய புத்தகங்கள். தனியாக ஒரு ஆடைவைக்கும் பெட்டி. அந்த கட்டிலில் ஒரு வெள்ளை சிறுமி, தேவதை போல உறங்குகிறாள். அந்த குழந்தையை இரண்டு தேவதைகளை அருகில் நின்று புன்னகைத்தபடி பார்க்கிறார்கள்.  நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு வானத்தில் இருந்து வெள்ளை தாடி நீண்ட ஒரு தாத்தா சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து ஒரு மான் வண்டியில் வந்து ஒரு பெரிய பரிசில் மூடையை அந்த குழந்தைக்கு தெரியாமல் வைத்துவிட்டு போகிறார்”

விவரிக்கும் போதே உதடுகள் பிதுங்கியது. கண்கள் கண்ணீரை சிந்தியது. வெண்மை போல ஏதோ படர்ந்த அவளது கருமை கன்னத்தை அந்த கண்ணீர் ஈரமாக்கியது.

“எனக்கும் அங்கே போகவேண்டும். இங்கே இனிமேல் என்னால் இருக்க முடியாது இது  போதும்” என அவள் விம்மினாள். அவள் விசும்பல் அந்த காட்டைத்தாண்டி எந்த தத்த்தாவுக்கும் கேட்குமா என்ன..

மதியம் அவர்கள் கொக்கோ காய்களை வெட்டி கொட்டைகளை வெளியே எடுக்கும் பணியை செய்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பண்ணையின் வாயில் பக்கம் இருந்து மனிதர்கள் சப்தமிட்டபடி ஓடிவருவது கேட்டது. குழந்தைகள் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் பரபரப்பானார்கள். கையில் இருந்த கூறிய ஆயுதங்களோடே எழுந்து என்ன நடக்கிறது என்று பார்க்க ஆர்வமானார்கள்.

வாயில் அருகில் காவலுக்கு என இருந்த இரண்டு பையன்கள் கத்திக் கொண்டே அங்கே ஓடிவந்தார்கள். அவர்கள் பின்னால் எப்போதுமே அறியாத பல மனிதர்களும் அவர்களை ஓடாமல் நிற்குமாறு உரத்தக் குரலில் கூவிக் கொண்டே வேகமாக நடந்து வந்தார்கள். போலிஸ் சீருடையில் இருப்பவர்களும் துப்பாக்கிகளோடு அவர்களோடு வருவதைக் கண்ட  பிரான்ஸுவா அதிர்ச்சியடைந்தான். அவன் முகத்தில் பீதி தெரிந்தது. வெள்ளை மனிதர்கள், கமராக்கள் தூக்கியவர்கள், கொஞ்சம் நேர்த்தியாக ஆடையணிந்தவர்கள் எல்லோருமே வேகமாக அங்கே வரும்போதே எதையோ சுதாகரித்துக் கொண்ட பிரான்ஸுவா எல்லா குழந்தைகளையும் காட்டுக்குள் ஓடுமாறு கத்தினான்.

மறுகணமே அங்கிருந்த குழந்தைகள்  கைகளில் இருந்த கூரிய ஆயுதங்களை ஆங்காங்கே போட்டு விட்டு கால் திரும்பிய திசையில் ஓட ஆரம்பித்தார்கள்.

“தேஃஸுரே வா ஓடுவோம்” என பெபியோலா அவளை அழைத்த மறுநொடி பெபியோலா சில மீட்டர் தூரத்தை அடைந்துவிட்டிருந்தாள். அவளோடு ஓடுவதற்கு முனைந்த தேஃஸுரே அந்த கணத்தில் அவரை கண்டார்.

“நெல்சன் அண்ணா” என மறுகணம் எதையுமே யோசிக்காமல கத்தியபடி அவள் பாய்ந்து ஓட முனைந்த போது பிரான்ஸுவா அவள் சட்டையைப் பிடித்து இந்த பக்கமாகத் தூக்கி எறிந்தான்.

எறிந்த அந்த மறுநொடி நடந்ததைக் கண்ட நெல்சன் ‘தேஃஸுரே தேஃஸுரே” என கதறியபடியே ஓடிவந்தான். திரும்பி பார்த்த பெபியோலா அந்த காட்சியை கண்டு மிரண்டு கதறியபடியே தேஃஸுரேவை நோக்கி ஓடிவந்தாள்.

பிரான்ஸுவா,  அவள் விழுந்த  திசைநோக்கி திரும்பிய போது அவள் முதுகில் இருந்து நெஞ்சில் பாய்ந்த கூரிய கத்தியோடு இரத்தம் பீறிட அந்த வளவளப்பான கொக்கோ கொட்டை குவியலில் மல்லாக்க கிடந்தாள் தேஃஸுரே.

அவள் கண்கள் மூடமுன் அந்த இரண்டு குழந்தை தேவதைகள் இறங்கிவந்தார்கள். ஆனால் அவர்கள் அவளைப்போல அழகான கருப்பு தேவதைகளாக இருந்தார்கள். அவர்கள்  கருப்புக் கன்னங்கள் பளபளத்தன. அவர்கள் கையில் ஒரு தட்டு நிறைய சாக்லேட்டுகள் இருந்தன. தூரத்தில் எப்போதும்  வாராத அந்த மான் வண்டியை அவள் கண்கள் அப்போது தேடியது. அந்த வறண்ட கொக்கோ காட்டில் கருப்பு நிறத்தில் துளித்துளியாய் அப்போது பனிவிழுந்தது.

மிஸ்பாஹுல் ஹக்-இலங்கை

 

மிஸ்பாஹுல் ஹக்

(Visited 151 times, 1 visits today)