“பாஷாந்தரம்”-சிறுகதை -மிஸ்பாஹுல்-ஹக்

மிஸ்பாஹுல்-ஹக்இந்த வருடத்தின் ஜனவரி மாதம் IFFA இன் உலக கலை திரைப்பட விழாவில் “பிரகாசமான எதிர்காலம்” பிரிவில் திரையிடப்பட்டு பின் கலை படங்களுக்கான சில  சர்வதேச அமைப்புகளின் விருதுகளையும், உதவி தொகைகளையும் பெற்ற “பிரகரணம்” திரைப்படத்தின் திரைக்கதைக்கான கரு உருவான ஒரு கதைபற்றி எழுதலாம் என்றுதான் இதை ஆரம்பிக்கிறேன். நான் இந்தக் கதையை எழுதும் அவசியம் பற்றி நீங்கள் யோசித்தால் கதையின் தொடர்ச்சியில் அதற்கான காரணத்தை விளக்கி விடுகிறேன். இப்போது “பிரகரணம்” திரைப்படம்  IFFA unmanacle இணையதளத்தில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. ஐந்து டாலர்கள் கொடுத்து அதை நீங்கள் பார்க்கலாம். நல்லதொரு கலைப்படத்திற்கு நீங்கள் செய்த உதவியாக அது இருக்கக் கூடும். அதை விட இந்த கதையை நீங்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்வதற்கும் அது வசதியாக இருக்கும்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம்  நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் உலகளாவிய கலைப்படங்களுக்கான பிரமாண்டமான திரைப்பட விழாவை “IFFA” நடாத்தி வருகிறது. ஏறத்தாள நாற்பத்தியாறு வருடங்களாக  இந்தத் திரைப்படவிழா மிக வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த இரண்டு உலகளாவிய கலைப்படங்களுக்கு “ஈகள்” விருது கொடுத்து உதவி தொகைகளையும் IFFA வழங்கும். அந்த விழாவிற்காக திரைப்படங்களுடன் வருகை தருகின்ற இயக்குனர்கள், சினிமா காதலர்கள் போலவே அவர்களை ஊக்குவிப்பதற்காகப் பல அமைப்புக்களும் அங்கே வருகைதரும். நல்ல சினிமாக்களை உருவாக்கும் கலைப்பட படைப்பாளிகளுக்கான மிகப்பெரிய ஒருகளம் இந்தத் திரைப்படவிழா என்று சொல்லலாம். அப்படி ஒரு கெளரவம் மிகுந்த இடத்தில் திரையிடுவதற்கும் அதன் நீட்சியாக இப்போது சினிமாஉலகத்திலும், சினிமாவை கற்போர் இடத்திலும் பேசப்படுகிற ஒரு திரைப்படத்தை என் தோழன் “சினான் மஷூக்” இயக்கி இருக்கிறான். அந்த திரைப்படம் கமர்ஷியல் திரைப்படம் இல்லை என்பதால் அது திரையரங்குகளில் திரையிடப்பவில்லை.

அது ஒரு அற்புதமான சனிக்கிழமை. எல்லா சனிக்கிழமைகளும் அற்புதமானவை இல்லைதான். ஆனால் நாங்கள் சேர்ந்து களிப்புறும்  எல்லா நாட்களுமே அற்புதமானவைதான். அந்த சனிக்கிழமை நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அதானால் அந்த சனிக்கிழமை அற்புதமனதாக இருந்தது. எங்களுக்கு விடுமுறையும் நேரமும் கிடைக்கின்ற தருணங்களில்எல்லாம் சினாவின் அறையில் சந்தித்துக்கொள்வோம். சவூதிஅரேபியாவின் ரியாத்நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் கட்டுமான நிறுவனமொன்றில் பொறியியளாராக வேலைப்பார்க்கும் காதலிகள் இல்லாத கலைரசிகன் சினான். இன்னொரு நிறுவனமொன்றில் உயர்பதவி ஒன்றில் வேலைப்பார்ப்பவர் ‘அமு’ எனும் சேந்தன் அமுதன். இருவருமே இலங்கையர்கள். நான் தமிழ்நாடு பொன்னேரியை சேர்ந்தவன். ஒரு விற்பனை நிறுவனம் ஒன்றில் மார்கட்டிங் செய்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் மூன்று இலங்கை நண்பர்கள் அவ்வப்போது அங்கே வருவார்கள். ஆனால் அன்று அந்த சனிக்கிழமை நாங்கள் மூவரும் மட்டும்தான் சந்தித்தித்துக் கொண்டோம்.

சினாவின் அறைக்கு நான் வந்து சேர்கின்ற போது மதியமாகி இருந்தது. இலங்கையில் இருந்து கொண்டுவந்திருந்த கருவாட்டை, வெங்காயமும் தக்காளியும் சேர்த்து எண்ணையில் வறுவல் செய்து வைத்திருந்தார்கள். செந்தூரப் பூவிதழின் வண்ணத்தில் அந்த வறுவலில்  சிவந்து மிதந்த எண்ணை வாயூற செய்துக்கொண்டிருந்தது. பச்சையரிசி சோறும், பருப்புக்கறியும் அன்றைய மதிய உணவுக்காக அமு அண்ணாவின் கைப்பக்குவத்தில் தயாராகி இருந்தது. பெரிய பொலித்தின் விரிப்பை தரையில் விரித்து, அதில் ஆவிபறக்கும் சூடானசோற்றைப் பரப்பி அதன் மீது பருப்புக்கறியை ஊற்றினார்கள். மத்தியில் கருவாட்டு வறுவலையும் இட்டு தரையில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.  மௌனியின் கதைகளை பற்றிப் பேச ஆரம்பித்தவர்கள் இடாலோ கால்வினின் கதைகளில் வந்து நின்றார்கள். இடையில் கே.பி.ராமனுண்ணியும், பஷீரும் வந்து போனதாக ஞாபகம். சோற்றோடு அவர்களின் உரையாடல்களின் சுவரஷ்யத்தையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தேன். வழமையான அவர்களுடைய பேச்சுத்தமிழ் எனக்கு புரிவதில்லை. எனக்காக இன்னொரு தமிழில் நான் இருக்கும் போதெல்லாம் மெனக்கெட்டு பேசுவார்கள்.

மதிய உணவிற்கு பின்னர் மூவரும் அமர்ந்து ஹங்கேரியன் மொழி திரைப்படமான “ஸ்ட்ராங்க்ல்ட் (Strangled)” திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தோம். 65 இன்ச் திரையில் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரிந்தன. அந்த திரைப்பட பிரதியின் தரம் அந்த காட்சிகளின் அழகை அப்படியே நம்மை அனுபவிக்க செய்தது.

ஒரு சிறிய ஹங்கேரியன் நகரத்தில் நடக்கும் மர்மக் கொலைக்காக பலவருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் அப்பாவி நிரபராதியும் அவன் உளவியல் போராட்டங்கள் ஒருபுறம், அந்தக் கொலையைத் தொடர்ந்து எழு வருடங்களின் பின் அதேபாணியில் நடக்கும் தொடர் மர்மக் கொலைகளும், அந்தப் பயங்கர கொலைகளின்  பின்னே தலையை பிய்த்து கொலையாளியை பிடிக்க முடியாமல் திண்டாடும் துப்பறிவாளர்களும் என அந்தத் திரைப்படம் அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அமு அண்ணா,

“அடேய் சினான்! இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு “மெமரீஸ் ஒப் மேர்டரர்” திரைப்படம் நினைவுக்கு வருதுடா, கிட்டத்தட்ட அதே மாதிரியான அற்புதமான சினிமாட்டோகிரபி மச்சான்” என சிலாகித்து சொல்லிக்கொண்டிருந்தார். பின் அந்தத் திரைப்படத்தை பார்த்து முடித்துக் கொஞ்சம் அமைதியாக அமர்ந்திருந்தோம்.

“வெளிய பக்கத்துல இருக்குற பார்க் பக்கம் போவமா?, கொஞ்சம் சேன்ஜா இருக்கும்” என சினா அழைக்க சரியெனப் புறபட்டு நடந்தே போக ஆரம்பித்தோம். சினாவின் அறையில் இருந்து அறுநூறு மீட்டர் அளவிலான தொலைவில் அந்த பூங்கா இருந்தது.

“லோவ் கீ லைட்டிங் எவ்ளோ லாவகம பயன்படுத்தி இருக்கானுகள் பார்த்தியா, பெரும்பாலான காட்சிகள அந்த லைட்டிங்கள எவ்வளவு நேர்த்தியா அற்புதமா எடுத்திருக்கானுகள். அந்த கடைசிக் கொலையை  சீன கவனிச்சியா. வெறும் பாதையோர விளக்குல இருந்து வார வெளிச்சம் அந்த டிரேக் வண்டிக்குள்ள விழுற அந்த மெல்லிய வெளிச்சத்துல அந்த பெண்ணோட மரண பயத்தையும், கொலைக்காரனோட மனப்பிறள்வையும் எத்தனை அழகா காவி இருப்பானுகள். அவன் அந்த பெண்ணோட மார்புகளை வெட்டி வழியும் இரத்தத்தை ரசித்து ஒரு விதமான உணர்வுள இருக்கும் போது அவனோட முகத்த ஒரு குளோசப் ஷாட்ல காட்டி இருப்பானுகள். அந்த லைட்டிங் சான்சே இல்லடா”

அமு அண்ணா அந்த காட்சிகளை மீண்டும் மீட்டு விளக்கிக்கொண்டே வந்தார். எனக்குப் பாதி புரிந்து பாதி புரியவில்லை.

“அந்த கொலைக்கறன துரத்திப் போகிற காட்சியில அந்தக் காமரா நகரும் விதம் பார்த்தியா, துரத்துறவான் வரும் வரை ஒரு இடத்துல நின்னு அவனக் காண்பிச்சி, பின்ன கொலைக்காரன் போகிற திசையும் லாவகமா கண்பிச்சி, துரத்துறவன் காமராவ தாண்டி ஓடும் போது பின்னாடியே கமராவும் நகர ஆரம்பிக்கும். துரத்துரவனோட பதற்றத்தையும் அந்த நகர்வு நமக்கு எப்படி கடத்துன்னு பார்த்தியா.  அந்த காட்சிகளோட லைட்டிங். அப்புறம் ஒரு இடத்த தாண்டி வெறும் இருள். அந்த இருளுக்குள்ள கொலைக்காரன் ஓடியதும் அப்படியே காமரா நகராம நின்னுரும். “மெமரீஸ் ஒப் மேர்டரர்” போல இதுலயும் கத்துக்க நிறைய கிடக்கு சினா”

அமுதன் அண்ணன் என் தோள்மேலே கைகளை போட்ட வண்ணம் முகத்தை பார்த்து சிரித்தார். நான் விறைப்பாக முகத்தை வைத்து அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டுவர முயற்ச்சித்துக் கொண்டிருந்தேன்.

இப்படியே பேசிக்கொண்டிருக்க அந்த பூங்காவை வந்து சேர்ந்தோம்.

வெறும் ஒரு இரண்டு கிலோ மீட்டர்கள் சுற்றளவே கொண்ட அந்த சிறிய பூங்காவை வந்தடைகின்ற போது மாலை வெயிலில் பொன்னிறம் ஏறி, சூடு தணிந்துக் கொண்டிருந்தது. மரங்களின் இடைவெளிகளின் ஊடே அந்த மாலைக் கதிர்கள் பசுமையான புற்தரையில் அமர இடம் தேடுவதுபோல தெறித்து வீழ்ந்தது. அந்த பூங்காவை சுற்றி உடற்பயிற்சிக்கான நடை பாதை இருந்தது. உள்ளே பசுமையான புற்தரையும் நிழலுக்கு மரங்களும் ஒரே சீராக நட்டிருந்தார்கள். பக்கத்தில் ஒரு பெரிய பள்ளிவாயில் இருந்தது. அந்த பூங்காவிற்கு நுழைவு என்று எதுவும் இல்லை. எங்கே இருந்தும் நீங்கள் நடையை ஆரம்பிக்கலாம், எப்படியும் உள்ளே நுழையலாம்.

அந்த பூங்காவின் நடுவில் இருந்த சிறிய உணவகம் ஒன்றில் மூவரும் காப்பியும் உருளைக்கிழங்கு சிப்சும் வாங்கிக் கொண்டோம். அதிகம் நெருக்கடியும் சப்தமும் இல்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சாவகாசமாக அமர்ந்துக்கொண்டோம். அந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பைக்கெற்ரை நான் உடைத்து நடுவில் வைத்தேன். அதைக் கொறித்துக் கொண்டே மீண்டும் அமு அண்ணா ஒளியாள்கையை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஏதாவது நாமளும் கருத்து சொல்லவேண்டும் என்று தோன்றும். இன்னும் சரியாகப் புரியாத ஒன்றை பற்றி சொல்லப்போய் மொக்கை வாங்க வேண்டாம் என்று அமைதியாகி விடுவேன். அவர்களுடைய தேடல் சிலபோது எனக்கு வியப்பளிக்கும். வாழ்வின் மீதான பிரங்ஞ்சை இல்லாத ஒரு வாசகனாக நீங்கள் இருந்தால் இந்த மயிருகளுக்கு வேறு வேலை கிடையாது என்றும் நீங்கள் யோசிக்கலாம். நியாயம் தான். அப்படி நம்மை பற்றிய ஒரு பார்வைதான் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களிடத்திலும் இருக்கிறது.

ஏன் சினான் நீ ஒரு கதையை திரைப்படமாக்க கூடாது என்று திடீர் என்று தோன்றிவிடவே அவனிடம் கேட்டேன்.

“ஆமா, நீ ஏதாவது செய்யலாமே மச்சான், அப்போ எனக்கும் சினிமோட்டகிராபர் ஆகுறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்” என அமு அண்ணாவும் சிரித்துக்கொண்டே சொன்னார்

இங்கேயே சவூதி அரேபியாவில் எடுக்கக் கூடியதாக ஒரு கதையை யோசித்து ஒரு குறுந்திரைப்படம் எடுக்கலாமே என நான் மீண்டும் சொன்னேன்.

உண்மையில் ஒரு நல்ல சினிமாவுக்கு கதை என்பது கட்டாய அவசியம் இல்லை. ஒரு கதை இருக்க வேண்டிய தேவை இல்லை. கதையே இல்லாமல் கூட ஒரு சினிமா இருக்காலாம் என்று சினான் ஆரம்பித்தான்.

நல்ல கதைதானே ஒரு சினிமாவின் மூலம் என இத்தனை காலம் நம்பிக்கொண்டிருந்த எனக்கு அவன் சொல்ல முனைந்த விடயம் புரியவில்லை.

அது எப்படி மச்சான், கதை இல்லாம படம் எடுக்குறது?

“சினிமா என்பது ஒரு மொழி, அந்த மொழியின் ஊடே கதையையும் சொல்லலாம். கதை அல்லாத இன்னொன்றையும் சொல்லலாம். வாழ்க்கையோட தத்துவங்கள், உணர்வுகள், இப்படி பலதரப்பாட்ட விசயங்கள நாம அதுல சொல்லலாம். உதாரணமா நான் மேலோட்டாம சொன்னால், தர்கோவஸ்கியின் திரைப்படங்கள சொல்லலாம். ‘ஸ்டோகர்’, ‘மிரர்’ இது மாதிரியான படங்கள் வாழ்க்கையின் தத்துவங்களைக், கனவுகளை மாயைகளைப் பேசுது. மிரர் திரைப்படத்தில் சரியான ஒரு ஃப்லொட் காண முடியாது. அது மாதிரி அவர் இயக்கிய ‘சோலாரிஸ்’ திரைப்படம். உண்மையில நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், அதுல  நம்ம உறவுகளோ நட்புகளோ யாரோ நம்ம கோணத்தில நாம என்னவா அவர்கள நினைக்கிறமோ அது தான் நம்மளுக்கு அவங்க. உண்மையா எது அவங்க என்கிறது ஒரு புறம், நம்ம எதுவா அவங்களா புரிஞ்சி வச்சிருக்கமோ அதுதான் நமக்கு அவங்க, இப்படி வாழ்வின் ஆழமான தத்துவங்கள பேசுற படங்கள். நான் எல்லாம் மேலோட்டமா தான் பேசுறேன். உனக்கு புரிதா தீபா? அது மாதிரிதான் ஸ்டேன்லி குப்ரிக்கின் பல திரைப்படங்கள். “சுலங்க எனு பிணிஸ” என்கிற சிங்கள திரைப்படத்த கூட சொல்லலாம். இப்படி நிறைய இருக்கு டா”

அவன் பேசிக்கொண்டே போக எனக்கு மண்டை மரத்தது.

இப்படி பேசிக்கொண்டே இருக்கும் போது, நம் பக்கமாக ஒரு ஐந்து அரேபியப் பெண்கள் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அதில் இரண்டு பேர் முகம் திறந்தும், மற்ற மூவர் கண்களை மட்டும் திறந்து மற்றைய எல்லாவற்றையும் கருப்பால் மூடி இருந்தார்கள். திறந்திருந்தவர்களில் ஒருத்தி பிலிப்பைன்ஸ் நாட்டு பெண், அவர்களுது பணிப்பெண்ணாக இருக்க வேண்டும். என் பார்வை, திறக்காத அந்த முகத்தின் கண்களில் தரித்திருந்தது. நான் என்னை மறந்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.

“தீபா என்னடா நாய் மாறிப் பாக்குற? அடி வாங்க போறாய்… “

அமு அண்ணாவின் நக்கல் கலந்த அதட்டலில் மீண்டும் உரையாடலுக்குள் வந்தேன்.

“இந்த இடத்துல நம்மள சுத்தி நடக்குற விசயங்கள ஒரு சராசரி மனிதனுடைய பார்வையிலும், அவை அந்த மனிதனோட உணர்வுகளில் செய்யும் பாதிப்பும், நம்மளை போன்ற ஆறாம் உணர்வு கொண்ட ஒருத்தனோட கோணத்தில் அவனது உணர்வில் செய்யும் பாதிப்பும் ஒன்றாக இருக்காது இல்லையா… ?”

இப்படி சினான் விளக்கும் போதே,

அப்போ நாம அந்த உணர்வுகளை காட்சிப்படுத்த முடியுமா என கேட்டேன்.

நிச்சயமாக முடியும், சினிமா மொழியை கையாளத்தெரிந்த ஒரு சிறந்த சினிமாக்காரனால் அதை மட்டுமே ஒரு திரைப்படமாக எடுத்து விட முடியும் என்றார் அமுதன் அண்ணா.

வாருங்கள் ஒரு நடை போட்டுவிட்டு வரலாம் என்று சினான் அழைத்தான்.

குடித்து முடித்த காப்பி கப்புகளையும், வெறுமையான சிப்ஸ் பைக்கெற்ரையும் அங்கேயே அப்படியே போட்டுவிட்டு, எங்கள் கைத்தொலைபேசிகளையும், பேர்ஸ்ஸுகளையும் சரி பார்த்த வண்ணம் எழுந்தோம், பின் உடைகளில் ஒட்டியிருந்த புற்களையும் மண்ணையும் கைகளால் தட்டி விட்டு, கழற்றி வைத்திருந்த செருப்புக்களைப் போட்டுக்கொண்டு அந்தப் பூங்காவை சுற்றி இருக்கும் நடைப்பயிற்சி பாதை வழியாக நடக்க ஆரம்பித்தோம்.

இப்போது வெளியே இருந்து அந்த பூங்கா இன்னொரு கோணத்தில் நமக்கு தெரிந்தது. கருப்பு ஆடை அணிந்த பெண்கள் அதிகம் இருந்தார்கள். சில இடங்களில் பெண்களும் குழந்தைகளும்  மட்டும் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். சில இடங்களில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். சில இடங்களில் ஆண்கள் மட்டும். காப்பியோ தேநீரோ நிரம்பிய குடுவைகள் அவர்கள் எல்லோரிடமும் இருந்தன. இன்னும் பலதரப்பட்ட சிற்றுண்டிகள் நிறைந்துக் கிடந்தன. சாய்ந்தவண்ணம் தரையில் அமர்ந்திருக்கும் படி போர்டபல் கதிரைகளில் சிலர் சாவகாசமாக சாய்ந்து தேநீர் அருந்தியபடியோ அல்லது சாப்பிட்ட வண்ணமோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தின் எந்த கவலையும் அறியாத மனிதர்களைப் போல அவர்கள் தோன்றினார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்தோம். நான் தலை கவிழ்த்தி என் கால்களைப் பார்த்தேன். சிவப்பு சீமெந்து கற்கள் பதிந்த நான்கடி நடைபாதையின் மத்தியில் மஞ்சள் நிறத்தில் சீமெந்து கற்கள் நெடுகிலும் பதிக்கப்பட்டு இருந்தன. அந்தப் பாதை எங்கள் கால்களிலிருந்து புறப்பட்டு நீண்டு வளைந்துபோய் மீண்டு நம்கால்களில் வந்து முடிவதைப் போலத் தோன்றியது. அந்தப் பாதையின் மீது நடக்கும் ஒவ்வொருவரின் பாதங்களில் இருந்தும் இந்த பாதையால் தன் ஆரம்பத்தையும் முடிவையும் செய்துகொள்ள முடிகிறதா? அல்லது அந்த மனிதர்கள் அந்த பாதையின் துவக்கமாயும் முடிவையும் இருக்கிறார்களா? ஒரே பாதைதான் எல்லோருக்குமானதாக தன்னை உருமாற்றிக்கொள்கிறதா.

“அலுவலகம் முடித்து அறைக்கு வரும் ஒவ்வொரு மாலையும் நடைபயிற்சிக்காக இங்கே வருவேன். இது உடலுக்கு ஆரோக்கியத்தைப் போலவே அடைந்து கிடக்கும் என்மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும். என்னுடைய நாளின் மிக முக்கியபங்கு வகிக்கும் நேரமிது. இதன் அனுபவமும் என் உணர்வுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். இதைக் கவனமாக அவதானித்துக்கொண்டே நடந்து வாருங்கள், இங்கிருந்து ஒரு திரைப்படத்திற்கான இரு கருவை உருவாக்கலாம் என இந்த நிமிடம் எனக்கு தோன்றுகிறது.”

இப்படித்தான் அந்த கதை சினாவினால் தொடக்கி வைக்கப்பட்டது.

நாங்கள் மூவரும் மெல்ல நடந்துக் கொண்டிருந்தோம். நம் எதிர் திசையிலும் நாம் நடக்கும் திசையிலும் பல மனிதர்கள் நடந்துக் கொண்டும், தொங்கோட்டம் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். இப்படித்தானே நம் வாழ்க்கையும். எத்தனை விதமான மனிதர்கள்? நம் எதிர் திசையிலும், நாம் போகும் திசையிலும் வந்து பின் மறைந்து போவார்கள். அப்படி நடை பயிற்சி செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். பலர் தனியாகவே நடந்துக் கொண்டிருந்தார்கள்.

பல ஆண்கள் அரைகால் சட்டை அணிந்து, டீ சேர்ட் அணிந்து மேலைத்தேய பாணியில் இருந்தார்கள். சிலர் அரேபிய ஆடையிலே மெல்ல நெஞ்சை நிமிர்த்தி தலையில் இருக்கும் துணி விழுந்து விடாமல் லாவகமாக கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார்கள். எப்படி இவர்களால் இந்த ஆடையோடு இந்த சூட்டில் நடக்க முடிகிறது என்று யோசித்தேன். சிலர் சிரித்துக்கொண்டே குதுகலமாக கதைத்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் இரண்டு வயோதிப அரேபியர்கள் கதிரைகள் போட்டு அமர்ந்து நடுவில் சிறிய மேஜை ஒன்றை வைத்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்று அனுமதி வேண்டி என் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

அங்கே நடந்துக்கொண்டிருந்த சில பெண்கள் முகத்தைத் திறந்திருந்தார்கள். அது சவூதி அல்லாத வேறு அரேபிய நாட்டு பெண்களாகவோ அல்லது ஆசிய நாட்டு பெண்களாகவோ இருந்தார்கள். பலர் கண்களையும் கைகளையும் திறந்து மற்றயவகளை மூடியிருந்தார்கள். அவர்களை நாம் கடந்து போகிற போது அல்லது நம்மை அவர்கள் கடந்து போகிற போது அந்தக் கண்களில் நம் பார்வை தரித்து நின்றது.

“நீ காணும் முகத்திலா, அல்லது தனித்த இந்த கண்களிலா உன்னுடைய கவனம் தரித்து நிற்கிறது தீபா?”

என சினான் என்னிடம் கேட்ட போதுதான் நான் மீண்டும் யோசிக்க ஆரம்பித்தேன். ஆம் ஒப்வியஸாகக் கண்கள் தான் என சொன்னேன்.

“சரி நீ இப்படியே கவனித்துக்கொண்டு வா. அந்த கண்கள் உன் பார்வையை தரிசிக்கும் ஒரு தருணத்தை தேடிகொண்டிரு” என்று சினாவின் பரிந்துரையின் பேரில் ஒரு தேடலை ஆரம்பித்தேன்.

ஒரு மரத்தின் அடியில் ஒரு பூனை தூங்கிக்கொண்டிருந்தது, இன்னொரு கொழுத்த பூனை அங்கே ஏதும் வீசிக் கிடக்கும் உணவுகள் கிடைக்குமா என தேடியலைந்துக் கொண்டிருந்தது. இப்படிக் கொழுத்துக் கிடக்கும் பூனைகளை எங்கள் நாட்டில் நான் எப்போதும் பார்த்ததே இல்லை.

சில கண்கள் வெறும் கண்களாகவே இருந்தன. அவைகளை வெறுமனே கடக்க முடிந்தது. சில கண்கள் என் பார்வையை தரித்து நிறுத்தி அதன் அகத்தின் மாயை பற்றி யோசிக்க வைத்துப் பின் தெளிவில்லாத ஒரு குழப்ப சூன்யத்தில் என்னை ஆழ்த்தி விட்டது. அந்த கண்களுக்கான முகமும், அதன் உதடுகளும் மூக்கும், அந்த முகத்தின் வடிவமும் நிறமும் எப்படி இருக்கும் என யோசிக்க செய்தது. நான் ஒரு ஓவியனாக இருந்தால் அந்தக் கண்களை மூலமாக்கி மீண்டும் மீண்டும் ஒரு முகத்தை பலதடவை வரைந்து பார்த்திருக்கலாம்.

சில கண்களின் கூர்மையும் கவர்ச்சியும் விசுக்கென ஒரு நொடியில் என் பார்வையை துளைத்து என் ஆழ்மனதில் வீழ்வதை உணர்ந்தேன். எப்படி ஒற்றை பார்வையால் ஸ்தூலத்தின் ரசாயனங்களை தூண்டி இன்ன உணர்வு என புரிய முடியாத ஒரு மயக்கத்திற்கு சூட்சும உடலை கொண்டு செல்ல முடிகிறது? நெஞ்சில் பரவும் அந்த ரசாயன மாற்றம் என்னவென்று புரிய நாழிகை எடுக்கும் முன்பே அடுத்த கண்களை தரிசிக்க  நேர்கிறது. இந்த கண்கள் இன்னொரு ரகசிய உலகத்தின் கதவுகளா என்ன! உள்ளிருந்து எழுகின்ற எத்தனை உணர்வுகளை இந்த கண்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன. எந்த சலனத்தையும் கண்களில் காட்டாமல் இருக்க முடிபவர்கள் கூடுதல் ஒரு திறனை பெற்றவர்கள்தான்.

இப்படி கடந்து போகிற ஒவ்வொரு கண்களை பற்றியும் குறிப்பெடுத்தால் பெரும் புத்தகம் சமைத்துவிடலாம். ஒவ்வொரு கண்களாக குளோஸப்பில் காட்சிகளாக எனக்குள் விரிந்தன.

“சினா நீ கடந்து போகிற இந்த கண்களில் சிலவை உன்னை தொடர்ச்சியாக சைட் அடிக்க வைக்கும் இல்லையா, அத எப்படி ஞாபகம் வச்சிக்குவ?

நான் கேட்ட போது சினான் வெட்கத்தோடு சிரித்தான்.

‘இப்போ நாம ஒரு ரவுண்டு போகும் போது ஒரே ஆள இரண்டு தடவ கடந்து போக வேண்டியிருக்கும். நாமளும் அவங்களும் ஏறத்தாள ஒரே வேகத்துல நடக்குறமா இருந்தால் முதல் சந்தித்த இடத்துல மூன்றாவது முறை சந்திப்போம். பல போது அவங்க கண்களும் நம்ம கண்களும் சந்திச்சுக்கும். அவங்க பார்வை நம்ம மேல விழுற நேரமும் அந்த கண்களோட குறிப்பும் நாம அவங்களுக்கு பரீட்சயமானவங்க என்கிறத உணர்த்துறதா இருக்கும். அதைவிட முக்கியமா அவங்க அணிந்து வார ஷூ, அல்லது வேற ஏதாவது ஒண்ண அடையாளமா வச்சிக்குவேன்.”

“அப்போ நாம கண்கள மையப்படுத்தி அது தனிமையில் இருக்கும் கட்டுபாடுகள் மிகைத்த ஒரு சூழலில் வாழும் ஆண்களின் உணர்வுகளில் என்ன செய்யும் என்கிறத ஒரு குறுந்திரைப்படமா எடுப்பமா” என நான் கேட்டேன்.

 “அதையும் சேர்த்துக்கலாம், ஆனா அதையும் தாண்டி நாம சில விசயங்களை பேசலாம். போன வருஷம் வந்த சிவா புராணம் படம் பார்த்தியா தீபா”  என அமு அண்ணா கேட்ட போது

“இல்லை” என்றேன்.

“அதை பார்த்து விடு. அப்புறம் நாம பேசுற கோணம் உனக்கு புரியும்” என்றார்

“இந்த மனிதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முகத்தை தவிர்த்தால் எத்துணை  பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது இல்லையா அமு, கொஞ்சம் அவதானித்தால் புரியும். அவர்கள் தங்களை யாருக்கு அடையாளப்படுத்திக் கொள்ள வேணும் என்று நினைக்கிறாங்களோ அவங்களிடம் எவ்வளவு பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறார்கள். அதை விட நாம எவ்வளவு எவ்வளவு  பிரயத்தனம் எடுத்துக்கிறோம். முன்னாலிருக்கும் பெண்ணின் வயதைக்கூட நம்மால் கணிக்க முடியாது இல்லையா.” தன் ஆதங்கத்தை சுருக்கமாக சொல்லிக்கொண்டிருந்தான் சினான்

“ஆமா மச்சான், நான் கூட அவதானித்து இருக்கேன். நம்ம ஷோ ரூமுக்கு வருகிற சில பெண்கள் வேணும் என்றே வண்ண வண்ண நிறப்பூச்சுக்கள் பூசப்பட்ட விரல்களைக் கொண்ட அழகான கைகளை முற்படுத்தி நம்ம பார்வை அதில் விழுகிற மாதிரிப் பொருட்களைக் காட்டிப் பேசுவாங்க, சாதாரணமா அதை அவதானிக்காத நம்ம பார்வை அதை நோக்கியே போகும். அதை விட மூடிய முகம் எங்காவது இடத்துல கொஞ்ச நேரமாச்சும் தொறந்தாங்கன்னா அப்புறம் நம்மவனுகள் போயி சீசி டீவில அத பார்க்கிற கூத்த பார்க்கணும் டா”

என என்னுடைய அனுபவத்தை சொன்னேன்.

நாங்கள் பேசிக்கொண்ட நீண்ட உரையாடல்கள் பற்றி நான் முழுதாக இங்கே எழுதவில்லை. முக்கிய இரண்டு காரணங்களுக்காக அவைகளை சொல்லவில்லை. அந்த காரணங்களை சொன்னால் என்ன பேசியிருப்போம் என்பதை ஊகித்து விடுவீர்கள். எனவே அந்தக் காரணத்தையும் சொல்லப் போவதில்லை.

அந்த நடைபாதையின் ஓரத்தில் களைத்தவர்கள் அமர்வதற்காக சிமென்ட் பெஞ்சுகள் இடைக்கிடையே வைக்கப்பட்டிருந்தன. நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு அரபி குளிர்ந்த தண்ணீர் போத்தல்கள் நிரம்பிய அட்டைப் பேட்டியொன்றை தூக்கி வந்து அதன் மீது வைத்து விட்டுத் தான் வந்த கருப்பு ஜீ.எம்.சி வண்டியில் ஏறி புறப்பட்டு போனார். அங்கே நடந்து போன மனிதர்கள் அதிலிருந்து தங்களுக்கு தேவையான போத்தல்களை எடுத்து தாகம் தீர்த்த வண்ணம் நடந்தார்கள்.

அந்த பூங்காவின் நடை பாதை கடந்து சுற்றி வாகன தரிப்பிடம், அதை தாண்டி பிரதான வீதி. அந்த நடைபாதை விளிம்பில் பாகிஸ்தானிகள் சிலர் கூட்டமாக பிரதான பாதையை நோக்கியவர்களாக தரையில் அமர்ந்திருந்தார்கள் இருந்தார்கள். எப்போதும் அவர்களுடைய அந்த ஆடை அவர்களுக்கு மிக எடுப்பாக இருக்கும். அங்கிருந்தவர்களின் ஆடைகள் அழுக்கடைந்து இருந்தன. தோளில் துணி இருந்தது. முகத்தில் எதற்காவோ காத்திருக்கும் தவிப்பின் வடு இருந்தது. அதில் இருந்த ஒருவன் எழுந்து வந்து அந்த அட்டைப்பெட்டியில் ஏழு போத்தல்களை தூக்கி வந்து அகிருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்தான். ஓய்விற்காக வந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் சில போது காலையிலும் இங்கே இப்படி இவர்கள் அமர்ந்திருப்பதை கண்டிருக்கிறேன்.

“பார்த்தியா இவனுகளை, ஏன் உக்கார்ந்துகிட்டு இருக்காங்கனு தெரியுமா’ என கேட்டான் சினான்.

“ரிலேக்ஸுக்கா?”

“இல்லடா, ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி பொதுவான பார்க்குல வந்து இருப்பாங்க. இவங்க எல்லாம் மேசன் வேலை, கூலி வேலை, பெயின்ட் வேலை இப்படி  செய்ய கூடியவங்க. ஏதாவது வேலைக்காக காத்திருப்பாங்க. ஆள் தேவைப்படுற அரபிகளோ அல்லது கான்ட்றேக்ட் காரங்களோ இங்க வருவாங்க, பேரம் பேசி கூட்டிட்டு போவாங்க. சில நாட்கள்ள வேலையே இல்லாம இருக்கலாம். ஒரு வேலை முடிஞ்சா அடுத்த வேலை கிடைக்கும் வரை இப்படி ஒவ்வொரு நாளும் சூட்டிலும் குளிரிலும் தூசிலும் காத்திருப்பாங்க”

மனம் ஒரு கணம் கனத்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். மாதம் முடிந்தால் சம்பளம். அடுத்த நாள் பற்றிய யோசனை இல்லை. அடுத்த நேர உணவை பற்றி யோசித்து கிடக்கும் எத்தனை மனிதர்கள். கிடைக்குமா கிடைக்காதா என்கிற தவிப்பில் அச்சத்தில் கணங்களை கடக்கிறது மனது.

நாங்கள் ஒவ்வொன்றாக மெல்ல  அவதானித்தவண்ணம் பேசிக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்த சிமென்ட் பெஞ்சை மேசையாகப் பாவித்துப், பொருட்களை கிடத்தி ஒரு அரேபிய பெண் தேநீரும் பலகாரங்களும் விற்றுக்கொண்டிருந்தாள். “ஏதாவது குடிப்பமா” என கேட்டேன்.

“குடிப்போம்” என அங்கே தரித்து, “தலாதா சாய்” என அமு அண்ணா தன்னுடைய பர்ஸை எடுத்த வண்ணம் அந்த பெண்ணிடம் மூன்று தேநீர் கேட்டார். முகத்தை மூடி கண்களை திறந்திருந்த அந்தப் பெண் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய கைகளை உற்றுப்பார்த்தேன். என் அம்மாவின் கைகளை விட சுருக்கம் விழுந்ததாய் இருந்தது.

சிறு சிறு விளையாட்டு பொருட்கள், ஆடைகள் இப்படி நம் நாட்டில் வீதியோரங்களில், பூங்காக்களில், கடற்கரையோரங்களில் விற்பனை செய்வதைப் போலப் பக்கத்தில் இன்னொரு இடத்தில் விரிப்பொன்றை விரித்து இன்னொரு பெண் தன்னுடைய விற்பனைப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு சாரதி அவர்கள் வந்திருந்த டொயட்டா பெஜிரோவில் இருந்து அந்த விளையாட்டு பொருட்களை இறக்கி அந்த பெண்ணுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். நான் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படித்தான் இங்கே நம் நாட்டில் கோடிக்கணக்கான பெறுமதியான வாகனங்களில் வந்து கடலை வறுத்து விற்றுக் கொண்டிருப்பார்கள். காரில் வந்து நிறுத்தி என்னிடம் பிச்சை கேட்டவர்களும் உண்டு. இப்படித்தான் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசத்தை கொண்டிருக்கிறது.

“மிகக் குறுகிய இந்த வாழ்க்கையைப் பூர்ஷுவா மக்களைப் போல எதோ வாழ்வதற்காக வாழ்ந்து பின் தடயமே இல்லாமல் மறைந்து விடுவதாக இல்லாமல், வாசிப்பின் மூலமும், எழுத்துக்களின் மூலமும், சினிமாவின் மூலமும், இசையின் மூலமும், ஆன்மீகத்தின் மூலமும், பயணங்களின் மூலமும்  ஒரு தேடலை ஆரம்பித்து, இந்த வாழ்வின் அனுபவங்களைப் பெருக்கி அதனுடே இந்த வாழ்க்கையை நீட்சி பெற செய்யும் ஆறாம் புலன் கொண்ட ஒருவனின், இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நாழிகையையும் நினைவில் சேகரிக்கும் வண்ணம் வாழ்ந்து விடத் துடிக்கும் ஒருவனின் ஒரு நாளின் நிகழ்வுகளை, அதன் நீட்சியாய் நிகழும் உணர்வு மாற்றங்களை நாம ஒரு திரைப்படமாய்  எடுக்கலாம். இன்னும் அதனூடே  வாழ்வின் சில ஆத்மார்த்தமான தத்துவங்களைக் குறியீட்டு காட்சி படிமங்களா காட்டாலாம்” என சினான் ஒரு முடிவிற்கு வந்தான்.

“இப்படி ஒருத்தனோட வாழ்க்க, அனுபவங்கள் பொதுவான மனிதர்களுக்கு விந்தையாக இருக்கலாம், சுவாரஷ்யமாகவும் இருக்கலாம். புதுசாவும் இருக்கலாம்” சினானே தொடர்ந்தான்.

“அவனோட ஒரு நாளின் அங்கமாக இந்த நடை பயிற்சியையும் வச்சிக்கலாம், அவனோட கோணத்தில அவனோட அனுபவத்த நாம காட்டலாம். பீ.ஓ.வீ ஷாட் மூலம் அதிகமா காட்டலாம், அப்போ எல்லாம் அவோனோட காதுல ஒலிக்கிற சத்தங்கள கூட அப்படியே பார்வையாளனுக்கு கொடுத்துறலாம். இன்கேஸ் அவன் காதுல ஹெட்செட் மாட்டி பாடல் ஒலித்தால் அப்படியே அதையும் காட்டாலாம். தேவையான இடங்கள்ள மட்டும் மத்த ஷாட்களை எடுத்துக்கலாம், கண்கள் கட்டாயம் எக்ஸ்டிரீம் குளோசப்பில் காட்ட வேணும்” அமு அண்ணா அப்பவே தயாராகிப் பேச ஆரம்பித்து விட்டார்.

“அது சரி இங்கே எப்படி கேமாராவ தூக்கிட்டு வீடியோ பண்ணுவீங்க, அடிச்சி கலைக்கமாட்டாங்க?”

சும்மா தான் சந்தேகம் கேட்டேன், இருவரின் முகமும் இறுக்கமானது.

“இந்த காட்சி மட்டும் தானே இங்கே வெளியே எடுக்க வேண்டி இருக்கும், அதுக்கு வேறு வழி பாத்துக்கலாம். மத்தது எல்லாம் இன்டோர் தானே. செஞ்சிரலாம்” அமு அண்ணா உறுதியாக இருந்தார்.

“சினா இத அடிப்படைய வச்சி ஒரு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பி” என்றார் மீண்டும் அமுதன் அண்ணா.

அப்படியே அந்த உரையாடல் நீண்டு போனது. அப்போதே யோசித்தேன், இதையே ஒரு கதையாக எழுதினால் என்ன? படத்தை முதலில் இவர்கள் எடுத்து முடிக்கட்டும், பின்னே எழுதிக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். சினானின் தேடல் வழியே உருவான திரைக்கதை அமுதனின் காமரா வழியே அற்புதமான திரைப்படமானது. ஒருவனுடைய நாளின் ஒரு அத்தியாயத்தை காவும் அந்த கதைக்கு “பிரகரணம்”என்று பெயரிட்டோம். அது எல்லோராலும் பார்க்கப்பட போவதில்லை. அது தொடக்கத்தில் இருந்து காட்சியாகும் வரை இருந்தவன் என்கிற வகையில் அது பற்றி ஒரு கதை எழுதுவது கூட ஒரு ஆத்மார்த்த திருப்தியை எனக்கு தரும் என்கிற வகையில் இந்த கதையை எழுத முனைந்தேன்.

அன்று, இருள் கவ்விய பின் அப்படியே ஒரு மலையாள உணவகத்திற்கு சென்று, மீன் தலைக் கறியும் அவித்த மரவள்ளிக்(கப்பா) கிழங்கும் ஒரு பிடி பிடித்துவிட்டு எங்களுடைய அறைகளுக்குக் கிளம்பினோம்.

ஒரு சோடி கண்கள் என்னைப் பின் தொடர்ந்து வருவதைப் போல உணர்ந்து கொண்டிருந்தேன். என் வேலைகள் முடித்து படுக்கைக்கு வரும் வரைக்கும் அந்தக் கண்கள் என் பின்னால் இருந்து பார்ப்பதைப் போல உணர்ந்துக்கொண்டிருந்தேன். அந்தக் கண்கள் நான்காம் பரிமாணத்தை காணும் கண்களைப் போலத் தோன்றியது.

அந்த இரண்டு கண்கள் என்னை துரத்தித் துரத்தி ஒரு கதவின் வாயிலில் கொண்டு வந்து நிறுத்துவதாய்க் கனவு கண்டேன். அந்தக் கதவு மரணத்தின் வாயில் எனச் சொல்லப்பட்டது. கதவுகளின் பின்னே இதுவரை கேட்டிராத ரீங்காரம் ஒலித்துக்கொண்டு இருந்தது. அது மரணத்தின் ரீங்காரமா? நான் பதறியடித்து எழுந்திருந்தேன். என் முன்னே அந்த கண்கள் என்னை உற்றுப் பார்த்து சிரித்தது. பின் அந்தக் கண்களின் வழியே என்னை நான் காண்பதாக தோன்றியது. அந்தக் கண்களின் பின்னே வெறும் இருள் கவ்வி இருந்தது.

மிஸ்பாஹுல்-ஹக்-சவுதி அரேபியா 

மிஸ்பாஹுல்-ஹக்

(Visited 130 times, 1 visits today)