நீயே என் “பட்டாச்சாரா” (පටාචාරා)-சிறுகதை-மிஸ்பாஹுல்-ஹக்

மிஸ்பாஹுல்-ஹக்கொள்ளுப்பிட்டி ஜூலியானா ஹோட்டலின் இடது பக்கமாக இருக்கும் அந்த குறுக்கு பாதையில் கிட்டத்தட்ட மூன்னூறு மீட்டர் பிரதான பாதையிலிருந்து அந்த சாம்பல் நிற வேனை நிறுத்தி வைத்திருப்போம். அது டொயோட்டா ஹயஸ் டீ.எக்ஸ் வகையான வேன்.

முன் இரு கதவுகளின் ஜன்னல்களை பாதி இறக்கிவிட்டு உள்ளே ஆசுவாசமாய் அமர்ந்திருப்போம், பின்பக்கம் இருந்து எழும்  சாலையின் இரைச்சல் இரவு வளர வளர அமைதியாகிவிடும். முன்னாலிருந்து வீசும்  கடலின் உப்புக் காற்றும் இரைச்சலும்  மிருதுவாய் மேனியையும் மனதையும் வருடிக் கொண்டிருக்கும்.

சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்  “பிரசன்ன”அய்யா ஆசுவாசமாக வெற்றிலை மென்றுக் கொண்டிருப்பார். நான் அடிக்கடி புகைத்துக் கொண்டிருப்பேன், இல்லை பீடா மென்றுக் கொண்டிருப்பேன், கஞ்சா இழுவைகளில் இன்னொரு உலகத்தில் உன்மத்தம் அடைந்திருப்பேன்.  நாங்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. பேசித்தீர்ப்பதற்கு நமக்கிடையில் அப்படி  எதுவும் இருந்ததில்லை. பிரசன்ன அய்யாவின் ஊர் வெயங்கொடை, அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதோடு அந்த குடுமத்தை பற்றிய கொஞ்ச தரவுகளைத்தவிர   எனக்கு அதிகம் அவரை பற்றியும், நான்   கிறேன்ட்பாசை சேர்ந்தவன்  என்பதையும் நான் பிரிஸ்டலும் கஞ்சாவும்  மட்டும்தான் புகைப்பேன் என்பதையும்  என் வாப்பாவை பற்றியும் தவிர என்னை பற்றி அவருக்கும் பெரிதாக எதுவும் தெரியாது. எனக்கு ‘கிரி-அல்வா” ரொம்ப பிடிக்கும், அவருடைய மனைவி ‘கிரி அம்மா தான” எனும் பௌத்தர்களுடைய   பூஜைக்காக எடுக்கும் ஒடர்களின் போது எனக்கும் கொஞ்சம் அடிக்கடி கொண்டுவந்து தருவார். அதற்காக அவரையும் அவர் குடும்பத்தையும்  நேசித்தேன். ஒரு நேசிப்பின் நிமித்தம் தானே என்னையும் அவர்கள் ஒவ்வொரு பூஜையிலும் நினைவு கூர்ந்து எனக்கு பிடித்ததற்காக அந்த அல்வாவை பொதி செய்து அனுப்பி வைகிறார்கள்.

அந்த சிங்கள வானொலி நாடகமும் இடைக்கிடையே ஒலிக்கும் மெல்லிய சிங்கள பாடல்களிலும் எங்கள் செவிகள் லயித்திருந்த  போதும் அதன் நீட்சியாய் அந்த இரவுகளில் இருவரின்  சிந்தனையும் வெவ்வேறு திசைகளில் நீண்டுக்கொண்டிருந்தன…

இந்த கதை எழுதப்பட்டு ஏறத்தாழ ஆறு  வருடங்கள் கழித்துத் தான் நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள், இந்த சம்பவங்கள் நடந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கழித்தே இந்த கதை எழுதப்பட்டது. ஆக மொத்தம் உங்கள் கற்பனை காட்சிகளை பத்து வருடங்கள் பின்னோக்கி நகர்த்துங்கள். பத்து வருடங்களுக்கு முன்னாள் இருந்த கொழும்பு நகரத்திற்குள் நாங்களும் செல்லலாம்.

இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் எங்கள் பணி அதிகாலை  நான்கு மணிக்கெல்லாம் முடிந்து விடும். வருகிற வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டு ‘மேடமின்’ ஸ்பொர்ட்டிற்கு அழைத்து சென்று விடுவதுதான் எங்கள் வேலை. இது என்ன அப்படி கஷ்டமான வேலை என்று நினைத்து விடாதீர்கள். கஷ்டத்தை விட ஆபத்தும் பிரச்சினைகளும் நிறைந்த தொழில் இது.  அப்போது எங்களிடம் நோக்கியா 6110 கைத்தொலைபேசியொன்று தரப்பட்டிருந்தது, கைத்தொலைபேசிகள் ஆடம்பரமான அந்த நாட்களில் இது மிகவும் விலை மதிப்புள்ள வெளிநாட்டில் இருந்தது அப்போது கொண்டுவரப்பட்ட ஒன்று. அதை வைத்திருப்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கும். எங்களுடைய பணிக்கு இது மிக அத்தியாவசியமானதாகவும்  அப்போது இருந்தது, மேடம் ஒவ்வொரு நாளும் பிரசன்ன அய்யாவிற்கு அழைப்பெடுத்து சில பெயர்களும், அவர்களின் அடையாள அட்டை இலக்கத்தையும் நேரத்தையும் சொல்லி விடுவார், அதை அவர் குறித்தெடுத்து என்னிடம் தருவார். குறித்த அந்த நேரத்திற்குள் வருகிற அந்த மனிதர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்து உறுதிப்படுத்தி ஸ்பொர்ட்டிற்கு அழைத்து செல்வதும், அவர்கள் திரும்புகிற  வரைக்கும் அவர்கள் அடையாள அட்டைகளை என் வசம் வைத்திருப்பதும் எனக்கிருந்த பொறுப்பாக இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று தொடக்கம் நான்கு வாடிக்கையாளர்களும் விடுமுறைநாட்களில் எட்டு தொடக்கம் பத்து வாடிக்கையாளர் வரை வருவார்கள். பெரும்பாலானாவர்கள் சமூகத்தில் முக்கியபுள்ளிகள், பெருத்த பணக்காரர்கள்

இப்போது இங்கே இலங்கையில் மலிவாய் கிடைக்கும் வகைவகையான வெவ்வேறு நாடுகளின் ‘சரக்குகள்” அந்த நாட்களில்  இலகுவில் கிடைத்து விடுவதில்லை. மேடம் போன்ற ஒரு சில பெரும்புள்ளிகள் மட்டுமே சர்வதேச சரக்குகளை அப்போது கொழும்பில் டீல் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ” சரக்கு” என்கிற பதத்தை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிங்களத்திலும் “படு” என்றுதான் சொல்வார்கள்.  இருந்தாலும் இன்னுமே இந்த பதம் புழக்கத்தில் இருப்பதால் கதையின் நியாயம் கருதி எழுதி விட்டேன். இந்த கதையை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.

மேடமை எப்படி அந்த வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள், எப்படி அவர்களது தகவல்களை மேடம் பெற்றுக் கொள்கிறார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அதுவெல்லாம் அவருடைய வியாபார பொறிமுறை ரகசியங்கள். பெரும்பாலும் வழமையான வாடிக்கையாளர்களே திரும்ப திரும்ப வருவார்கள். அப்படியே தொடர்ச்சியாக  வருவதென்றால் அத்துணை தரம்வாய்ந்த வாடிக்கையாளர்‘சேவையை’ மேடம் வழங்கிக் கொண்டிருக்கிறார் அல்லது மொனோபொலி சந்தை என்று நினைத்துக் கொள்வேன். பேதைகளுடன் போதையும் தாரளமாகவே அந்த சேவையில் கிடைக்கும். சில பகல்களில் பாட்டில் கேஸ்களை உள்ளே தூக்கி செல்லும் வேலைகள் நாம் இருவரும் செய்யவேண்டியிருக்கும். சில நாட்களில் வேறு சிறு சிறு வேலைகள் கூட செய்யவேண்டி இருக்கும். பாதுகாப்பு கருதி யாரையும் அங்கே உள்ளே நுழையவிடுவதில்லை. ஆக பாதுகாப்பு என்கிற பெயரில் அந்த வேலைகளையும் நாங்கள் செய்துகொண்டிருந்தோம்.

நான் கொழும்பில் மிக முக்கிய ஆண்கள் பாடசாலையில் கற்றவன், பெண்கள் சகவாசம் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எனக்கு சகோதரிகள் இல்லை. உம்மாவை தவிர எந்த பெண்களோடும் சகஜாமாக பேச முடியாது. பெரும் கூச்சம் என்னை அனைத்துக்கொண்டு நடுங்க செய்யும். அதானால் என்னவோ ஸ்பொர்ட்டின் உள்ளே நுழைகின்ற எந்த பொழுதும் எந்த தேவதைகளையும் நிமிர்ந்துக் கூட நான் பார்ப்பதில்லை. அது  எதேர்ச்சையாக அந்த கண்களை காணும் வரை. அது “ஹிருணி”. வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு இரவிலும் என் எண்ணங்களின் நீட்சி அவள் கண்களிலே நிலைத்திருக்கும். அந்த கண்கள்  என்னை வெறித்துப் பார்ப்பதை போல ஒரு பிரங்ஞை, நட்சத்திரங்கள் இல்லாத இருண்ட இரவுகளிலும் நான் வானத்தை பார்த்துக் கொண்டே இருப்பேன். என் மனம் எனும் வானத்தில் அவள் கண்கள் ஒளிர்ந்துக்கொண்டே இருக்கும். ஆனால் அவளோடு பேசுவதற்கு எந்த தைரியமும் அப்போது எனக்கிருக்கவில்லை.

நான் அங்கே போகிற ஒவ்வொரு முறையும் நான் ஹிருனியின் கண்களை தேடிக்கொண்டிருப்பேன். அவளின் தெளிந்த அந்த முகத்தை காண்பதற்காகவே அங்கே போவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தேன். என்னைக் காணும் போதெல்லாம் அவள் உதடுகள் புன்னகைக்கும். அந்த புன்னகை வாடிக்கையாளர்களுடன் புன்னகைக்கும் போலி இல்லாத அப்பாவி புன்னகை. அவள் கண்கள் என்னிடம் எதையோ சொல்லத்துடிப்பவைகள் போல ஏக்கங்களுடன் என்னை பார்ப்பதை என் ஆழ்மனம் உணரும். எந்த எந்த கதைகளை, என்ன என்ன ஆசைகளை அவள் என்னிடம் சொல்ல நினைத்திருந்தாளோ தெரியவில்லை. இப்படி ஒரு அழகானவள் எதற்காக இந்த தொழிலை செய்கிறாள், எப்படி இந்த தொழிலுக்கு வந்தாள், இவள் குடும்பம் எங்கே, அவர்களுக்கு இவளின் நிலை தெரியுமா, இப்படி இன்னும் அவிழ்க்கத்தெரியாத கேள்விகள் இப்போது உங்களிடம் இருப்பது போலவே அப்போது என்னிடமும் இருந்தது. ஆனால் அவளிடம் பேசும் அவகாசம் அங்கே இருக்கவில்லை.

நான் அங்கே போக நேர்கிற வேளைகளில் அவள் அங்கே இல்லை என்றால் அவளை என் கண்கள் தேடிக்கொண்டே இருக்கும். ஒரு பதற்றம் என்னை தொற்றிக்கொள்ளும், யாரவது வாடிக்கையாளர்களுடன்… அப்படி நினைக்கும் போதே என் நெஞ்சை இரண்டு மலைகள் நெருக்குவதை போல தாங்க முடியாத ஒரு வேதனை என்னில் படர்ந்துக் கொள்ளும். அவளை பார்க்காமல் திரும்பி விட்டால் அந்த நாளில் என்னால் சுமூகமாக இருக்க முடிவதில்லை. மூர்க்கமானவனாக மாறி விடுவேன். யாருடனும் பேச பிடிக்காது. விசுக்கென ஒரு நொடியில் பரவும் அந்த வலியை சொல்லி விட இந்த வார்த்தைகளின் போதாமையை நான் திட்ட வேண்டி இருக்கிறது.

நாங்கள் செய்யும் வேலையை தவிர்த்து  இன்னொரு வேலையும் பிரசன்ன அய்யா மேடமிற்காக செய்துகொண்டிருந்தார், அதற்கு நான் உதவியாக இருக்க வேண்டி இருந்தது. மேடம் சொல்கிற சில இடங்களில் சில மனிதர்கள் தருகிற பொதிகளை சில தினங்கள் வாகனத்திலே வைத்திருந்து வேறு சில மனிதர்களிடம் கைமாற்ற வேண்டியிருந்தது. பலமுறை இதை பற்றி பிரசன்ன அய்யாவிடம்  கேட்ட போதும் அவர் எதுவுமே சொல்லவதில்லை, என் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு மௌனமாகிவிடுவார். மிகவும் ஜாலியாக பெருமையாகவும் கஷ்டமே இல்லாமல் இந்த வேலையிருந்தாலும் மாதம் முடிவில் கிடைக்கும் கொழுத்த சம்பளத்திற்கு பின்னால் பெரும் ஆபத்து இருப்பதை மட்டும் என் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தது. நம்மை சுற்றி இருக்கும் சட்டங்கள், மதங்கள், நம்பிக்கைகள், கலாச்சாராங்கள் இது எல்லாம் கடந்து நம் ஆழ்மனம் சரியையும் தவறையும் எப்போதும் உணர்த்திக்கொண்டே இருக்கும். நம்மை சுற்றி இருப்பவைகளை வைத்து நம் புத்தி ஆழ்மனதோடு சமரசம் செய்து கொள்ள முயற்சிக்கும். உலகின் எந்த பெரிய கெட்டவனாக இருந்தாலும் அவன் ஆழ்மனத்தின் முன்னே வாழ்நாளின்  ஒரு நொடியேனும் குற்ற உணர்ச்சியின் பிடியில் சிக்கி வதைபட்டிருப்பான். அவனால் அதை சமரசம் செய்து தொடர முடிகிற பக்கத்தில் அவன் நல்லவனாவதும் இல்லை கெட்டவனாக தொடர்வதும் இருக்கிறது.

நான் இந்த வேலைதான் பார்க்கிறேன் என்பது என் குடும்பத்திற்கோ என் நண்பர்களுக்கோ தெரியாது, ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாக சொல்லிவைத்திருந்தேன். உண்மையில் நான் மேடமிடம் வேலை பார்க்கவில்லை. கொழும்பில் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு நிறுவனத்திலேயே வேலைப் பார்கிறேன். என்னுடைய பாஸ் ஒரு ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரி. தான் ஒய்வு பெற்றபின் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், போலிஸ் உயர் அதிகாரிகள் என பல இடங்களில் பல மட்டங்களில் செல்வாக்கு உடையவர் அவர். கொழும்பு மற்றும் பல இடங்களில் பெரும் நிறுவனங்கள், வங்கிகள், ஏன் பல அரச நிறுவனங்களில் கூட பாதுகாப்பு கடைமைக்காக எங்கள் நிறுவனமே ஒப்பந்தம் ஏற்றிருந்தது. அனால் நான் செய்து கொண்டிருந்த வேலையைப்போல பெருத்த லாபம் பார்க்கும் வேலைக்காக அவருக்கும் மிக நம்பிக்கையான ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேடமின் ‘எல்லா’ வகையான வியாபாரத்திற்கும் ‘எல்லா’ பாதுகாப்பும் வழங்கவேண்டிய பொறுப்பு என்னுடைய பாஸை சார்ந்தது. இது மாதிரியான “பொறுப்புக்கள்”தான்  அவருக்கு பெருத்த லாபத்தை கொண்டு வந்தது. போலிசாராலோ அல்லது வாடிக்கையாளர்களாலோ பிரச்சினைகள் வந்தால் பாஸை தொடர்பு கொண்டோ அல்லது ‘வேறு” வழிகளிலோ அதை முடித்துவிடுவது தான் என் பொறுப்பு, அதற்குள்தான் அந்த  வாடிக்கையாளர் பரிசோதனையும் உள்ளடங்கும்.

எனக்கு வேறு சிறப்பு பயிற்சிகளும் தரப்பட்டிருந்தது, நான் ஒரு தேர்ந்த கொலையாளிதான். ஆனால் இப்போது அதையெல்லாம் இந்த கதையை புரிந்துக் கொள்ள  நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 9MM  பிஸ்டல் ஒன்றும், முழுமையாய் நிரப்பிய ஒற்றை கார்ட்ரிஜ்ஜும் அந்த பிஸ்டலோடு எனக்கு தரப்பட்டு இருந்தது. அதற்கும் “ஹிருணி’ என்றே பெயர் வைத்திருந்தேன். கைக்கெட்டும் தூரத்தில் வேனில் ஹிருணியை எங்கோ வைத்திருப்பேன். அல்லது என் ஆடைக்குள் எங்காவது. பாதுகாப்பு கெடுபிடிகள் மிகைத்திருந்த அந்த யுத்த சூழ்நிலையில் எந்த பரிசோதனையும் இல்லாமல் தப்பிக்க எங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் அடையாள அட்டை உதவியது. இலங்கையின் அந்த யுத்த கால சூழ்நிலையில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு கெடுபிடிகளை இலகுவாக கடந்து கொண்டிருந்தோம்.

எனக்கு என் பாஸுடன் நேரடியாகவே  தொடர்பிருந்தது, நம் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் மற்றவர்களை  போல இடையில் எந்த மேற்பார்வையாளர்களோ முகாமையாளர்களோ எனக்கு இருக்கவில்லை. பாஸ்தான்  என்னுடைய பாஸ். ஒவ்வொரு நாளும் அவருக்கு அழைப்பெடுத்து நடப்பவைகளை தெரிவிக்க வேண்டியிருந்தது,  பாஸ் மாதமொரு முறை எங்களுக்கு பார்ட்டி வைப்பதற்கு மறந்து விடுவதில்லை, எங்களுக்கு என்பதில் பிரசன்ன அய்யா உள்ளடங்க மாட்டார், அவர் மேடமிடம் வேலைப்பார்ப்பவர், என்னைப்போல பாஸின் மிக்க நம்பிக்கைக்கு ஆளான அடிமைகள் சிலருக்கான தனிப்பட்ட பார்ட்டி அது. அதற்கும் காரணமிருந்தது. சில பாட்டில்களோடு ஒரு மொட்டைமாடியில் செட் ஆகுவோம். எனக்கு பிடித்த பக்கார்டியும், ரெட் ரம்மையும் பச்சை ஆப்பிள்களையும் அவர் கொண்டுவர மறப்பதில்லை.

இந்த போதையூட்டுதல் ஹிப்னாடிசத்தை போல ஒரு மனோவசியக் கலை என்பாதாக அவர் நம்பியிருக்க வேண்டும். கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் உண்மையை மட்டுமே சொல்வோம். அந்த பாட்டில்களின் மீதான நன்றி உணர்வு. ஆக இந்த கலையால் துரோகங்களை குறைக்கும் யுக்தியை அவர் கைக்கொண்டிருக்கலாம்…

அது ஒரு செவ்வாய் இரவு, மேடமிடமிருந்து பிரசன்னா அய்யாவிற்கு அழைப்பு வந்தது, தும்முல்லை சந்தியில் வழமையாக ‘பொதி’ தரும் ஆளிடமிருந்து இரவு ஒன்பது இருபதிற்கு பொதியை வாங்கிக் கொள்ளும் படி உத்தரவு இருந்தது. அந்த பொதியில் என்ன இருக்கும் என்பதை ஊகித்து வைத்திருந்தாலும் உண்மையில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. சொல்லப்படுகிற நேரத்தில் பொதியை கைமாற்றி விடுவோம், ஒரு நிமிட தாமதம் கூட பெரிய ஆபத்தை தரலாம். ஆக சொன்ன நேரத்தில் பொதியை வாங்கியாகிவிட்டது. எனக்கு ரொம்ப பசித்தது. ஸ்லேவ் ஐலண்டில் பிட்டும் பாபத்கறியும்  சாப்பிடலாம் என அய்யாவை வழமையாக நாம் சாப்பிடும்  கடைக்கு வண்டியை விடச் சொன்னேன். அவர் சாப்பாடு விசயத்தில் மட்டும் சுத்த பௌத்த வெஜிட்டேரியர், பிட்டுடன் பருப்பு கறி மட்டுமே சாப்பிடுவார்.

அப்போது இரவு  ஒன்பது ஐம்பது மணியிருக்கும். சாப்பிடிட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் மேடமிடருந்து அழைப்பு வந்தது, பிரசன்ன அய்யா பதில் அளித்தார், போனை என்னிடம் கொடுக்க சொல்லி அந்த அதிர்ச்சியை என்னிடம் சொன்னார், பாஸை யாரோ சுட்டுவிட்டார்கள் என்றார்  அது எனக்கு பேரதிர்ச்சி. எனக்கு ஒரு கணம் உலகமே இருண்டது போல இருந்தது.  அவரின் வீடு கிருலப்பனையில் இருந்தது. அங்கே வைத்து அவரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள்.

இந்த செய்தி நமக்கு கிடைக்கும் போது அது நடந்து மூன்று மணித்தியாலங்கள் கடந்திருந்தது. பாஸ் ஆஸ்பத்திரியில் இருப்பதாக மேடம் சொல்ல, அங்கே விரைந்தோம். ஆனால் அவரை பார்க்க அனுமதிக்க வில்லை. அவர் இறந்துவிடவில்லை. ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே சொன்னார்கள். நான் காலை வரை ஆஸ்பத்திரியில் மற்ற அடிமைகளுடன் கிடந்தேன். இன்றைய வேலையை பிரசன்ன அய்யா தனியாக பார்க்கவேண்டி இருந்தது.

கருமேகங்கள் சூழ்ந்து பெருத்த மழைக்கான ஆயத்ததை போல என் மனம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. எதோ துயரத்தின் முன்னெச்சரிக்கை உள்மனதில் தோன்றி மறைந்தது. உண்மையில் எதற்காக பாஸை சுட்டிருப்பார்கள், யார் செய்து இருப்பார்கள். யோசித்துக்கொண்டே இருந்தேன். எதுவுமே பிடிபடவில்லை, மனம் மிக குழப்பமாக இருந்தது. ஒரு விதமான அச்சம் என்னில் விரவி நின்றது. இந்த உணர்வுடன்தான் அந்த வெள்ளி இரவு கடல் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு கஞ்சாவை இழுத்துக்கொண்டிருந்தேன்…

அந்த பொதியை  வாகனத்தில் மறைத்து வைத்திருந்தோம். அந்த வாகனத்தில் வைத்திருப்பதற்கான காரணம் இருக்கிறது. அது நமது நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பாட்ட வாகனம். பாஸின் செல்வாக்கு நம் நிறுவனத்தின் அடையாளங்களும் பரிசோதனைகளை தவிர்க்கச் செய்தது. அது மிகவும் பாதுகாப்பானது.

நள்ளிரவை தாண்டி நாழிகைகள் கடந்துக் கொண்டிருந்தன. இந்த வெளிச்சமிக்க நகரத்தின் பேரிரைச்சல்கள் அடங்கிக் கொண்டிருந்த நேரம். என் வாழ்க்கையை இருளாக்கும் இரவு இது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

பின்னாலிருந்து ஒரு வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது, அது நம்மை நெருங்கி வந்துக்கொண்டிருந்தது, நாங்கள் கொஞ்சம் உஷாரானோம். ஹிருணியை கையில் எடுத்துக் கொண்டேன். அங்கே இரண்டு வாகனங்கள் வந்துக் கொண்டிருந்தது. முன்னே வந்த வாகனம் நம்மை கடந்து முன்னால் நிறுத்தப்பட்டது, மற்றையது நம் வாகனத்தின் பின்னால் நிறுத்தப்பட்டது. அப்போது தான் கவனித்தேன் அது போலிஸ் வாகனம். நான் ஹிருணியை மறைத்துக் கொண்டேன். அதிரடியாக வந்தவர்கள் எதுவும் பேசவில்லை. வேனின் முன் கதவுகளை திறந்தவர்கள் என்னையும் அய்யாவையும் கழுத்தின் பின் பக்க காலர்களினால் இழுத்து கன்னத்தி பல அறைகள் விட்டார்கள். எனக்கு கண்கலங்கியது. அடிவயிற்றில் கால் முட்டிகாளால் உதைத்தார்கள். இழுத்துக்கொண்டு அந்த ஜீப்பின் பின்பக்கம் மல்லாக்க கிடத்தி என் கைகளில் விலங்கிட்டார்கள். எனக்கு உடலெல்லாம் நடுங்கி வியர்த்திருந்தது. இது போல இதுவரை நான் பயந்ததில்லை. என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எதையும் யோசிக்கும் அவகாசம் இல்லாத கணங்களில் எல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. அந்த நான்காம் மாடிக்கு அவர்கள் என்னை அழைத்து போகும் வரை அடித்தார்கள். நான் கெஞ்சி மன்றாடினேன், அழுதேன்.ஒன்றும் ஆகவில்லை.

இதுநாள் வரை என்னில் இருந்த மமதை அகங்காரம் எல்லாம் இந்த நிமிடங்களில் தூளாகிக் கிடந்தது. என் பலவீனத்தை உணர்ந்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாள் எதை நம்பி இருந்தேன், இதுவரை இருந்த என் கர்வம் எங்கே போனது.

என் ஆடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் கட்டிவைத்தார்கள். என் பாதங்களில் அவர்கள் அடித்த அடி எழு நரகங்களையும் என் நினைவுக்குள் உணர்த்தியது. முடிந்த அளவு அடித்தார்கள். நான் இது போல எப்போதும் அழுததில்லை. என் முகம் வீங்கிப் புடைத்திருந்தது. வருடல்கள் கூட பெரிதாய் வலிக்கும் அளவுக்கு உடலை தகர்த்திருந்தார்கள். எல்லாம் ஒரு கனவாய் இருக்க கூடாதா என மனம் ஏங்கிக் கிடந்தது, நான் சோர்வுற்று இருந்தேன். மூன்று நாட்கள் வரை இதே சித்திரவதை. என்னால் முடியாத ஒரு கட்டத்தில் அவர்கள் நீட்டிய எல்லா காகிதங்களிலும் கையொப்பம் இட்டேன். கையொப்பங்கள் காப்பற்றும் என் நம்ப ஆரம்பித்திருந்தேன். ஹிருனியின் கண்கள் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தது. அவள் நினைவுகள் எதோ ஆசுவாசத்தை தருவதை உணர்ந்தேன்.

ஆனாலும் அவளிடம் சொல்லப்பட்டத ஒரு பிரியாவிடையின் வலி இந்த எல்லா வலிகளையும் விட என்னை இன்னும் வதைத்துக்கொண்டிருந்தது.

நிற்க, இந்த கதையை எழுதிக் கொண்டிருப்பது நானில்லை. இங்கே இந்த சிறைச்சாலையில் என்னோடு இருக்கும்  நண்பன். நான் சொல்ல அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருகிறான் . இந்த கதையில் என் பெயரை எங்கும் குறித்துவிட வேண்டாம் என கண்டிப்பாக சொல்லிவிட்டேன். நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பது என் குடும்பத்திற்கோ நண்பர்களுக்கோ, இப்போது என் மனைவிக்கோ நான் சாரதியாக வேலைப்பார்ர்கும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கோ  தெரியாது. அந்த நாட்களில் பத்திரிகைகளில் வந்த செய்திகளில் கூட என் பெயரை குறித்து வெளியிடாதது அதிர்ஷ்டம் தான். அப்போது கொஞ்சமாவது உடக தர்மங்களும், மனசாட்சியும் இருந்தது. இப்போது போல இருந்தால் நீதி மன்றங்கள் தீர்ப்பு சொல்லும் முன்னே இவர்கள் தீர்ப்பு சொல்லு குடும்பங்களின் அடையாளங்கள் உட்பட பகிரங்கப்படுத்தி ஒரு குற்றவாளியை திருந்தி மீண்டு சமூகத்தில் வாழ முடியாதவாறே செய்து விடுவார்கள். என்னுடைய இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகும் போது என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களையும் என் கடந்த காலத்தையும்  அறிந்தால் என்ன நினைப்பார்கள் என நினைக்கும் போது பெருத்த அவமானத்தை நான் உணர்கிறேன். அவர்களை சிறந்த மனிதர்களாக ஆக்கவேண்டும் என்கிற என் கனவு பிழைத்து விடக்கூடாது  என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். என் கடந்த காலத்தை கடந்த காலமாக பார்க்கும் பக்குவம் இன்னும் இந்த சமூகத்தில் இல்லை. எல்லாவற்றையும் நிகழ்காலத்தில் இணைத்து யோசிப்பவர்கள்.

ஹெரோயின் கடத்திஇருக்கிறோம், வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு கொலை செய்திருக்கிறோம். இது தான் எங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம். செய்யாத குற்றத்திற்காக நாங்கள் சிறைக்கு அனுப்பட்டிருந்தோம். பதினெட்டு வருடங்கள்  சிறை தண்டனை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கனவு போல எல்லாம் நடந்துக்கொண்டிருந்தது. என்னை சுற்றி இருந்த எல்லோருக்கும் எல்லாம் மர்மாமாகவே இருந்தது. எனக்கும் தான். இன்னுமே எல்லாம் மர்மாமாகவே இருக்கிறது. பாஸை யார் சுட்டார்கள், எதற்காக நடந்தது, யார் எங்களை காட்டிக் கொடுத்தார்ர்கள், மேடம் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதெல்லாம் இது வரைக்கும் எனக்கு மர்மாமாகவே இருக்கிறது.

குடும்ப பாரம் கஷ்டம் என்கிற காரணத்திற்காகவெல்லாம் நான் இந்த தொழிலை செய்திருக்கவில்லை. அவ்வளவு தியாகி இல்லை நான். வாப்பா கொழும்பில் கடைவைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். குடும்பத்தில் எந்த பொருளாதார பிரச்சினையும் கிடையாது. சொந்த வீடு வாகனம் எல்லாமே அப்போதும் இப்போதும் வாப்பாவுக்கு இருக்கிறது . ஆனால் எனக்கிருந்த அந்த வயதின் இன்னொரு ஆசை, ஹீரோத்தனமான கனவு, மற்றவர்களை விட இன்னொரு விதத்தில் தனித்து என்னைக் காட்டிக்கொள்ளும் பைத்தியக்காரத்தனமான ஆசை இந்த தொழிலை பெருமையோடும் ஆசையோடும் செய்ய வைத்தது.

எப்படியோ வாப்பா பாடுபட்டு லட்சங்கள் கைமாற்றி ஐந்து வருடங்கள் கழித்து என்னை வெளியே எடுத்து விட்டார், ஒரு நரகத்தில் இருந்து இன்னொரு நரகத்தை நோக்கி இடப்பெயர்ச்சி அடைந்தேன். அவ்வளவுதான். வருகிறபொழுது இந்த கதையையும் என்னோடு எடுத்துக் கொண்டே வெளியே வந்தேன்.  இப்போது நீங்கள் வாசிக்கிறீர்கள். பிரசன்ன அய்யா இன்னும் உள்ளே தான். அவ்வப்போது அவரை சென்று பார்ப்பேன். என்னால் முடிந்ததை அவர் குழந்தைகளுக்கு செய்துகொள்கிறேன்.  போஸ் சூடு நடந்து இரண்டு வரங்கள் கழித்து இறந்து விட்டிருந்தார்.  எல்லாமே மாறிக் கிடந்தது

நானும் இப்போது மாறிக் கிடக்கிறேன். பிரசன்ன அய்யாதான் இரகசியமாக இதையெல்லாம் செய்தார், எனக்கு எதிலும் பங்கில்லை என்பாதாக என் குடும்பம், நண்பர்கள், மனைவி எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை நான் நிரபராதி. அனால் இவர்கள் யாருக்கும் தெரியாத அந்த பக்கங்களும், அந்த கண்களும் எனக்குள் குற்ற உணர்ச்சியாய் கரித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்படாத அந்த பிரியாவிடை என்னுள் ஏக்கமாய் பரவி இருக்கிறது

அந்த கண்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கும், அவள் இப்போது எங்கே இருப்பாள், என்றோ ஒரு நாள் அவளை சந்திக்கும் ஒரு பொழுது வருமா என காத்திருக்கிறேன். என்னுள்ளே  அந்த கண்கள் என்னை உற்றுப் பார்க்கும் போதெல்லாம் அந்த சிங்கள பாடலின் இந்த வரிகளை முணுமுணுத்துக் கொள்வேன். இந்த வரிகள் அவளின் வாசமாய் என்னுள் பரவிக் கொண்டிருக்கும்.

“බුදුන් දැක නිවන් දකිමැයි

දෙව්-රම යන පාර අහන

ඔබද පටාචාරවකි

ඔබද කිසා ගෝතමියකි…”

புதுன் தெக நிவன் தெகீமய்

தெவ்-ரம யன பார அஹன

ஒபத ப(t)டாச்சாரவக்கி…

ஒபத திஸா கௌதமியக்கி…

காலவிதி பற்றி உங்களுக்கு தெரியுமா??? காலம் அற்புதமான மாயத்தையும் அதீதமான சக்தியையும் கொண்டிருக்கிறது. எல்லா இரகசியங்களையும் சரியான ஒரு நேரத்தில் இந்த காலம் வெளியே கொண்டுவந்து கொட்டிவிடும். இங்கே எதையுமே காலத்திற்குள் நம்மால் மறைத்துவைக்க முடியாது. இரகசியங்கள் என்று இங்கே எதுவுமே இல்லை. எப்படியோ எப்போதோ யாரோ அதை அறிந்துக்கொள்வார்கள். அம்பலப்படுத்துவார்கள். உலகம் அறிந்துக்கொள்ளும்.அப்படித்தான் சில மர்மங்கள் மீதான கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும் வரை காத்திருக்கிறேன். காலத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே என்னிடம் எஞ்சிக்கிடக்கிறது.

மிஸ்பாஹுல்-ஹக்-இலங்கை 

மிஸ்பாஹுல்-ஹக்

(Visited 91 times, 1 visits today)