போர்க்காலத்தின் தனிமையொன்றில்-கவிதை-மிஸ்பாஹுல் ஹக்

மிஸ்பாஹுல்-ஹக்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

போர்க்காலத்தின் தனிமையொன்றில்
பயத்தின் புள்ளியை தேடிகொண்டிருந்தேன்…
பயம் தன்னை உடுத்திக்கொள்ளும் மாயை பற்றி
தசைகளின் நடுக்கத்தில் புதைந்த விரல்கள் சொல்லக் கேட்கிறேன்.
ரசவாதம் தொலைத்த வித்தைக்காரனின் ஆதி இரவு
இன்னும் நடுக்கத்தில் நீள்வதாய் ஒரு குறிப்பை
பழங்கால கதையொன்றில் புதைத்து வைத்திருக்கிறாய்…

போர்க்காலத்தின் தனிமையொன்றில்
நிசப்தங்கள் நம்மை பயமுறுத்துவதில்லை…
கருமை அடர்ந்த இருள் நம்மை பயமுறுத்துவதில்லை…
தூரத்தில் எழும் ஓலங்களுக்கு நடுவில்
இன்னும் பயம் எங்கோ மறைந்திருக்கிறது…
தூரத்தில் எழும் குழந்தையின் கதறலில்
இன்னும் நடுக்கம் எங்கோ மறைந்திருக்கிறது…

போர்க்காலத்தின் தனிமையொன்றில்
ஒரு விசும்பும் பிரார்த்தனை மெல்ல கசிவதை
இந்த தனிமை சொல்லிக்கொண்டிருக்கிறது.

00000000000000000000000

கண்களை இறுக மூடிக் கொள்கிறேன்.
என் காதுப்பறை இதயம் போல துடிக்கிறது..
மௌனம் கசப்பாதாய் சொல்லும் உனக்கு
காதுப்பறை எழுப்பும் சப்தம் எவ்வளவு கோபத்தை கூட்டும்
என புரிவதாய் இல்லை…
கடலை சேர மெல்ல நகரும் நதியைத்தான் உனக்கு தெரியும்..
ஒரு நதி ஒற்றை மூலத்தில் இருந்து உருவாவதில்லை..
அதன் வழியெங்கும் அது உருவாகிக் கொண்டே இருக்கிறது..
தன்னில்,
எதையெதையோ சேர்த்துக் கொண்டும்
விலக்கிக்கொண்டும் உருவாகி விரிவாகி,
பின் பிரியாத கடலாகிப் போகிறது..
எல்லா நதிகளையும் விழுங்கிக் கொள்ளும் கடலைப்போல
என் காதுப்பறை இப்போது பேரிரைச்சல் எழுப்புகிறது..
நீலவானத்தின் எதுவும் ஏன் பச்சை நதிகளில் நிறம் ஏற்றுவதில்லை…
மச்சகந்தியின் கல்லறையின் வழியே கசியும் வாடை
ஒரு நதியின் வழியே இன்னும் ஓடிக்கொண்டிருக்கும்…

00000000000000000000000

இந்த படபடப்பின் மீது நீ விழித்திருக்கலாம்…
உன் நகங்களை கடித்தபடி ஒரு ஜன்னலை வெறித்துப்பார்க்கலாம்…
தலையணைக்குள் புதைந்தபடி இன்னொரு உறக்கத்தை தேடலாம்..
உன் காதுகளுக்குள் திணிக்க முனையும் இசையை மாற்றி மாற்றி தோற்றுப்போகலாம்…
கண்களை மூடி நீ மறக்க நினைப்பவைகள் பற்றி நினைத்துப் பார்க்கலாம்..
அந்த நினைவின் மீது இன்னும் உன் படபடப்பை நீ அதிகரிக்க செய்யலாம்…
முதல் முத்தத்தின் பிசுபிசிப்பின் நினைவின் மீதும் பிடிப்பற்ற இந்த படபடப்பில்
எல்லாமே அருவருப்பில் முடிவடையக்கூடும்…

இந்த இரவுகளின் மீது எனக்கொரு காதல் இருக்கிறது…
தீர்க்க வேண்டிய வன்மம் இருக்கிறது…,எனக்கொரு ஆசையும் இருக்கிறது…
தவிர்க்க முடியாத வெறுப்பும் இருக்கிறது…

உன்ன படப்படப்பின் வன்முறையை,
அதன் எழுத முடியாத தவிப்பை இந்த இரவின் மீது எழுதி விடு…
அப்போதும் இந்த இரவு அமைதியாகத்தான் ஒரு விடியலில் மறைந்துக் கொள்ளும்…

மிஸ்பாஹுல் ஹக்-சவுதி அரேபியா

மிஸ்பாஹுல் ஹக்

 

 

(Visited 107 times, 1 visits today)