தகனம்-கவிதை-எஸ். ஃபாயிஸா அலி

தகனம்

எஸ். ஃபாயிஸா அலி
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

எஞ்சிய 2 புத்தகக் கட்டுக்கள்.
இடுப்பு நொடிந்து
செத்து மாய்ந்த
ஐந்தாறு ஆய்வுகள்.

அவ்வப்போது அருட்டியவை,
கிறுக்கியவை…கவிதையென
மினுக்கியவை,நீலம் பாரித்த நாட்குறிப்பேடு………………..

சற்றைக்குமுன் குப்பை, அல்லது அதற்கும் கீழெனக்
கணிக்கப் பட்டவைகளை
வாரிச் சுருட்டுகிறேன்.

சர்ர்ர்ர்ர்ர்…….
அழுத்தமான உரசலில் உயிர்த்த ஒற்றைக்
குச்சி
வழிகாட்டும் சுடரென்றாகிட ஆசைப்
பட்டதாலோ என்னவோ…
மென்நீலமும் மஞ்சளுமாய் சுடர்த்த
தன் தலையைப்
பக்கவாட்டிலும்
மேல் கீழுமாய்..
துடிக்க விட்டுக் கெஞ்சியதையும்
பொருட்படுத்தாது வீசியெறிறேன்.

வெந்து புகைந்த அக்கினி நாவுகளின்
விசும்பலும்.. படபடப்பும்
பெரும் ஒப்பாரி எனப்பரவ…
தன் ஆன்மாவின் கருகல் நெடியினையே
நுகரத் தொடங்கிற்று…
செத்துப் போன இருதயம்.

000000000000000000000

மெல்லப் பரவுது

மௌனம் குளிரிழைகளாகி நெய்யப்பட்ட
அபூர்வத் தெருவினில்…
மேட்டுக்குடிகளின் அந்தப்புரமாய்
coffee shop.

தடக் தடக்கெனும் பலகை நிலம்.
பாதி உடைவுடன் உல்லாசங்களைப்
பஞ்சணையாக்கியபடி..
சித்திரமாய் விரியுமிரு சாய்விருக்கைகள்.

மென்காந்தம் தூரிகையாகி எமை
வரைந்திருக்குமோ எதிரெதிரில்.
மெல்லிய பிளவினூடே பளீரிடும்
செம்மாதுளம் முத்துக்களாய்…
நேசிப்பின் தொடரில் சொருகிவிடக் கூடிய
எல்லாமும் இருந்தது
இருவரிடையேயும்.

பற்றிக் கொள்தலின் பேரவா தொடர்பில்
தம்முள்ளங்கைகளோடு மட்டும்
கிசுகிசுத்துக் கொண்டன பொன்விரல்கள்.

ஒளிருமிருசோடிக் கண்கள்
கண்ணாடி மேசையில் பட்டுத்
தெறிக்கையில்…
காணவி்யலா நறுமணத் துணிக்கைகள்
செறிவாய் மிதக்கும்.
நூறு சதுரஅடியையும் நிறைத்தே கதவிலா
வெளி தாண்டியும் பரவுது… பரவசங்கள்.

அறைமூலையின் அகன்ற ஒளித்திரையில்
எல்லை தாண்டும் பந்தோடு
மெல்லப் பரவுது ஆரவாரம்.

சீருடையும் சுறுசுறுப்புமாய் வளையும்
பரிமாறுபவன் கரங்களில்
சுடுநுரை ததும்பும் குவளைகள்.
மெதுமெதுவாய் உறிஞ்சுகிறோம்…
சொற்களையும் சேர்த்து.

000000000000000000000

தளர் நடையூடே..
“கவனித்ததோ…!”
என்கிறாய்.
புரியாது மெல்லத் திரும்புகிறேன்…
வீழ்த்திட முடியாத இயலாமைக்குள்
எமை முறைக்கும்
அச்சாத்தான்
மறுபடியும் எதிர்பார்த்திருப்பது…
எதில் மிகைத்த இன்னொரு சோடி யையோ…?

000000000000000000000

முணுமுணுப்புகள்

பொன் கூடுகள் சிதைவதா..!
குருதி கசியும்
ஆழ் மனக் கிளர்வுகளில்
நிரந்தரமாய் தாளிடு வதா…!
அவள் போலும் அகாலமாய் முடிவதா….!
யதார்த்த முரணாய்
இரு வேறு திசைகளில் ஒற்றைப் பயணம்.
சதா முணுமுணுத்தபடியே வெறித்துக்
கொண்டிருக்கிறாள்….
நீ உதித்து மறையும் அகண்ட வானை.

வெளிறிய கருமணிகளுக்குள் நிரந்தரமாய்
உறைந்து போன
ஒளியோவியங்களை
நீலம் பாரித்த புத்தம் புது டயறியை..
தாய்மையின் ஈரவிழிகள் மட்டுமே
மின்னுகிற இந்நீல அலைகளை..
மடிப்புக் குலைந்த
அலுமாரித் தட்டுகளை….!

எஸ். ஃபாயிஸா அலி-இலங்கை

(Visited 60 times, 1 visits today)