லறீனா அப்துல் ஹக்-ன் எழுத்துலகம்-‘தஜ்ஜாலின் சொர்க்கம்’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து-எஸ். ஃபாயிஸா அலி

“அவளைப் பன்மையில் பார்த்தேன்
இல்லை அவள் பெருகிக் கொண்டிருந்தாள்
அந்தக் கூட்டத்தில்
அவளைப் பிரித்தெடுக்க முடியவில்லை”

சகோதரர் றியாஸ் குரானாவின் இந்தக் கவி வரிகளை வாசிக்கும் போதெல்லாம் சட்டென நினைவுக்கு வருவது தங்கை லறீனாவின் முகமே.

எஸ். ஃபாயிஸா அலிகவிதை, பாடல், இசை, மெட்டு, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, மொழியாக்கம், விளையாட்டு (அதிலும் பல்வகைமை), குடும்பப் பொறுப்புகள் நான் பிரமித்துப் போகும் அவருக்கான முகங்கள் தான் எத்தனை எத்தனை! இத்தனைக்கும் அவர் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதிக் கற்கைக்கான ஆய்வு மாணவரும் கூட! அல்ஹம்துலில்லாஹ்.

லறீனாவின், “தஜ்ஜாலின் சொர்க்கம்” சிறுகதைத் தொகுதியைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சகோதரர் ஹபிபுல்லாஹ் மௌலவி அவர்கள் வீடு தேடி வந்து தந்த அன்று இரவோடு இரவாய் வாசித்து முடித்திருந்தேன். ஈரம் கசிந்த விழிகளோடும் நொந்திளகிப் போன இதயத்தோடும் என் வாசிப்பனுபவத்தைப் பதிவாக்க வேண்டும் என்னும் பேரவாவோடு அடுத்தடுத்து வந்த பல இரவுகள் புத்தகமும் பேனாவும் குறிப்புக் கொப்பியுமாய் மறுபடியும் மறுபடியும் பக்கங்களுக்குள் கரைந்தும் கதைகளின் உயிர்ப் பாத்திரமாய் வாழ்ந்து முடித்தேனே தவிர எழுத ஒருவரி கூட வரவில்லை.

எத்தனை எத்தனை வலிகள், வேதனைகள், உதிரம், கண்ணீர்… அதனை எதிர்கொள்ளவும் கடக்கவும் துணியும் அப்பெண் மனங்களின் போராட்டங்களின் பல்பரிமாணத் தன்மைக்குள் நம் கண்ணீரும் வலியும் மறுபடியும் நம்மைப் புதுப்பித்தும் உயிர்ப்பித்தும் கொள்கின்றனவேயொழிய வெண் தாளில் வரிகள் மட்டும் வந்து விழுவதாயில்லை. ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு மேல் என் வாசிப்பு அனுபவத்தை இரசனைக் குறிப்பாய் எழுதி முடித்திருந்தும் வார்த்தையில் வடித்துவிட முடியாத, உணர மட்டுமே முடிந்த ‘தோற்றுப் போதலின்’ புத்தம்புது அனுபவம்.

“ஆழ்ந்த துயரால் மன கிண்ணம் நிரம்பி வழிகின்ற பொழுதுகளில் அவை வார்த்தையின் வடிவெடுத்துத் தான் அழிந்துவிடுகின்றனவோ’ எனும் குமுறலோடு தொடரும் இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 10 சிறுகதைகள். இது அவரின் 10 வருட கடின உழைப்பும் கூடவாம். கொடகே ஆக்க இலக்கியப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி இது.

சகோதரர் றஷ்மி அஹ்மதின் கைவண்ணத்தில் ஒற்றைக் கண் கொண்ட தஜ்ஜாலின் கொடூர முகம் முன் அட்டையிலும், லறீனா அப்துல் ஹக்கின் கம்பீரப் பார்வையுடன் கூடிய அழகுப் புன்னகை பின்னட்டையிலும் ஓவியக் கவிதையாய் விரிகின்றன.

‘’கவிதை எழுதும் கதைகள்” எனும் தலைப்பில் கவிஞர் புதிய மாதவி மிகச் செறிவான உரை ஒன்றைத் தந்திருக்கிறார். அதில் தான் உணர்ந்து கொண்ட லறீனா பற்றியும், அவரது கவிதை மொழி பற்றியும், அதனூடாக லறீனா விவரிக்கும் கதை மாந்தர்களின் நுண்ணிய உணர்வுகள் பற்றியும் எடுத்துச் சொல்கிறார்.

“எழுத வரும் பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் ஊசிமுனைப் போராட்டங்களும் கண்ணுக்குத் தெரியாத காயங்களும் கதைப்பொருள் ஆகின்றன. எழுத்துலகில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதாக இருப்பது பெண்களின் கதைக் களம் காணும் புனைவுகள் அல்ல. அவை வாழ்க்கையில் அப்பெண்கள் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்றவை தாம் என்கிறார், புதிய மாதவி.

தொகுதியின் முதல் கதை, ‘ஒரே ஒரு கனவுகூட மிஞ்சவில்லை’. சிசுவாய், குழந்தையாய், சிறுமியாய், குமரியாய் என பெண்களின் வாழ்க்கைப் பருவங்கள் அத்தனையிலும் அவள் சுமக்கும் கனவுகளோ கோடி கோடி. பல வண்ணங்களில் பல பருமன்களில் மனத்தரையினில் மலைக்குன்றுகள் என நிறைந்து கிடக்கும் கனவுகள் நனவாகும் வரம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்தம் வாழ்வோ கொண்டாட்டத்திற்குரியவை. பூரிப்பு நிறைந்தவை. ஆனாலும், கதையின் நாயகி நிஸா மாமியின் மொத்தக் கனவுகளும் ஊதிக் கட்டிய பலூன்களில் ஊசியால் குத்துவது போல ஒவ்வொன்றாய் உடைக்கப்படுகின்றன.

புரிந்து கொள்ளாத கணவரோடு இணைந்து வாழ முடியாத நிலை வந்தபோதும் கூட, வயிற்றில் வளரும் தன் வாரிசுக்காய் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மிச்ச வாழ்க்கையையும் வாழ்ந்துவிட முடிவு செய்கிறாள் நிஸா. அப்போதும்கூட இறுமாப்பு நிறைந்த அந்த ஆண்  அவளைச் சும்மா விட்டு விடவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து… என்பது போல இறுதியில், ”ஒன்னை மாதிரி ஒரு புள்ள பொறக்காட்டியும் பரவாயில்லை” என்கிறான்.

”என்ட குணங்கள் என்ட புள்ளைக்கி வரப்படாதாமே… அப்பிடி ஒரு புள்ளையே தேவையில்லையாமே! அப்படியென்டா நான் கூட தேவையத்தவள் தானோ?” (ப.48). அத்தோடு முடிந்து விடுகிறது, அவள் இறுதிக் கனவும்.

“வசந்தங்கள் பூத்தபோது குயில் இறந்து போவது எவ்வளவு துக்ககரமானது என்பதை உன்னால் உணர முடிகிறதா?” (ப.42) என்று அந்தப் பெண் கேட்பாளே ஒரு கேள்வி. இதற்கு மேல் வேறென்ன வேண்டும் அந்த நிஸாவின் உணர்வுநிலையினை உணர்ந்திட?

இரண்டாவது கதை, ‘பொம்புள’. கணவனைப் பறிகொடுத்த விதவைப் பெண் தனது மிச்ச வாழ்க்கையை வாழவும், தன் குழந்தைகளை வாழ வைக்கவும் வழியின்றித் தவிக்கிறாள். இறுதியில் தனது அன்புக் கணவர் விட்டுச்சென்ற ‘ஸ்கூல் சர்வீஸ் வேனை’ தான் ஓட்டும் முடிவுக்கு வருகிறாள் சித்திம்மா. அவளின் இந்தத் துணிச்சலான முடிவைக் கண்டு அதிர்ந்து போகும் அவளைச் சுற்றியுள்ள ஆண்கள் சமூகமோ, ‘விதவைப் பெண் என்றால் அடங்கி ஒடுங்கி வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டும்; தாம் பிச்சை போடும் சாக்கில் அடிக்கடி அவள் அருகில் சென்று உரசிக் கொள்ள வேண்டும்’ என்றே விரும்புகிறது. அந்தப் பெண் தன் தொழில் முடிவில் உறுதியாக நிற்பது கண்டு சமூகம் அவள் மீது சந்தேகம் கொண்டு களங்கம் கற்பிக்க முற்படுகிறது. என்றாலும், அந்தப் பெண் கொண்ட ஈமானிய உறுதி அவளை வாழவைக்கும் என்ற பெரும் நம்பிக்கை கதைசொல்லிக்குப் போன்றே எனக்கும்.

அடுத்து ‘கறுப்பி’. அவள் ஓர் ஏழை கறுப்பி. பாடசாலைச் சமூகத்தாலும் சுற்றுச்சூழலாலும் ஏன், தன் பெற்ற தாயாலுமே புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் ஏழைக் கறுப்புச் சிறுமி ஒருத்தியின் கண்ணீரும் குருதியும் இணைந்த இன்னொரு சோகக் காவியம், கறுப்பி.  ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்பது எவ்வளவு பெரிய உண்மை! அத்துணை புறக்கணிப்புக்கு மத்தியிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுகிறாள் அவள். அதுவரை வன்சொற்களாலும் சரீரத் தண்டனையாலும் துன்புறுத்திய ஆசிரியைகூட பாராட்டிப் பேச முற்படுகிறார். இறுதியில் கன்னங்கரேலென்ற அவளது புறங்கை அந்த வீதி விபத்தில் குருதியில் குளித்துச் செக்கச்செவேலென்றாகிறது. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த ஏழைச் சிறுமிக்கு உயிராபத்து ஏதும் வந்து விடக் கூடாதே என்ற பதைப்போடும் பிரார்த்தனையோடும் தான் அடுத்த கதைக்குள் நுழைய முடிகிறது.

நான்காவது கதை, ‘எனக்கான வெளி’. நான் நினைக்கின்றேன், ஏதோ ஓர் இணையப் பக்கத்தில் இந்தக் கதையை வாசித்த போதுதான் லறீனாவை சந்திக்க வேண்டும்; அவரோடு பேச வேண்டும் என்ற ஓர் உந்துதலும் அவாவும் என்னுள் ஏற்பட்டிருக்க வேண்டும். கணவனின் காதலையும் கனிவான அரவணைப்பையும் எதிர்பார்த்து, அது கிடைக்காத ஏக்கமும் வெறுமையும் நிறைந்திருந்த இன்னொரு பெண்ணின் கேவல் தான் ‘எனக்கான வெளி’ சிறுகதை. கனவும் நிகழ்கால நனவுமாய் அவளின் எதிர்பார்ப்புகளும் நிஜத்தில் எதிர்கொள்பவையுமாய் என ஒரு வினா விடைக் குறிப்பொழுங்கில் மாறி மாறி நனவோடை கதை சொல்லல் முறையில் சொல்லப்பட்டுக் கொண்டே நகரும் இக்கதையில் அவளின் உடல் உள நிலையை, உணர்வுகளை அதன் கெஞ்சல்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாமல் தனது கட்டளைகளுக்கு அடிபணிந்து ஒரு ‘ரோபோ’ போன்று தனக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று ஆணையிடும் கணவனும் கண்ணீரோடு காலம் தள்ளும் அவளும்… இருந்தும் அந்தக் கண்ணீரைத் துடைக்க வரும் பிஞ்சுக் கரங்களோடும் நெஞ்சு நிறைந்த பரிவோடும் அவள் பெற்ற பெண் பிள்ளை. அவளின் எதிர்காலம் தொடர்பான கைப்பிடியளவு நம்பிக்கையோடு அடுத்த கதைக்குள் நுழைகிறேன்.

ஐந்தாவது கதை, ‘எழுதப்படாத கவிதை’. கதை சொல்லல் முறையில் இருந்து சற்றே விலகி ஓர் ஆண் குரலில் நகர்கிறது. ஆனால், மீண்டும் அதே பெண் வலிதான் பேசப்படுகிறது. அவள் தனக்குப் பொருத்தமான துணை என நம்பியிருந்த அவளது பள்ளித் தோழனான முறைமச்சான் பெற்றவளின் பேச்சுக்கும் சொத்தாசைக்கும் அடங்கிப்போய் இன்னொருத்தியைத் துணையாக்கி கொள்கின்றான். அந்த ஏமாற்றத்தில் சிதைந்த தன் மென்மனதைத் திடப்படுத்திக்கொண்டு, தனக்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைகிறாள், ‘எழுதப்படாத கவிதை’ கமருன்னிஸா -நிலாப்பெண் -. மனசு நிறைந்த எதிர்பார்ப்புகளோடு புகுந்த வீடு வரும் அறிவார்ந்த அப்பெண்ணின் கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் கவிதை மொழியும் கணவனுக்கு எரிச்சல் நிறைந்த ஒன்றாக மாறிப் போகிறது. குடும்பப் பெண் என்றால் அதிகம் பேசாமல், வாய்விட்டுச் சிரிக்காமல் அடங்கியொடுங்கித்தான் இருந்தாக வேண்டும் எனக் காலங்காலமாக இறுக்கமாகக் கட்டி எழுப்பப்பட்டு இருக்கும் பெண்ணுக்கான சட்டகத்தையே சரியானது என நம்பும் பலரில் அவனும் ஒருவனாயிருந்தான். ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அந்தச் சின்னப் பெண்ணின் காதல் மனதை கண்டுணர மறுக்கும் அவன், இறுதியில் அவளைக் கைகழுவியும் விடுகிறான்.

அவள் மகிழ்வாக வாழ்வதாய் நம்பிக்கொண்டிருந்த அந்த முறைமச்சான் தன்னை விரும்பியவளின் வாழ்க்கை செழிக்கவில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப் போகின்றான். காலம் கடந்த ஞானம்! அவளை மறுபடியும் கரம்பற்றி அவள் வாழ விரும்பிய வாழ்க்கையை அவளுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று ஆவலோடு அவளைத் தேடி வருகிறான். ஆனாலும் அவளோ அவனை விட்டும் அவளை வஞ்சித்த இவ்வுலகைவிட்டும் மொத்தமாய் விடை பெற்றிருப்பாள். கவிதை வரிகளால் ஓர் அழகிய சித்திரமாய் விரித்துச் சொல்லப்படும் இக்கதையின் கோர முடிவை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அடுத்து ‘’மனச்சிறகு’’. அட, இதுவும் ஓர் இளம்பெண்ணின் மனசு நிறைய சேமித்து வைத்த ஆசைகள், கனவுகள் சருகான கதைதான். வாழ்நாள் முழுதும் சேமித்த தன் கனவுகள், உணர்வுகள், கற்பனைகளோடு எதிர்பார்ப்புகளோடு கட்டார் வந்து சேர்கிறாள், நிஸா. வேலைப்பளுவும் அவளில் பெரிய அளவான விருப்பும் இல்லாத அவளின் கணவனும் தெரிந்தோ தெரியாமலோ அவளை அவள் ஆசைக் கனவுகளை, உணர்வுகளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறான். அந்தப் புறக்கணிப்புகளின் பெருவெக்கையில் அவள் கனவுகள் சருகாய் உதிரத் தொடங்குகின்றன.

இருவேறு மன உலகங்களுக்குள் வாழ்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் திணறித் தவிக்கும் வாழ்வைச் சூனியம் என்று நினைத்த அந்தத் தம்பதியருக்கு இடையில் அவன் பள்ளித்தோழி பானு வந்து சமரசம் செய்ய முனைகிறாள். தன் தோழியின் அழகழகான அறிவுரைகளால் நிஸாவின் கணவனின் வரண்ட சிந்தனை தெளிவாக புதுப்பிறவி காண்கிறான். ஆர்வம் பொங்க தன் மனைவியைக் காண வருகிறான் அவ்வாறு வீடு வரும் நிஸாவின் கணவன் எதிர்கொள்ளப் போவது அவள் இல்லாமல் வெறுமையாய் வெறிச்சோடிக் கிடக்கும் வீட்டைக் காணத்தானா? இந்த இடத்தில் ஓர் இனம்புரியாத தவிப்பும் முதன்முதலாய் நிஸா மீதான மெல்லிய கோபமும் முளைவிடத் தொடங்குகிறது, எனக்குள். இன்னும் ஒரு தரம் பேசிப் பார்த்து இருக்கலாம் என்ற அங்கலாய்ப்பு எழுகிறது. அட! எவ்வளவுதான் விரக்தி தரும் வாழ்வாக இருந்தாலும், அதைக் கடைசிவரை பொறுத்துக் கொண்டு அவள் வாழ்ந்தாக வேண்டும் என்று அடிமனசு எப்படி நினைக்கலாம்? இனியும் சகித்து வாழ இயலாது என்று நம்பிக்கையிழந்த நிலையில் தன் வாழ்வின் அடுத்த கட்டம் குறித்துச் சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு அவள் வருவதை சிலபோது பெண்களாலேயேகூட சட்டென ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் அளவுக்கு இச்சமூகமும் கலாசாரமும் நம் மனநிலையைக் கட்டமைத்து வைத்திருக்கிறதோ என்ற சிந்தனையோடு அடுத்த கதைக்குள் நுழைகிறேன்.

ஏழாவது கதை, ”ஸெய்னம்பு நாச்சி”. நான் விரும்பி வாசிக்கும் லறீனாவின்  முகநூல் பதிவுகளுக்குள் இடைக்கிடையே கெத்தாக எட்டிப் பார்த்து சமூகத்தின் குறைகளைப் பயமின்றி சுட்டிக் காட்ட முனைகின்ற ஓர்மம் நிறைந்த அதே ஸெய்னம்பு  நாச்சியே தான்.

ஒன்பது வயதான ஓர் ஏழை சிறுமி வளர்வதற்குத் தனது வீட்டுச்சூழலைப் பொருத்தமற்றதாக காணும் ஒரு தாய் தனது உறவுமுறைப் பெண் வீட்டில்  அவளை விட்டுச் செல்கிறாள். அந்த உறவுப் பெண் சிறுமி நஸ்லியாவின் சக்திக்கு மீறிய பல கடினமான வேலைகளைக் கொடுத்து அவளை கொடுமைப் படுத்துகிறாள். அந்தச் சிறுமியின் கஷ்டங்களை, மனவேதனைகளை உணர்ந்து அவளைத் தாயாரோடு வீடு செல்வதற்கு உதவி புரிகிறார், செய்னம்பு நாச்சி. அந்தச் சிறுமிக்காகத் தானும் வீட்டை விட்டு வெளியேறவும் துணிகிறார். தலைநகரில் மலையகச் சிறுமிகள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவது பற்றி நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம்; கொதித்துப் போகிறோம். உண்மையில் இதுவும் ஒருவகை சிறுவர் துஷ்பிரயோகமே. நல்லவேளை, முளையிலேயே கருகிப் போகாமல் தன் கறாரான பேச்சுக்களால் அந்தப் பிஞ்சை மறுபடியும் துளிர்க்கச் செய்கிறார், செய்னம்பு நாச்சியார்.

கதைக்குள்ளே அவர் கலந்து கொள்ளும் பலவகைப்பட்ட உரையாடல்களுக்கு கதைசொல்லியின் புத்திக்கூர்மையும் முற்போக்குச் சிந்தனைகளும் பளிச்சிடும். மார்க்கத்தின் பெயரால் சமூகத்தில் நடக்கும் கேலிக் கூத்துக்கள், மூடநம்பிக்கைகள், அதற்கூடாக நசுக்கப்படும் பெண்களின் மன உணர்வுகள் என வெகு அழகாய்க் கதை நகர்த்தப்பட்டு இருக்கும்.

“கொஞ்சம் உட்டா இவனுவள் அங்ஙீக்கிற மியூஸியத்தையும் இஸ்லாத்துக்கு எடுக்கிறய் எண்டு ஷெல்லி, அந்தப் பொணத்துக்கெல்லாம் ஜுப்பாவும் அபாயாவும் உடுப்பாட்டினாலும் புதினப்படூறதுக்கில்லடா வாப்பா! … இவனுகள் இஸ்லாம் இஸ்லாமுண்டு ஷெல்லி இஸ்லாத்த இந்த ஒலகத்துக்கே லாயக்கில்லாத மார்க்கம் ஆக்கிட்டு வாறானவள். ஏன்ட வாப்பாண்டே! எங்ஙட காலத்திலயிம் இஸ்லாம் இல்லாமையா போச்சி? … எப்ப இந்த குரூப் குரூப்பா தொடங்கி இஸ்லாத்த வித்துத் திண்டு தண்ணி குடிக்கத் தொடங்கினான்களோ, அப்ப புடிச்சது எங்ஙட சமூகத்துக்கு முஸீபத்து.” (ப.128 )

ஸெய்னம்பு நாச்சி என்ன சொல்லவருகிறார்  என்பது புரிகிறது தானே?

அவர் சொல்வதாக இன்னொரு வரியும் வரும். ”பசியோ பட்டினியோ பெத்தபுள்ளவள் உம்மாக்கிட்ட ஈக்கிக்கிறது தான் நல்லம்” (ப.132) என்று. உண்மைக்கு உண்மையான கருத்து அது.

எட்டாவது கதைதான் தஜ்ஜாலின் சொர்க்கம். நூலின் பெயரும் அதுதானே!  தஜ்ஜால் என்பது முஸ்லிம் பண்பாட்டு மரபின் அடியான ஒரு தொன்ம நம்பிக்கை. அதனை நிகழ்வெளிக் கதைக்குள் கொண்டு வந்து இணைத்துள்ள விதம் மிக அற்புதமாக அமைந்துள்ளது. பெச்சிம்மாக் கிழவி சொல்லும் கதையாக தஜ்ஜால் இக்கதைக்குள் மெதுவாக நுழைகிறான்,

‘’… அவன் இப்பவும் ஒலகத்துல எங்ஙியோ ஒரு மூலைல ரகசியமான ஒரு குகைக்குள்ள ஈக்கிறான். அது நெலத்துக்கடியிலயா கடலுக்கு அடியிலயாண்டு தாறுக்குமே தெரியா. அவன அங்க பென்னாம் பெரிய்ய்ய சங்கிலியால கட்டிவெச்சி ஈக்கிது. அவன் எந்த நாளும் ராவெல்லாம் அந்தக் குகைட சுவர நாக்கால நக்கி நக்கி வெளிசாக்கிட்டே வருவானாம். அப்ப…’’ (ப.137) என்று பெச்சிம்மா நிறுத்தும் போது, அவரைக் குழுமியுள்ள சின்னஞ்சிறுகளோடு நாமும் கதைக்குள் ஆழ்ந்து விடுகின்றோம்.

இவ்வாறு, தஜ்ஜால் பற்றிய தொன்மக் கதையையும் இணைத்துக் கொண்டு முனீராவின் கதையை நம் கண்முன் விரிக்கின்றார் கதைசொல்லி. என்ன சொல்வது? சோகம்.. சோகம். முழுக்கதையும் அப்படி ஒரு சோகம். வீட்டில் தன்னோடு வாழும் துணைவியின் அறிவையும் திறன்களையும் அடக்கி நசுக்கிக் கொண்டே உலகம் தன்னை ஒரு முற்போக்குவாதியாகக் கருத வேண்டும் என்று போலிப் பெண் சுதந்திரம் பேசித் திரியும் இரட்டை வேடதாரிகளையும், மார்க்கத்தின் பெயரால் ஊரை ஏய்க்கும் நயவஞ்சகர்களுடைய கபட நாடகத்தையும் தோலுரித்துக் காட்டும் அதேநேரம், பெண் மக்களே ஆனாலும் அவர்கள் தற்சார்புடையோராய் வாழ்வதை ஊக்குவித்து உதவும் முனீராவின் பெரியப்பா போன்ற பரந்த மனதுடைய ஆண்களும் சமூகத்தில் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டி கதாபாத்திர வார்ப்பில் சமநிலை பேணுகிறார் கதைசொல்லி.

இக்கதையில் வரும் முனீரா போன்ற பெண்களின் நிலையைக் கண்டு தானோ அன்றைய பாரதியும், ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ எனப் பாடி இருப்பானோ என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்தது. மறுபடியும் கனவுகள் சிதைக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் மனக்குமுறலாக இக்கதை இருந்த போதிலும், பெச்சிம்மாவின் கதையினூடே சொல்லப்பட்ட தஜ்ஜால், ஒரு கதாபாத்திரமாகக் கதைக்குள் உள்நுழைந்து எல்லோரையும் கிடுகலங்க வைப்பது ஒரு சுவாரஷ்யமான திருப்புமுனையாக அமைகிறது. இக்கதையில், தஜ்ஜால் என்பதும் அவன் காட்டும் சொர்க்கம் என்பதும் கதைக் கருவுக்கு வலுசேர்க்கும் இரு குறியீடுகளாக மாறிவிடுகின்றன. அவற்றைக் கதைக்குள் எடுத்தாண்டு மிகச் சுவாரஷ்யமாகக் கதையை வளர்த்துச் செல்லும் அவரது புனைவு உத்தி கூர்மை பெற்ற ஓர் அருமையான கதையாக இத்தலைப்புக் கதையினை அடையாளப்படுத்தலாம்.

இக்கதையில் முனீராவின் குடும்ப வாழ்வில் நடக்கக்கூடாத அசம்பாவிதங்கள் நடந்து முடிந்த பின்புதான், தஜ்ஜாலின் பிரவேசம் கதையில் இடம்பெறுகிறது. முதலாவது தரம் இக்கதையை வாசித்த போது, இவ்வளவுக்குப் பின்னும் முனீரா ஏன் பழையபடி தஜ்ஜாலின் சொர்க்கத்தை உண்மை என நம்பி மீண்டும் போகிறாள் என்ற ஒரு கேள்வி மனதில் தோன்றவே செய்தது. மேலும் இருமுறை வாசித்த பின்புதான் கதைசொல்லி தன் கதையில் உளவியல்சார்ந்த இயல்புநிலையை உல்வாங்கிக் கதையை விபரித்துள்ளார் எனப் புரிந்தது. அதாவது, பொதுவாக ஒருவருக்குத் தோன்றும் கனவுகள், அதில் வரும் நபர்களோ பிறவோ அவரது வாழ்வில் அவர் ஏலவே கண்ட, அவரது மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே தோன்றும். அந்த அடிப்படையில், பெச்சிம்மாவின் கதையைக் கேட்டபடியே கண்ணயர்ந்துவிடும் முனீராவுக்கு, அவள் அதுவரை கேட்ட, அதேவேளை ஏலவே தான் சமயபாட வகுப்பில் கற்றிருந்த தஜ்ஜால் பற்றிய கதையின் நீட்சியாகக் காட்சிகள் கனவாக நீள்கின்றன. இப்பின்னணியில் அவளின் மனதின் அடியாழத்தில் ரணமாய்ப் பதிந்த சொந்த வாழ்வின் துயரங்களும், அதனோடு சம்பந்தப்பட்ட நபர்களும் உயிர்ப்பாத்திரங்கள் போல அங்கு உலாவருவதை கதைசொல்லி கச்சிதமாகப் படைத்துள்ளதோடு, தொலைவில் கேட்கும் மகளுடைய குரல் முனீரா அதுவரை கண்டுகொண்டிருக்கும் உலகுக்கு வெளியில் ஒலிப்பதுபோல் காட்டி, நம் ஐயத்துக்கு விடையளித்தும் உள்ளார். இந்தக் கதையின் சம்பவ உருவாக்கம்,  தொன்ம நம்பிக்கையோடு கலந்து அவற்றைச் சுவைபட இணைத்துள்ள விதம், கவித்துவ வீச்சுடன் இயங்கும் மொழிநடை என லறீனாவின் படைப்பாளுமைக்கு அணிசேர்க்கிறது, ‘தஜ்ஜாலின் சொர்க்கம்’.

அடுத்து, ஒன்பதாவது கதைக்குள் நுழைகிறேன். ஆத்தா. கதை சொல்லி பிறந்து வளர்ந்த மண்ணில், மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், அவர்களின் கொண்டாட்டங்கள் என்பவற்றைப் பற்றிப் பேசும் கதை. இதில் உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக மலையகமே உலகம் என வாழும் ஆத்தாக் கிழவியும், தோட்டப் பிள்ளைகளும், அவர்களின் கல்விக்காகவும் அவர்களுடைய உள்ளார்ந்து ஒளிரும் கலைத் திறமைகளை வளர்ப்பதற்காகவும் பெரிதும் பாடுபட்டு வருபவருமான தினகர் மாஸ்டரும் என நம் மனதில் நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். காட்சி, வர்ணனைகள், பாத்திர உரையாடல்கள் வெகு இயல்பாகவும் உயிரோட்டம் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மது போதை தரும் அழிவுகளும், அதை எதிர்க்க ஆத்தா செய்யும் அளப்பரிய தியாகமும் வியக்க வைப்பவை. பொன்னாத்தாக் கிழவியின் பாத்திர உருவாக்கம் மிக வலுவாகவும் வெகு இயல்பாகவும் அமைந்திருப்பதோடு, எந்த ஒரு சமூக மாற்றத்துக்குமான வித்து முதலில் அவரவர் வீட்டுக்குள் விதைக்கப்படுதல் வேண்டும் என்ற ஆழமான செய்தியை இக்கதை அனாயாசமாகச் சொல்லிச் செல்கிற அழகை மிகவும் இரசித்தேன்.

அதேபோல், இக்கதையில் இடம்பெறும் மகிஷாசுர வதம் கூத்தும் பாடலும் காட்சியும் மிக அருமை. கிராமியக் கலையான கூத்து வடிவத்தினை சமூக மாற்றச் சிந்தனையை விதைப்பதற்கான கருவியாக முன்னிறுத்தி இருப்பதும், காலங் காலமாக மலையக மக்களை ஏமாற்றிச் சுரண்டும் அரசியல்வாதிகள், அவர்களுக்குத் துணைபோகும் அடிவருடிகள் குறித்த சமூக விமர்சனத்தை ஒருவித எள்ளல் பாணியில் முன்வைக்கும் கதையாக இது அமைந்திருப்பதும் சிறப்பு.

“அடக்குமுறை யாளர் காட்டில்
அடைமழை பொழிந்ததை – இனித்
தடந்தெரியா தழிப்பதற்கு
தேவி நானும் வருகிறேன்
டண்டணக்க டணக்க டணக்க
டண்டணக்க டணக்கடா
இருளடர்ந்த நாட்டில் தீபம்
ஏற்ற நானும் வருகிறேன்
பொருளிருக்கும் திருடர்கொட்டம்
போக்க இன்று வருகிறேன்.”
டண்டணக்க டணக்க டணக்க
டண்டணக்க டணக்கடா

பெண்குரல் உடுக்கொலியோடு ஓங்கியொலித்து ஓய, அதைத் தொடர்ந்து கோரஸ் ஒலித்தது:

”மதுவரக்கன் ஒழிகவே!
மலைநாடு உயர்கவே!
புதுபுரட்சி ஓங்கி வாழ்வு
புதிய விடியல் காணவே!
டண்டணக்க டணக்க டணக்க
டண்டணக்க டணக்கடா
வருக காளி வருகவே!
பருகத் தீயர் உதிரமே!”

(ப.165) என்ற வரிகளை வாசித்துச் செல்கையில் ஒருவித உத்வேக உணர்ச்சி தோன்றி மயிர்க்கூச்செறிவதான சிலிர்ப்புணர்வு.

“ஆமாடி, எவெ வூட்டுக் குடியெக் கெடுத்தாச்சூ, எவெளெவளுவ தாலி அறுந்தாலூ, தங்கட அடிமடி ரொம்பினாச் செரின்னு நெனக்கிற பொணந்தின்னிக் கூட்டத்துக்கு, மக்களப் பத்தி என்னா அக்கற இருக்கப் போவூதூ?”

“அடியாத்தீ! நம்ப பொன்னாத்தாக் கிழவிக்கு கற்பூரப் புத்திடி! பாரே, எம்புட்டு செரியா விசயத்தப் புடிச்சிக்கிட்டான்னு!” (ப.164) என்று மலையகப் பேச்சுமொழி கொஞ்சி விளையாடும் ‘ஆத்தா’வின் மலையக மண்வாசனையில் மயங்கியவாறே இறுதிக் கதையான புளியமரத்துப் பேய்களுக்குள் நுழைகிறேன்.

ப்பாஹ்! என்ன சொல்வது? எத்தனை தடவை வாசித்தாலும் மறுபடியும் மறுபடியும் வாசிக்கத் தூண்டும் அற்புதமான ஒரு கவிதை மொழியில் சின்னப் பெண்ணொருத்தியின் மன ஓட்டத்தை அடுக்கிக் கொண்டே போகின்றார், கதைசொல்லி. சொந்த வீட்டுக்குள், குடும்பத்தவர்களால், அண்டை அயலவர்களால் பெண் என்ற ரீதியில் அடையும் இன்னல்கள், சுரண்டல்கள் தாம் எத்தனை! எத்தனை! மொத்த சோகங்களுக்கும் வடிகாலாய் தன் ஆயிரம் கரம் கொண்டு அவளை அணைத்து ஆறுதல் கொள்ளச் செய்யும் புளியமரம் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று. பின்நவீனத்துவப் புனைவுக் கூறுகளைக் கொண்டமைந்த இக்கதை பலவகையிலும் தனித்துவமான ஒரு படைப்பு எனலாம்.

‘’புளியமரம் அவளை வாஞ்சையோடு கூவி அழைப்பதான உள்ளுணர்வு அவளுக்குள். தாயைப் பிரிந்த பிள்ளையைப் போல் இரு கைகளையும் விரித்து புளியமரத்தின் அடியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சில கணங்கள்வரை கண்மூடிக் கிடந்தாள். சற்றைக்கெல்லாம் கோப்பி மரக்கிளையில் தாவி ஏறி, புளியமரத்தில் தொற்றிக் கொண்டாயிற்று. கிளிகளுக்கும் குயில்களுக்கும் போட்டியாக அவள் வாய்விட்டு உல்லாசமாகப் பாடத் தொடங்கிவிட்டாள்.’’ (ப.180)

”மெல்ல மெல்ல அவளுடல் நெகிழ்ந்து உருகத் தொடங்கிவிட்டது. திரி பற்றியெரியும்போது மெழுகு உருகியுருகித் துளிகளாய் வழிவதுபோல அவள் உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றாய் கரைந்து கிளைகளினூடே வழியத் தொடங்கிவிட்டன. ‘இப்படியே முழு உடலும் கரைந்து தான் அழிந்துவிடுவேனா’ என்று அவள் அஞ்சத் தொடங்கியதும், புளிய மரத்தின் கிளைகள் நீண்டுவந்து அவளது அங்கங்களைத் தம்மோடு பிணைத்துக் கொள்ளத் தொடங்கின. சதையும் கிளையும் கலந்து அவள் மரமா, மனுஷியா என்று பிரித்துணர முடியாத ஓர் அபூர்வ உயிரியாகிவிட்டாள். ‘’ (ப.189)

என்ற சித்திரிப்புகளினூடே தாயன்பு கிடைக்காத சின்னஞ்சிறிய மனது, தாயின் மடியாகப் புளியமரத்தை வரித்து அணைத்துக் கொள்வதும், கொஞ்சி விளையாடுவதும், தன் உணர்வுகளோடு ஒன்றிவிட்ட அம்மரத்துடன் ஊனும் உயிரும் இரண்டறக் கலந்துவிடுவதான கற்பனையில் மிதப்பதுமாகத் தீட்டப்பட்டுள்ள அபூர்வமான ஒரு கதை, ‘புளியமரத்துப் பேய்கள்.

ஓர் இளஞ்சிறுமியின் கொண்டாட்டங்கள், கள்ளங்கபடமோ சமூகம் கற்பித்த வரையறைகளோ அறியாமல் காடு மேடெங்கும் சுற்றித் திரியும் துள்ளாட்டம், குறும்புத்தனங்கள் என வெகு சுவாரசியமாக நகரும் கதையெங்கும் ‘குட்டி’யே நிறைந்து இருக்கிறாள். பேய்கள் வாழ்வது புளியமரத்தில் அல்ல, வீடுகளில்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்லும் அருமையான படைப்பு.

”அந்த உருவம் சற்று முன்னால் வந்தபின்தான் கைகளில் பால் போத்தல்கள் நான்குடன் சோமபால நடந்துவருவதைக் கண்டாள். அவள் மனதுக்குள் குறும்பு கூத்தாடத் தொடங்கிவிட்டது. ‘இரி ஒனக்குச் செய்யிறன் வேல!’ என்று கருவியபடி மரக்கிளையில் நிமிர்ந்து வசதியாக அமர்ந்துகொண்டாள். முதுகுக்குப் பின்னால் விரிந்திருந்ததலை முடியை முன்னால் இழுத்து முகத்தை மறைத்துத் தொங்கவிட்டாள். கைகளை இருபுறமும் விரித்து வெள்ளைத் தாவணியை மேலே போட்டுக்கொண்டாள். ஏதோ யோசனையில் நடந்துவந்த சோமபால புளியமரத்தை நெருங்கியதும் வெள்ளை நிறத்தில் ஏதோ அசைவதைக் கண்டு துணுக்குற்றான். முதல் நாளிரவு குடித்திருந்த ‘கசிப்பு’ தந்த மப்பு முற்றாக நீங்காத விழிகளால் மறுபடியும் புளியமரத்தை ஏறிட்ட அதேகணத்தில்… ‘ஹோ!!!!’ என்று அடித்தொண்டையால் கத்தினாள் குட்டி. அடுத்தகணம், சோமபாலவின் கையில் இருந்த நான்கு பால் போத்தல்களும் நழுவிக் கீழே விழுந்து உடைந்தன.’’ (பக்.90-91)

என வாழ்வின் எல்லா இன்னல்களையும் எதிர்கொள்ளத் துணிந்த அந்தச் சின்ன குட்டியின் தீமைக்கெதிரான எளிய எதிர்ப்புணர்வு வெளிப்படும் பாங்கு மிகவும் இரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. கலகலவென்ற வாய்கொள்ளாத சிரிப்போடு முடிகிற இந்த அற்புதச் சொல்லோவியம், லறீனா பத்து வருட கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதைகளில் அதிசிறந்த கதையாகத் தோன்றுகிறது. இக்கதையில் மூவினத்து மக்களையும் உள்ளடக்கியதாக அமைத்திருப்பதும் சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் கலந்து வாழும் ஒரு கிராமிய வாழ்வினைச் சுவைபட கண்முன் நிறுத்தி இருப்பதும் மற்றுமொரு சிறப்பு எனலாம். லறீனாவின் பத்து கதைகளிலும் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை இது என்றே சொல்லலாம். இந்தக் கதையைப் படித்து முடித்தபோது, லறீனா இத்தோடு நிறுத்திவிடாமல், இதையொத்த கதைகள் பலவற்றை எதிர்காலத்தில் இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னுள் மேலோங்கியது.

இத்தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்றாலும், அவற்றில் அனேகமான கதைகளை வாசிக்கும்போது ஒரே பெண்ணின் பல்வேறுபட்ட துயரங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் செல்வதான ஒரு பிரமை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அனேகமான கதைகளில் கதாநாயகியின் பெயரும் ‘நிஸா’ – பெண் – என்பதாகவே அமைந்திருப்பது அந்தப் பிரமைக்கு மேலும் வலுசேர்க்கிறது. இது வாசகர்களை ஒருவகையான சலிப்புணர்வுக்குள் அல்லது அயர்ச்சிக்குள் தள்ளவும்கூடும். எனினும், பெண்ணின், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் அகவலிகளை இந்தளவுதூரம் ஆழமாகப் பேசிய வேறொரு சிறுகதைத் தொகுதி ஈழத்தில் எழுந்திருக்குமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு, இலகுவில் யாரும் உய்த்துணரவோ பேசவோ முற்படாத பெண் மனதின் ஏக்கங்கள், அகவலிகள், நிராசைகளை மனதை அப்படியே ஈர்த்தெடுத்துக் கட்டிப் போடும் கவித்துவமான நடையில் இக்கதைகள் பதிவு செய்துள்ளன என்றால், அது மிகையன்று.

கண்ணீரும் விசும்பலும் ஆவேசமும் ஆத்திரமும் ஆற்றாமையும் ஒப்பாரியும் என இவ்வொற்றைப் பெண்குரல் சொல்லிக் கொண்டே போகும் இக்கதைகளினூடே ஒரு வரலாறு மிக அழுத்தமாய்ச் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. இலங்கை இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஏபிஎம் இத்ரீஸ் அவர்கள் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பதுபோல், ‘தன் காலத்தை அறிந்துகொள்ள விழையும் அழைப்பாளன், ஆணாதிக்கத்தின் எண்ணற்ற முகங்களைப் புரிந்துகொள்ள முனையும் பெண்ணிலைவாதி போன்றோர் லறீனாவின் கதையுலகத்தைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது’. இச்சமூகம், அதற்குள் அடங்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் மீளவும் மீளவும் படிக்க வேண்டிய பெண்ணின் வரலாறு இது. அதனூடே தான் தம்முள்ளே சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரவும், பால்நிலை சார்ந்த பாரபட்சங்களாலும் ஒதுக்குதல்களாலும் சிதைந்துபோன சமூகக் கட்டமைப்பை, ஆண் பெண் சமத்துவ உறவைக் கட்டியெழுப்பவும், சமூகத்தில் புத்தொளி பரப்பவும் முடியும். சோதனை பல கடந்து வரலாறு ஆகிப்போன இப்பெண்குரல் மேன்மேலும் பல சாதனைகள் படைத்திட என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

எஸ். ஃபாயிஸா அலி-இலங்கை

 

(Visited 259 times, 1 visits today)