ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 03-றியாஸ் குரானா

தொடரை வாசிக்காத வாசகர்களாக :

அங்கம் 01

ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 01-றியாஸ் குரானா

அங்கம் 02

ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 02-றியாஸ் குரானா

000000000000000000000000000000000000000000000

தொண்ணூறுகளில்தான் அதிகமான கவிஞர்கள் எழுத வருகின்றனர்.  புலிப் போராளிகள், முஸ்லிம் தேச கவிஞர்கள், புலம்பெயர் கவிஞர்கள், ஈழத்துத் கவிஞர்கள் (தமிழ்த் தேசியவாதக் கவிஞர்கள்) பெண்ணிய நிலையில் எழுந்த கவிஞர்கள், அத்தோடு அறுபதுகள் தொடங்கி இன்னும் தொடர்ந்து வரும் கவிஞர்கள் எனப் பெரும் பகுதியினர் களத்தில் இருக்கும் காலமது. இக்காலகட்டத்தில் தான் பெரும் கவிஞர்களாகச் சோலைக்கிளியும், சேரனும் வருகின்றனர். அதைத் தொடர்ந்து திருமாவளவன், கருணாகரன், சுகன், சக்கரவர்த்தி, செல்வம் லோகநாதன், கற்சுறா, அஷ்ரப் சிஹாப்தீன், நிலாந்தன், எஸ்.போஸ், என். ஆத்மா, றஷ்மி, மஜீத், ஓட்டமாவடி அறபாத், ஜபார், வாசுதேவன், எம்.ஐ.எம். ஜாபிர், பா.அகிலன், இ.சு.முரளிதரன், அஸ்வகோஷ்,  சித்தாந்தன், குணேஸ்வரன், நட்சந்திரன் செவ்விந்தியன், த. மலர்ச்செல்வன், ஏ.ஜி.எம். சதக்கா, கதிர், றிஸ்வியு முகம்மது நபீல், முகமட் அபார், அலறி, எஸ்.நளீம் , கிண்ணியா சபருள்ளா, ஜமீல், முல்லை முஸ்ரிபா, இளைய அப்துல்லாஹ், டீன் கபூர், கே.முனாஸ்,எஸ்தார், வே.தினகரன் இப்படி நீளுகிறது அந்தப் பட்டியல்.

மேலும், பெண்கள் இலக்கியத்தில் பங்களிப்புச் செய்தார்கள் என்ற மேம்போக்கான நிலை மாற்றமடைந்தது. இக்காலகட்டத்தில் பெண்ணியப் பார்வையின் பின்னணியில் ஏராளமானோர் எழுத வந்தார்கள். மைதிலி, ஆகர்ஷியா, ஆழியாள், சலனி, அனார், ஃபாயிஸா அலி, பெண்ணியா, பஹீமா ஜஹான், தர்மினி, சுல்பிகா, மசூறா ஏ. மஜீட் ,  சிவரமணி, ஔவை என அந்தப் பட்டியலும் நீண்டு செல்கிறது. இதிலுள்ளவர்களில் அநேகம் பேர் இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்னரே மேல்நிலைக்கு வந்தனர் என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று.

தொண்ணூறுகளில் எழுத வந்த பெரும்பான்மையினரிடம் ஏலவே, ஈழத்து நவீன கவிதை என வரைறுக்கப்பட்டதும் தனித்தன்மைகள் எனக் கூறுப்பட்டதுமான பண்புகள் மருந்துக்குக் கூட அவர்களின் கவிதைகளில் இருக்கவில்லை. செய்யுள் என்றால் என்னவென்றெ தெரியாதவர்களாகவே அநேகர் இருந்தனர்.  ”பேச்சு நடையா, ஆளை விடுங்க சாமி!” என்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டமே கவிதைச் செயற்பாடுகளில் இறங்கியது. இந்தப் பரிதாபகரமான நிலையையிட்டு ஈழத்து நவீன கவிதையின் தனித்தன்மைகளைச் சிலாகித்து வளர்த்தெடுக்கத் துணிந்து நின்ற நுஃமான், சிவலிங்கம் போன்றவர்களும் காட்டிய எதிர்வினை எத்தகையது என்பதைக் கவனித்தால் ஆச்சரியமே எஞ்சும். அதற்கும் தமக்கும் இடையில் எந்தத் தொடர்பும் அற்றவர்கள் போலும் அதனை அவர்கள் மிக இலகுவாகக்  கடந்து சென்றனர். அப்படி கடந்து செல்லவே அவர்களால் முடியுமாகவும் இருந்தது. சூழல் அதற்கான அழுத்தத்தைத் தன்னோடு வைத்திருந்தது.

பிச்சமூர்த்தி வழியிலும், வானம்பாடிகளின் பண்பிலும் வளர்ந்த எடுத்துரைப்பு முறைகளின் ஒரு கூட்டுக் கலவையாக அளவு விகிதத்தில் வேறுபட்ட எடுத்துரைப்பு முறைகளை அனைவரும் கையேற்றிருந்தனர். அத்தோடு, சோலைக்கிளியை அபிநயிக்கும் பல கவிஞர்களும் தோற்றம் பெற்றனர். காலம் செல்லச் செல்ல அபிநயங்களைக் கைவிட்டுத் தனியான திசைகளில் முடியுமானவரை பயணிக்கும் வழிமுறைகளைக் கவனம் கொண்டனர். சிலருக்கு அது கைகூடியது. சிலருக்கு அது கைகொடுக்கவில்லை.

ஜபார் – குறைந்த சொற்கள், தேர்ச்சியான எடுத்துரைப்பு முறை, எந்தப் பிசிறலுமற்ற கவிதை வடிவமைப்பு என்பதோடு கவிதையை எடுத்துரைக்கும் பாணி என்றவகையிலும் அவர் முக்கியமானவர்.

கற்சுறா பற்றி விரிவாக ஏற்கெனவே எழுதியிருப்பதால் இங்கு குறிப்பிடப்படவில்லை.  நிலாந்தன்- மண்பட்டினங்கள் என்ற நீளமான கதைக் கவிதையை, அரசியல் குறுங்காவியத்தை நவீன கவிதை மொழியில் முன்வைத்ததினூடாக முக்கியமான கவிஞராக அறியப்பட்டவர். நட்சத்திரன் செவ்விந்தியன்- மிகச் சாதாரணமான சொற்களையும், வசன அமைப்புகளையும் கொண்டு உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையில் ஓர் இணைப்பை ஏற்படுத்தி, பிரதியினுள்ளே கதையாடும் சம்பவங்களினூடாக நம்மில் தொற்றிக்கொண்டு ஒரு கவிதை அனுபவத்தைத் தருகிறது என்ற வகையில் முக்கியமாகிப் போகிறார்.

திருமாவளவன் – மிகச் சிறந்த கவிஞராக உருப்பெரும் காலம் இதுதான்.  அதிகார மையங்களுக்கு எதிரான எதிர்க்குரல்கள், புலம்பெயர் தேச அனுபவங்கள் போன்றவற்றை எளிமையான சொல்முறையில் கவித்துவமாக மாற்றிவிடும் ஆற்றல், அதிகமாக எழுதுபவர் என்ற பல காரணங்களால் முக்கியமானவராக மாறிவிடுகிறார்.

புதிய எடுத்துரைப்பு முறையைப் பயன்படுத்துவதால் றஷ்மியும் தனித்துத் தெரிகிறார். அஸ்வகோஷ் தனது கவிதை அக்கறை கொள்ளும் பார்வையினூடாக மிக மிக முக்கியமானவராகிறார். இவர் அதிகம் எழுதவில்லை என்பதே அவர் ஒரு பெரும் கவிஞராக உருவாகி நிற்காமைக்கான ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.  போரை மறுமதிப்பீடு செய்யும் புலத்திலிருந்து எழும் அவருடைய கவிதைகள் புதிய அனுபவ வெளியை உருவாக்கி நிற்கின்றன என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை. அவரின் குரலிலேயே ஒரு கவிதையை இங்கு பார்க்கலாம்.

”உங்கள் கரங்களில்
உயிருடன் இருந்த
ஒவ்வோர் கணத்திற்கும்
அர்த்தம் கோருவேன்

ஒவ்வொரு கொலையையும்
மகிழ்ந்து சொன்னபோது
மனிதர்கள் இறந்து போனதாகவே
எனக்குக் கேட்டது

உங்கள் வெற்றிகளைக்
கொண்டாட என்னால் முடியவில்லை
நீங்கள் சிரிக்கத்தானும்
ஒரு பகிடி விட முடியவில்லை”

அஸ்வகோஷ் (1990)

அஷ்ரப் சிஹாப்தீன் ‘ஸெய்த்தூன்’ என்ற மிகச் சிறந்த அரசியல் கவிதையை எழுதியதினூடாக முக்கியமானவராகிறார். தொண்ணூறுகளில் அதிகப் பெண்கள் எழுதினாலும், ஆழியாளும், ஆகர்ஷியாவும் மெலிதாக வெளித் தெரிந்தாலும், 2000 ஆம் ஆண்டுகளில் தான் தனித்து வெளியே தெரிகிறார்கள். இது அனைத்துப் பெண் கவிஞர்களுக்கும் பொருந்தக் கூடியது. அதைப் பின்னர் பார்க்கலாம்.

ஏனையவர்களும் சிறந்த பல கவிதைகளை எழுதி தத்தமது இடங்களை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வெளிவந்த, ‘நிறப்பிரிகை’ என்ற பின்நவீனத்துவச் சிற்றிதழின் தாக்கத்தில் ஈழத்திலும் பின்நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் தொடங்குகின்றன. அநேகமாக இது உள்வட்ட உரையாடல்களாகவே இருக்கின்றன.  அந்த உரையாடல்களைச் செய்பவர்களாகவும், பின்நவீனத்துவத்தைக் கற்றுக்கொள்பவர்களாகவும், மிஹாத், மஜீத், றியாஸ் குரானா போன்றவர்கள் தீவிரமான இலக்கியச் செயற்பாடுகளில் இறங்குகின்றனர்.  தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கும் நூல்களைத் தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகின்றனர். இவர்களில் ஆழ்ந்த ஆங்கிலப் புலமையுள்ளவராக மிஹாத் ஒருவரே இருக்கிறார்.  தொண்ணூறுகளின் கடைசிப் பகுதிகளில் புலம்பெயர் தேசத்திலிருந்தும் பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என கவனிப்புக்களைச் செய்யும் எக்ஸில் சிற்றிதழ் வெளிவருகின்றது.

95, மற்றும் 96ம் ஆண்டுகளில் ஈழத்தில் சிறு குழுவினரிடம் உருவாகியிருந்த பின்நவீனத்துவ ஆர்வம் ஆரம்ப நிலையைக் கொண்டிருந்தாலும், தேடல்களினூடாகவும், பயில்தல்களினூடாகவும் ஒரு வகைப் புரிதலை அவர்கள் எட்டியிருந்தனர். தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் சிற்றிதழ் ஒன்றைக் கொண்டுவரும் எண்ணம் இருந்தும் பொருளாதார நிலைமைகளினால் அம்முயற்சி பிந்திப் போனபடியே இருந்தது.  தான் புரிந்து கொண்ட வகையில் பின்நவீனக் கவிதைப் பிரதிகளை உருவாக்கும் முயற்சியில் றியாஸ் குரான இறங்கியிருந்தார்.  தமிழின் விரிந்த பரப்பிற்குள் நாவல், சிறுகதை போன்ற வடிவங்களிலும், அதன் எடுத்துரைப்பு முறைமைகளிலும் நிகழ்த்தப்பட்ட பரிசோதனை முயற்சிகள் கவிதைகளில் நிழ்ந்துவிடவில்லை என்பதும் கவனிக்கத் தக்க ஒன்றே. கவிதை உருவாக்கத்தின் அசாத்தியங்கள் குறித்து அக்கறை செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், கவிதை அக்கறை கொள்ளும் விஷயங்களும், எடுத்துரைப்பு முறைகளும் மாற்றத்திற்குள் வந்திருந்தன.  96 ஆம் ஆண்டு விபவி நடாத்திய கவிதைப் போட்டி ஒன்றுக்கு அனுப்பப்பட்டு இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்று தெரிவான றியாஸ் குரானாவின் ‘தமிழின் கூட்டுக்குப்போன காலைதினம்’ என்ற கவிதையே ஈழத்தில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட, பின்நவீன தாக்கத்தில் எழுதப்பட்டு வெளியான முதலாவது கவிதை என்று சொல்லலாம்.

ஆனால், அந்தக் கவிதையின் கீழே எழுதியவராகப் பெயரிடப்பட்டிருந்தது றியாஸ் குரானாவின் இயற்பெயரே ஒழிய அவர் ஏற்றுக்கொண்ட புனைப்பெயரல்ல.  புனைப்பெயரை சரிநிகர் குறித்துக்காட்ட மறந்துவிட்டது என்பது மேலதிக கொசுறுத் தகவல்.  அதன் பிறகு மல்லிகை உள்ளிட்ட சிறு சஞ்சிகைகளுக்கும், சரிநிகரிற்கும் பல கவிதைகள் அனுப்பப்பட்டும் பிரசுரிக்கப்படவில்லை. அந்தக் காலங்களில் வெளிவந்த கவிதைகளிலிருந்து இவை வேறுபட்டவையாக இருந்ததும் பிரசுரிக்கப் படாமைக்கான காரணங்களில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவை ஏன் பிரசுரிக்கப்படவில்லை என்று சொல்லப்படவோ, குறைந்தபட்சம் அந்தக் கவிதைகள் எழுதியவருக்கே திருப்பியனுப்படவோ இல்லை.  இத்தனைக்கும் றியாஸ் குரானாவின் சமவயதுடையவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவரும், நண்பரும் கவிஞரும், ஓவியருமான றஷ்மி அக்காலகட்டத்தில் சரிநிகரில் கடமையாற்றினார் என்பது மேலதிகத் தகவல்.

மிஹாத், மஜீத், றியாஸ் குரானா போன்றவர்களிடையே சிறுபத்திரிகை ஒன்றைக் கொண்டுவருவதன் தேவை உணரப்பட்டு தீவிரமான உள்வட்ட உரையாடல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. அதேநேரம், ஈழத்து நவீன இலக்கியம் என்ற பரப்பிலுள்ள கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், இலக்கிய வரலாறு என்பன குறித்து விரிவாகப் பயில்வதோடு, தென்னிந்திய நவீன இலக்கியங்களையும் பயிலத் தொடங்கினார்கள். வேறு எந்த வேலைகளையும் கவனத்திற்கொள்ளாது இந்தப் பயில்தலிலேயே சுமார் ஆறு ஆண்டுகளைத் தொடர்ச்சியாகச் செலவழித்துக் கொண்டிருந்தார் றியாஸ் குரானா. மிஹாத் ஆங்கிலத்தில் பின்நவீனத்துவம் தொடர்பிலான பயில்தலில் இறங்கி கணிசமான புத்தகங்களைப் பயின்றிருந்தார்.   அந்த வாசிப்புக்கள்  பற்றிய உரையாடல்களும் மிஹாத், மஜீத், றியாஸ் குரானா உள்ளிட்ட சிறிய உள்வட்டத்தில் தீவிரமாக அலசப்பட்டன. இப்பின்னணியில் றியாஸ் குரானா, மஜீத் போன்றவர்கள் சில புனைபிரதிகளை உருவாக்கியிருந்தனர். அவர்கள் உருவாக்கிய புனைபிரதிகள் 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர்களாலேயே வெளியிடப்பட்ட “’பெருவெளி’ சஞ்சிகை வழியாகவே பிரசுரிக்கப்பட்டு வெளியே வந்தன. தொண்ணூறுகளின் பிற்பாதியில் புலம்பெயர் சூழலிலும், தாயகத்திலும், ஒரே காலத்தில் பின்நவீனத்துவம் நுழைந்திருந்தாலும், புலத்தைவிடப் பிந்தியே தாயகத்தில் வெளிப்பட்டது. அதற்கு பொருளாதாரம் மிக முக்கிய காரணியாக அமைந்தது என்பதை இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும்.  ஆனால், தென்னிந்தியாவில் தொண்ணூறுகளின் முற்பகுதியிலே பின்னவீனப் போக்குகள் உருவாவதற்கும் மிக எளிதாக அங்கு தமிழ் மொழியிலும், சிந்தனைகளிலும் செல்வாக்குச் செலுத்தவும் முடிந்தமைக்கான காரணம், தென்னிந்திய நவீன இலக்கியம் அந்நியமாதல், அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற பல கோட்பாடுகளை ஏற்றும், மறுத்தும், விவாதித்தும் அதனடியாக இலக்கியப் புனைவுகளை உருவாக்கியும் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியிருந்ததுமே எனலாம். ஆனால், ஈழத்தில் நிலைமை அப்படியான ஒன்றல்ல. மிகச் சிக்கலானதும், இறுக்கமானதுமான ஒரு பிடிக்குள் நவீன இலக்கியம் இருத்தி வைக்கப்பட்டிருந்தது.  எந்தப் புதிய கருத்து நிலைகளும் அண்ட முடியாதபடி பழங்காலத்தில் குமர்பிள்ளைகளை வீடுகளுக்கு பூட்டி மறைத்து வைப்பதைப் போன்று கட்டிக் காப்பாற்றிப் பாதுகாத்து, பலமான இலக்கியப் பயில்வான்கள் காவலுக்கு நின்றனர்.  அதாவது, இலங்கையைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட ஒரு வகை இலக்கிய அடிப்படைவாதம் உருவாகி இருந்தது என்றே சொல்லலாம்.

இருபத்தியோரம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளான இரண்டாயிரமாம் ஆண்டு முற்றிலும் புதிய மாறுதல்களையும், திருப்பங்களையும் தமிழ் மொழிப் பரப்பிற்கு கொண்டு வருகிறது. சமூகக் களத்திலும், அரசியல் களத்திலும், இலக்கிய வெளிகளிலும் பல புதிய மாற்றங்கள் உருவாகின்றன. முஸ்லிம்களும் ஒரு தனியான அரசியல் சமூகம்தான், அவர்களுக்கென்றும் பிரத்தியேகமான அரசியல் அபிலாஷைகள் உண்டு. அவர்களுக்கும் ஓர் அரசியல் அதிகார அலகு அவசியம் என்ற கோஷத்தோடு உருவான முஸ்லிம் காங்கிரஸ், புலிகளின் அதிகார சக்தியை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டும், அபிவிருத்தியின் அவசியத்தை முன்வைத்துக் கொண்டும் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் , தனித்துவத்தை விட்டுவிட்டு பாசிச அரசின் பங்காளியாக மாறியிருந்த போதும், அதன் தலைவர் இறந்த பின்னரான இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயே முஸ்லிம்களிடம் பலமான அதிருப்திகள் வெளிப்படத் தொடங்கின. அந்தக் கட்சி உருவான சமூகக் காரணங்கள் அனுபவமாக எஞ்சியிருந்த நிலப்பரப்பிற்கு வெளியே புதிய தலைவர் உருவானதும், வடகிழக்கு சமூகப் பிரச்சினைகளின் அனுபவங்களை நேரடியாகச் சந்திக்காத ஒருவரிடம் கட்சி கைமாறிப்போதல், அதனால் ஏற்பட்ட அதிருப்திகள், சலிப்புகள் முதலான மிகச் சிக்கலான சமூகச் சூழமைவு தோற்றம் பெறுகிறது.

அதுபோல், தமிழ்த் தேசியவாதத்திற்கான மிகப் பெறுமதியான தீர்வாக சமஷ்டி ஆட்சி கிடைக்கப்போகிறது என்று நம்பிய ரணில் – பிரபாகரன் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைமையில் நடைபெறுகிறது.  பாசிசப் புலிகளைப் பொருளாதார ரீதியிலும், கருத்தியல் ரீதியிலும் வழி நடாத்தும் சக்தியாக புலம்பெயர் சமூகம் புதியதோர் அதிகார சக்தியாக மாற்றமடைகிறது.  முன்பெல்லாம் வெளியே தெரியாவண்ணம் புலிகளின் கண்ணசைவிற்குத் தலையாட்டி வழிநடந்த தமிழ் ஜனநாயக வழி அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே அமைப்பாகவும், அதேநேரம் வெளிப்படையாகவும் புலிகளின் கருத்துக்களுக்கேற்ப “ஓதி உணர்ந்து ஒழுகும்”  ஜனநாயகச் செயற்பாட்டாளர்களாகவும் மாற்றமடைகின்றன.

முஸ்லிம் அரசியல் கட்சிக்கு வெளியே சிவில் சமூகத்தைப் பாரியளவில் ஒன்று திரட்டும் வலிமையை பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திக் காட்டுகின்றனர். அதனூடாக முஸ்லிம்கள் தனியான தேசியம் என்ற கருத்தை வலியுறுத்தும் ‘ஒலுவில் பிரகடனம்’ நடைபெறுகின்றது.

அவ்வாறே, கட்டிறுக்கமானதும், மிகப் பலம் பொருந்தியதுமான புலிகள் அமைப்பு உடைகிறது. கிழக்கென்றும் வடக்கென்றும், தொண்ணூறுகளில் உடைந்த முஸ்லிம் அரசியல் அபிலாஷகள் என்றும்,  தமிழ்த் தேசியவாதத்திற்குள் வரையறுக்கப்பட்ட நிலவியலும், கருத்தியலும் மூன்றாக உடைந்து கண்ணெதிரே உருவாகி நின்றது.  அதேபோல், வடகிழக்கென்று தற்காலிகமாக இணைந்திருந்த ஒரே அதிகார, நிர்வாக நிலப்பரப்பு சட்டரீதியாகக் கிழக்கென்றும், வடக்கென்றும் பிரிந்துவிடுகின்றன.  இதனூடாகத் தமிழ்த் தேசியவாதக் கனவு உடைந்து சிதறிவிடுகிறது. மாபெரும் இராணுவக் கட்டமைப்பாக நிலைநிறுத்தப்பட்டிருந்த புலிகள் அமைப்பு இருந்த இடம் தெரியாமல் அழிந்தே போகிறது.  இதுவரையும் பல பத்தாண்டுகளாக தமிழ்ச் சமூகம் தீரா முயற்சியோடும், பல உயிர், உடைமை இழப்புக்களுக்கூடாகவும்  திரண்டிருந்த அத்தனை கனவுகளும் மறைந்துபோன விரக்தியிலும், சலிப்புக்களிலும் தமிழ்ச் சமூகம் துவண்டு போகிறது. இவற்றைக் காரணமாக வைத்து வெளிப்படையாகவே பௌத்த தேசிய கடும்போக்கு வாதம் வெளியே வருகிறது.

ஹீரோக்களாகத் தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட்ட போராளிகள் அந்த மக்களாலேயே கைவிடப்படுகின்றனர்.  ஏன், பெண் போராளிகள் ஜீவனோபாயத்திற்காகப் பாலியல் தொழிலை சூழல் நிர்பந்தத்தின் அடியாகத்  தேர்வு செய்யும் நிலைக்குக் கூட சென்றுவிடுகின்றனர்.   ஆண் போராளிகள் (கணிசமானவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து போகாதவர்கள்)  கூலி வேலைகளுக்கும், பிச்சை எடுப்பதற்கும் சென்று விடுகின்றனர். இந்தச் சமூகச் சோகத்தைக் கடந்து செல்வதற்கு உயர்தரமான உணவு விடுதிகளிலும்,  மதுச்சாலைகளிலும் உண்டு, மது அருந்தி, நடனமாடி போரை ஊக்குவித்த புலம்பெயர் சமூகம் தமது சமூகக் கடமையை நிறைவேற்றுகிறது.  ஆனால், முன்னாள் ஹீரோக்களாகப் பார்க்கப்பட் முன்னாள் போராளிகள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதும், சமூக அடிப்படைத் தேவைகளின் காரணமாகப் போக்கிடமற்றும் புதியதோர் மக்கள் கூட்டம் வெளிப்பட்டு நிற்கிறது.

இந்தியாவின் மெரீனாக் கடற்கரையின் ஓரத்தில் நின்றுகொண்டு, ‘எனது ஆருயிர்த் தாயகமே உன்னை இழந்து தவிக்கிறேன் எப்போது உன் புழுதி மண்ணைச் சுவாசிப்பேன்’  என்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கி ஒப்பாரி வைத்துத் துயரில் துவண்டுபோன இலக்கியவாதிகளும்,  தாயகத்தின் ஏக்கத்தில் வெடித்துச் சிதறிய கவிதைகளை எழுதி , பெரும் பேரும் புகழும் சம்பாதித்த கவிஞர்களும், இலக்கியவாதிகளும் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய எந்த அக்கறைகளும் காட்டாது தாமுண்டு தமது வேலையுண்டென்று புதிய சிந்தனைக்கு மாறிவிட்ட காலமாகவும் இது நீள்கிறது.  இன்றுவரை முன்னாள் போராளிகளின் நிலை அதுவாகத்தான் இருக்கிறது. அதில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டுவிடவில்லை. குறைந்த பட்சம், கவிதைகளிலோ, இலக்கியங்களிலோ அவர்களின் துயரங்கள் கவனத்திற்கொள்ளப்பட வில்லை.

எல்லாவற்றிலும் பிந்தி வந்து இணைபவர் என்று இலக்கியவாதிகளால் வர்ணிக்கப்படும் நுஃமான் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இன அழிப்பு தொடர்பாக மிகப் பிந்தியே வாய்திறக்கிறார். இப்படிப் பல விசித்திரச் சம்பவங்களின் கூட்டுக்கலவையாக இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் தொடர்கின்றன.

இக்காலத்தே இலக்கிய வெளியில் பல புதிய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. தொண்ணூறுகளில் இலக்கிய உலகுக்குள் நுழைந்த பலர் இரண்டாயிரத்தில் சிறந்த ஆற்றல் மிக்க கவிஞர்களாக முன்னுக்கு வருகின்றனர்.  பல புதிய தலைமுறையினரும் இலக்கிய உலகுக்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். புதிய இலக்கியப் போக்கும், விமர்சன முறைமையும் ஈழத்து இலக்கியத்திற்குள் நுழைகின்றன. நவீன கவிதையின் ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் பிச்சமூர்த்தி வழியாக வளர்ந்த சுதந்திரமான கவிதையைத் தடுக்கும் முயற்சி தகர்க்கப்பட்டு எப்படி ஈழத்தமிழ் இலக்கியத்தில், எண்பதுகளில் பெருவெள்ளமாக அணையுடைத்துக் கொண்டு நுழைந்ததோ அதுபோல் இல்லாவிடினும், எண்பதுகள் தொடங்கி தென்னிந்தியாவின் இலக்கிய வெளியை செழிப்பாக்கிய பல கோட்பாடுகளை சிவத்தம்பி, நுஃமான் போன்றவர்கள் ஈழத்து இலக்கியத்தைத் தாக்கிவிடாமல் மறித்து நின்ற போதும்,  அவர்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஈழத்து இலக்கியத்திற்கு நுழையும் காலமாகவும் இரண்டாயிரமாம் ஆண்டு திகழ்கிறது.  அவை புலத்திலும், தாயகத்திலும் நுழைந்து அழுத்தமாகக் காலூன்றத் தொடங்குகின்றன.

முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கும், வன்முறைகளுக்கும் எதிரான கவிதைக் குரல்களைக் கொண்ட பெரும் தொகுப்பாக ‘ மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்’ என்ற தலைப்பில் வெளிவருகிறது. அதுபோல், புலத்தில் இருந்து வெளிவந்த எக்ஸில் சிற்றிதழ், ‘இஸ்லாமியர்களின் சிறப்பிதழாக’ வெளிவருகிறது. சுகன், ஷோபாசக்தி போன்றவர்கள் இணைந்தும் தனித்தும் தொகுத்த இருள்வெளி, சனதருமபோதினி போன்ற முக்கிய தொகுப்புக்கள் வெளிவருகின்றன.  இப்படி இன்னும் பல தொகுப்புக்கள் பத்மநாப ஐயர், ஞானம் சஞ்சிகைகளினூடாகவும், ஊடறு ரஞ்சியினூடாகப் பெண்களின் எழுத்துக்களும் தொகுப்பாக்கங்களாக வெளிவருகின்றன. புலி இயக்கப் போராளிகளின் எழுத்துக்களும் வெளிச்சம் சஞ்சிகையின் தொகுப்பாக்கங்களாகவும், தனிப்பட்டவர்களின் புத்தகங்களாகவும் வெளிவருகின்றன. போரையும், கொலைகளையும் அறம் என்று பாடியபடி இலக்கியத்திற்குள் நுழைந்த பலர், தமது கருத்துக்களை மாற்றியமைத்திருந்தனர். அந்த மூத்த எழுத்தாளர்களின், போராட்ட களத்தில் செயல்பட்டவர்களின் போராட்ட அனுபவங்களின் நினைவுச் சுவடுகளாகப் பதிவு செய்யப்பட்ட பல தொகுப்புகள் வெளிவருகின்றன. றஷ்மி, அனார், ஆழியாள், பெண்ணியா, பஹீமா ஜஹான், ஓட்டமாவடி அறபாத், அலறி, எஸ்.நளீம், ஜமீல், பா.அகிலன், குணேஸ்வரன், அஜந்தக்குமார், இ.சு.முரளீதரன், தானா விஷ்னு, திருமாவளவன், கற்சுறா, மஜீத், றியாஸ் குரானா போன்றவர்களினதும் இன்னும் பலரினதும் கவிதைத் தொகுப்புகள் இக்காலத்தே வெளிவருகின்றன.

இத்தனை காலமும் சிலநூறு அச்சிடப்பட்டு ரகசிய இயக்கம்போல் வெளிவந்து செயற்பட்ட நவீன இலக்கியம், இணையத்தின் பயன்பாடு காரணமாக உலகு தழுவியதாக, யாரும் படிக்கக்கூடியதாக ஜனரஞ்சக வெளியில் செயற்பட்டும், எழுதியும் வந்தவர்களும் பங்கேற்கக்கூடியதாக மாற்றமடைகிறது. நவீன இலக்கியவாதிகளின் பெயர்கள் உலகு தழுவிய ஜனரஞ்சகப் பார்வைக்கும் உரியதாக மாற்றமடைகிறது. இது வேறு பல பிரச்சினைகளையும், வளர்ச்சிகளையும் அதன் உப விளைவாகப் பல நெருக்கடிகளையும் நவீன இலக்கியத்திற்குள் கொண்டு வந்தது என்பது வேறு ஒரு தனிக்கதை.

இக்காலகட்டத்தில் ‘முரண்வெளி’ என்ற பெயரில் ஓர் இணைய இதழும், ‘பெருவெளி’ என்ற பெயரில் ஒரு சிற்றிதழும் வெளிவருகின்றன. வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் பின்நவீனத்துவத்தை அடியொற்றி இவை வெளிவரும்போது, ஏலவே ‘மூன்றாவது மனிதன்’ என்ற பெயரில் சிற்றிதழை வெளியிட்ட எம். பௌசர், அதைக் கைவிட்டு ‘எதுவரை’ என்ற பெயரில் சிற்றிதழாகவும், பின்னர் அதே பெயரில் இணைய இதழாகவும் வெளியிட்டார். அந்தப் புதிய மாற்றம் ஏன் என்பது அவரால் கூறப்பட்டிருக்காத போதும், புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஈழத்து நவீன இலக்கியத்தில் உருவாகிவரும் புதிய பார்வைக் கோணங்களை வெளிப்படுத்துவதற்கு அவர் எடுத்த ஒரு முயற்சியாகக் கூட அது இருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலுமாக றியாஸ் குரானாவின் பின்நவீனக் குறுங்காவியங்களான, ‘ஆதிநதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை’, ‘வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம்’ ஆகிய இரு தொகுப்புகள் வெளிவருகின்றன. ‘ஒரு இலையின் மரணம்’ என்றும், ‘புலிகள் பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்றும் ஒரு கவிதைத் தொகுப்பும், இன்னுமொரு பின்நவீன குறுங்காவியமும் வெளிவருகின்றன.

ஈழத்து இலக்கியம் என்று தனியான ஒரு வகைமை இல்லை என்றும், ஈழத்தில் இலக்கியங்கள்தான் உண்டு என்றும் பின்நவீனத்துக்குரிய “பன்மையில்“ அழைத்துக்கொண்டும் கருத்துக்களை முன்வைத்தபடி ‘பெருவெளி’ சஞ்சிகை ஈழத்து நவீன இலக்கிய வெளியில் நுழைகிறது.  தமிழ்த் தேசியவாத இலக்கியங்கள், முஸ்லிம் தேசியவாதத்தை அக்கறைகொள்ளும் இலக்கியங்கள், மலையாகத் தமிழ் இலக்கியங்கள், புலம்பெயர் இலக்கியங்கள் என உள்ளன என்றும், அவை அனைத்திற்குமான இடம் சம அளவிலானதே என்றும் தனது கருத்தை  அது முன்வைக்கிறது. தனித்து எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் எப்படி ஓர் அதிகாரப் படிநிலையை உருவாக்கும் என்று கூறும் வகையில், ‘ ஆசிரியரின் மரணம்’ என்பதைப் பற்றி அது விரிவாகப் பேசுகிறது. சிறுபான்மைக் கதையாடல் என்ற வகையில், பெருங்கதையாடல்களை மறுக்க வேண்டிய தேவையை  அது அக்கறைகொள்கிறது. விளிம்புநிலை மக்களின் பக்கம் சாய்வுகொண்டு செயற்படுவதினூடாக உருப்பெற்றிருக்கும் மையங்களைத் தகர்க்க வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கின்றது.

அதனளவில், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் புதிய போக்குகள் உருவாகி வந்திருந்தாலும்,  அனைத்துப் போக்குகளும் பயணித்த தடம் ஒன்றுதான். அத்தனை போக்குகளினதும் உள்ளார்ந்த இயங்கு சக்தி ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதன் சாரம் ‘யதார்த்த அனுபவ உண்மைகளைப் பிரதிபலித்தல்’  என்ற தாரக மந்திரத்தை அனைத்து இலக்கியப் போக்குகளும் அளவு வித்தியாசங்களிலும், வெவ்வேறு பார்வைக் கோணங்களிலும் கதையாடி அதையே நம்பிச் செயல்பட்டன.

பெருவெளி முன்வைத்த கதையாடல்கள் இவற்றை உடைப்பதாக இருந்தன. யதார்த்தம் என்று தனியாகவும், அனைவருக்கும் பொதுவானதுமாக யதார்த்தம் என்று எதுவும் இல்லை என்றது. உருப்பெறும் யதார்த்தங்கள்தான் உண்டு என அதைப் பன்மையில் வியாக்கியானம் செய்தது.

யதார்த்தத்தை இலக்கியப் பிரதிகளால் பிரதிபலிக்க முடியாது என்றது.  அனுபவத்தைப் பிரதிபலித்தல் என்பதை மறுத்து, ‘பிரதியே புதிய அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது’ என்று வாசகர்களுக்கான முதன்மையை முன்னுக்குக் கொண்டு வந்தது. ‘நவீன கவிதையின் வரைபடம்’ என்ற கட்டுரையினூடாகப் புதிய திசையில் கவிதையைப் புரிந்து கொள்வதற்கான வாசல்களைத் திறந்துவிட்டது. ஒருவரின் எழுத்துக்களைப் பொதுமைப்படுத்தி அதன் சாரத்தை ‘தனித்தன்மை’ எனக்கூறி ஓர் எழுத்தாளரை ஆளுமையாக முன்னிறுத்துதை பெருவெளி கேள்விக்குள்ளாக்கியது.  ஒன்றைப் பொதுமைப்படுத்தி தனித்தன்மையை உருவாக்குவதிலுள்ள சிக்கல்களை அது வியாக்கியானம் செய்தது.

‘சுயம்’ என்ற ஒன்று தனித்ததாக ஒருவருக்குள் இருப்பதில்லை. ஒரு மனிதத் தன்னிலை என்பது பல சுயங்களின் கூட்டுக்கலவையான ஒன்று.  இதைக் கைவிட்டு தனித்த சுயத்தை ஓர் எழுத்தாளருக்கோ, செயற்பாட்டாளருக்கோ வரையறுப்பதை  அது கேள்விக்குள்ளாக்கியது. இதுகாறும் இலக்கியவாதி என பாவிக்கப்பட்ட சொல்லைக் கைவிட்டு, இலக்கியச் செயற்பாட்டாளர் என்ற புதிய சொல்லை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தது. இப்படி பல புதிய அம்சங்களை இலக்கிய வெளிக்கு “பெருவெளிக் குழு” அறிமுகப்படுத்தியது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என தனிச் சொற்களால் பாவனையிலிருந்தவற்றை, அதனோடு பிரதி என்ற சொல்லையும் இணைத்துக் கதையாடலுக்குக் கொண்டுவந்தது. கவிதைப் பிரதி, சிறுகதைப் பிரதி, நாவல் பிரதி, வாசிப்புப் பிரதி என அவை அமைந்தன.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் ‘அரசியலுக்கு சேவகம் செய்து, அடிமை வேலை செய்து களைத்தும், சோர்ந்தும் போய்க்கிடந்த இலக்கியத்தை மீட்டெடுக்க வேண்டிய தேவையை உணர்ந்து இலக்கியப் பிரதிகளை அது உருவாக்கியது. அதைக் கவிதைகளினூடாகவே அதிகம் நிகழ்த்தியது. அரசியல் செயற்பாட்டை ஒற்றை மையக் கருத்தாகவும், தவிர்க்க முடியாத உள்ளடக்கமாகவும் முதன்மைப்படுத்திக் கதையாடி வந்த மரபை, அரசியல் என்பதற்குள் பலவகையான நுண் அரசியல்கள் உண்டு என்றும்,  சமூகத்தின் பல செயற்பாடுகளினுள்ளே இருக்கும் பன்முகமான நுண் அரசியல்களின் கூட்டுக் கலவையின் பொதுமைப்படுத்தப்பட்ட பெயராகவே அரசியல் என்ற சொல் பாவிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் அது பேச முற்பட்டது.

அரசியல் கோஷங்களை எழுப்பியும், (அவை ஆதரவாகவும், எதிர்க்குரல்களாகவும் இருக்கலாம்) அரசியல் எழுச்சியை வலியுறுத்தியும் (கட்சி, இயக்கம் சார்ந்த) அரசியல் துயரங்களை ஒப்பாரி வைத்தும், அழுது புலம்பி தனது வாழ்நாள் காலத்தைக் கடத்திய கவிதைகளை அதிலிருந்து மீட்டு, கவர்ச்சிகரமானதும், மனதை இலகுவில் ஈர்த்து ஆசுவாசப்படுத்தக் கூடியதுமான ‘மெஜிகல் ரியலிச’ உத்திகளையும், கவிதைப் பிரதி உருவாக்கத்தில் பலவகையான சாத்தியப்பாடுகளையும், புனைகதைகளிலிருக்கும் கதை சொல்லுதலையும் இணைத்து ‘ஈழத்துக்கே உரியதான புதியதொரு கவிதைப் போக்கை, ‘poetry fiction’  என்றவகையில் றியாஸ் குரானா முன்வைத்தார். இதனூடாகக் கடந்த பல பத்தாண்டுகளாக அரசியலுக்குச் சேவகம் செய்த ஈழத்து நவீன கவிதை புதியதொரு தோற்றத்தில் வெளிப்பட்டு நின்றது. கவிஞர் என்ற சொல் றியாஸ் குரானா சொல்வதைப் போலவே ‘கவிதை சொல்லி’ என்பதாக மாற்றமடைந்து வெளிப்பட்டு நின்றது. அவரால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இப்படி எழுதப்பட்ட கவிதைகள் ‘பெருவெளி’யில் வெளிவந்தன. ‘கடலைக் குடித்த பூனையின் கதை’ என்ற கவிதையை இதற்கான ஓர் உதாரணமாகப் பார்க்கலாம்.

அதேநேரம், மற்றமைகளை அக்கறை கொள்ளுதல், கவிதைப் பிரதிகளினுள் இயங்கும் அரசியல், வன்முறைகள் குறித்த கருத்துக்களைப் பிரதிக்குள்ளிருந்து கண்டடையும் ‘கட்டுடைப்பு’ விமர்சன முறையையும் ‘பெருவெளி’ கொண்டு வருகிறது. (இது டெரிடாவின் டிகன்ஸ்ரக்ஷன் முறையைப் பின்பற்றி தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப பிரதி வாசிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.) பிரதிக்குள் உருப்பெறும் அரசியலையும், வன்முறைகளையும், உருவாக்கியும், அழித்தும், எதிர்த்தும் காட்டக்கூடிய கவிதைப் பிரதிகளை, வாசகர்களை மேல்பார்வையில் உடனடியாக ஈர்க்கக் கூடிய மெஜிகல் ரியலிசக் கூறுகளை உள்ளெடுத்தும், நுண் அரசியலையும், நுண் அழகியலையும் கவன ஈர்ப்புச் செய்து கவிதைப் பிரதிகள் உருவாக்கப்பட்டன.  சமூக யதார்த்தத்தைப் பதிவு செய்வதாகவும், அரசியலுக்குச் சேவகம் செய்வதிலும் காலங்கடத்திய ஈழத்து நவீன கவிதையை மீட்டு, கவிதைப் பிரதிக்குள்ளாகப் பல நுண் அரசியல்களைச் செயற்பட வைத்ததுடன், அதன் பல வகையான தந்திரமான முகங்களையும் வெளிக்காட்டியது. அதேநேரம், கவிதைப் பிரதி உருவாக்கத்தின் சாத்தியங்களைப் பெருக்கியதுமான ஈழத்து பின்நவீன கவிதையின் முன்னோடியாக றியாஸ் குரானா வெளியே வருகிறார்.  அத்தோடு, ‘நவீன கவிதை மனம்’ என்ற தொடர் கட்டுரைகளினூடாகவும், ‘நவீன கவிதை காலாவதியாகிவிட்டது’, ‘கற்பனை என்பது மேலதிகச் செயல்’ போன்ற கட்டுரைகளினூடாகவும் பிரதிக்குள் நிகழும் வன்முறைகள், அரசியல்களை நுண்ணளவில் ஆராய்ந்து, ஈழத்து நவீன கவிதையை மட்டுமல்ல, தமிழின் விரிந்த பரப்பிற்குள்ளும் செயற்பட்டு வந்த “நவீன கவிதையைக் காலாவதியாக்குகிறார்’.  இதனூடாகக் கவிதைப் பிரதிகளை அணுகும் கட்டுடைப்பு விமர்சன முறைமையினை தமிழில் பின்தொடருகிறார்.

‘குதர்க்கங்களின் பிதுக்கம்’ என்ற புனைபிரதியோடும், நாவல், சிறுகதை, அரசியல் குறித்த பின்நவீனப் புரிதல்களோடுகூடிய பிரதி வாசிப்புக்களுடனும் மிஹாத் மேலெழுந்து வருகிறார். அவரின் ஆங்கிலப் புலமையின் காரணமாக பின்நவீனத்துவத்தை நேரடியாக ஆக்கிலத்தில் பயின்று முக்கியமான விமர்சகராகவும் . பொத்திரியாட்டை அறிமுகம் செய்வதினூடாகவும், அவரின் பார்வைக் கோணத்தின் ஈழத்துச் செயற்பாட்டாளராகவும், உமா வரதராஜனின் ‘ மூன்றாம் சிலுவை’ என்ற நாவலுக்கு விமர்சனத்தை முன்வைப்பதோடு முன்னுக்கு வருகிறார். கதையாண்டி என்ற குறுநாவலுடனும், ‘சிறுபான்மைக் கதையாடல்கள்’ என்ற குறும் புனைவுகளுடனும் (short fiction)’ புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற குறுங்காவியத்துடனும் மஜீத் மேலெழுந்து பின்நவீனச் செயற்பாட்டாளராக முன்னுக்கு வருகிறார். இவர் விமர்சனத் துறையைத் தொடவில்லை என்பது கவனத்துக்குரியது.

ஆக, ஈழத்துப் பின்நவீன இலக்கியத்திற்கும், கருத்தியலுக்கும் தங்களால் முடிந்தளவிலும், தங்களுக்குத் தெரிந்தளவிலும், தாங்கள் புரிந்துகொண்ட அளவிலும், தலைமை கொடுக்கும் முக்கியமானவர்களாக மிஹாத், மஜீத், றியாஸ் குரானா போன்றவர்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் நிலைக்கு வருகிறார்கள்.  இரண்டாயிரமாம் ஆண்டின் பத்து வருடங்களில் ஈழத்து இலக்கியத்தில் நிகழ்ந்த முக்கிய திசைமாற்றங்களாக இவற்றைக் கருதலாம்.   இந்தப் புதிய பின்நவீன இயக்கத்தோடு பல புதியவர்களும் இணைந்து செயல்பட்டனர். அப்துல் ரசாக், ரபியூஸ், பர்ஸான் ஏஆர், போன்றவர்களும் செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இவர்களில் அப்துல் ரசாக் ‘நிழல்களின் வடு’ என்ற சிறுகதைப் பிரதியையும், சில விமர்சனங்களையும் எழுதியிருந்தார். அதுபோல், மற்றவர்களும் கவனத்தை ஈர்க்கும் பல பிரதிகளை எழுதினர்.

இதுபோல், பழைய நவீன இலக்கியத்தை வரித்துக்கொண்ட இலக்கியவாதிகளும், இஸ்லாமிய மாற்றுச் சிந்தனையாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்த முகாமோடு இணைந்து செயற்பட்டனர்.  அதில் முக்கியமானவரான எம்.ஐ.எம். றஊப்,   பழைய நவீன இலக்கியச் செயற்பாட்டாளராக இருந்தபோதும், அதனோடு ஒத்துப் போக முடியாத சிந்தனை மாற்றம் அவருக்குள் நிகழ்ந்திருந்தது.  அப்படி நிகழ்ந்திருந்த போதும்,  புதிய கருத்தியல் தளத்தில் செயற்பட்டு, பழைய ஈழத்து நவீன இலக்கிய வெளியை எதிர்கொள்ள முடியாமல், தனக்கான தருணத்திற்காகக் காத்திருந்ததைப்போல் வந்து புதிய முகாமோடு இணைந்து கொண்டார்.

அதுபோல், ஈழத்து இஸ்லாமிய மாற்றுச் சிந்தனையாளரான ஏபிஎம். இத்ரீஸ் போன்றவர்களும் வந்து இணைந்து கொண்டார்.  இவர்கள் இருவரும் ஏலவே, பின்நவீனக் கருத்தியலின் வாசிப்பில் இருந்தவர்கள் என்பதை இணைந்து செயற்படும்போது அறிய முடிந்தது. ஆனால், தனியாக ஒரு முகாமாக செயற்பட முடியாமல் இருந்ததே தாமதமான பிரவேசத்திற்குக் காரணம் என்று புரிந்து கொள்ள முடிந்தது. எனினும், ஏபிஎம். இத்ரீஸ் தனியான பதிப்பகம் ஒன்றை நிறுவி மாற்று இஸ்லாமியக் கருத்துக்களை வெளியிட்டபடி இருந்தார். அதுபோல், எம்.ஐ.எம்.றஊப் அவர்களும் சில சிற்றிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருந்தார்.  இதுபோன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்பும் ஈழத்து இலக்கிய வெளியில் நிகழ்ந்திருந்தது.

முற்போக்குவாத இலக்கிய முகாமின் சர்வாதிகாரம் வியாபித்திருந்த அறுபதுகளில், அதை எதிர்கொள்ள முடியாமல் நமது நவீன கவிஞன் பிரமிள் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிய சம்பவத்தை மு.தளையசிங்கம் தனது, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், தனி ஒருவராக நின்று அந்த முற்போக்கு முகாமை கருத்தியல் தளத்தில் எதிர்கொண்டவர் மு.தளையசிங்கம் என்பது யாவரும் அறிந்ததே.

எம்.ஐ. எம். றஊபும், மஜீதும் இன்று மரணித்துவிட்டனர். இத்ரீஸ் தொடர்ந்து இயங்கியபோதும் மந்தகதியிலேயே அவரது இயக்கம் நடக்கிறது.   றியாஸ் குரானாவும், மிஹாதும் வீச்சுக் குறையாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்த முகாமிற்கு வெளியேயும் பின்நவீனப் புனைகதைகளை எழுதிக்கொண்டு சிலர் செயற்பட்டனர்.  அதில் தாயகத்திலிருந்து ராகவன் அவர்களும், திசேரா அவர்களும் முக்கியமானவர்கள். ‘காலவல்லி முதலான கதைகள்’ என்ற ராகவனின் தொகுப்பும் வெளிவந்திருந்தது. அதுபோல்,  திசேராவின் புனைகளின் தொகுப்பு பின்னர் வெளிவந்திருந்தது.  புலத்திலிருந்து முக்கியமான பின்நவீனப் புனைகதை எழுத்தாளராக ஷோபாசக்தி இவர்களையும் மிகைத்து வெளியே வந்திருந்தார். ஆனால், கவிதை மற்றும் விமர்சனங்கள் போன்றவற்றில் யாரும் வெளித் தெரியவில்லை.

இங்கு, அதாவது ஈழத்தில் பின்நவீனக் கருத்தியலின் செல்வாக்கிற்கு உட்பட்டுத் தனியாக’ முரண்வெளி’ என்ற ஓர் இணைய இதழை நடாத்திய ஹரி இராசலட்சுமியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஹரிஹரசர்மா என்றும், ஆமிரபாலி என்றும் பல புனைப் பெயர்களில் எழுதிக்கொணடிருந்தவர் இவர்.  பின்நவீனத்துவக் கருத்தியலோடு அதிக பரிச்சயம் கொண்ட இளைஞர் இவர். கவிதைப் பிரதிகள், பத்தி எழுத்துக்கள், என்பவற்றோடு பிரதிவாசிப்பு என்ற விமர்சனத்தையும் மேற்கொண்டவர். ஒரு சில ஆண்டுகள் தீவிரமாகச் செயற்பட்ட இவர் தற்போது புலம்பெயர்ந்து சென்றதின் பின் கிட்டத்தட்ட அவரின் செயற்பாடு மறைந்தே போய்விட்டது என்று நினைக்கிறேன்.  இவரின் பிரதிகள் தொகுக்கப்பட்டு நூலுருவில் வெளிக்கொணரப்பட வேண்டும்.  அதுபோல், மிஹாத், றியாஸ் குரானா போன்றவர்களின் பிரதிகளும் தொகுக்கப்பட்டு நூலுருவில் கொண்டுவரப்பட வேண்டும். அவர்களின் சில கவிதைத் தொகுப்புகள் மாத்திரமே வெளிவந்திருக்கின்றன.

இரண்டாயிரமாண்டின் முதல் பத்தாண்டுகளில் பின்நவீனத்துவம் ஈழத்து இலக்கிய வெளியில் பரவாலாக வெளிப்பட்டு நின்றாலும், அடுத்த பத்தாண்டுகளில்தான் பெரும் கவனத்தைப் பெற்றது. அதில் ஈர்ப்புக்கொண்ட பல புதிய பழைய தலைமுறை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் களத்திற்கு வருகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் அதிகமான கவிதைப் பிரதிகளும், விமர்சன வாசிப்புப் பிரதிகளும், நேர்காணல்களுமே வெளிவந்திருக்கின்றன. புனைகதைப் பிரதிகள் மிகக் குறைவாகவே உள்ளன.  எழுதப்பட்ட ஒன்றிரண்டு நாவல்களில், மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’ இன்னும் நூலாக்கப்படவில்லை.  அவை அனைத்தும் நூலுருவில் வெளிவரும்போதுதான், ஈழத்து பின்நவீன இலக்கியத்தைச் சரியானதொரு மதிப்பீட்டுக்குள் கொண்டுவரலாம்.  ஹரிஹர சர்மாவுக்கும், றியாஸ் குரானாவுக்குமிடையில் நடந்த விவாதமொன்றும் இங்கே முக்கியமானது.

இருபத்தியோரம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில், பின்நவீனத்துவச் சாயலோடு ஈழத்து இலக்கியத்தில் தனது செயற்பாட்டை ஆரம்பித்திருந்த போதும், அந்தப் பத்தாண்டிலேயே கவனத்தைப் பெற்றாலும், அந்த இலக்கியப்போக்கை பலர் தெரிவு செய்ததாகத் தெரியவில்லை.  ஆனால், தொடர்ந்துவந்த அடுத்த பத்தாண்டுகளிலேயே ஈழத்து நவீன கவிதை பின்நவீனத்துவச் சாயலுடன் உள்ள ‘பொயற்றி பிக்ஷன்’ தான் எனக் கருதுமளவு,  பரவலான பங்கேற்பாளர்களைக் கொண்டதாக மாறிவிட்டது. ஈழத்து நவீன கவிதையில் எப்படி அதிகமான தமிழர்கள் செயற்பட்டார்களோ அதுபோல், ஈழத்து பின்நவீன கவிதையில் முஸ்லிம்களே அதிகமக்ச் செயற்பட்டனர். பின்நவீனப் புனைகதையில் அதிகம் பேர் தமிழர்களே இயங்கினர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.

அத்து மீறுல் தொடரும்

றியாஸ் குரானா-இலங்கை

றியாஸ் குரானா

(Visited 332 times, 1 visits today)