ஷோபாசக்திக்கும் சேனனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் “ஐடியாத் திருட்டு” குறித்த சிறு அலசல்-கட்டுரை-றியாஸ் குரானா

றியாஸ் குரானா

தோழர் ஷோபா சக்தியின் “இச்சா” நாவலையும், சேனனின் “சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்” என்ற நாவலையும் இணைத்து வாசிப்பது அந்த இரண்டு நாவல்களின் தனித்துவங்களையும் கைவிட்டுவிடுவதற்கு வாய்ப்பைத் தரக்கூடியது.

அதுபோல், பின்நவீனத்துவக் கோணத்திலான “இன்ரெடெக்சுவாலிட்டி” முறைமையில் வாசிப்பதும் ஒரு கதையின் மீட்டுருவாக்கத்தை ஒரு எழுத்தாளர் தமது கோணத்தில் புரிந்து புனைவாக்குவதற்கு இருக்கும் இலக்கியச் செயற்பாட்டை மறுப்பதாக அமையக்கூடியது.

அப்படி எனில், இந்த இரண்டு நாவலையும் குறித்து முன்வைக்கப்படும் ”ஐடியா திருட்டு” என்பதை எப்படியான கோணத்தில் புரிந்துகொள்ளலாம்? அதற்கும் ஒரு வழியிருக்கிறது. நமது பழைய பிரதி அணுகுமுறையான “ ஒப்பீட்டு விமர்சன முறை” மிகத் தாராளமாக உதவக்கூடியது.

பின் நவீன இலக்கிய வாசிப்புக் காலத்தில் இந்த விமர்சன முறையைப் பாவித்து பிரதிகளை விமர்சிக்க முற்படுவது பிரதி வாசிப்பு என்ற வகையில் பழமையானதும், பிழையானதுமான வியாக்கியானங்களைத் தரக்கூடியதாக இருக்காதா? அது எழுத்தாளர்களையும், அவரது புனை பிரதிகளையும் அவமானப்படுத்துவதாக அமையாதா? என்ற கேள்விகளும் எழக்கூடும். அதுவும் நியாயமானதுதான்.

ஆனால், இந்த இரண்டு நாவல்களையும் ஒப்பீடு செய்து நான் வாசிக்கப்போவதில்லை.  இவர்கள் ஐடியா திருட்டு என பொத்தாம் பொதுவாக  இரண்டு நாவல்களையும் முன்வைத்துக் கூறும் கதைகளையும் மறுத்துவிட்டு,  இரண்டு நாவல்களினுள்ளும் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மாத்திரமே ஒப்பிட்டு வாசிக்க நினைக்கிறேன். இந்தவகை வாசிப்பே இங்கு சரியானது என்றும் கருதுகிறேன்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையிலான ஒற்றுமைகள், வேற்றுமைகள் தொடங்கி, இரண்டு கதாபாத்திரங்களும் நடமாடுவதாகக் கதைப் புனைவுகளில் உருவாக்கப்படும் சூழல், மற்றும் கதைச் சம்பவங்கள் பற்றியதாக அமைந்துவிடக்கூடிய ஒரு வாசிப்பு. அந்த வாசிப்பே, உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை வெளியே கொண்டுவர கூடியது. இலக்கிய அர்த்தத்தில் இந்தவகையான செயற்பாடுதான் அவசியமானதும் கூட.

அதே நேரம், பின் நவீன எழுத்து முறையான இன்ரெடெக்சுவாலிட்டி என்ற கதை மீட்டுருவாக்கம் (காப்பியடித்தல் எனத் தமிழ் இலக்கிய சூழலில் மலிவாகப் பயன்படும் புரிதல்) என்பது இந்த நாவல் புனைவெழுத்தில் நிகழ்ந்திருக்கிறதா என்பதையும் முன்வைக்க இருக்கிறேன்.

இந்தக் கட்டுரை முற்றிலும் புதியதொரு கட்டுரை. இச்சா நாவல் குறித்து எழுதியிருக்கும்  “ஷோபா சக்தியின் இச்சா: அரசியல் நீக்கப்பட்ட ஒரு அபலையின் வாழ்வு” என்ற கட்டுரைக்கும் எந்தத் தொடர்புமில்லை. இது இச்சா நாவல் பற்றியதாக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரையாகும்.  இப்போது எழுதுவதோ, இருநாவல்களிலுள்ள கதாபாத்திரங்களை ஒப்பிட்டு எழுதப்படும் கட்டுரையாகும்.

ஷோபா சக்தியின் நாவலில் வரும் கதாபாத்திரமான, “ஆலா” வையும், சேனனின் நாவலில் துணைப் பாத்திரமாக வரும் ”சாதனா” வையும் பற்றியே எனது புதிய கட்டுரை அமைகிறது.  இரு நாவல்களையும் படித்தவர்கள் இந்த இரு கதாபாத்திரங்களையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து  சிந்திக்கலாம்.  இன்னும் படிக்காதவர்கள் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.  அது தவிர, இந்த இரு நாவலில் இருக்கும் பிற கதாபாத்திரங்களைக் கைவிட்டு விடுங்கள்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் வாசிப்பதற்கான முறை என்னவெனில், பிறசம்பவங்களையும், பிற கதாபாத்திரங்களையும் விட்டு விட்டு, ஆலா,சாதனா என்ற இரண்டு  கதாபாத்திரங்களோடு தொடர்புடைய கதைச் சூழல், மற்றும் கதைச் சம்பவங்களைச் சுருக்கிப்பார்த்தால், இரண்டு சிறுகதைகளாக இரு நாவலிலிருந்தும் அவை திரட்சியுற்று மேலெழுந்து வரும்.

அதன் பிறகு அது குறித்து உங்கள் பார்வையைத் தொடர்ந்தால் நான் எழுதப் போகும் கட்டுரையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பாக இருக்கும். எனவே, நான் ஷோபா சக்தி மற்றும் சேனன் இருவரின் நாவல்களைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எழுத்தாளர் சேனன் அவர்கள் அகழ் இணைய இதழில் வெளிவந்த நேர்காணலில்  ஷோபாசக்தியின் இச்சா நாவல், தனது நாவலான “சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்”  என்ற நாவலின் உள்ளார்ந்த ஓட்டமான ஐடியாவை திருடிவிட்டதாக சொல்லியிருப்பார். தேசம்நெற் என்ற மற்றுமொரு இணைய இதழ் இந்த திருட்டுக் குறித்து ஷோபாவிடம் விசாரித்ததாகவும், அதற்கு ஷோபா பதிலளிக்க மறுத்ததாகவும் பதிவு செய்திருந்தது. மேலும் சில தகவல்களை அதில் அறிய முடிந்தது. சேனன் தனது நாவலை தட்டச்சுப் பிரதியாக இருக்கும் சமயத்தில், ஷோபாசக்தியின் சகோதரியும் கவிஞருமான தர்மினியிடம் சில திருத்தங்களுக்காக அனுப்பியதாகவும், (இதுபோல் இன்னும் சிலரிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்) அதனுாடாக ஷோபா சக்திக்கு வாசிப்பதற்கு வாய்ப்பிருந்திருக்கலாம் என்றும் ஊகங்களின் அடிப்படையில் இந்தத் திருட்டு சமாச்சாரம் வியாக்கியானப் படுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரே ஒரு வழிமுறை தவிர வேறு எந்தவகையிலும் ஷோபாசக்திக்கு சேனனின் நாவல் தட்டச்சுப் பிரதி கிடைத்திருக்க சாத்தியமில்லை என்பதையே இறுதியாக வந்தடைய வேண்டியுள்ளது. சேனனும் அவரை நெருங்கிய சிலரும் இந்த ஊகத்தை மாத்திரமே நம்பி, “திருட்டு” என்ற பதத்தை பாவிக்கின்றனர்.

மனிதர்களை ஆழமாக நேசிக்கவும், ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை இழிவான நிலைக்கு தள்ளவும் விரும்பாத வகையினமாக எழுத்தாளர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழ்ச் சூழலில் எதிர்பார்க்க முடியாதுதான். தனிப்பட்ட வசைகள், குற்றச்சாட்டுகள் என பரஸ்பரம் எந்தக் குற்றவுணர்வுமின்றி கக்கிய வரலாறு தமிழ் இலக்கியச் சூழலுக்கு உண்டு. என்னைப் பொறுத்தமட்டில் திருட்டுப் பட்டம் சூட்டுவது அத்தனை எளிதான ஒன்றல்ல. அது ஒரு மனிதனை ஒழுக்கம் சார்ந்து (இலக்கிய ஒழுக்கம் என்று பொருள்) வரலாற்றுரீதியில் பின்பற்றத்தக்க ஒரு பண்புருவாக்கமான அடையாளமாக வெளிப்பட்டு நிற்கக் கூடியது. எனவே, திருட்டுப்பட்டம் கட்டும்போது மிக அதிகமான கவனம் தேவை. அதற்கான தெளிவான ஆதாரங்கள் தேவை. சந்தேகத்திற்கிடமான ஒரு ஊகம் அதற்கு போதுமானதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து எனினும், அதுவே இலக்கிய வெளியில் பின்பற்றத்தக்க கருத்துமாகும்.

இலக்கியத்தில் திருட்டு என்று தமிழில் கேவலமானதாக பார்க்கப்படும் சமாச்சாரம், ஒரே தன்மைகொண்ட விசயமாக இல்லை. பாதிப்பு, தழுவல், மீளுருவாக்கம், துாண்டுதல், பரவுதல் போன்ற வழிகளால் இலக்கியங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதில் மீளுருவாக்கம் என்பது, ஊடிழைப்பிரதி என்ற (இன்ரெடெக்சுவாலிட்டி) பன்மையானபிரதி உருவாக்கத்தோடு தொடர்புடையது. இலக்கியப் பிரதிகள் இன்னொன்றின் தொடர்ச்சியே எனும் பின்நவீன இலக்கியச் செயலைச் சார்ந்ததும் கூட. அதில்கூட பலவகையான போக்குகள் ஆராயப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தழுவல் என்பது ஒரு பிரதியின் சாரத்தை எடுத்து மற்றுமொரு பிரதியை அதே கோணத்தில் கட்டமைப்பதாகும். அல்லது எழுதுவதாகும். தாக்கம் என்பது, குறித்த ஒரு இலக்கியப்பிரதி தரும் வாசிபனுபவத்தின் அலைவுகளை அடிப்படையாகக்கொண்டு புதியதொரு பிரதியை உருவாக்குவதாகும். துாண்டுதல் என்பது ஒரு முழுப்பிரதியோ அல்லது ஒரு கதாபாத்திரமோ அல்லது ஒரு குறித்த சம்பவமோ புதியதொரு பிரதியை உருவாக்குவதற்கு துாண்டுதலாக இருப்பதாகும்.  பரவுதல் என்பது, ஒரு இலக்கியப் பிரதியின் கதையமைப்பு, அல்லது கதையாடலை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் கோணத்தில் இலக்கியப் பிரதியாக உருவாக்குவதாகும். இவையெல்லாம் உலக இலக்கியங்களில் ஒவ்வொருகாலகட்டத்திலும் பின்பற்றப்பட்ட இலக்கியச் செய் முறைதான். அதையும் தாண்டி, பன்மையான கருத்தியல் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை உள்ளெடுத்து, பல பிரதிகளிலிருந்தோ அல்லது ஒரு பிரதியிலிருந்தோ எடுத்து, அதற்கான புதிய வாசிப்பு முறையையும், அதிலுள்ள அரசியல் மற்றும் அழகியலுக்கான மாற்று அரசியல், அழகியலை முன்வைப்பதாகும். இது இலக்கியப் பிரதியை கட்டுடைப்பு செய்வதுபோல, இலக்கியப் பிரதிகள் பிரதானமாக முன்வைக்கும் கருத்தியலையோ, அரசியலையோ, அழகியலையோ புதிய கருத்தியல் தளத்தில் கட்டமைப்பதாகும்.

ஒரான் பாமுக் அவர்கள்கூட ஒரு நாவலின் முழு அத்தியாயமொன்றை எடுத்து, தனது நாவலின் அத்தியாயங்களில் ஒன்றாக வைத்து ஒரு பிரதியை உருவாக்கியமை பரவலான விமர்சனங்களுக்குள்ளாகியது. ஊடிழைப்பிரதி என்ற வகையில் அது பின்நவீன எழுத்து முறையாக ஆதரிக்கப்பட்டது. ஆயினும், அப்படி ஆதரித்தவர்கள் கூட ஒரு விமர்சனத்தை முன்வைத்தனர். எந்த நாவலில் இருந்து இந்த அத்தியாயத்தை எடுத்தேன் என ஒரான்பாமுக் சுட்டிக்காட்டவில்லை என்பதுதான் அந்த விமர்சனம். பின்னைய பதிப்புக்களில் ஒரான்பாமுக் அதைச் சுட்டிக்காட்டி குறிப்புகளைப் பதிந்ததாக அறிய முடிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்த தாக்கம், தழுவல், பரவுதல், மீட்டுருவாக்கம், துாண்டுதல் போன்ற அம்சங்களால் உருவாக்கப்பட்ட பல இலக்கியப் பிரதிகள் உண்டு. இந்தக் கட்டுரைக்கு அவை தேவையில்லை என்பதால் விட்டுவிடுவோம். ஆயினும், இலக்கியத் திருட்டு என தமிழில் பொத்தாம் பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கெட்டசெயல் என்ற மனநிலை தமிழை விட்டுப்போகப்போவதில்லை போல்தான் தெரிகிறது. அதன் பன்மையான தன்மைகள், புரிதல்கள் குறித்து தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் அறிந்துகொள்ளவோ, இது இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் கெட்டவிசயமாக புரிந்துகொண்டு ஒரு எழுத்தாளர்மீது எழுத்து ஒழுக்கம்சார்ந்த குறியீடாக பாவிக்கப்படுவதிலிருந்து வெளியேறவோ மாட்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆயினும், இந்த இலக்கியத் திருட்டு என்ற சமாச்சாரத்தை பன்மையான வழிகளில் புரிந்துகொண்டு இலக்கியச் செயலின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் அதில் ஒரு விசயம் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. அது உண்மையில் அவசியமான ஒன்றும் கூட என்றே சொல்வேன். குறித்த விசயம் எந்த எழுத்தாளரின் எந்தப் பிரதியிலிருந்து எடுத்தாளப்படுகிறது. அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது என்பதை கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனெனில், அறிவு என்பது பொதுச்சொத்து அல்ல. அது தனிப்பட்ட ஒருவரின் உழைப்பைக்கொண்ட தனிவிசயம். தனிவிசயம் என்பதற்காக அது பொதுச்சொத்தாக பயன்படுத்தக்கூடாத ஒன்றும் அல்ல. பயன்படுத்த முடியும் ஆனால், அது யாருடையது என்பதை குறிப்பிட வேண்டியது மட்டுமே இங்கு அவசியமானது.இப்படிச் செய்வது குறித்த ஒரு இலக்கியப் பிரதிக்கோ, எழுத்தாளருக்கோ வழங்கும் மரியாதையோடு கூடிய நேர்மையான ஒரு நிலைப்பாடு.

இந்த நிலையில்தான், சேனன் அவர்கள் ஷோபாசக்தியை நோக்கி ஐடியாத் திருட்டு என குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். உண்மையில் இது தெளிவான ஆதாரங்களற்றது. ஊக அடிப்படையிலானது. எனினும், ஷோபாசக்தியினதும், சேனனினதும் நாவல்களை ஒருசேர வாசிக்கும்போது, இந்த ஐடியாத் திருட்டு என சேனன் சொல்லும் விசயம் மேலும் சிக்கலுக்குள்ளாகிறது.

ஷோபாசக்தியின் நாவல், ஆலா என்ற பெண்போராளியின் உருவாக்கம், அவருடைய போராட்ட பங்களிப்பு, பின் சிறைவாழ்கை,அதன்பின்னரான திருமணம் சார்ந்த சமூக வாழ்க்கை மரணம் என விரிகிறது. முக்கியமாக, இறுதிப்போர்காலத்தை உள்ளிட்ட வரலாற்று எல்லைக்குள் இந்த நாவலின் கதை நடந்தாலும், ஆலா என்ற தற்கொலைப்போராளி இறுதிப்போர் களத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், சேனனின் நாவலின் பெரும்பகுதி இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கதைக்களத்தைச் சுற்றியே தொடர்கிறது. இரு நாவலினதும் பிரதானமான வேறுபாடு, கதைச்சம்பவங்களை நடமாட விடும் காலத்தைச் சார்ந்து இருவேறு தெரிவுகளாக அமைகிறது என்பதுதான் முக்கியமான விசயம்.

ஈழத்தமிழ் போராட்டத்தினை கதையின் உள் அச்சாக இரண்டு நாவல்களும் கொண்டிருக்கின்றன என்பதும், அதில் போராளிகள் இரு எழுத்தாளர்களின் வெவ்வேறு கோணத்திலான போக்குகளையும் பண்புகளையும் கொண்டவர்களாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும்தான் பொதுப் பண்புகளாக தென்படுகின்றன. பொதுவான கதைக்களம் இருக்கிறது. கதை நகரும் தளமும் பொதுவானது. இந்தப் பொதுவான அம்சம் என்பது ஈழத்திலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொதுவானதாகவே இருக்கும். இதிலிருந்து வெவ்வேறு கோணத்திலும், கதைச் சம்பவங்களிலும் ஒருங்கிணைக்கப்படும் கதையாடலாகவே இலக்கியப் பிரதி அமையும் அந்தவகையில், இரு நாவல்களும் ஒன்றின் ஐடியாவை மற்றொன்று பின்பற்றுகிறது எனக்கூற முடியாது. நாவலின் வடிவமும் வேறுபட்டதாகவே அமைகிறது. இச்சா நாவல் முற்றிலும் பெரும்பகுதி, ஆலா என்ற பிரதான கதாபாத்திரத்தினுாடாகவே கதையை சொலிச்செல்கிறது. சேனனின் நாவலான சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் கதைக்கு வெளியேயுள்ள ஒருவரின் கோணத்தில், அதுவும் பிரதிக்குள் நிகழும் கதைகள் அனைத்தும் தெரிந்த ஒருவரின் கோணத்தில் அல்லது பார்வையில் சொல்லப்படுகிறது.

ஆக, சேனன் சொல்லுவதைப்போல் ஐடியாத் திருட்டு என திட்டவட்டமாக கூற இயலாது. ஆனினும் சில விசயங்கள் கவனத்துக்குரியன. அதில் முக்கியமான விசயம், இச்சா நாவல் தொடங்கி சிலபக்கங்களுக்குள்ளாகவே, இந்த நாவல் எழுத எது உதவியது என்ற கதை சொல்லப்படுகிறது. மர்லின் டேமி என்ற கதையில் சிறையதிகாரியாக வரும் லொக்கு நோனா என்ற கதாபாத்திரம் ஆலாவின் சிறைக் குறிப்புக்களை கதையாசிரியரிடம் கொடுத்தாக வருகிறது. அங்கிருந்தே கதை தொடருகிறது.

சேனனின் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களில் வரும் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதற்கு தேவையான புதிர் அவிழ்ப்பை ரோகினி விஜயக்குமார என்ற பெண் ஆய்வாளரின் மூலம், நாவலில் வரும் முக்கியபாத்திரங்கள் பற்றிய தகவலை அறிய முடிகிறது. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிய புதிரை வெளிப்படுத்தவே ரோகினி விஜயகுமார என்ற பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷோபா சக்தி கதையை உருவாக்குவதற்காக கொண்டுவரும் பாத்திரமும், நாவலின் உள்ள கதாபாத்திரங்களை புதிர் அவிழ்க்க சேனன் கொண்டுவரும் ரோகினி விஜயக்குமார என்ற பாத்திரமும் இருநாவல்களிலும் ஒரே வகையான பணியையே செய்கின்றன. இரண்டும் பெண்பாத்திரங்கள். அதுவும் சிங்களப் பெண்பாத்திரங்கள். லொக்கு நோனா பறங்கிப்பெண்ணாக இச்சா உருவாக்குகிறது. ஆயினும் அவர் அரசசார்பான பெண்பாத்திரம். ரோகினி விஜயகுமார என்பவர் தமிழர்களின் இழப்பு, மற்றும் உரிமை தொடர்பில் அக்கறைகொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனச் செயற்பாட்டாளர். இரண்டு நாவல்களினதும் அடிநாதமாக வரும் முக்கியபாத்திரங்கள் இவை இரண்டும். ஆனால், இந்த ஒற்றுமையை நாவலின் கதையை கட்டமைப்பதிலுள்ள சிறிய பகுதியாக கருதமுடியுமே ஒழிய, ஐடியா திருட்டாக கருத போதுமானதாக இல்லை.

ஆயினும், சில கதாபாத்திரங்களும், அவைகளைச் சுற்றி புனையப்படும் கதைச் சம்பவங்களிலும் நிறைய ஒற்றுமைகள் வெளிப்படுகின்றன. அவைகளை கவனத்திற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதை கவனிப்பது பிராயோசனமாக அமையும்.

இச்சா நாவலின் பிரதானமான கதாபாத்திரமான ஆலா, கிழக்கு மாகாணத்தில் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, சூழ்நிலைகாரணமாக சிறுவர் போராளியாக மாறி, பின் தற்கொலைப்போராளியாகி விடுதலைப் புலிகளின் தற்கொலை ஒப்பரேசன் ஒன்றை செய்யாது இயக்கவிதிகளை மீறியதன் காரணமாக, அரசால் பிடிக்கப்பட்டு சிறையில் வாழ்ந்து, அதிசயமானதொரு தலைகீழ் மாற்றத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, புலம்பெயர் தேசமொன்றைச் சேர்ந்த ஒருவரால் திருமணமுடிக்கப்பட்டு ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறார். கணவனின் அடாவடிகளை சந்தித்து மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதும் அதிலிருந்து தப்பிச்செல்லும் முயற்சியில் இறந்துவிடுகிறாள்.

சேனனின் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவலில் வரும் இரு பெரும் கதாபாத்திரங்களில் ஒன்றான சாதனா, வட மாகாணத்தில் பிறந்து, இறுதிப்போரின் விளைவுகளால் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சிக்கித் தவித்து, தவிர்க்க முடியாமல் சில நாட்கள் புலிப்போராளியாக கட்டாயப்படுத்தப்பட்டு இணைந்து, மிகக் குறிப்பிட்ட நாட்களுக்குள் அரச படைகளிடம் சரணடைந்து, சித்திரவதை முகாம்களில் கிடந்து உழன்று, பின்னர் அங்கிருந்து வெளியேறி, புலம்பெயர் தேசத்தை சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து, கணவனின் அடாவடிகளைச் சந்தித்து அவனிடமிருந்து வெளியேறி தனியாக வாழ்ந்து தனது வாழ்வைக் கடக்கிறாள்.

சுருக்கமாகப் பார்க்கும்போது இருவேறு கதைகள் போல இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தென்படுகின்றன. எனினும் ஒற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால், இருபாத்திரங்களையும் சுற்றி புனையப்படும் கதைச் சம்பவங்களில் ஒற்றுமைகள் இன்னும் ஆழமாக தெரிகின்றன.

ஆலா பிறக்கும்போது பட்டிப்பளை ஆறு பெருக்கெடுத்து ஊருக்குள் வந்து பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. அடுத்த நாள் இந்திய இராணுவம் சந்தையில் சுட்டபோது 17 பேர் இறந்துவிடுகிறார்கள். ஆலாவின் பிறப்பு சாதாரணமானால்ல என்கிறது கதை.

சாதனா பிறந்தபோது, இராணுவம் ஏவிய எறிகணை வெடித்து தாயினதும் குழந்தையினதும் ஓலம் கொழும்புவரைக் கேட்டதாகவும், 14 குழந்தைகளின் உயிர் பிரியும் ஒப்பாரியின் ஒருமித்தம் இருந்ததாகச் சொல்வர். என்பதினுாடாக சாதனாவின் பிறப்பும் சாதாரணமல்ல என்கிறது சேனனின் கதை.

ஆலா மூன்று பெரும் ஆபத்துக்களைச் சந்திக்கிறாள். அதில் இரண்டில் தப்பித்துவிடுகிறாள். இறுதியாக சந்திக்கும் ஆபத்தில் இறந்துவிடுகிறாள். மூன்றில் இரண்டு ஆபத்துக்கள் தாயகத்திலும், இறுதி ஆபத்து புலம்பெயர் தேசத்திலும் ஆலா சந்திக்க வேண்டி வருகிறது. இரண்டு ஆபத்துக்கள் அரச படைகளால் வருகிறது. மூன்றாவது ஆபத்து தனது கணவனால் வருகிறது.

சாதனாவும் மூன்று ஆபத்துக்களைச் சந்திக்கிறாள். இரண்டு தாயகத்தில் ஒன்று புலம்பெயர் தேசத்தில் சந்திக்க வேண்டி வருகிறது. ஆலாவைப்போலவே சாதனாவும் இரண்டு ஆபத்துக்களை இராணுவத்தாலும், மூன்றாவது ஆபத்தை தனது கணவனாலும் சந்திக்கிறாள். ஆனால், மூன்றிலிருந்தும் தப்பித்துவிடுகிறாள்.

ஆலா கொல்லுவதை விரும்பாதவளாக இருக்கிறாள். அவள் மாட்சிமை தாங்கிய ஒரு மரணத்தை விரும்புகிறாள். சாதனாவும் கொல்லுவதை விரும்பாதவளாக இருக்கிறாள். ஆலாவும், சாதனாவும் சிறுமிகளாகவே இந்த பெரும் அழிவுச் சூழலை சந்திக்கிறார்கள்.

ஆலா சரணடைந்து இராணுவ முகாமில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகிறாள். அவளின் வயிற்றில் இரும்புத் துண்டு ஒன்று சிக்கியிருக்கிறது. அது கடும் வேதனையைத் தருகிறது. சாதனாவும் இராணுவத்திடம் சரணடைந்து தடுப்புக்காவலில் இருக்கிறாள். அந்த முகாம் யுத்தம் நடைபெறும், மற்றும் நடைபெற்ற இடங்களிலிருந்த தடுப்பு முகாம்களில் இருக்கிறாள். சாதனாவின் உடல் முழுவதும் இரும்புத் துண்டுகள் புதைந்திருக்கின்றன.

ஆலாவை திருமணம் முடிக்க புலம் பெயர் தேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண்மகன் முன்வருகிறார். திருமணம் முடித்து புலம்பெயர் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மத்திய கிழக்கில் ஒரு ஹோட்டலில் வைத்து கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். நாட்டைப்போய்ச் சேர்ந்து காமத்தை நிறைவேற்ற பொறுமையில்லாத ஒரு ஆண்.

சாதனாவை திருமணம் முடிக்கும் ஆணும் புலம் பெயர் தேசத்தைச் சேர்ந்தவன். தனது நாட்டக்கு சாதனாவை அழைத்துச் சென்றாலும், ஒரு ஹோட்லிலேயே சாதனாவை அடைத்து வைத்து வல்லுறவுக்குட்படுத்துகிறான்.

ஆலாவின் கணவனின் சகோதரி ஆலாவை புறக்கணிக்கிறாள். சாதனாவின் கணவனின் குடும்பமும் சாதனாவைப் புறக்கணிக்கிறது.

றியாஸ் குரானாகணவனால் ஆலா உளவியல் துன்புறுத்தலுக்குள்ளாகிறாள். இது தொடர்ச்சியாக திட்டமிட்டு நடைபெறுகிறது. சாதனாவோ, உளவியல் மற்றும் உடலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுகிறாள். ஆலா கணவனிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாதவளாய், சிக்கித் தவிக்கிறாள். விவாகரத்து செய்யப்பட்ட நிலையில் நாடுகடத்தப்படும் நிலைக்கு வருகிறாள். அதிலிருந்து தப்பிக்க வழிதெரியாமல் மூன்றாவது ஆபத்தை சந்தித்து மரணித்துவிடுகிறாள்.

சாதனாவோ, கணவனால் உடல்சார்ந்தும், உளவியல்ரீதியிலும் துன்புறுத்தலுக்குள்ளாகிறாள். ஒரு கட்டத்தில் கணவனால் கொல்லப்படும் நிலை உருவாகிறது. அது சாதனா சந்திக்கும் மூன்றாவது ஆபத்து. அதிலிருந்தும் தப்பிக்கிறாள். வெளியேறி தொழில்களில் ஈடுபடுகிறாள்.

ஆலாவுக்கு ஒரு தம்பி உண்டு. அவனது மரணத்தினாலேயே ஆலா இயக்கத்தில் சேர வேண்டிவந்தது. சாதனாவுக்கும் தம்பி உண்டு, அவனை புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றிருக்கலாம் என ஊகிக்க நாவலிலுள்ள கதைச் சம்பவங்கள் இடந்தருகின்றன.

ஷோபாசக்தியின் இச்சா நாவிலிலுள்ள ஆலா என்ற கதாபாத்திரத்திற்கும், சேனனின் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவலில் வரும் சாதனா என்ற கதாபாத்திரத்திற்கும் இடையிலுள்ள இந்த ஒற்றுமைகள், இரண்டில் ஒரு கதையை இரண்டில் ஒருவர் வாசித்ததால் ஏற்படக்கூடிய தாக்கத்தினடியாக உருவாகவே வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. ஏனெனில், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்களைச் சற்றி உருவாக்கப்படும் புனைவுகள் என்பன மிக ஆழமான நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த நெருக்கம் ஒரேவகையான புனைவை இருவர் கற்பனை செய்யும் வாய்ப்புக்கு வெளியே இருப்பன. கதாபாத்திரங்களைச் சுற்றி வேறுவகையான புனைவுச் சம்பவங்களை உருவாக்கியிருந்தால் இது தாக்கத்தின் துாண்டுதலால் உருவாகவில்லை என்று கூறிவிடக் கூடியதுதான். ஆனால், அப்படிச் சொல்லுவதற்கான வாய்ப்புகள் கதைச்சம்பவங்களினுாடாக மறுக்கப்படுகின்றன.

சேனன் உள்ளிட்டோர் ஊகிப்பதைப்போல, சேனனின் நாவலை தட்டச்சு வடிவில் தர்மினியிடமிருந்து ஷோபாசக்தி வாசித்திருக்க வாய்ப்புள்ளது என்று இந்த இடத்தில் முடிவு செய்வதாக இருந்தாலும், அதற்கு சேனனின் நாவலில் அவரே சொல்லும் ஒரு விசயம் உறுத்தலாக வந்து தடுக்கிறது. அதாவது, சாதனாவின் இந்த நிலைக்கு அவரின் கணவனின் துன்புறுத்தல்கள்தான் காரணமென்று, தர்மினி என்ற கவிஞர் கூறுவதாக ஒரு தகவலை நாவலில் பதிவு செய்திருக்கிறார் சேனன். எனவே, சாதனா பற்றிய கதை சேனனுக்கு முன்பே வேறு பலருக்கு தெரிந்திருப்பதை இது உறுதி செய்கிறது. சாதனா பற்றிய கதையில் வரும் கதைச் சம்பவங்களை உறுதி செய்ய தர்மினி ஆதாரமாக இந்த நாவலின் கதையோட்டத்திலேயே கூறப்படுகிறது.

அதே நேரம், ஷோபாசக்தி தனது நாவலில் கதைக்கட்டமைப்பில் ஒரு சம்பவத்தை தெளிவாகவே குறிப்பிடுகிறார். ஆலா என்ற கதாபாத்திரம் சிறைக்கூடத்திலேயே இறந்துவிடுவதாக கூறுகிறார். இப்படிக் கூறுவதினுாடாக சிறையிலிருந்து வெளியேறி புலம் பெயர் ஆசாமி ஒருவரைத் திருமணம் செய்யும் பகுதி, மற்றுமொரு புனைவாக உருவாக்கப்படுகிறது. அதாவது புனைவுக்குள் ஒரு புனைவாக உருவாகி நிற்கிறது. அதுபோல், நாவல் எழுத்துமுறையின் கட்டமைப்பில், ஆலாவின் சிறைக்குறிப்புகளை சங்கேதங்களை, புதிர் அவிழ்க்கும் முயற்சியில் எழுத்தாளர் நோயல் நடேசனுடைய ஒரு சிறுகதையை துணைக்கு அழைப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, நடேசனின் கதையொன்றின் துாண்டுதலும், தழுவலும் நாவலின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதை வெளிப்படையாகவே ஷோபா சக்தி அறிவிக்கிறார்.

ஆக, இரண்டு விசயங்கள் மேலெழுந்து வருகின்றன. சாதனா பற்றிய கதை சேனனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று அல்ல. அதை சேனனே தனது நாவலில் குறிப்பிடுகிறார்.அப்படிக் குறிப்பிடுபவர் தர்மினி என்ற கவிஞர். ஷோபாசக்தியின் சகோதரி என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். சேனன் கூறும் ஐடியாத் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்ற ஊகம், தர்மினியை முன்வைத்தே வியாக்கியானப்படுத்தப்படுகிறது. சேனன் கூறுவதைப்போல் சாதனா பற்றி ஏற்கனவே தர்மினிக்கு தெரிந்திருக்குமானால், அது நிச்சயமாக திருட்டு என்ற கோணத்தில் முன்வைக்க தகுதியற்றது.

இரண்டாவது விசயம், நோயல் நடேசனின் சிறுகதை ஒன்றின் தழுவலும், துாண்டுதலும் நாவலின் ஒரு குறித்த விசயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஷோபாசக்தி வெளிப்பத்தியிருப்பதால், சேனனின் கதையில் இருந்தும் எடுத்து பயன்படுத்தியிருந்தால் அதையும் வெளிப்படுத்தியிருப்பார். இன்னுமொரு பிரதி, குறித்த நாவல் எழுத்திற்குள் பயன்படுத்தப்படுவதை தெரிவிக்கும் நேர்மை ஷோபாவிடமிருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது, தனது நாவலுக்கு பயன்படுத்திய பல பிரதிகளின் பகுதிகளில் ஒன்றை வெளிப்படையாக தெரிவிப்பதினுாடாக தான் நேர்மையானவன் என்பதை உறுதிப்படுத்தி, பயன்படுத்தப் பட்ட பிற பிரதிகளை மறைக்கும் செயலாகக்கூட இது அமைந்திருக்கலாம்.

சேனன் சொல்லுவதைப்போல ஐடியாத் திருட்டு என்ற முன்வைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அதே நேரம் இந்த திருட்டு என்ற சொல் ஏலவே தமிழில் ஒரு எழுத்தாளரை தடாலடியாக தாக்குவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அது குற்றம்சாட்டப்படும் எழுத்தாளருக்கான வரலாற்றுரீதியிலான அடையாளக் கட்டமைப்பாக மாற வாய்ப்பிருக்கிறது என்றவகையில், இந்த வகை குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதற்காக சேனனின் தனது எழுத்துக் குறித்த பிரக்ஞைபூர்வமான உரிமைக்கும், அந்த எழுத்துப் பிரதியிலிருந்து வேறொருவர் சம்பவங்களை பயன்படுத்தி தனது எழுத்து என உரிமை கோருவதற்கு எதிரான கருத்து முன்வைப்புக்களை மறுதலிக்கவும் விரும்பவில்லை. ஒருவரின் எழுத்து என்பது அவரது அறிவுச் சொத்து. அதற்காக அவர் வாதிடுவது எழுத்தாளருக்கிருக்கின்ற உரிமையோடு தொடர்புபட்டது என்றவகையில் சேனனின் தார்மீக உரிமையை மதிக்கிறேன். அதன் பக்கம் நிற்பதற்கும் விரும்புகிறேன். ஆனால், அதை முன்வைக்கும் வழிமுறையையும், குற்றச்சாட்டின் தன்மையையும் மறுக்கிறேன். எந்தவொரு நேர்மையான இலக்கியச் செயற்பாட்டாளனும் இப்படித்தான் நடந்துகொள்ள முடியும். நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அதே நேரம், குறித்த பிரச்சினை தொடர்பில் ஷோபாசக்தி வெளிப்படுத்தும் மௌனமும் நேர்மையற்றது. சேனனின் குற்றச்சாட்டு, மௌனத்தால் கடந்து செல்லும் வகையில் எளிதானது அல்ல. இரண்டு நாவல்களையும் வாசிக்கும் எவருக்கும் நான் சொல்லும் விசயம் புலப்பட்டுவிடும். ஆலா மற்றும் சாதனா என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி புனையப்படும் சம்பவங்கள் தற்செயலானதாக இருக்க வாய்பற்றவை. இந்த கதைச் சம்பவங்கள் ஏலவே மக்கள் பரப்பில் அல்லது தனிப்பட்ட சிலரிடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால்தான் இரண்டு கதைசொல்லிகளான ஷோபாவும், சேனனும் அந்தக் கதைச் சம்பவங்களைக் கேட்டு தமக்கு முடிந்தவகையில் பிரதிகளுக்குள் புனைவாக மாற்றியிருக்க வேண்டும். கதாபாத்திரங்களுக்கிடையிலான பண்புகளில் ஒத்த தன்மைகள் வெளிப்படுவதும், கதைச் சூழலும், கதை நகரும் காலமும் ஒன்றாக இருக்கலாம். அதையும் தாண்டி, கதைச் சம்பவங்களின் நுண்மையான அம்சங்கள் கூட ஒரே தன்மையாக இருக்க முடியாது. ஆனால், ஷோபசக்தியின் ஆலா கதாபாத்திரமும், சேனனின் சாதனா என்ற கதாபாத்திரமும் நுண்ணளவில் ஒற்றுமைகளை கொண்டிருக்கின்றன என்ற வகையில், ஒன்றிலிருந்து ஒன்று ஆழமாக ஊடாடி நிற்கும் கதைச் சம்பவங்களாக இருப்பதால், இருவரில் ஒருவர் இந்தக் கதையை படித்திருக்க வேண்டும். கதையைக் கேட்டிருந்தால் கூட சம்பவங்களின் நுண்மையான பகுதிகள் தவறவிடப்பட்டு வேற்றுமைகள் பெருகியிருக்க வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

இப்படி ஊகிக்க இடந்தருவதால், சேனன் கூறுவதைப்போல ஷோபாசக்தி ஏதோ ஒரு வகையில் சேனனின் நாவலை படித்திருக்க வாய்ப்புள்ளது. ஷோபாவின் நாவல் முதல் வெளிவந்திருக்கிறது. சேனனின் நாவல் பிறகுதான் வெளிவந்திருக்கிறது. வெளிவந்த கால அளவைப் முன்வைத்துப் பார்த்தால், ஷோபாவின் நாவலை படித்த துாண்டுதலில்தான் சாதனா என்ற கதாபாத்திரத்தை சேனன் உருவாக்கியிருக்க வேண்டும். இப்படித்தான் குற்றச்சாட்டு வந்திருக்க வேண்டும். அதைச் ஷோபாசக்திதான் முன்வைத்திருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக சேனன் ஷோபாசக்தியின் மீது குற்றச் சாட்டை வைத்திருக்கிறார் எனில், அதைக் கூட இந்த இடத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஊடிழைப்பிரதி என்ற பின்நவீன இலக்கியச் செயல், எந்தப் பிரதியிலிருந்து சம்பவங்களை எடுத்தேன் என்பதை குறிப்பிடுவதினுாடாக தனக்கு எதிரான விமர்சனத்தை ஒரு இலக்கியப் பிரதி தவிர்த்துவிடுகிறது. இந்த எளிமையானதும், நேர்மையானதுமான செயற்பாட்டை செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஆனால், ஷோபாசக்தியின் நாவலில் ஏற்பட்டிருப்பது ஊடிழைப் பிரதிச் செயல் அல்ல. இது தழுவலுக்கும், துாண்டுதலுக்கும் உள்ளான ஆழமான நிலையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரு இலக்கியச் செயல். அதைக் குறிப்பிடுவதினுாடாக பெரும் குற்றச்சாட்டை கடந்துவிடலாம். அல்லது, இந்த சாதனா என்ற கதாபாத்திரத்தின் சம்பவங்களால் தாக்கமுற்றிருக்கும் ஆலாவின் சம்பவங்கள் வேறெங்கோ இருந்து பெறப்பட்டிருந்தால் அதைக் குறித்தாவது ஷோபாசக்தி வெளிப்படுத்துவது இலக்கிய நேர்மையை ஏற்பதாக ஆகும். ஆனால் அது ஷோபாசக்தியால் சாத்தியப்படுமா? ஏன் தமிழ்ச் சூழலில்தான் சாத்தியப்படுமா?

இறுதியாக, குறித்த ஒரு சம்பவத்தை இலக்கியப் பிரதியின் ஓர் அலகிற்கு பயன்படுத்துவதினால் அப்படி பயன்படுத்திய எழுத்தாளரை திருட்டு என்ற வசைச்சொல்லால் ஒரு அடையாளத்தை உருவாக்குவது இன்றைய இலக்கியச் செயற்பாடு குறித்த விரிந்த பார்வையைக்கொண்டிருப்பவர்களால் சாத்தியமற்றது. அதுபோல், இலக்கிய நேர்மையை மறைத்து தனது இலக்கியப் பிரதியில் பயன்படுத்தப் பட்ட சம்பவங்கள் எங்கு பெறப்பட்டன என்ற கதையை மறைப்பதும் இலக்கியச் செயற்பாடு குறித்த விரிந்த பார்வையைக் கொண்டிருப்பவர்களால் சாத்தியமற்றது.

றியாஸ் குரானா-இலங்கை

றியாஸ் குரானா

 

 

 

(Visited 622 times, 1 visits today)