மாக்ஸ் ஜேக்கப்பின் மரணம்-மொழிபெயர்ப்புக் கட்டுரை- தேசிகன் ராஜகோபாலன்

மார்க்ஸ் ஜேக்கப்பற்றிய சிறுகுறிப்பு :

தேசிகன் ராஜகோபாலன்1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் திகதி குயிம்பர் பிரிட்டனியில் பிறந்த மார்க்ஸ் ஜேக்கப் பிறெஞ் எழுத்துப்பரப்பில் கவிஞர், ஓவியர், எழுத்தாளர் விமர்சகர் என்று பல்முனை ஆற்றல்களை உடையவராக அடையாளப்படுத்தப்படுகின்றார். 1901 ஆம் ஆண்டு ஒரு கோடைகாலப்பொழுதில் பாரிஸ் நகரில் பிக்காஸோவின் நட்பைப் பெற்றுக்கொண்ட மார்க்ஸ் ஜேக்கப்புக்கு இந்தச்சந்திப்பே பிறெஞ் மொழியை கற்பதற்குத் திறவுகோலாக இருந்தது எனலாம். அதன் பின்னர் வ்புல்வார்ட் வோல்டயர் வீதியில் ( Boulevard Voltaire ) இருந்த பிக்காஸோவின் அறையில் பிக்காஸோவின் அறைத்தோழராக இருந்த மார்கஸ் பிக்காஸோவின் மிக நெருக்கமான நண்பராக இருந்தார்.

அடிப்படையில் யூத மதநம்பிக்கைகளை கடந்த ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்த மார்க்ஸ் ஜேக்கப் 1909 ஆண்டில் கிறிஸ்துவின் தரிசனம் தனக்கு கிட்டியதாகக் கூறி கத்தோலிக்க மதத்திற்குத் தன்னை மாற்றிக்கொண்டார். இந்த மாற்றமானது தனது ஓரினச்சேர்க்கை பழக்கத்தில் இருந்து தன்னை விடுவிக்கும் என நம்பினார்.

பிறெஞ் இலக்கிய வெளியில் குறியீட்டாளர்களுக்கும் கலை இலக்கியவாதிகளுக்கும் இடையியேலான முக்கிய இணைப்பாராக மார்கஸ் ஜேக்கப் விளங்கினார். இவரது உரைநடை கவிதைகளான லு கொர்னே ஆ டே (Le cornet à dés, தி டைஸ் பாக்ஸ், 1917 – 1948 ஜெலிமார்ட் பதிப்பில் ஜீன் ஹ்யூகோவின் ஓவியங்கள் மூலம் மெருகூட்டப்பட்டுள்ளது) மற்றும் இவர் வரைந்த ஓவியங்களையும் கொண்டு 1930 ஆம் ஆண்டு மற்றும் 1938 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் மார்க்ஸ் நடாத்திய கண்காட்சி மூலமும் குறியீட்டாளர்களுக்கும் கலை இலக்கியவாதிகளுக்கும் இடையில் அவர் ஒரு முக்கியமான இணைப்பாளராகத் திகழ்ந்தமையை நாங்கள் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மார்க்ஸ் ஜேக்கப்பின் படைப்புக்களில் செயிண்ட் மாற்றோல் (1911), கட்டுப்பாடற்ற உரைநடையைக் கொண்ட  சென்ட்ரல் லு லபோறத்துவா சென்றால் 1921, மற்றும் லா டுஃபென்ஸ் து ரர்ருஃப் – ( Saint Matorel (1911), the free verses Le laboratoire central (1921), and La défense de Tartuffe (1919), டார்ட்டஃபின் பாதுகாப்பு (1919) ஆகிய நூல்கள்மார்க்ஸ் ஜேக்கப்பின் தத்துவ மற்றும் மத அணுகுமுறைகளை விளக்குகிறது.

1936 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் இருந்து செயிண்ட் வ்வெனுவா சூர் லுவார் (Saint-Benoît-sur-Loire, Loiret) குடியேறுவதற்காக வெளியேறிய மார்க்ஸ் ஜேக்கப் 1944 ஆம் ஆண்டளவில் ஜெர்மன் நாசிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒர்லியன்ஸ் நகரத்து சிறையில் அடைக்கப்பட்டார். ஏலவே நாசிகளால் கைது செய்யப்பட்ட மார்க்சின் சகோதரரான கேஸ்ட்டன் க்கஸ்ரொன் (Gaston) தங்கையான மைர்த்தி லியா (Myrthe-Lea) அவரது கணவர் ஆகியோர் அவுஸ்ச்விட்ஸ்க்கு நாடுகடத்தப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டனர். தனது தங்கையின் விடுதலைக்காக மார்க்ஸ் எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவையுடன் மனத்தைக் கலங்கடிப்பவை. இறுதியில் மார்க்ஸ், ஆஷ்விட்ஸ்-க்கு கொண்டு செல்லப்படுவதற்காக ட்ரான்ஸி தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். மூச்சுக்குழாய் நிமோனியாவால் பாதிப்படைந்து லா சித்தே டு லா முத்தே ( La Cité de la Muette) மார்க்ஸ் இறந்தார். மார்க்ஸ் இறக்கும் பொழுது கூறிய வார்தைகளான: “நான் கடவுளுடன் இருக்கிறேன்,” நான் ஏற்கனவே அவரைத் தொலைவிலிருந்து பார்த்துவிட்டேன். “நீங்கள் தேவதூதரின் தோற்றத்தைப் பெற்றிருக்கிறீர்கள்” மனத்தைக் கனக்க வைப்பவை. இரண்டாம் உலகமாகாயுத்தம் முடிவடைந்த பின்னர் மார்க்சின் உடலம் புதைக்கப்பட்டது அதன் பின்னர் உடலத்தின் எச்சங்கள் மார்க்சின் நண்பர்களான ஜோன் கஸ்சோ ( Jean Cassou ), றேனே இச்சே ( René Iché ) ஆகியோரால் செயிண்ட் வ்வெனுவா சூர் லுவார்-ல் (Saint-Benoît-sur-Loire, Loiret இருந்த மார்க்ஸ் ஜேக்கப்பின் குடும்பக் கல்லறைக்கு மாற்றப்பட்டன.

நடு குழுமம்

நடு லோகோ

 

 

 

00000000000000000000000000000000000

பின்வருபவை; எ லைஃப் இன் ஆர்ட் அண்ட் லெட்டர்ஸ் என்னும் நூலின் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டவர்களின் பிழிந்தெடுக்கப்பட்ட பகுதியாகும். இந்த புத்தகம் அடுத்த வாரத்தில் டபிள்யு. டபிள்யு நோர்ட்டன் அன் கொம்பனியினால் வெளியிடப்படவுள்ளது.

மாக்ஸ் ஜேக்கப் 1876ஆம் ஆண்டு பிரிட்டானியாவின் கியும்பெர் நகரில்( Quimper, Brittany) யூதமதத்தைப் பின்பற்றாத ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபின், மேற்படிப்பிற்காக பாரிசில் உள்ள காலனித்துவ கல்லூரியில் சட்டம் படிக்கச் சென்றார். பாடங்களை அவர் வேகமாகக் கிரகித்துக்கொண்ட போதிலும் அவருக்கு கலையின்மீது ஈடுபாடு ஏற்பட்டது. அவர் 1901இல் பிகாசோவைச் சந்திக்கிறார். அவர்களது நெருக்கமான நட்பு, மோன்ட்மார்ட்ரியின் நவீன கலைஞர்களைக் கொண்ட சமூகத்தின் மொன்ட்மார்ட், பட்த்தோ-லாவார் (Montmartre, the Bateau-Lavoir)  கலையரங்குகளை அடியோடு புரட்டிப்போட்டது. 1909ஆம் ஆண்டில் ஜேக்கப் கிறிஸ்துவின் ஆன்மீக தரிசனத்தை அனுபவித்தார். அதன் பிறகு 1915இல் முறைப்படி றோமகன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தனது முற்போக்குக் கவிதைகளை உள்ளடக்கிய லு கோர்நெட் அ டேஸ் ( Le Cornet à dés (1917) (The Dice Cup) என்னும் நூலின் மூலம் அவர் மிகப் பிரபலமடைந்திருந்தார். இருப்பினும் அவர் ஏராளமான கவிதைகள், காப்பியங்கள், உரைநடை, புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் தியான நுட்பங்கள் குறித்து ஏராளமான தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். துறவிகளின் மடாலயமான செயிண்ட்-பெனாய்ட்-சுர்-லுவார் (1921-1928 மற்றும் 1936-1944) ( Saint-Benoît-sur-Loire ) ஆகிய இரண்டு நெடிய காலங்களிலும் இணைந்து செயற்பட்டார். 1944ஆம் ஆண்டு பெப்ரவரியில் கெஸ்டபோவால் கைது செய்யப்பட்ட அவர், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு அதே ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி டிரான்சி முகாமில் இயற்கை எய்தினார். அடுத்தமுறை ஆஷ்விட்சுக்கு பயணிப்பவர்களின் பெயர்ப்பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.

1943ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் அவர் புனித பெனடிக்ட் தேவாலயம் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு நத்தார் பண்டிகைக்கான பரிசுப்பொருட்களை வாங்குவதற்காக ஓர்லியன்ஸ் மற்றும் மொன்டார்ஜிஸ்-க்குச்( Orléans and Montargis) சென்றார். மொன்டார்ஜிஸில் வசிக்கும் தனது மருத்துவ நண்பர் ஒருவரது வீட்டில் அவர் ஐந்து நாட்கள் விருந்தினராகத் தங்கியிருந்தார். அங்கு அவர் மகிழ்ச்சிகரமான குடும்த்தின் வரவேற்பினை அனுபவித்தார். நத்தார் கொண்டாட்டங்களுக்காக புனித பெனடிக்ட் தேவாலயத்திற்குத் அவர் திரும்பியிருந்தார். பசிலிக்காவில் ஆராதனை இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை தேவாலயம் காட்சிப்படுத்தியிருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பின்னர், புதுவருட வாழ்த்துக் கடிதங்களை எழுவதிலும் கிராமத்தில் சம்பிரதாய சந்திப்புக்களை மேற்கொள்வதிலுமாக அவரது பொழுது கழிந்தது. இவை அனைத்தையும் 1944ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதியன்று ஜக் மெசூர்-க்குச் ( Jacques Mezure) சொல்லிக்கொண்டிருக்கையில் அவருக்கு தனது சகோதரி மிர்ற்ரே-லேயா (Mirté-Léa) கைது செய்யப்பட்டதுகூடத் தெரியாது.

மிர்ற்ரே-லேயா ஜனவரி நான்காம் திகதி கைதுசெய்யப்பட்டு டிரான்சி தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜேக்கப்  தனக்குத்தானே சிறையமைத்துக்கொண்டு ஒதுங்கியிருந்தார். அவளைக் காப்பதற்கான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது எழுத்துகள் ஜெர்மானியர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்று நினைத்துக்கொண்டு கொக்டியொ, மேரி லாரென்சின், மிஸ்சியா செரட், சாச்சா கில்ரை, ஓர்லியன்ஸ் பிஷப், சென்ஸின் ஆர்ச் பிஷப் ஆகியோருக்கு அவரது விடுதலை தொடர்பாக கடிதங்கள் எழுதினார். ஜெர்மனியரைக் காதலித்த கொக்கோ சேனலிடம் உதவி கோருவதா வேண்டாமா என்று தனது நண்பர் ஜூலியன் லாநோவிடம் ஆலோசனை நடத்தினார். அவரது கடிதங்களும் எழுத்துகளும் இதயத்தைக் குடைந்தெடுத்தன. தனது இளைய சகோதரியை “தனது குழந்தைப் பிராய தோழியாக” விளித்திருந்த அவர், ஒரு விதவையாக தனது சகோதரி அனுபவிக்கும் துயரங்களையும் மூளை வளர்ச்சி குன்றிய அவளது மகனைப் பராமரிப்பதற்கான அவளது அர்ப்பணிபபுகளையும் விவரித்திருந்தார். தனது கடிதத்தில்;

“அன்பிற்குரிய நண்பரே, உங்களுடைய கைகளையும் உமது உடையின் விளிம்பையும் முத்தமிடுவதற்கு என்னை அனுமதியுங்கள்… ஏதாவது செய்யுங்கள் என்று நான் உங்களிடம் இறைஞ்சகிறேன்” என்று அவர் மிஸ்ஸியாவிடம் கெஞ்சுகிறார்.

“அடையாளம் தெரியாத சில யூதர்கள் இருப்பதால்” தன்னால் உதவ முடியாது என்று சாச்சா கைட்ரி பதிலுறுத்தார்.

“அதுவே மேக்ஸாக இருந்திருந்தால் தன்னால் ஏதாவது செய்திருக்க முடியும”; என்றும் அவர் கூறினார்.

இப்பொழுது டிரான்சி ஆண்கள், பெண்கள், குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. அவுஸ்க்விட்சுக்கை நோக்கி ஒவ்வொரு வாரமும் போக்குவரத்து இடம்பெற்றது. மிர்ற்ரே-லேயா-வின் சகோதரர் தனது மனத்தாங்கலை முன்வைத்து முறையீடுகளைச் செய்த போதிலும், ஜனவரி 20ஆம் திகதி மிர்ற்ரே-லேயா வலுக்கட்டாயமாக தொடரூந்தில் திணிக்கப்பட்டார். அவர் அவுஸ்க்விட்சுக்கை அடைந்தவுடனேயே எரிவாயு அடுப்பிற்கு இரையாக்கப்பட்டார். தனது தங்கைக்கு என்ன நடந்தது என்பது மேக்ஸ் ஜேக்கப்-க்கு தெரியவே இல்லை.

000000000000000000000000

தனது தங்கையைக் காப்பாற்றுமாறு கோரி கடிதம் எழுதாதபோது, ஜேக்கப்  கோங்கோராவை வாசித்துக்கொண்டிருந்தார். மல்லார்மியைவிட அது சிறந்தது என்று அவர் மார்செல் பியெலுவுவிடம் கூறினார். அது ஒரு உறைய வைக்கும் ஞாயிற்றுக் கிழமை விடியல் பொழுது பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, மொன்டார்கிஸ் மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் கேஸ்டல்போன், ஜேக்கப்பை சந்திப்பதற்காக பீலஸில் புனித பெனடிக்ட் தேவாலயத்தை வந்தடைந்தார். மேடம் பெர்சிலார்ட்டின் வீட்டில் உள்ள ஜேக்கப்பின் அறையில் அவர்கள் இருவரும் நெருங்கி நின்றபடி, அறையில் இருந்த அடுப்பில் தமது உடலை சூடேற்றிக்கொண்டிருந்தினர். அப்பொழுது அவர் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை மருத்துவர் வியந்து பாராட்டினார். ஒரு சிறிய உணவு விடுதியில் இருவரும் மதிய உணவு உண்டனர். உணவு உட்கொண்டபடியே,

“அவர்களால் இதையாவது என்னிடமிருந்து பறிக்க முடியாமல் போனதே, இவை எனது உயிர்” என்று ஜேக்கப்  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நீங்கள் எப்பொழுதுமே என்னை நம்ப முடியாதென்று உங்களுக்குத் தெரியும். நான் விடயங்களை உருவாக்குகிறேன். அது மோசமானது என்பது எனக்குத் தெரியும். அதற்காகவே நான் தினமும் அருட்தந்தையிடம் பாவமன்னிப்பும் கோருகிறேன் பிறகு மீண்டும் செய்கிறேன்”; என்று மருத்துவர் கெஸ்டெல்போனிடம் பாவமன்னிப்பு கோரினார். அவர்கள் ஏற்கனவே பலமுறை செய்து வருவதைப் போன்றே பஸிலிக்காவிற்கு விஜயம் செய்தனர். பல ஆண்டுகளாக பார்வையாளர் குறிப்பேட்டில் கைச்சாத்திடாத ஜேக்கப்  தனது கைச்சாத்தை பதிவிட்டதுடன் 1921-1944 என்று திகதியையும் குறிப்பிட்டார்.

அடுத்தநாள் காலையில் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலையில் எழுந்து அப்பே ஹட்டனில் உள்ள ஹாஸ்பைஸ் தேவாலயத்தில் ஆராதனை நடத்தவிருந்த பாதிரியாருக்கு உதவுவதற்காக தேவாலயத்தின் தனியறைக்குச் சென்று தனது பணி முடித்து மீண்டும் தனது அறைக்குத் திரும்பி, தீ மூட்டி, தனது நாளாந்த தியானத்தை எழுதினார்.

அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்தபொழுது, அவர் மகிழ்ச்சியான மனோநிலையில் கவிதையை சீக்கியடித்தபடி இருந்தார் மதிய உணவின் பின்னர், மருத்துவர் அவர்களை ஜெர்மனியர்களின் குண்டுவீச்சில் சிதிலமடைந்த போதிலும் எஞ்சிய அரைவாசியைக் காண்பதற்காக சல்லிக்கு அழைத்துச் சென்றார். பீலஸில் இருப்பவர்கள் இங்குதான் மொன்டார்கிஸ் செல்வதற்கான பேரூந்தில் ஏறவேண்டும். அவர்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்கு செல்வதற்குத் திட்டமிருந்தனர். மாக்ஸ் அந்த பேரூந்து நகரத் தொடங்கியதும் அதிலிருந்தவர்களை நோக்கி, “குட்பை குழந்தைகளே!” என்று கையசைத்து வழியனுப்பினார்.

செவ்வாய்க்கிழமை அன்று, யாக்கோபு அவரது நண்பர்களான மருத்துவர் ஜியோர்ஜிஸ் மற்றும் அவரது துணைவியாருடன் அந்த கிராமத்தில் இராப் போசனம் உண்டார். இரவு உணவை முடித்துக் கொண்டு விரைவாகவே கிராமிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் செனறுவிட்டார்.

அடுத்தநாள் திருநீற்றுப் புதன்கிழமை: அந்த அதிகாலைப்பொழுதில் பசிலிக்கா தேவாலயத்தின் சேமக்காலையில் ஜேக்கப்  தனது நெற்றியில் மதக் கோட்பாட்டின்படி மரணக் குறியீடை அணிந்துகொண்டார் பெப்ரவரி 24 வியாழக்கிழமையன்று, அவர் அதிகாலைப் பொழுதில் துயிலெழுந்து, தனது நாளாந்த தியானத்தை எழுதிவிட்டு அப்பி ஹட்டன் திருப்பலி ஒப்புக்கொடுப்பில் உதவுவதற்குத் தயாரானார். அவர் மீண்டும் தனது அறைக்குத் திரும்பி, கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கையில், ஓர்லியன்ஸ்-இல்  வந்த ஒரு சாம்பல் நிற காரிலிருந்து அகழியின் விளிம்பில் மூன்று ஜெர்மனியர்கள் வந்திறங்கினர். அவர்கள் மணியை ஒலிக்கச் செய்தனர், அவரது அறையின் படிக்கட்டுகளில் ஏறினர், அவரைக் கைது செய்தனர். மதகுருமாரையும் தேவாலயத்தில் இருந்தவர்களையும் அணிதிரட்டுவதற்காக மேடம் பெர்சிலார்ட் அவசர அவசரமாக மதகுருமார்களின் அறைக்கு விரைந்தார். இருப்பினும் அவர்கள் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தனர். (“அவர்கள் வந்திருக்க முடியும்” என்று அவர் பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தார். “அது அந்தளவிற்கு முக்கியமற்ற ஒரு மரணச்சடங்காகும்”) அந்த தேவாலயத்தில் இருந்த அருட்தந்தைகளில் ஒருவர் கலாநிதி கேஸ்டல்போன் விடுதியில் இருந்தபோதிலும் ஒரு சாராயக் குடுவையையும் தனக்குச் சொந்தமான இரண்டு நீண்ட கம்பளி ஆடைகளையும் ஜேக்கபின்  கைகளில் திணித்தார்.

அவரைப் போன்றே அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். “அவர் வந்தபின் பயன்படுத்தக்கூடிய வகையில் அவரது உடைமைகளை இங்கே வையுங்கள்” என்று ஜெர்மானியர்கள் உத்தரவிட்டனர். மேடம் பெர்சில்லார்ட் அவரை ஒரு மெல்லிய மெத்தையை (குயில்ட்) எடுத்துக்கொள்ளுமாறு பணித்தார்: “வெட்கம்” என்று கூறிய ஜேக்கப்,

“அதனை நீ ஒரு போதும் மீளப்பெற்றுக் கொள்ளப்போவதில்லை.” என்றும் கூறினார். ஆத்திரமடைந்த மேடம் பெர்சில்லார்ட் “இதோ பார்! உன்னுடம்பில் உள்ள ஏராளமான கொழுப்பு உன்னை அந்தளவிற்கு வழிபடச் செய்துள்ளது!” என்று சீறினார். ஜேக்கப் அமைதிகாத்தார்; காரில் ஏறுவதற்கு முன்னர், அங்கு சிறுகூட்டமாகக் குழுமியிருந்த கிராமத்தவர்களுக்கு கைலாகு கொடுத்தார். கார் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் அடுத்ததாக இருந்த உணவறையில் அமர்ந்திருந்த ஒருவர், “அந்த மனிதன், அந்த மனிதனால் இனி ஒரு தீங்கும் நேராது: அவர் எதையுமே எழுதவில்லை.” “அவர் தனது ஓவியங்களால் எழுதினார்” என்று அவரது கூட்டாளி சொல்லியதை கலாநிதி கேஸ்டெல்போன் செவிமடுத்தார்.

யாக்கோபு, ஓர்லியன்ஸில் ஆண்கள், பெண்கள் சிறார்கள் அடங்கலாக ஏனைய அறுபத்தைந்து யூதர்களுடன் மிகவும் கீழ்த்தரமான, அச்சத்தில் உறைய வைக்கும் இராணுவ சிறையில் பத்து சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டார். அவர்கள் படுத்துறங்குவதற்கு வைக்கோல் பாய் வழங்கப்பட்டிருந்தது; அது ஏற்கனவே சிறுநீரால் நனைந்திருந்தது. அவர்களுக்கு மதிய உணவாக சூப்பும் இரவு உணவாக பிரென்ச் சீசும் வழங்கப்பட்டன. காவல்துறை ஆணையாளரும் கவிஞருமான ஜோன் ரூசோல்ட்  (Jean Rousselot ) எப்படியோ ஒரு செய்தியை அனுப்பினார் அதில்: “உங்களது பதவிநிலையின் ஊடாக எனக்கு சில புகையிலையையும் தீப்பெட்டிகளையும் உங்களால் வழங்க முடியும்” கோக்டோவுக்கு இதனைத் தெரியப்படுத்துங்கள். எமது நட்பின் அடையாளமாக இதனைச் செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்தச் செய்தி  ஜோன் ரூசோல்ட்-க்கு  உரிய நேரத்தில் சென்றடையவில்லை.

ஓர்லியன்ஸ் சிறைச்சாலையில் ஜேக்கப்  தனது புகழ்மிக்க பரிசுகளை பயன்படுத்தினார். பின்னாட்களில் அவை ஒருபோதும் பயன்படப்போவதில்லை என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அவர் நகைச்சுவைகளைக் கூறியும், பாடியும் வேத வசனங்களை ஓதியும், ஜாதகப் பலன்களைக் கூறியும் காலத்தை நகர்த்திவந்தார்; இரண்டு குடுவைகளிலின் மீது மூடியிருந்த கண்ணாடிப் பேணிகளைப் பயன்படுத்தி நிமோனியாவால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணின்மீது சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தார். இப்படியாக உடனிருந்தவர்களின் அவநம்பிக்கையைப் போக்கினார். பெப்ரவரி 26ஆம் நாள் நொருங்கிய இதயங்களுடன் இருந்த மக்கள்குழு ஒரு லொறியில் ஏற்றப்பட்டு இரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தொடரூந்தில் திணிக்கப்பட்டு பாரிசில் உள்ள க்கார் டு ஒஸ்ற்றலிற்ஸ் (Gare d’Austerlitz ) இறக்கிவிடப்பட்டனர். அந்த தொடரூந்தில் பயணித்தபடியே யாக்கோபு உதவிகோரி சில வேண்டுகோள்களை விடுத்தார். அவ்வாறு கொக்ரோ(Cocteau )-வுக்கு அவர்,

“அன்பிற்கினிய ஜோன், எமக்குப் பாதுகாப்பாக வருகின்ற பிரான்சின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் நல்லுள்ளத்தின் பயனாக நான் தொடரூந்தில் பயணித்தபடியே இதனை எழுதுகிறேன் நாங்கள் விரைவில் டிரான்சியை வந்தடைவோம். நான் சொல்ல விழைந்தது அவ்வளவுதான். சாச்சா (Sacha [Guitry], யிடம் எனது சகோதரியைக் காப்பாற்றுமாறு கோரியபோது, ‘அது மேக்சாக இருந்தால் என்னால் ஏதாவது செய்ய முடியும்.” என்று கூறினார். நல்லது அது நான்தான். அன்பு முத்தங்கள், மாக்ஸ்.”

செயிண்ட்-பெனாய்ட்டில் உள்ள சானோயின் ஃப்ளூரோவிற்கு அவர்;

“அன்புள்ள எம். தி க்கியூரே, ( curé) இந்த கடிதம் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவரிடமிருந்து வருவதற்காக மன்னிக்கவும், ஜொண்டார்ம்-களின் (gendarmes )பிரான்சின் காவல்துறை அதிகாரி) நல்லெண்ணத்தினால் நான் விரைவில் டிரான்சிக்கு வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னிடம் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. நான் கடவுள்மீதும் எனது நண்பர்கள்மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரிடம் தோன்றியுள்ள தியாக உணர்விற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். எனது தொடர்ச்சியான பிரார்த்தனையில் நான் ஒருவரையும் மறக்கவில்லை.” மாக்ஸ் ஜேக்கப்.

சிறைக் கைதிகளை அழைத்துக்கொண்டு பேரூந்துகள் பாரிசிலிருந்து டிரான்சியை அடைந்தன. வருகை சம்பிராயத்தில், யாக்கோபு தனது தோழர்களுடன் முற்றத்தில் ஒரு மேசையிலிருந்து அடுத்த மேசைக்கு என ஒவ்வொரு மேசையாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கடந்துசென்றார். தன்னிடம் இருந்த 5,520 பிராங்கையும், தனது தங்க மணிக்கூடையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவை பதிவு செய்யப்பட்டன. தனது சுய விபரத்தை தெரிவித்தார். பதிவுசெய்யும் மேசையில் அமர்ந்திருந்த லிகிதர்களில் மேடம் பொலச்சும் ஒருவர், அவரே ஒரு கைதியாக இருந்தமையால் அவர் ஜேக்கப்பை  தனது தாயின் நண்பர்களில் ஒருவர் என அடையாளம் கண்டுகொண்டார். மேடம் லியோனும் அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு பத்தொன்பதாவது படிக்கட்டுப் பாதையில் அமைந்துள்ள நான்காவது மாடி ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 15,872 எண்ணும் இலக்கமும் ‘டீ’ என்ற எழுத்தும் வழங்கப்பட்டு ஒரு பச்சைநிற ஸ்டிக்கரும் வழங்கப்பட்டிருந்தது. இது அடுத்த பயண ஒழுங்கில் நாடுகடத்தப்படவுள்ளமைக்கு அடையாளமாகும். அவர் மார்ச் 7ஆம் திகதியன்று 69ஆவது பயணத்தில் அவுஸ்க்விட்ஸ{க்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

000000000000000000000000

 தேசிகன் ராஜகோபாலன்டிரான்சிக்கு வெளியில், இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்த ஜேக்கப்பின்  நண்பர்கள் எதையோ செய்யத் தொடங்கியிருந்தார்கள். கொக்ரோ Cocteau) தனக்கு எட்டிய அனைத்து வழிமுறைகளையும் நழுவாமல் பிடித்தார், லெஸ் நொவியாக்ஸ் லே நூவோ தம்ஸ் ( Les Nouveaux Temps: ) என்னும் கூட்டுத்தயாரிப்பு செய்திப்பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தக்காரரான தனவந்தர் ஜியோர்ஜிஸ் பெரேடு ஜோர்ஜ் ப்ரேட்-உடன் (Georges Prade) இணைந்து திட்டமிட்டார். பெரேடிடம் ஜேக்கப்புக்குச் சொந்தமான வண்ண ஓவியக் கலையின் தொழில்நுட்பததை தன் வசம் வைத்திருந்ததுடன், ஜேக்கப்பினால் மிர்டி-லியாவிற்கு உதவுவதற்காக ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தார்.  கொக்ரோ ஜேக்கப்பின் விடுதலையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை எழுதினார் அதனை ஜோர்ஜ் ப்ரேட் ஜெர்மன் நாட்டுத் தூதுவரகத்தின் கவுன்சிலர் ஹேன்ஸ்-ஹென்னிங் ஒன் போசிடம் ( Hans-Henning von Bose )கையளித்தார்.

சில தெய்வாதீனமான தற்செயல் நிகழ்வாக, ஜேக்கப்பின் நீண்டநாள் நண்பரும் அச்சுக்கோர்ப்பாளருமான ஹென்றி  சொகே ( Henri Sauguet )  ஜேக்கப்,  பெனிடென்ட்ஸ் என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து நெருக்கமாகக் கோர்க்கப்பட்ட ரோசாப்பூ மாலையைப் போன்ற ஒரு கவிதைத் தொகுதியை பெப்ரவரியில் வெளியிடுவதற்காக சரிபார்த்துக்கொண்டிருந்த வேளையில், பியர் கோல் ( Pierre Colle )இடமிருந்து கவிஞர் கைது செய்யப்பட்ட செய்தி வந்தது. அவரும் கோலேயும் மதிய உணவுவேளை நேரத்தில் வழக்கமாக பிக்காஸோ உணவருந்த வரும் அவரது கலைக்கூடத்திற்கு அருகில் அமைந்துள்ள க்றோண்ட் ஒகஸ்ரன் (Grands Augustins) வீதியில் அமைந்துள்ள லு கற்ரலோன் (Le Catalan) உணவு விடுதியில் அவரைச் சந்தித்துவிடவேண்டும் என்று விரைந்தனர். அப்பொழுது பிகாஸோ சோகமான மனோநிலையில் இருந்தார் என்று ஹென்றி  சொகே நினைவுகூர்ந்தார். அவருக்கு ஜேக்கப்  கைது செய்யப்பட்டது ஏற்கனவே தெரியுமோ தெரியாதோ என்பது சரியாகத் தெரியாது. “மாக்ஸ் ஒரு தேவதை. தானாகவே சுவரைத் தாண்டிக் குதிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

மாக்ஸ் ஜேக்கப்பைப் பற்றி மிகவும் பரவலாக அறியப்பட்டதன் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் அத்துடன் அவரைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்று பலர் நினைப்பதாலும் நடந்திருக்கலாம். இது பல திருப்திகளை வழங்குகிறது: பிரபல்யமான ஒரு ஓவியர் அரக்கனாகக் காட்டப்பட்டுள்ளதுடன், அவரது தொலைந்துபோன நண்பர் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அந்த சூழ்நிலை மிகவும் குழப்பகரமானது. பிக்காசோ, அது உண்மை, அவர் கதாநாயகன் இல்லை. 1911 ஆம் ஆண்டில் மோனாலிசாவின் திருட்டு குறித்து அவர்கள் விசாரிக்கப்பட்டபோது அவர் அப்பல்லினேயரை மீண்டும் காட்டிக் கொடுத்தார். ஆக்கிரமிப்பின்போது ஜேர்மன் அதிகாரிகள் பிக்காசோவின் கலைக்கூடத்திற்குச் சென்றிருந்தாலும், ஓவியர் பாதிக்கப்படக்கூடியவர்: அவர் பிரான்ஸ் நாட்டின் விச்சி நகரில் வசிக்கும் ஒரு அன்னியர், அவரை பிரெஞ்சின் காலனியான ஸ்பெயினுக்கு நாடு கடத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதினர்.

கொக்ரோ-வின் கோரிக்கையை அவர் கேள்விப்பட்டவுடன், பிக்காஸோ ஜோர்ஜ் ப்ரேட்-டம் சென்று அதில் தனது கையொப்பத்தினை இட்டார். ஜோர்ஜ் ப்ரேட் அவரது விடுதலைக்கு ஏதாவது செய்யுமாறு பிக்காஸோவிடம் கூறியதுடன், கெஸ்டபோவின்மீது தனிக் கையொப்பம் மட்டும் எத்தகைய தாக்கத்தையும் செலுத்தாது என்றும் பாரிஸில் பிக்காசோவின் நிலையை முன்னெப்போதையும் விட பலவீனமாக மாற்றும் என்றும் கருத்துரைத்தார். ப்பத்தோ லவுவார்-ன் ( Bateau-Lavoir ) நையாண்டி சொல்லாடலில் அவர்களது மூர்க்கத்தனம் கொப்பளித்தது.

000000000000000000000000

நான்காவது மாடியில் அவரது கோரைப்பாயின்மீது அமர்ந்திருந்த ஜேக்கப்  குளிரில் நடுங்கியதுடன் உயிர்போகின்ற அளவிற்கு இருமவும் தொடங்கினார். அந்த முகாம் முழுவதற்கும் ஒரு புகழ்மிக்க கவிஞர் சிறைப்பட்டிருக்கும் விடயம் பரவியது. பாதுகாவலர்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு அவரைப் பார்ப்பதற்கு விரைந்தனர். முதலாவது நாளில், அவரால் பேச முடிந்தது; தன்னைப் பார்க்க வந்திருந்த விருந்தாளிகளை அவர் தனது வழக்கமான பாணியில் கதைகளைச் சொல்லி மகிழ்வித்தார். ஆனால் அடுத்தநாள் அவர் தனது கைகளை நெஞ்சில் அணைத்தபடி நெஞ்சு வலியால் துடித்தார். மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அந்த வைத்தியசாலையில் இருந்த சக சிறைக்கைதிகளான ஏராளமான யூத வைத்தியர்களால் அவர் கவனிக்கப்பட்டார்.

மாக்ஸ் ஜேக்கப்  நிமோனியாவால் பீடிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிக்கொண்டிருந்தார். அவருக்கு வழங்குவதற்கு ஒரு மருந்தும் இல்லை. அவருக்கு வழங்கக்கூடியதாக இருந்ததெல்லாம் ஒரு கட்டிலும், அதற்கு ஏற்றார்போல் தூய்மையான விரிப்புகளும் இவை அனைத்திற்கும் மேலாக அன்பும் மட்டுமே. அவரது இறுதித் தருணங்களில் பல்வேறு முரண்பட்ட காரணிகள் தென்பட்டபோதிலும் அவை அனைத்துமே உண்மை என்பதையும் அவை அனைத்தும் அவர் அனுபவித்த சித்திரவதையின் வெளிப்பாடு என்பதையும் யாரும் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடியும். அவரது மரணத்தை அருகில் இருந்து பார்த்த ஒரேயொரு வாழும் சாட்சியான யூத மருத்துவர் ஒருவர் மாக்ஸ் ஜேக்கப்  அமைதியான முறையில் கண்களை மூடினார் என்று கூறுகிறார். மாக்ஸ் ஜேக்கப்  மரணிக்கும்போது “நான் கடவுளுடன் இருக்கிறேன்,” நான் ஏற்கனவே அவரைத் தொலைவிலிருந்து பார்த்துவிட்டேன் என்றும் தனது ஒரே ஒரு விருப்பமாக தான் ஒரு கத்தோலிக்கனாக மரணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினாராம். இந்த வேண்டுகோளை அவர் மிகவும் தந்திரோபாயமாகவும், மிகவும் பவ்வியமாகவும், தன்னுடன் இருந்த யூதர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாமலும் இவ்வாறு முன்வைத்தாராம்: “உங்களுக்குத் தெரியும், நான் எனது வாழ்க்கையை இப்படி வாழ வேண்டும் என்று அர்ப்பணித்துவிட்டேன்.” யாக்கோபு ஒரு மதபோதகரை அழைத்துவருமாறு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருந்ததாக அவருடன் இருந்து அவரைக் கவனித்துக்கொண்டிருந்த மற்றொரு யூத மருத்துவரான றேமண்ட் வெயில்லி நினைவுகூர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த முகாமில் ஒரு மதபோதகரும் இல்லை. ஆனாலும் ஒருசில யூத கத்தோலிக்க சிறைக்கைதிகள் அவரது மரணத்தின் போது பிரார்த்தனை ஜெபங்களை மேற்கொண்டனர்.

ஏனையவர்கள் மூர்க்கத்தனமான மரணத்தைத் தழுவினர். அவர்களது மரணத்தின் உணர்ந்தவராக ஜேக்கப் வாய்விட்டு அழுதார். மரங்கள் நடந்துசென்று அவர்களைச் சுற்றிவளைப்;பதை அவர் கண்டார். அவரது கால்கள் சில்லிடத் தொடஙக்கின, நீண்ட பெருமூச்சுவிட்டார். ஆனாலும் அவரது கடைசி வார்த்தைகள் மிகவும் சாந்தமாக வெளிவந்ததை உணர முடிந்தது: “நீங்கள் தேவதூதரின் தோற்றத்தைப் பெற்றிருக்கிறீர்கள்,” என்று தனக்கு வணக்கம் செலுத்திய வைத்தியர்களிடம் கூறினார். மார்ச் மாதம் 5ஆம் திகதி காலை 9மணிக்கு அவர் மரணித்தார். மேடம் பிளொச்சும் அவரது சகோதரியும் ஏனைய இரண்டு செவிலியர்களும் சேர்ந்து அவரது உடலை அந்த முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த அறையில் கிடத்தினர்.

000000000000000000000000

டிரான்ஸ்போர்ட் 69, அவரைவிட்டுவிட்டு 1501 மக்களுடன் மார்ச் 7ஆம் திகதி அவுஸ்ச்விட்ஸ் நோக்கிப் புறப்பட்டது.

றொஸ்னா வெர்ன்( Rosanna Warren )

 தேசிகன் ராஜகோபாலன்

 

 

 

 

 

 

தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 68 times, 1 visits today)