நேர்காணல்மொழிபெயர்ப்பு -இஸ்மாயில் காதரே-தேசிகன் ராஜகோபாலன்

“எழுதுவதென்பது மகிழ்ச்சியானதோ அல்லது மகிழ்ச்சியற்ற தொழிலோ அல்ல அது ஒருவிதமான இடைப்பட்டநிலை”

இஸ்மாயில் காதரே

சமகாலத்திய அல்பேனிய எழுத்தாளர்களில் உலகப்புகழ் பெற்ற முதலாவது எழுத்தாளர் நீங்கள். பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரை, அல்பேனியா என்பது மூன்றரை மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பாவின் முகட்டில் இருக்கின்ற சிறிய நாடு. எனவே, எனது முதலாவது கேள்வி அல்பேனிய மொழியின்மீது கவனம் செலுத்துகிறது. அது என்ன?

அல்பேனிய மக்கள் தொகையில் அரைவாசிப்பேர் கொசோவோ பிரதேசத்தில் அமைந்துள்ள யுகோஸ்லேவியாவில் வசிக்கின்றனர். ஐரோப்பிய மொழிகளுக்கு அடித்தளமாக அமைவதால் அல்பேனிய மொழியை உலகில் ஒரு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இதனை நான் எனது நாட்டின்மீதுள்ள கர்வத்தால் சொல்லவில்லை – இது உண்மை. மொழியியல்ரீதியில் சொல்வதானால், ஐரோப்பாவில் ஆறு அல்லது ஏழு மொழிக்குடும்பங்கள் உள்ளன அவையாவன: லத்தீன், ஜெர்மனி, ஸ்லேவிக், பால்டிக் (லாட்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றன) மேலும் கிரீக், ஆர்மேனியன், அல்பேனியன் ஆகிய மூன்று மொழிகள் குடும்பங்கள் அற்றவையாக உள்ளன. ஆகவே, ஐரோப்பிய மொழியியல் வரைபடத்தினை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தை வகிப்பதால் அல்பேனிய மொழி அது பேசப்படும் அந்த சிறிய நாட்டைவிடவும் கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. ஹங்கேரி, ஃபின்னிஷ் ஆகியவை இந்திய-ஐரோப்பிய மொழிகள் இல்லை.

பண்டைய இல்லிரிய மொழியின் ஒரே வாரிசாக இருப்பதாலும் அல்பேனிய மொழி முக்கியத்துவம் பெறுகிறது. பண்டைய காலத்தில், தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் கிரேக்கம், ரோம், அல்லிரியா என்னும் மூன்று பிரதேசங்கள் இருந்தன. இல்லேரிய மொழிகளில் அல்பேனிய மொழி மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளது. அதன் காரணமாகவே அது எப்போதும் கடந்தகாலத்தில் பல்வேறு சிறந்த மொழிகளுள் சிறந்துவிளங்குகிறது. அல்பேனிய மொழிகுறித்து தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட முதலாவது மனிதர் ஜேர்மனிய தத்துவ அறிஞரான கோட்ஃபிரைட் ஆவார். (1695)

The one Voltaire parodied in Candide as Dr. Pangloss, who said, “All is well in this the best possible of worlds.” 

உண்மை. இருப்பினும் அந்த நேரத்தில் அல்பேனியா தனிநாடாக இருக்கவில்லை; அது கிரிசுடன் பால்கன்ஸ்சின் எஞ்சிய பகுதியைப் போன்று ஒட்டோமேன் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இந்த ஜெர்மனியா பேரறிஞர் கண்டுபிடித்துள்ள மொழி ஆச்சரியமாக உள்ளது. அவருக்குப் பின்னர், ஏனைய ஜெர்மனிய அறிஞர்கள் அல்பேனியா தொடர்பில் நீண்ட ஆய்வுகளை தயாரித்துள்ளனர். உதாரணமாக பிரென்ஸ் பூப்பின் புத்தகம் மிகவும் விளக்கமாக உள்ளது.

அல்பேனிய இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதன் மூலம் யாது? அல்பேனியாவில் டான்டே, ஷேக்ஸ்பியர் அல்லது கோத்தே போன்று யாரும் உள்ளனரா?

அதன் மூலாதாரங்கள் முக்கியமாக வாய்மொழிமூலமானதே. அல்பேனிய மொழியின் முதலாவது இலக்கியப்படைப்பு பதினாறாம் நூற்றாண்டில் வெளிவந்தது. அது விவிலியத்தின் மொழிபெயர்ப்பு. அப்பொழுது நாட்டில் கத்தோலிக்கம் தழைத்திருந்தது. அதன் பின்னர் எழுத்தாளர்கள் தோன்றினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளராகத் திகழ்ந்த நைம் ஃபிராஷெரி என்பவரே அல்பேனிய இலக்கியத்தின் ஸ்தாபக தந்தையாகப் போற்றப்படுகிறார். டான்டே அல்லது ஷேக்ஸ்பியரின் சிறப்பியல்புகளைக் கொண்டிராமல், அவரால் ஒரு ஸ்தாபராகவோ குறியீடாகவோ திகழ்ந்திருக்க முடியாது. அவர் அல்பேனிய தேசப்பற்றைக் கட்டியெழுப்பும் விதத்தில் நீண்ட காவியங்களையும், அதேநேரம் வசன கவிதைகளையும் எழுதியுள்ளார். அவரைத் தொடர்ந்து புதநசபத குiளாவய வந்தார். அந்த இருவரும் அல்பேனிய இலக்கிய உலகில் கோலோச்சிய ஜாம்பவான்கள் அவர்களது படைப்புக்களை பாடசாலையில் பிள்ளைகள் கற்றனர். பின்னர் வந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் அவர்களைவிடவும் நல்ல படைப்புக்களை தயாரித்திருந்தாலும் நாட்டின் நினைவுகளில் அந்த இருவர்களின் இடத்தினை அவர்களால் பிடிக்க முடியவில்லை.

துருக்கியர்கள் கான்ஸ்தாந்திநோபிளை 1454இல் கைப்பற்றினர். பின்னர் பால்கன்ஸின் எஞ்சிய பகுதி மற்றும் கிரேக்கம் ஆகியவற்றையும் கைப்பற்றினர். துருக்கியர்கள் மீதான ஆப்கானியர்களின் தாக்கம் எத்தகையதாக இருந்தது?

மிகச் சொற்பம். நிர்வாக அல்லது உணவுப் பதார்த்தம் சார்ந்த கெபாப், கேஃப், பஜார்  போன்ற சொல்லாடல்கள் தவிர பெரியளவில் எத்தகைய தாக்கத்தையும் செலுத்தவில்லை. ஆனால் அதனால் மொழிக்கட்டமைப்பின்மீது எத்தகைய செல்வாக்கையும் செலுத்த முடியவில்லை. அவை ஒட்டுமொத்தத்தில் இரண்டு வெவ்வேறான பொறிகள் என்பதுடன், ஒன்றின் உதிரிபாகங்களை மற்றொன்றிற்குப் பயன்படுத்த முடியாமையே அதற்கான காரணம். துருக்கி மொழியானது துருக்கிக்கு வெளியில் எங்கும் அறியப்படவில்லை. நவீன துருக்கிய மொழியானது பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த துருக்கிய எழுத்தாளர்களினால் உருவாக்கப்பட்டது. வரட்டுத்தனமான, துருக்கிய நிர்வாக மொழி வழக்கொழிந்தது ஆகவே, அதனால் ஒட்டோமேன் சாம்ராஜ்யத்தின் ஏனைய மொழிகளின்மீது செல்வாக்கு செலுத்தமுடியவில்லை. துரக்கிய எழுத்தாளர்கள் தமது மொழியில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகக் கூறும் எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

மறுபுறத்தில், துருக்கிக்குள் பெர்சிய, அரேபிய, பிரெஞ்சு மொழி உட்பட ஏராளமான அன்னிய சொற்கள் உட்புகுந்துள்ளன. நவீன காலத்திற்கு முன்னர், துருக்கிய எழுத்தாளர்கள் தத்துவம் சார்ந்த விடயங்களை பெர்சிய அல்லது அரேபிய மொழியில் எழுதியிருந்தனர்.

ஒரு எழுத்தாளராக என்னைப் பொறுத்தமட்டில், அல்பேனிய மொழியான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அலாதியானது, – செழுமையானது, இனக்கமானது, கிரகிக்கக்கூடியது. எனது சமீபத்திய புதினமான ஸ்பிரிட்டில் நான் கூறியுள்ளவாறு, அது ஒரே பார்வையில் கிரேக்க மொழியில் மட்டும் நிலவுகின்ற பண்டைய பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பண்டைய கிரேக்க மொழியில் காணப்படுவது போன்றே, அல்பேனிய வினைச்சொற்களிலும் ஒரே சொல் அனுகூலத்தையும் துன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும் இது கிரேக்கத்தின் துயரங்களை மொழிபெயர்ப்பதற்கு வழிவகுக்கின்றது ஷேக்ஸ்பியரைப் போன்றே, பின்னவர் ஐரோப்பிய எழுத்தாளரை ஒட்டி கிரேக்கத்தின் துயரை வெளிப்படுத்துகின்றனர். கிரேக்க சோகம் ஒரு நூற்றாண்டு காலமே உயிர்ப்புடன் இருந்ததால் அவை சோகம் இளைஞர்களை தற்கொலை செய்ய தூண்டியதாக நியட்ஸ்செ கூறுகிறார். அவரது கூற்று சரியானதே. ஆனால் உலகத்தின் பார்வையில் அது ஷேக்ஸ்பியரைச் சகித்துக்கொண்டு இன்றளவும் தொடர்கிறது. மறுபுறத்தில், காவிய சகாப்தம் முடிவுற்றது என நான் நம்புகிறேன். நாவலைப் பொறுத்தவரை, அது இன்னமும் குழந்தை. அது இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

இருப்பினும் நாவலின் மரணம் ஐம்பதாண்டு காலத்தை முன்கூட்டியே சொல்கிறதே!

எப்பொழுதும் அர்த்தமற்ற விடயங்களைச் சொல்லும் ஏராளமானவர்கள் உள்ளனர்! ஆனால் உலகத்தின் கண்ணோட்டத்தில், அந்த நாவல் மறைந்துபோன – சோகத்தினால் – தொடருகின்ற – அது உருவானதிலிருந்து இன்னமும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய  முக்கியமான இருவகை காவியங்களை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கிறதா என்பதுதான்.

நீங்கள் கிரேக்க துயரத்தை நவீன கால நாவலுக்குள் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக நான் உணர்கிறேன்.

மிகச்சரி. பெரும் பேரழிவு மற்றும் கோரமான சம்பவங்களின் ஒரு கலவையை நான் உருவாக்க நான் முயற்சித்தேன். அதன் மிகச் சிறந்த உதாரணம்தான் உலக இலக்கியத்தின் சிறந்த படைப்புகளுள் ஒன்றான டான் க்விக்சாட்.

இந்த நாவல் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது….

இல்லவே இல்லை! என்னைப்பொறுத்தவரை இத்தகைய வகைப்பிரிப்புகள் தற்போது புழக்கத்தில் இல்லை. இலக்கியப் படைப்புக்களுக்கான சட்டங்கள் தனித்துவமிக்கவை, அவை மாறாதவை, அவை எல்லா இடத்திற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியானவை. நீங்கள் மனித வாழ்க்கையின் மூன்று மணித்தியாலத்தை மையப்படுத்தியோ அல்லது மூன்று நூற்றாண்டுகளை மையப்படுத்தியோ ஒரு கதையைச் சொல்லக்கூடும் அது ஒரே மாதிரியாகவே வெளிப்படுகிறது என்பதையே நான் குறிப்பிட்டேன். ஒவ்வொரு எழுத்தாளரும் ஆதாரத்துடன் சில விடயங்களை இயல்பான வழியில் படைக்கின்றார், அவரின் உள்ளுணர்வு அவருக்குப் பொருத்தமான நுணுக்கத்தை உருவாக்குகிறது. எனவே, அனைத்து வடிவங்களும் அல்லது காவியங்களும் இயற்கையானவையே.

கவனியுங்கள், இலக்கிய வரலாற்றில் வாய்மொழியிலிருந்து எழுத்திற்கு மாறுகையில் நிகழும் ஒரேயொரு முக்கியமாற்றம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக நான் நினைக்கிறேன். நீண்டகாலமாக இலக்கியம் என்பது பேச்சுவழக்காக மட்டுமே இருந்து வந்தது பாபிலோனியர்களும் கிரேக்கர்களும் எழுத்துலகிற்கு வந்ததன் பின்னர் உடனடியாக எழுத்து வழக்கிற்கு மாறியது. அது அனைத்தையும் மாற்றியது, ஏனெனில் முன்னர் கவிஞர் தனது கவிதையை பாடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது வரிகளை மாற்றிக்கொள்ள முடிந்தது. அவர் சுதந்திரமாகச் செயற்பட்டார். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அவரது கவிதைகள் வாய்மொழியூடாக மாற்றப்படுகையில் அவர் குறுகியகாலம் மட்டுமே நினைக்கப்படுபவராக இருந்தார். எழுதியதன் பின்னர், எழுத்துக்கள் நிலைத்திருப்பவையாக மாறின. படைப்பாளி தனது படைப்புகள் வாசிக்கப்படுவதனால் சில அனுகூலங்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளை, சிலவற்றை இழக்கவும் செய்கின்றனர் – அது அவர்களது சுதந்திரம். அதுவே இலக்கிய வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாகும். அத்தியாயங்களாகப் பிரித்தல், பந்தி பிரித்தல், நிறுத்தற்குறிகளை இடுதல் போன்றவை ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் பெறாதவை; அவை விபரங்கள் மட்டுமே.

உதாரணமாக, சமகால இலக்கியம் திரைப்படம், தொலைக்காட்சி, வேகமான தொடர்பாடல் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்துவதால் அது உயிர்ப்புடையதாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு எதிர்மறையான கருத்தே உண்மையானது! பண்டைய கிரேக்க எழுத்துக்களுடன் இன்றைய இலக்கியத்தை ஒப்பிட்டால், பரந்த நிலப்பரப்பில் ஒரு அகலமான விரிப்பில் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் வர்ணிக்க முடியாத வகையில் மனிதனும் கடவுளும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிமாறி வருவதைப் போன்று வரையப்பட்ட ஓவியத்தை நீங்கள் அவதானிக்க முடியும். பண்டைய கிரேக்க காவியத்தின் இரண்டாம் புத்தகத்தின் ஒன்றரைப் பக்கத்தைப் புரட்டிய உடனேயே காணப்படும் வேகம், பரந்த தோற்றம் ஆகியவற்றை நவீன எழுத்தாளர்களிடம் காணமுடியாது. அந்த கதை எளிமையானது: அகாமேம்னன் கடவுளை அவமதிக்கின்ற ஒரு  செயலைச் செய்கிறான். இதற்காக கடவுள் அவனை தண்டிக்க நினைக்கிறார். ஒரு தூதரை அழைத்து பூமிக்குப் பறந்து, அகாமேம்னன் என்னும் இராணுவ அதிகாரியைக் கண்டுபிடித்து அவனது தலையில் ஒரு தவறான கனவை விதைக்குமாறு கூறுகிறார். தூதர் ட்ராயை அடைகிறார், தூக்கத்தில் இருக்கும் அகாமேம்னனை கண்டுபிடிக்கிறார் ஒரு திரவத்தை ஊற்றுவதுபோன்று தவறான கனவை அவனது தலையில் ஊற்றிவிட்டு மீண்டும் வானத்திலுள்ள கடவுளிடம் சென்றுவிடுகிறான். காலையில், அகாமேம்னன் தனது அதிகாரிகளை அழைத்து தான் ஒரு அழகிய கனவு கண்டதாகவும் ட்ரோஜான்கள்மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறான். அவன் கிடிக்கிப்பிடிக்குள் அகப்பட்டதைப் போன்று தோல்வியை சந்தித்தான். இவை அனைத்தும் ஒன்றரைப் பக்கத்தில் விபரிக்கப்பட்டுள்ளன! கடவுளிடமிருந்து அகாமேனனின் மூளைக்குள் ஒருவர் வானிலிருந்து பூமிக்கு வருவதுதான் கதை. இன்றை எழுத்தாளர்களில் யார் இம்மாதிரி கண்டுபிடிக்க முடியும்? பாலிஸ்டிக் ஏவுகணைகள்கூட அவ்வளவு வேகம் கிடையாது!

இருப்பினும், நவீனத்துவம் போன்ற இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தனவே – ஜோய்ஸ், காஃப்கா…..

காஃப்கா மிகவும் பாரம்பரியமானது, அதனைப் போன்றேதான் ஜோய்ஸ_ம். ஜோய்ஸ் ஃபின்னெகனின் வேக்கில் உள்ளபடி உண்மையான நவீனத்திற்கு மாறுகையில் தோல்வியடைகிறார். அவர் வெகுதூரம் விலகிச் சென்று விட்டதனால் அந்த புத்தகத்தை ஒருவரும் விரும்பவில்லை. ஜோய்சியின் பரம இரசிகரான நபோகோவும்கூட அது பயனற்றது என்று கூறினார். தண்டனையிலிருந்து விலக்களித்தளினூடாககூட வெட்டிவிடமுடியாத நுட்பமான நரம்பு ஒன்று இருப்பதால் எழுந்தமானமாக மானுடப் பண்புகளின் சில விடயங்களைத் துண்டுபோட்டுவிட முடியாது. இதனால் புதிய கண்டுபிடிப்புகளும் நூதனங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்திக்கிறான் அவர்கள் காதல் வலையில் வீழ்கின்றனர். இந்தக் காதலில்,  சாதகங்கள், பல்வகைத்தன்மை ஆகியவற்றின் அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனால் இந்தப் பெண்ணை மானுடத்தின் மற்றொரு படைப்பாக யாருமே கற்பனை செய்ய முடியாது. யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றால், அதுவே அந்த சகாப்தத்தின் முடிவிற்கான எச்சரிக்கைகளாக அமையும்.

மனிதனின் ஆக்கத்திறனில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு இருக்கிறது எனக் கருதுகிறீர்களா?

நிச்சயமாக. மனிதசமூகம் கடந்த காலத்தில் சிக்குண்ட பாதையிலேயே நாமும் இருக்கிறோம்; நமக்கு முதலைகள் அல்லது ஒட்டகச்சிவிங்கியின் உளவியல்களை அறிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்தகாலம் ஒரு சுமையாக அமையலாம், ஆனால் அதற்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. நூதனங்கள், புதிய வகை என்ற ஓலங்கள் எல்லாம் கற்பிதங்களே. உண்மையான இலக்கியம் இன்னமும் இருக்கிறது அதுவே எஞ்சியிருக்கும்.

“எதிர்மறை ஆக்கத்திறன்” குறித்தும் நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அது குறித்து உங்களது கருத்து என்ன?

ஒரு எழுத்தாளரின் எதிர்மறை படைப்பு என்பது அவர் எழுதாமல் விடும் விடயங்கள்தான். நீங்கள் எதை எழுதக்கூடாது என்பதை அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு அசாத்திய திறமை வேண்டும். ஒரு எழுத்தாளரின் மனசாட்சிப்படி அவர் எழுதியதைவிட எழுதாமல் விட்டதே அதிகமாக இருக்கும். நீங்கள் ஒன்றை தெரிவு செய்கிறீர்கள். அந்த தெரிவு முக்கியமானது. மறுபுறம், இந்தச் சடலங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவர்களைப் புதைத்துவிடவேண்டும்; ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதைத் தடுப்பதற்கு, ஒரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான இடத்தத்தைத் தயார் செய்வதற்காக எப்படி சுத்தம் செய்வோமோ அந்த அளவிற்கு அது அத்தியாவசியமானது.

இது “நான் எழுதாத புத்தகங்கள் எனது நண்பர்கள் வெளியிட்ட புத்தகங்களைவிட மிகவும் சிறந்தது” என்னும் சிறில் கொன்னோலியை எனக்கு நினைவூட்டுகிறது. இருப்பினும் நாம் உங்களது தொடக்ககாலம் பற்றி உரையாடுவோம். முதலாவதாக உங்களது குழந்தைப் பருவம்: யுத்தம் மூண்டபோது நீங்கள் மிகவும் சிறியவர், அதன் பிறகு அல்பேனியாவில் அனைத்தும் மாறிவிட்டது.

நான் பல சம்பவங்களை கண்டதன் காரணமாக எனது குழந்தைப்பருவம் சிறப்பானதாக இருந்தது. நான் ஐந்துவயது பாலகனாக இருக்கும்போது யுத்தம் மூண்டது. நான் ஜிஜினோகாஸ்ரெற் என்னும் அழகிய நகரத்தில் வசித்துவந்தேன். அந்த நகரத்தின் ஊடாக இத்தாலியர்கள், கிரேக்கர்கள்…. ஆகிய அன்னிய இராணுவத்தினர் கடந்து சென்றனர். ஜேர்மனியர்கள், ஆங்கிலேயர்கள் என்று ஒருவர் மாறிமாறி ஒருவரால் அந்த நகரம் குண்டுவீசி அழிக்கப்பட்டது. ஒரு குழந்தையாக, அது ஒரு சாகசமாகப்பட்டது. நாங்கள் ஏராளமான வெற்று அறைகள் நிரம்பிய ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தோம். அந்த அறைகளில் நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். எனது குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதி அவை. எனது தந்தை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் நீதிமன்றத்தில் தீர்ப்பாய கடிதங்களை வழங்கும் மெஸஞ்சராகப் பணியாற்றினார். எனது தாயாரின் குடும்பம் பணக்காரக் குடும்பம். இதில் தலைகீழ் மாற்றமாக எனது தாயாரின் குடும்பம் கம்யூனிசக் கொள்கையைக் கடைப்பிடித்த அதே வேளை, எனது தந்தை பழமைவாதியாகவும் மதநம்பிக்கையுடையவராகவும் திகழ்ந்தார். நாங்கள் வீட்டில் மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்தோம், ஆனால் நான் எனது அம்மப்பாவின் வீட்டிற்குச் சென்றால் நான் அங்கு பணக்காரவீட்டுக் குழந்தையாக இருப்பேன். எனது தந்தை கம்யூனிச ஆட்சிக்கு எதிரானவர், எனது தாயாரும் அவரது குடும்பத்தினரும் அதற்கு ஆதரவானவர்கள். அதற்காக அவர்களிடையே சண்டை மூண்டது கிடையாது ஆனாலும் அவர்கள் ஒருவரையொருவர் சீண்டி, நையாண்டி செய்துகொள்வார்கள். பாடசாலையில், நான் ஒரு ஏழ்மைக் குடும்பப் பின்னணியைக் கொண்ட கம்யூனிச ஆதரவாளனாகவோ அல்லது அந்த அரசிற்கு பயந்து நடங்கும் பணக்கார குடும்பப் பின்னணியைக் கொண்டவனாகவோ நான் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. ஆனாலும் எனக்கு இரண்டு பக்கங்களும் தெரியும். அது என்னை குழந்தைப் பருவத்தின் மனச்சிக்கல்களிலிருந்து விடுவித்து நான் சுதந்திரமனிதனாக உலவ வழிவகுத்தது.

பாடசாலைப் படிப்பு முடிந்ததும் நீங்கள் தலைநகர் திராநிக்கு இடம்பெயர்ந்து பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயின்றீர்கள். பின்னர் மாஸ்கோவில் உள்ள கார்க்கி கற்கை நிலையத்திற்குச் சென்றீர்கள். அது குருஷ்ஷேவின் ஆட்சிக்காலம். ஸ்டாலினிசத்தால் நீண்ட காலம் உறைந்துபோயிருந்ததன் பின்னர் அப்பொழுது ஒருவிதமான சுதந்திரம் இருந்தது. மாஸ்கோவின் நேரடி அனுபவத்தை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

விட்டுக்கொடுப்பற்ற சோசலிசத்தையும் யதார்த்தத்தையும் பிரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையானவர்களை உருவாக்குகின்ற கார்க்கி கற்கை கற்கை நிலையத்திற்கு ஒரு உத்தியோகபூர்வ எழுத்தாளருக்கான கல்வியைக் கற்பதற்காக அனுப்பப்பட்டேன். உண்மையில், அவர்கள் உங்களிடம் மட்டுமே காணப்படும் ஆக்கத்திறனின் ஒவ்வொரு அம்சத்தையும் கொல்வதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, நான் கற்றவற்றிலிருந்து ஏற்கனவே எதிர்ப்புசக்தியைப் பெற்றிருந்தேன். எனது பதினோறாவது வயதில் மேக்பெத்தைப் படித்திருந்தேன். அது என்னுள் ஒரு மின்னல் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. மேலும், கிரேக்க புராதனக் கதைகளையும் படித்திருந்தேன். இதன் பிறகு, எந்த ஒரு சக்தியும் எனது உற்சாகத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலற்றவையாக இருந்தன. எல்சினோரில் நடந்தது என்ன அல்லது ட்ராய் அரண்மனைகளில் நடந்தது என்ன என்பவை எனக்கு சோசலிச யதார்த்த நாவல்களைவிடவும் யதார்த்தமாகப்பட்டது.

அந்த கற்கை நிலையத்தில், கற்பிக்கும் முறையினால் நான் மிகவும் தளர்வுற்றிருந்தேன், அதுவும் ஒரு விதத்தில் என்னைக் காப்பாற்றியது. அவர்கள் கற்பிப்பதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் பிற்றக்கூடாது என்றும் அதற்கு நேர் எதிராகச் செயற்படவேண்டும் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன். கொன்ஸ்டான்டின் பாஸ்டோவ்ஸ்கி, சுகோவ்ஸ்கி, யெவ்டுஷென்கொ போன்ற சிலரைத் தவிர அவர்களின் உத்தியோகபூர்வ எழுத்தாளர்கள் அனைவரும் அந்தக் கட்சியின் அடிமைகளாகவே இருந்தனர்.

அந்த கற்கை நிலையத்தில் நான் தங்கியிருந்தபோது, “தி டவுன் வித்தவுட் பப்ளிசிட்டி” என்னும் புதினத்தை எழுதினேன். நான் அல்பேனியாவிற்குத் திரும்பியவுடன் அதனை பிறரிடம் காண்பிக்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை “ ய டே அட் தி கேஃ” என்னும் தலைப்பில் ஒரு சஞ்சிகைக்கு அனுப்பினேன் உடனடியாகவே அது தடை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. அந்தப் பதிப்பகத்திற்குப் பரிந்துரை செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவர் பின்னர் தாராளவாதத்திற்கு இடமளிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அந்தச் சுருக்கம் உயிருடன் இருக்கிறது; இல்லாவிடில் நான்தான் அந்த புதினத்தை எழுதினேன் என்று ஒருவரும் நம்பமாட்டார்கள். கற்பனையில் உருவாக்கப்பட்ட இரண்டு வில்லன்கள் ஒரு தவறான கருத்தினை வெளியிட்டு அதனை மார்க்சியத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்து அதனூடாக அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள விரும்பியதாக அந்தக் கதை அமைந்திருந்தது. அது சோசலிச கலாசாரத்தின் அடிநாதத்தில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை – பித்தலாட்டங்களை உலுக்கியது. இந்தப் புதினம் எனது படைப்புக்கள் அனைத்தையும் வெளியிட முன்வந்துள்ள பிரெஞ்சு பதிப்பகத்தாரின் ஆறாவது தொகுதியாக வெளியிடப்படவுள்ளது. அந்த நாவலில் ஒரு வார்த்தைகூட மாற்றப்படாது.

இருப்பினும் உங்களது இளம்பவருவத்தில் நீங்கள் மார்க்சியத்தால் கவரப்பட்டிருந்தீர்கள் அப்படித்தானே?

அது ஒரு கருத்தியல் சார்ந்த பார்வையாக இருந்திருக்கும்; கம்யூனிசக் கொள்கையின் சில அம்சங்கள் தத்துவார்த்தரீதியில் நன்றாக இருந்தன ஆனால் அதனை கடைப்பிடிப்பது மிகவும் பயங்கரமானது. மிக விரைவாகவே அந்த கட்டமைப்பு அடக்கியாளக்கூடியது என்பதையும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்.

இந்த நிறுவனத்தில், பாஸ்டர்னாக்க், அக்மடோவா, சவ்தாயீவா, மாண்டல்ஸ்டாம் போன்ற தடைசெய்யப்பட்ட அல்லது அதிருப்தி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்க அனுமதிக்கப்பட்டீர்களா?

நான் கோகோல், புஷ்கின் மற்றும் டோசோயேவ்ஸ்கியின் சில நாவல்கள், குறிப்பாக தி ஹவுஸ் ஆஃப் தி டெட் மற்றும் த ப்ரதர்ஸ் கரமாசோவ் ஆகியவற்றைப் படித்தேன்.

அல்பேனியாவில் அவர்களின் நிலை என்ன?

அந்த எழுத்தாளர்கள் அனைவரும் அல்பேனியாவில் தடைசெய்யப்பட்டவர்கள். நான் அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தபோது ஒரு தொகுதியைக் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது. ஓர்வெல், காஃப்கா ஆகிவற்றை வாசித்துள்ளேன். பின்னது அதிமுக்கியம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். 1984 என்னைக் கவர்ந்தது ஆனால் மிருகப் பண்ணை குறித்து அலட்டிக்கொள்ளவில்லை ஏனெனில், மிருகசாம்ராஜ்யம் குறித்த கதை என்னை அதிகளவில் பாதிக்கவில்லை. இலக்கியம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் சர்வாதிகார நாடுகளில் நடைபெற்றவை ஏனையவற்றைவிட மிகவும் மோசமானவை.

இங்கிலாந்தில் ஓர்வெல் தனித்துவமானவர். பெரும்பான்மையான புத்திஜீவிகள் சக சுற்றுலாவாசிகளின் அனுதாபிகளாக இருந்த வேளையில், அவர் சர்வாதிகாரத்தன்மையை அறிந்துகொண்டு அதனை அம்பலப்படுத்தினார்.

சார்ட்டாரால் எவ்வாறு சோவியத் யூனியனுக்கு சார்பாக செயற்படமுடியும் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சீனாவில் இடம்பெற்ற கலாசார புரட்சியின்போது ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களும், ஓவியர்களும் புத்திஜீவிகளும் அவமதிக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் அவருக்குச் சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் ஒரு மாவோவாதியாக மாறினார்.

சமீப வருடங்களில் காமுவின் வெற்றிக்குப் பிறகு என்ன ஆனது! அவர் ஒவ்வொரு அரசியல் பிரச்சினையிலும் சரியானவராக இருந்தார், அதே சமயத்தில் சர்ட்ரே எப்போதும் தவறு செய்தார். கடும் அழுத்தங்கள் இருந்தபோதிலும் கமூஸ் உறுதியுடன் நின்றார். அந்த நாட்களில் அது அவ்வளவு எளிதான விடயமல்ல.

நான் கமூசின்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் – அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். சுதந்திரமாகவும், எதேச்சாதிகார சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலின்றி இங்கு வாழ்ந்த பெரும்பாலான மேற்கத்திய புத்திஜீவிகள் நாம் எமது தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர். சீனாவில், அல்பேனியாவில் இருந்ததைவிடவும் மோசமாக இருந்தது. ஏன் மேற்கத்தைய புத்திஜீவிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை?

நீங்கள் 1960ஆம் ஆண்டு அல்பேனியாவிற்குத் திரும்பினீர்கள். உங்களை புகழின் உச்சத்திற்கு இட்டுச்சென்ற தி ஜெனரல் ஓவ் தி டெட் ஆர்மி என்னும் புதினத்தை வெளியிட்டீர்கள். அந்தக் கதை உண்மைச் சம்பவத்தை மையமாகவைத்து ஒரு அச்சவுணர்வுடன் எழுதப்பட்டதா?

குருஷேவின் தலைமையின் கீழான சோவியத் யூனியன் கலாசார தாராளவாதம் என்ற போர்வையில் மேற்கத்தைய நாடுகளின் நலனைக் கவர்ந்திழுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்குலக நாடுகளை நோக்கி நகர்வுகளை முன்னெடுத்திருந்தார். இதனால் என்வர் ஹோக்சா அவரை திரிபுவாதி என்று குற்றம்சுமத்தி சோவியத்துடனான தனது உறவுகளைத் துண்டித்துக்கொண்டார். எனது புதினத்திற்கான எதிர்ப்பானது அது வெளிவந்ததன் பின்னரே உத்தியோகபூர்வமாக வெளிவந்தது. நான் இத்தாலிய சர்வாதிகாயை எதிர்த்து கருத்து வெளியிடவில்லை என்பதற்காகவும், மேட்டுக்குடியைச் சார்ந்தவனாக இருக்கிறேன் என்பது போன்ற காரணங்களுக்காக நான் நம்பிக்கைக்குரியவன் இல்லை என்று என்மீது அவர்கள் குற்றம் சுமத்தினர்.

உங்களது இரண்டாவது புதினமான த மான்ஸ்டெர் அரசியல் பரபரப்பை கையாண்டுள்ளது. அது எத்தகைய வரவேற்பைப் பெற்றது?

இனிய காலைப்பொழுதில் ஒரு நகரத்தில் ட்ரோஜான் குதிரை தோன்றுவதாக த மான்ஸ்டெர் கதை அமைகிறது. அந்தக் குதிரையின் உட்புறத்தில் அந்த நகரம் வீழ்வதற்கான காலத்திற்காகவே காத்திருக்கும் உலிஸசெஸ் போன்ற வரலாற்றுக்கு முந்தைய கால கதாபாத்திரங்கள் ஒளிந்திருந்தன. ஆனால் நான் வழமைக்கு மாறான சில விடயங்களைச் செய்திருந்தேன்; ட்ராய் ஒருபோதும் வீழாது; அந்தக் குதிரை எப்போதும் அங்கேயே இருக்க வேண்டியதான். மக்கள் நிரந்தரமாக கவலையுடன் வாழவேண்டியதுதான். நாம் எப்படி வாழப்போகிறோம்? என்று அவர்கள் கூறினர். இது மூவாயிரம் ஆண்டுகளாக தொடர்கின்றது குதிரையும் அதே இடத்தில் நிற்கிறது. அவர் சாகாவரம் பெற்றவர். நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் சதிகள், அச்சுறுத்தல்கள் குறித்து கண்ணீர் வடிப்பதுடன் வாழ்க்கையும் இயல்பானதாக இல்லை. சர்வாதிகார ஆட்சி வெளிப்புறத்திலிருந்து அச்சுறுத்தல்கள் வருகின்றது என்று சந்தேகித்ததால் அதற்கு தனது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தக்கூடிய ஒரு எதிரி தேவைப்பட்டது.

இந்தப் புதினம் தடைசெய்யப்பட்டது. எனவே நீங்கள் ஏன் அங்கேயே இருந்தீர்கள்? ஒருவர் உத்தியோகபூர்வ எழுத்தாளராக இல்லாதிருக்கையில், எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரால் எதுவும் செய்ய முடியாது.

அவர்கள் எனது படைப்பை வெளியிட்டாலும் தடைசெய்தாலும், உங்களது படைப்பு வெளியிடப்பட்டுவிட்டு ஒரு எழுத்தாளராக நீங்கள் அங்கீகரிக்கப்பட்டவுடன், நீங்கள் எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினராகிவிடுவதுடன் மாதாந்தக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்கிறீர்கள். அது மாமேதைகள் முதல் கிரிமினல்கள்வரை அனைவருக்கும் ஒரே மாதிரியானதுதான். இந்த சம்பளமானது எனது புத்தகங்களை நான் விற்பனை செய்வதினூடாக எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகையின் ஆயிரத்தில் ஒரு மடங்காக இருக்கும்.

அத்தகைய ஒடுக்குமுறையான சூழலில், உங்களால் எப்படி தி ஜெனரலை பிரெஞ்சில் மொழிபெயர்த்து வெளியிட முடிந்தது?

அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போன்றே, அல்பேனியாவிலும், ஏராளமான புத்தகங்களை சில முக்கியமான அன்னிய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கென்று பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஒன்றுள்ளது. எனவே, அவர்கள் எனது நூலை பிரெஞ்சில் மொழிபெயர்த்தனர். அதிர்ஷ்டவசமாக பியெர்ரி பராப் என்னும் ஊடகவயலாளர் அதனைப் பார்வையிட்டதுடன், அதனை ஒரு பிரெஞ்சு பதிப்பாளருக்குப் பரிந்துரைசெய்தார்.

மேற்குலகில் அதன் வெற்றியினூடாக உங்களுக்குக் கிடைத்த உலகப் புகழின் மூலம் நீங்கள் மேலும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தீர்களா?

ஆம். அதேவேளை நான் ஆபத்தானவனாகக் கருதப்பட்டதால் கூர்ந்து அவதானிக்கப்பட்டேன்.

நீங்கள் அடைந்திருக்கும் புகழின்மீது நாம் கவனம் செலுத்துவோம். முதலாவதாக, சோகம் நிறைந்த கிரேக்கர்களின் நலன்குறித்து அதிலும் குறிப்பாக ஏஸ்கில்லாஸ் குறித்து நீங்கள் “ஏஸ்கில்லாஸ் ஓர் த எட்டர்னல் லூசர்” என்னும் தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தீர்கள். ஏன் அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

கிரேக்க துயரத்திற்கும் எதேச்சாதிகார நாடுகளில் என்ன நடந்தது என்பதற்கும் இடையில் இணைகோடுகள் இருப்பதை நான் கண்டேன். அனைத்திற்கும் மேலாக குற்றத்திற்கான சூழலும் அதிகாரத்திற்கான சண்டையும் நிலவுவதை கண்டேன். அட்ரீஸ் ஹவுஸை எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் கொல்லப்படும்வரை ஒவ்வொரு குற்றச் செயலும் மற்றொன்றிற்கு வழிவகுக்கிறது. ஹோக்ஸாவின் வட்டத்திலும் கொடுமையான குற்றங்கள் இடம்பெற்றன. உதாரணமாக, 1981ஆம் ஆண்டு பிரதமர் மெஹ்மெட் ஷீஹ_ “தற்கொலை” செய்துகொண்டார்-ஹோக்சாவினால் கொல்லப்பட்டார். எனது பக்கத்தில், எனது சர்வதேச புகழின் காரணமாக நான் சிறைத்தண்டனை அனுபவித்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளேன் ஆனாலும் ஆபத்திலிருந்து விடுபடவில்லை. அவர்கள் என்னை கொன்றுவிட்டு தற்கொலை என்றோ அல்லது ஒரு கார் விபத்தென்றோ கூறக்கூடும்.

நான் சாத்தானை நியாயப்படுத்துபவனாக மாறப் போகிறேன், நான் அப்படிச் செய்தாலோ அத்தகைய ஆலோசனையை முன்வைத்தாலோ ஸ்ராலினின் தலைமையிலான ரஷ்யாவைப் போன்றதொரு சமுதாயத்தில் உயிர்த்திருத்தலே சந்தேகம். மான்டெல்ஸ்டாம் போன்று மரணித்தவர்கள் அல்லது ஸ்வேதயேவா போன்று தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்லது பாஸ்டெர்நேக் போன்று எழுதுவதை நிறுத்தியவர்கள் அல்லது ஷேக்ஸ்பியரின் படைப்புக்களை மொழிபெயர்ப்பதுடன் வரையறுக்கப்பட்டவர்கள் இப்படி என்னற்றவர்களை எம்மால் குறிப்பிட முடியும்.

1970ஆம் ஆண்டு, நீங்கள் த லாங் வின்டர் (வுhந டுழபெ றுiவெநச) என்னும் 600 பக்க நாவலை எழுதியிருந்தீர்கள். அது ஒரு கட்டுக்கதையையோ அல்லது வரலாற்று நிகழ்வையோ அடிப்படையாகக் கொண்டு எழுதப்படாமல் உங்கள் நாட்டின் சமகால அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உங்களது நூல் திரிபுவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அதனால் அது ஹொக்சாவை பாதுகாப்பதாகவும் அமைந்தது. அந்த நூலை நீங்கள் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது எது? நீங்கள் எழுதிவந்திருப்பதைப் போன்றே உருவகிக்கப்பட்ட மறைமுகமாக கருத்துக்களைச் சொல்லக்கூடிய பாணியையே பின்பற்றியிருக்கலாமே.

நான் 1967-1970ஆம் ஆண்டுவரை ஒரு சர்வாதிகாரியின் நேரடி கண்காணிப்பில் இருந்தேன். புத்திஜீவிகளின் சாபக்கேட்டினால் ஹோக்ஸா தன்னையும் ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் கருதிக்கொண்டார். அதனாலேயே அவர் தன்னை எழுத்தாளர்களின் நண்பனாக கருதினார். நான் அந்த நாட்டின் நன்கு பிரபலமான எழுத்தாளராக இருந்தமையால், அவருக்கு என்மீது ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் ஒன்றில் நான் எனது சொந்த நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பது, அதாவது மரணத்தைத் தழுவுதல்; அனைத்து பணிகளையும் ஒதுக்கிவிட்டு முழுமையான மௌனம் அனுட்டித்தல் இதுவும் ஒருவிதத்தில் மரணத்திற்குச் சமமானது; அல்லது கௌரமளித்துவிடுவது, இது ஒருவித கையூட்டு என்னும் மூன்று தெரிவுகளே எனக்கு இருந்தன. நான் த லாங் வின்டர் என்னும் புதினத்தை எழுதியதினூடாக நான் மூன்றாவது தீர்வை மேற்கொண்டேன். அல்பேனியா சீனாவின் நெருங்கிய நட்புடாகத் திகழ்ந்தது, ஆனால் இருநாடுகளுக்குமிடையில் அவ்வப்போது உரசல்களும் இருந்துவந்தன இதுவே பின்னர் முறிவதற்கும் காரணமாக அமைந்தது. டான்குவிக்சாட்டைப் போன்றே, எனது நூலும் ஹோக்சாவை உற்சாகப்படுத்துவதினூடாக எமது சமீபத்திய கூட்டணியின் பிளவை வேகப்படுத்தும் என்று நான் எண்ணினேன். வேறுவிதமாகச் சொன்னால், மாற்றவே முடியாது என்றிருந்த ஒரு சர்வாதிகாரியை இலக்கியத்தினூடாக மாற்றமுடியும் என்று நான் எண்ணினேன்.

எனது நினைவுக்கெட்டியவரையில், அரசியல் சூழ்நிலையை நேரடியாக நீங்கள் கையாண்டிருப்பது இந்த ஒரு புத்தகத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் கற்பனை, உருவகம், நகைச்சுவை போன்று பல்வேறு முகமூடிகளை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். ‘தி பிரமிட்’, தி பேலஸ் ஓஃப் டிரீம்ஸ் ஆகியவற்றில் பண்டைய கிரேக்கம் மற்றும் ஒட்டோமேன் காலத்தை மையமாக் கொண்டு அமைந்திருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். 

பிரமிட்டில், ஃபாரோட் ஷோப்ஸ் பிரமிடு ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறார், அது வேறு எதனையும்விட பெரியதாகவும் நீண்ட ஆயுளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார், அது ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் தியாகத்தையும் நியாயப்படுத்துவதாகவும் சட்டபூர்வமானதும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார். தி பேலஸ் ஓஃப் டிரீம்ஸில் கனவுகளை வகைப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் தவறாகச் சென்றுவிடுகிறது. நீங்கள் சோவியத்தையும் பாரா ஹோக்ஸாவையும் தான் நையாண்டி செய்கிறீர்கள் என்பது உங்களது அல்பேனிய வாசகர்களுக்குப் புரிந்ததா?

ஆம் நான் கம்யூனிசச் சக்கரவர்த்தியைத்தான் குறிப்பிடுகிறேன் என்பதை அவர்கள் எதுவிதக் குழப்பமுமின்றி புரிந்துகொண்டார்கள். அதனால்தான் தி பேலஸ் ஓவ் டிரீம்ஸ் தடைசெய்யப்பட்டது.

புல்காவோவின் தி மாஸ்டர் அண்ட் மார்கெரிட்டா, ஸேமியபடினின் ணு ஆகிய படைப்புகளில் காணப்பட்ட அதே யுக்தி 1984 ஆம் ஆண்டில் ஆர்வெல், அவரைப்போன்றே ஹெபல் மற்றும் குண்டரா அல்லது தி கேஸில் அண்ட் தி ட்ரையல் ஆகியவற்றைப் படைத்த காஃப்கா ஆகியோரையும் கவர்ந்திருந்தது. இரும்புத்திரைக்குள் ஒரு அடக்குமுறையின் முன்மாதிரிகள் என சித்திரித்த அந்த எழத்தாளர்களின் படைப்புக்கள் உங்களிலும் செல்வாக்குச் செலுத்தியதா?

நான் அவைகளை வாசித்துள்ளதுடன் சில விடயங்கள் ஒரே மாதிரியாக இருப்பதையும் நான் உணர்ந்துள்ளேன். அதேநேரம், பொதுவெளியில் அந்த நுணுக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது எனது கவலையாக இருந்தது. சர்வதேசப் பார்வையில் அது ஒரு உண்மையான இலக்கியம் என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. இதனடிப்படையில் தி பேலஸ் ஓவ் டிரீம்ஸ் ஒரு வெற்றிப்படைப்பே.

முன்னைய சோவியத் யூனியன் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த சோல்ஸெனிட்சின், நாடாலியா பின்ஸ்பர்க், நடேஸ்டா மான்டெலிஸ்டாம் ஆகியருடன் வேறு சிலரும் இணைந்து மதிப்புமிக்க சாட்சி இலக்கியத்தைப் படைத்துள்ளனர். அத்தகைய சிறைச்சாலைகள் அல்பேனியாவிலும் இருந்ததா?

ஆம் நாடு சிறியதாக இருந்ததால் அத்தகைய சிறைச்சாலைகள் ஒருசில மட்டும் இருந்தன. ஒரு அணு ஆயுத போர் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் பொருட்டு அணுகுண்டுக்கு எதிரான பதுங்குகுழிகளை ஹோக்சா நிர்மாணித்தார். ஆனால் அவை ஒருசதத்திற்கும் பயனற்றவை அவர் அறிந்ததெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு அச்சுறுத்தலை ஊட்டிவளர்ப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

ஹோக்சாவிற்கு உங்கள்மீது ஒரு சந்தேககண் இருந்தபோதும் உங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கினாரே ஏன்?

அது ஒரு விடயமே இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பட்டியலைத் தயாரித்ததும் அவரே. யாராவது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு கொலைசெய்யப்படுவார்கள். ஆகவே ஒருவரும் ஒருபொழுதும் எதிர்க்கவில்லை என்பதுடன், அது எத்தகைய வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆண்டிற்கு ஒருமுறை பாராளுமன்றம் கூடும், ஹோக்சா தான் விரும்பியவற்றை அறிவிப்பார்- அங்கு கலந்துரையாடலோ விவாதமோ இடம்பெறாது. உழைக்கும் வர்கக்த்தினர், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து பிரதியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். இதனால் பாராளுமன்றம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தோற்றமளித்தது.

உங்களது நூல்கள் மேற்குலகில் நல்ல வரவேற்பை பெற்றதன் பின்னர் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்க முடியும். 1972ஆம் ஆண்டு வெளிவந்த உங்களது தி அல்பேனியன் ஸ்பிரிங் என்னும் புத்தகத்தில் நீங்கள் அதிககாலம் பிரான்சில் தங்கியிருந்ததாக கூறுகிறீர்கள்.

நான் வெளியேறவில்லை ஏனெனில் எனது உறவினர்கள், நண்பர்கள் இன்னும் சொல்லப்போனால் என்னுடன் தொடர்பிலிருந்த அனைவர்மீதும் மோசமான முறையில் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் 1983ஆம் ஆண்டு பிரான்சிற்கு வந்தேன். பின்னர் அது சாத்தியப்படாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நான் மிகவும் நேசித்த எனது நாட்டையும் மொழியையும் முழுமையாகத் துண்டித்துவிடும் ஆபத்து அதில் இருந்தது. எனது பிரெஞ்சு நண்பர்கள் என்னை மீண்டும் போகும்படி அறிவுறுத்தினர் நானும் சென்றேன்.

நீங்கள் பின்னர் எழுதிய சோகம் ததும்பும் புதினமான தி ஷேடோ இந்த உறவு அற்றுப்போதல் குறித்தும் புலம்பெயர்ந்து சுதந்திரமாக வாழ்தலுக்கும் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் எதேச்சாதிகார ஆட்சி ஆகியவற்றுக்கிடையில் எதைத் தெரிவு செய்வது என்பது குறித்து விபரிக்கிறது. புலம்பெயர்தல் குறித்து நீங்கள் அச்சமடைந்திருந்தீர்களா?

இல்லை. ஒரு எழுத்தாளர் எவ்பொழுதும் ஏதோவொரு விதத்தில் புலம்பெயர்ந்தவராகவே இருக்கிறார். அவர் எங்கிருந்தாலும், அவ் ஏதோவொரு விதத்தில் வெளியுலகில் ஏனையவர்களிடமிருந்து தனிமைப்பட்டவராகவே இருக்கிறார். எப்பொழுதும் ஒரு இடைவெளி நிலவுகிறது.

கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏன் நீங்கள் வெளியேறினீர்கள்?

சர்வாதிகார்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் அல்பேனியா ஊசலாடிக்கொண்டிருந்த வேளையில், 1990இல் நான் அந்த நாட்டைவிட்டு வெளியேறினேன். ஜனநாயகம் மலர்வதற்கு எனது வெளியேற்றம் துணைபுரியும் என்று நான் எண்ணினேன். நாடு சர்வாதிகாரத்தைத் தெரிவு செய்திருந்தால் நான் திரும்பியிருக்க மாட்டேன் அந்த அச்சுறுத்தல் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை உத்வேகப்படுத்தியிருக்கும். நான் பிரான்சிற்கு வந்தது தி பேலஸ் ஓவ் டிரிம்ஸை வெளியிடுவதற்காகவே, இது குறித்து நான் பகிரங்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தேன். ஊடகமும் அதனை வெளியிட்டிருந்தது அது ஜனநாயகத்திற்குச் சார்பாக மெச்சத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது.

மக்கள் உங்களை செக்குடியரசின் ஹாவெல்லைப் போன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய விரும்பினர்; ஆனால் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். ஏன்?

அதனை மறுப்பதற்கு நான் ஒரு வினாடிகூட எடுத்துக்கொள்ளவில்லை. ஹாவெலின் நிலைமை வேறு என் நிலை வேறு; நான் வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளராகவும் சுதந்திர மனிதனாகவும் இருக்கவே விரும்பினேன்.

அது ஒரு மனப்போராட்டம்தான்: அது எதேச்சாதிகாரத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்ற ஒருவர் அதற்கு எதிரியாக மாறுகையில், செக்கோஸ்லோவேகியாவிற்குள் இருந்தபடியே சில எழுத்தாளர்கள் செயற்பட்டதைப் போன்று செயற்படுவதா அல்லது ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் ஜெர்மனிய எழுத்தாளர்கள் செய்ததைப் போன்று நாட்டைவிட்டு வெளியேறி – அவர்கள் கூட்டமாக வெளியேறினரே அதனைப் பின்பற்றுவதா என்ற குழப்பம்.

ஒருவர் அறிவு முதிர்ச்சியற்றவராக இருக்கக்கூடாது! நாட்டின் சூழல்கள் வித்தியாசமாக இருந்தது. ஹோக்சா ஆட்சி செய்த அல்பேனியாவையும் செக்கோஸ்லோவேகியாவையும் நீங்கள் ஒப்பிட முடியாது. நாம் டியுபெக், சிசெக் ஸ்பிரிங் மற்றும் அதனைப் பின்பற்றிய அனைத்தையும் நாம் கொண்டிருக்கவில்லை. ஹெவல் அல்பேனியாவில் இருந்திருந்தால், அவர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார். அதனால்தான் ஸ்டாலினின் ஆட்சியில் ஒருவரும் ரஷ்யாவிற்கு எதிராகச் செயற்படவில்லை. ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாதநிலை. அல்பேனியாவிலும் ரோமானியாவைப் போன்றே இறுதிவரை ஸ்டாலினிசம் நீடித்திருந்தது. ஹெவல் சிறையிலிருந்தபோது, அவரிடம் அவருடைய தட்டச்சு இயந்திரம் இருந்தது, அவருக்கு சர்வதேச ஊடகத்தை அணுகும் வாய்ப்பு இருந்தது, ஒவ்வொருவரும் அவரைப் பற்றிப் பேசினார்கள். எம்மை செக்கோஸ்லோவேகியாவுடன் ஒப்பிட்டுப்பார்ப்பவர்கள் ஸ்டாலினிய ஒடுக்குமுறையைப் பற்றிய எத்தகைய சிந்தனையும் அற்றவர்களாக இருக்கின்றனர்.

நீங்கள் அதிர்ஸ்ட வசத்தால்தான் உயிர்வாழ்கிறீர்கள் அப்படித்தானே?

முழுவதும் அப்படியில்லை. ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்தில் தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது அத்துடன் நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளராக இருந்தால் அரசு விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஹோக்ஸா தான் ஒரு கவிஞராகவும், பாரிசில் 1253ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான சோர்போன் கல்கலைக்கழகத்தின் மாணவனாகவும், எழுத்தாளராகவும் தான் அறியப்படவேண்டும் என்று விரும்பினாரே தவிர, ஒரு கொலைகாரராக அல்ல. அத்தகைய ஒரு சர்வாதிகார ஆட்சியின்கீழ் ஒரு எழுத்தாளரால் உண்மையான இலக்கியத்தைப் படைப்பது மட்டுமே சாத்தியமாகும். அந்த வழியே ஒருவரினது கடமையை காலம் காலமாக நீடித்திருக்கச் செய்யும். இதைவிட வேறு எதையாவது எதிர்பார்த்தால் அது சட்டவிரோதமாகவும் குற்றவியல் சார்ந்ததாகவும் இருக்கும். அல்பேனியர்கள் என்னை சர்வதேசத்துடன் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஒருவராவே கருதினர். நான் எமது கலாசார வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தியதுடன், எனது படைப்புகளினூடாக அல்பேனிய கலாசாரத்தையும் காப்பாற்றி வந்துள்ளேன். ஒருபுறம் அத்தகைய படைப்புகளை நான் உருவாக்கிய அதேவேளை, மறுபுறம் கம்யூனிசத்திற்கான படைப்புகளையும் தயாரித்தேன் அது பயனின்றிப் போய்விட்டது. எனது புத்தகம் வெளியிடப்பட்டதும் அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. ஒவ்வொரு பிரதியும் விலைக்கு வாங்கப்பட்டுவிடுகின்றன. அது தடைசெய்யப்படக்கூடும் என்று மக்களுக்குத் தெரிந்திருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆகவே, அவர்கள் அவை வெளிவந்த உடனேயே விரைந்து சென்று அவற்றை அவை தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலில் வாங்கிவிடுகின்றனர். ஆனால் அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பிரதிகள் சுழற்சியில் இருந்ததுடன் அவை மக்கள் மத்தியில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கைமாறியது.

ரஷ்யாவைப் போன்று இங்கும் நீங்கள் உங்களது கையெழுத்துப் பிரதியை எழுத்தாளர் சங்கத்தினரிடம் பரிசீலனைக்காக கையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?

இல்லை. அல்பேனியாவில் வெளியிடுவதற்கான முன்னரான தணிக்கைமுறை இருக்கவில்லை; அதிகளவிலான அச்சுறுத்தல்கள் நிலவியதால் சுய தணிக்கை முறையே போதுமானதாக இருந்தது.  ஹோக்சாவின் தனித்துவத்தில் இதுவும் ஒன்று. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, தன்னைத்தானே ஒரு அறிவுஜீவியாகப் பார்த்தார். எனவே வெளியீட்டாளரே ஒரு நூலை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிப்பவர்களாக இருந்தனர். நான் தி பேலஸ் ஓவ் டிரீம்ஸின் கையெழுத்துப் பிரதியை கையளித்தபோது அது அபாயகரமான புத்தகம் என்பது எனக்குத் தெரியும். அதைப் படித்துப் பார்த்த பதிப்பகத்தினர் அதனை வெளியிடுவதனூடாக வரக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ளத் தயாரில்லை என்று தெரிவித்துவிட்டனர். எனவே நான் அதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறினேன். அவர்கள் உங்களை தொல்லைக்குட்படுத்தினால், எனது புகழால் நீங்கள் கவரப்பட்டதாகவும் அதன் காரணமாக நானே உங்களைவ ற்புறுத்தியதாகவும் அவர்களிடம் கூறுங்கள். அவ்வாறான சூழ்நிலைகளில் அவர்கள் எப்பொழுதும் ஆசிரியர்களையே தண்டிப்பார்கள். அதுவே உண்மையில் நடந்தது. எனது மதிப்பைக் கருத்திற்கொண்டே தன்னால் எனது கையெழுத்துப் பிரதியை எழுந்தமானமாக மறுதலிக்க முடியவில்லை என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலை எவ்வளவு மோசமானது என்பதை உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் சமிக்ஞை செய்தபோதிலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள் நம்பத்தயாராக இல்லை. அப்படித்தானே?

அல்பேனியாவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் நான் அரசிற்கு எதிரானவன் என்பது தெரியும். அரசினால் எனக்கு எதிராகச் செயற்படமுடியாமை ஏனையோருக்கு தைரியத்தைக் கொடுத்தது. அதுதான் இலக்கியத்தின் அடிப்படைச் செயற்பாடு: நம்பிக்கை ஒளியை அணையவிடாமல் பார்த்துக்கொள்வது. பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு என்னை 1988இல் கௌரவ உறுப்பினராக்கியது பிரெஞ்சு அரசாங்கம். அது ஒரு பெரிய கௌரவம். பிரான்சைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வானொலி நேர்காணலின்போது, நான் எதை எழுத விரும்பினேனோ அதை சுதந்திரமாக எழுதுகிறேனா என்று மிகவும் வெளிப்படையாகக் கேட்டிருந்தார். அதற்கு நான் இல்லை எமது நாட்டில் சுதந்திரம் என்பது இங்கிருப்பதைவிட வித்தியாசமானது என்று பதிலளித்தேன். இதைவிட வேறு நான் எப்படிச் சொல்ல முடியும்? அந்த ஆட்சியைப் பற்றி என்னால் பகிரங்கமாகப் பேசமுடியாது. அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சுதந்திரமான மக்களின் கலாசாரம் ஒப்பீட்டளவில் எவ்வளவு பெருமதி மிக்கது என்பதை வெளிப்படுத்தவே நான் செய்ய முயற்சித்தேன்.

உண்மை இலக்கியம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விபரிக்க முடியுமா?

நீங்கள் உடனடியாகவே, இயல்பாகவே அதனை அங்கீகரிக்கிறீர்கள். ஒவ்வொருமுறையும் நான் புத்தகத்தை எழுதியவுடன், சர்வாதிகாரத்தின்மீது ஒரு பலமான குத்துவிட்டதைப் போன்றும் அதே நேரத்தில் மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்ததைப் போன்றும் நான் உணர்ந்தேன்.

யுகோஸ்லேவியாவில் நடைபெற்றதைக் கருத்திற்கொண்டு, மதச்சகிப்புத்தன்மையின்மை குறித்து உங்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் குடும்பம் உட்பட அல்பேனியாவின் அரைவாசிப்பேர் இஸ்லாமியர்கள். நீங்கள் மதக்கல்வியைப் படித்தீர்களா? தற்போது மதத்தைப் பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளதா?

நான் அப்படி நினைக்கவில்லை. எனது குடும்பத்தினரின் பெயர்கள் இஸ்லாமியமாக இருந்தனவே அன்றி அவர்கள் அம்மதத்தைப் பின்பற்றவில்லை. என்னைச் சுற்றியிருந்த எவரும் மதநம்பிக்கையுடையவர்களல்ல. தவிர, அல்பேனியாவில் பின்பற்றப்படுகின்ற போகாஷி பிரிவு இஸ்லாமானது போஸ்னியாவில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் மிதமானது. எனவே, நாம் அதுகுறித்து கவலையடையத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

நாம் மீண்டும் உங்களது துறைசார்ந்த விடயங்களுக்கு வருவோம், நீங்கள் எவ்வாறு உங்களது நேரத்தை திரானே மற்றும் பாரிசுக்கு இடையில் பங்கிட்டுக்கொள்கிறீர்கள்? மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அந்த நாளை எப்படி திட்டமிடுகிறீர்கள்?

நான் திரானேயில் இருப்பதைவிட கூடுதலான நேரம் பாரிசில்தான் இருக்கிறேன். ஏனெனில் என்னால் இங்கு நன்றாகப் பணியாற்ற முடிகிறது. திரானேயில் ஏராளமான அரசியல் இருப்பதுடன், அதிகப்படியான நிபந்தனைகளும் இருக்கின்றன. இங்கு என்னை ஒரு முன்னுரை எழுதுமாறு கோருகிறார்கள் அங்கே ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்கிறார்கள்…. என்னிடம் எல்லாவற்றிற்கும் பதில் இல்லை.

எனது நாளைப் பொறுத்தவரை: தினமும் காலையில் இரண்டு மணிநேரம் நான் எழுதுகிறேன் பிறகு நிறுத்திவிடுவேன். என்னால் அதற்குமேல் எழுத முடியாது – எனது மூளை சோர்வடைகிறது. இடையூறுகளிலிருந்து விலகி தேநீர் கடையின் ஒரு மூலையில் இருந்து எழுதுகிறேன். மிகுதி நேரத்தை வாசிப்பிலும், நண்பர்களைச் சந்திப்பதிலும் செலவிடுகிறேன். இது எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதிவரை தொடரும்.

எழுதுவது உங்களுக்கு இலகுவானதா அல்லது கடினமானதா? நீங்கள் எழுதும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது கவலையுடன் இருப்பீர்களா?

எழுதுவதென்பது மகிழ்ச்சியானதோ அல்லது மகிழ்ச்சியற்ற தொழிலோ அல்ல அது ஒருவிதமான இடைப்பட்டநிலை. ஏறத்தாழ அது ஒரு இரண்டாவது வாழ்க்கை. நான் இலகுவாகத்தான் எழுதுகிறேன் ஆனாலும், அது நன்றாக இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருக்கிறது. இலக்கியததைப் பொறுத்தவரை மகிழ்ச்சி, சோகம் இரண்டுமே நல்லதல்ல. நீங்கள் எப்பொழுதும் நகைச்சுவை உணர்வாளராக இருக்கவேண்டியது அவசியம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது உங்களது எழுத்துக்கள் மென்மையானதாகவும், விளையாட்டுத்தனமானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள். நீங்கள் துக்கத்திலிருக்கும்போது உங்களது பார்வை பதற்றமடைந்ததாக இருக்கும். முதலாவதாக நீங்கள் வாழ வேண்டும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதன் பின்னர் அதைப்பற்றி எழுத வேண்டும்.

நீங்கள் அதிகமாக திரும்பத்திரும்ப எழுதுவீர்களா?

அதிகமாக இல்லை, சில சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்வேன் பெரிய அளவில் மாற்றமிருக்காது.

சதி, கதாபாத்திரங்கள், எண்ணக்கரு இதில் எது முதலாவதாக உதிக்கும்?

ம்… அது சூழலைப் பொருத்தது. ஒவ்வொரு நூலுக்கும் அது வேறுபடுகிறது. அதனை விபரிக்கமுடியாது. அவ்வாறு விபரிப்பது சரியாக இருக்காது. அது வெறுமனே கதாபாத்திரங்களாக மட்டும் இருக்காது அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். தி பேலஸ் ஓவ் டிரீம்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். முந்தைய புதினமான தி கார்நெர் ஓவ் ஷேமில் ஒரு பக்கம் கனவைக் கட்டுப்படுத்துவது குறித்த எண்ணக்கருவைக் குறித்து பேசுகிறது. இது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதனை மிகவும் சுருக்கமாக எழுதியது வெட்கமாகவோ எழுந்தமானமாகவோ எழுதியிருப்பதாக நினைத்தேன். எனவே அந்தக் கருவைக் கொண்டு பதிப்பிக்கும் சிந்தனையின்றி ஒரு சிறுகதையை எழுதினேன். ஒரு சிறுகதைத் தொகுப்பில் இரண்டு அத்தியாயங்கள் பிரசுரிக்கப்பட்டன. பொறுப்பானவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதை அறிந்துகொண்டதன் பின்னர், நான் உற்சாகமடைந்து அதனை ஒரு புதினமாக விரிவுபடுத்தினேன். எனவே ஒரு நூலின் ஆதி எது என்பதை விபரிப்பது கடினம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

உங்களது படைப்புக்களை உங்களது மூலமொழியான அல்பேனிய மொழியில் படிப்பவர்கள் உங்களது நடையின் அழகை ரசிப்பவர்கள். ஆகவே உங்களுக்கு மொழிநடையின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமே என்ற கவலை இருக்கிறதா?

மொழிநடைகுறித்து கவனம் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்டும்போதும் நான் கவனமாக இருக்கிறேன். உதாரணமாக நான் எப்பொழுதும் கவிதைகளை எழுதுகிறேன் ஏனெனில், கவிதை உங்களை மொழியின்மீது கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கும். மொழியியலில் இரண்டுவிதமான செம்மைகள் அடங்கியுள்ளன. முதலாவதாக புனிதக் கற்களைப் போன்ற குறிப்புக்கள், விம்பங்கள், சிரிப்புகள், சிறிய கண்டுபிடிப்புகள் மற்றது முழுமையானது. மகிழ்ச்சி தரக்கூடிய சிறந்த படைப்பு என்பது இரண்டினதும் கலவையாக இருக்க வேண்டும். எழுத்து அழகாக அமைந்துவிட்டால் அதன் உள்ளடக்கமும் சிறந்ததாக அமைந்துவிடும். ஆனாலும் எனது தரப்பில் வலிந்து மொழிநடையை திணிப்பதில்லை.

உங்களை வேலை செய்யவிடாமல் தடுப்பவை எவை? ஹெமிங்வே வேலையைக் கொலை செய்யும் ஒரு பெரிய கொலையாளி தொலைபேசி எனக்கூறுகிறார்.

திரானேயில் அவசியம் ஏற்பட்டாலே தவிர, அதுவும் பொதுவான விடயங்களைப் பேசுவததைத் தவிர வேறு எதற்கும் ஒருவரும் தொலைபேசியைப் பாவிக்கத் துணியவில்லை ஏனெனில் அப்பொழுது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. இருப்பினும், நான் ஏற்கனவே கூறியபடி, நான் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே எழுதுகிறேன். அந்த காலப்பகுதிக்கு அதனிடமிருந்து நான் தனிமைப்பட்டிருப்பது எனக்கு கடினமாக இருப்பதில்லை.

உங்களது கடைசி நாவலான, ஸ்பிரிட்ஸ் பிரான்சில் பெரும் வரவேற்பைப் பெற்றது மேலும் அது விரைவில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு புதிய புதினம் எழுதத் தொடங்கிவிட்டீர்களா?

இல்லை. அதற்கு இப்ப என்ன அவசரம்?

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் –இலங்கை

0000000000000000000000000000

இஸ்மாயில் காதரே பற்றிய சிறுகுறிப்பு :

தேசிகன் ராஜகோபாலன்ட்ரோஜன் இளவரசன் மெனிலாசின் மனைவி ஹெலனால் கடத்தப்பட்டதன் காரணமாக உருவான ட்ரோஜன் யுத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கிரேக்க புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டு (பரிச்சயமில்லாத, பிரபலமில்லாத, அறியப்படாத) பெயர் தெரியாத அல்பேனிய எழுத்தாளர் ஒருவர் 1970ஆம் ஆண்டு ஒரு புதினத்தை எழுதியுள்ளார். மரணித்த இராணுவத்தின் தளபதி (The General of the Dead Army)  என்னும் பெயரில் எழுதப்பட்ட அந்த புதினம் இரண்டாம் உலகப்போரில் மரணித்த இத்தாலிய இராணுவ தளபதி மீண்டும் அல்பேனியாவிற்குச் சென்று அங்கு கொல்லப்பட்ட இத்தாலிய படைவீரர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக மீண்டும் இத்தாலிக்குக் கொண்டுசெல்வதை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இப்புதினம் இரும்புத் திரையின் மறுபக்கத்தை உண்மையாகவும் வலுவாகவும் வெளிக்கொணர்ந்ததால், அது மிகவும் சிறந்த விடயமாகப் போற்றப்பட்டதுடன், புதினத்தை எழுதிய ஆசிரியர் பிரான்சிற்கு அழைக்கப்பட்டு, அந்நாட்டின் புத்திஜீவிகளால் அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.  இப்புதினம் பன்னிரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன், மைக்கேல் மிக்கோலியின் நடிப்பில் அந்தப் புதினத்தின் பெயரில் ஒரு திரைப்படமும், பெர்னார்ட் தவேனியரின் சிறந்த தயாரிப்பில் Life and Nothing Else (La Vie et rein d’autre) மற்றொரு திரைப்படமுமாக இரண்டு திரைப்படங்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது.

இதற்குப் பின்னர் டசின் கணக்கிலான அவரது புதினங்களும், ஏராளமான கவிதை, கட்டுரைத் தொகுப்புகளும் பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் இன்னபிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இன்று அவர் உலகத்தின் பிரதான எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுவதுடன், பலமுறை நோபல் பரிசிற்காகவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். தற்பொழுது பிசெஞ்சுப் பதிப்பாளர்கள் அவரது முழுப் படைப்புக்களையும் மூலமொழியான அல்பேனிய மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் ஆறு தொகுதிகளாக வெளியிடுகின்றனர். முதல் மூன்று தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன.

அல்பேனிய நாட்டில் (Gjinokastër) என்னும் நகரத்தில் இஸ்மாயில் காதரே பிறந்து வளர்ந்தார். திரானே பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கல்வியை மேற்கொண்ட இவர், மாஸ்கோவில் அமைந்துள்ள கார்க்கி நிறுவனத்தில் முதுமானிப் பட்டத்தைப் பெறுவதற்காக மூன்றாண்டுகள் செலவிட்டுள்ளார். தி ஜெனரல் இவரது முதலாவது புதினம். பல்கலைக்கழக கல்வியை முடித்துக்கொண்டு அல்பேனியாவிற்குத் திரும்பியதும் 1962ஆம் ஆண்டு தனது இருபத்தியாறாவது வயதில் தனது தாய்மொழியில் எழுதியிருந்தார்.

காஃப்கா, ஓர்வெல் ஆகியோருடன் காதரே ஒப்பிடப்படுகின்றார். ஆனால் அவரது உண்மையின் குரலாக இருப்பதால், எடுத்த எடுப்பிலேயே உலகளாவிய அளவிலும் தனது சொந்த மண்ணிலும் ஆழமாகத் தடம்பதித்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலினிஸத்தின் பிடியில் என்வர் ஹோக்சவின் தலைமையின்கீழ் அல்பேனியாவில் கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நிலவிவந்தது. ஹோக்சவின் கொடூரமான தணிக்கைகளிலிருந்தும் தப்பி எத்தகைய எதிர்ப்பையும் எதிர்கொண்டு பதிலடி கொடுப்பதற்காக காதரே, புதினங்கள், பொறிமுறைகள் குறியீடுகள், நையாண்டிகள், வதந்திகள் போன்ற பல்வேறு இலக்கிய பொறிமுறைகளைக் கையாண்டார். அவரது படைப்புக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றவையாகவும் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றவையாகவும் சித்திரிக்கப்பட்டாலும், அவை அதன் குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. பிரசித்தி பெற்ற அவரின் இரண்டு புதினங்களான தி பிளேஸ் ஓவ் டிரீம்ஸ், தி பிரமிட் ஆகியன முறையே ஒட்டோமேன் பேரரசிலும் பண்டைய எகிப்திலும் நடைபெற்றவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேநேரம், தி கிரேட் வின்ட்டர், தி கன்செர்ட் ஆகியவை குருஷ்ஷேவ் ஆட்சியிலிருந்த போது ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்றதையும், மாவோவின் மரணத்திற்குப் பின்னர் சைனாவிலிருந்தும் விலகிச் சென்றதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இஸ்மாயில் காதரே 1990ஆம் ஆண்டு அல்பேனியாவைவிட்டு பாரிசிற்குக் குடிபெயர்ந்தார். 1996ஆம் ஆண்டு ஆஸ்திரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய தத்துவ அறிஞரான கார்ல் பாப்பர் மரணமடைந்ததைத் தொடர்ந்து காதரே பிரெஞ்சு அகநிலை மற்றும் அரசியல் அறிவியல் அகதெமியின்  French Academy of Moral and Political Sciences (L’Académie des Sciences Morales et Politiques)இணை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் லத்தீன் குடியிருப்பில் விஸ்தாரமானதும் பிரகாசமானதும் லக்ஸம்பர்க் தோட்டத்தின் மேற்புறத் தோற்றத்தை வசிக்கும் விதத்திலும் அமைந்துள்ள இல்லத்தில் வசிக்கிறார். அவ்வப்போது அல்பேனியாவிற்கும் பயணிக்கின்றார். இந்த நேர்காணல் அவரது இல்லத்தில் 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அவரது இல்லத்திலும் இடையிடையே தொலைபேசியூடாகவும் மேற்கொள்ளப்பட்டது.

காதரேவிற்கான அங்கீகாரம் என்பது துன்பத்தில் வாடும் அறிவிலிகளைக் கண்டு மகிழ்ச்சியுற்றதனால் அல்ல, மாறாக, நான் அவரிடம் உள்ள மென்மை, பரிவு அத்துடன் தனது நாட்டையும் அதன் இலக்கியத்தையும் பற்றி அறியாதவரிடமும்கூட பொருமையைக் கடைப்பிடித்தல் ஆகிய இரண்டு பண்புகளையும் பிரதானமாகக் கொண்டிருந்ததை கண்டுகொண்டேன். பிரெஞ்சு மொழியில் சரளமாக தனித்துவமான உச்சரிப்பில் சாந்தமான குரலில் பேசுகிறார்.

ஷஷா குப்பி

தேசிகன் ராஜகோபாலன்

 

 386 total views,  1 views today

(Visited 57 times, 1 visits today)