அதிகாலை பனித்தாலாட்டு-கவிதை-கே.முனாஸ்

கே.முனாஸ்

இளம் காலை இதத்தின்
தாபமென நீ
படர்ந்திருக்கிறாய்
சிதறிக்கிடக்கும்
உன்வாசல் பனியெங்கும்
நான் குளிர்கிறேன்

விழுமிளம் வெயில் பிடித்து
விளையாடி
ஊர்ந்து திரிகிறது
நம்மேக்கம் பள்ளத்திலும்
மேட்டிலும் அதன் சுவடுகள்
நம் வழி மருங்கெங்கும்
ஏங்கிக்கித்தவிக்கும்
சிறுகுழந்தை மனசு
நம்முடையது.

அடுப்பெரியாத
கிடுகுக்குடிசை,
விளக்கேற்றாத கபுறடி,
நிறைவேறாத
நீண்ட நாள் பிரார்த்தனை,
கேட்டும் பெய்யாத
மழையென அவ்வேக்கம்
நீள்கிறது

வாசல் பனி அள்ளி
ருசிக்கத்துடிக்கிறது

தாபமுற்றிய துளியொன்று
விரைந்து நீ தூவிய
ஒற்றைச்சிரிப்பில்
மோதிக்கலக்கிறது
இளமேகமாக

சட்டென, இளநீலம் படர்ந்த
புறாக்களாக பாட்டம்
பாட்டமாகப் பறக்கின்றன
மேகத்திலிருந்து

பல்லாயிரம் சூபிகள்
தியானத்தில் இருந்து
வெளியேறுகின்றனர்
அவர்கள் கையில்
தொங்கும்
துதிக்கோர்வையில் உன் ரூபம்

கொட்டத்தயாரான
மழையாகவும்,
இளைப்பாறவொனவே
விழுந்து கிடக்கும்
நிழலாகவும்
பரத்திக் கிடக்கிறாய் நீ

பாயும், தலையணையும் இருக்கு
காலாரி, மனசாரிச்செல்ல

சந்தோஷமேறியஅதிர்வில்
பெருக்கெடுத்தோடுகிறது
நம் சுவர்க்கம் கெக்களம்
கொட்டி
அதன் சுகத்தில்
தானாகப்படர்கிறது
நீ விட்டுச்சென்ற கடைக்கண் தாபம்
சுருண்டு சுருண்டு
ஒவ்வொரு அதிகாலையையும் யுகமாக நீட்டி
அதன் காம்பெங்கும் கலர்கலர் பூவாக நீ

வாசல் பனிச்சிதறல்
பெருகுகிறது

சிதறிய இரு சிரிப்பு திரித்து
கைத்தூரத்தில் வலதும்
இடதுமாக கடைக்கண்
தாபத்தில் தொங்கவிட்டு,
தொட்டில் கட்டி
அதனுள் மல்லாந்து கிடக்கும்
பச்சிளம் புது முகம் பார்த்து,
கண் பேசிஅள்ளிப்பொறுக்கிய
பரிதாபப்பனித்துளிகளில்
நீ எழுதும் தாலாட்டு வரிகளை
இசைக்கக் காத்திருக்கிறாய்
சலசலப்பும் அமைதியும்
கலந்து படர்ந்த நிலவொளியில்.

கபுறடி: நல்லடியார்களின் அடக்கஸ்தலம்

கே.முனாஸ்-இலங்கை 

கே.முனாஸ்

 414 total views,  1 views today

(Visited 120 times, 1 visits today)