செய்வினைச்சொல்-கவிதை-கே. முனாஸ்

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

இடைநடுவில், நெடுநாள் ஊர்ந்து ஊர்ந்து

காத்துக்கிடந்த செய்வினைச் சொல்லொன்று
வென்றது நம்மை நடுச்சாமத்தில்,
பெரும்பாலான கண்கள் தூங்கிய பின்னிரவில் அது நிகழ்ந்தது

எனக்கும் உனக்கும் பிடிக்கும் மிகநெருக்கமான வார்த்தையில்
நம்மைப்பிரிக்கும் சூனியம் கசிந்திருந்தது

இருவரும் இனி பேசவே கூடாது

நமக்கு நடுவில்
பதறிப்பதறி பறந்து திரிகிறது அந்தச்செய்வினை
வெட்ட வெட்ட அதன் சிறகு வளர்கிறது
உன் பெயர் சொன்னதும், அதன் சூனியச்சிறகுகள் சடசடவென
முளைக்கின்றன

நான் மறந்தாகவேண்டும்

மறத்தலும் வெறுத்தலும் அன்பில் ஒரு பகுதியென்பது
அந்தச்சூனியத்துக்குத்தெரியாது

ஒதுக்குதல் என்பது நினைத்தல் என்றும்
வெறுத்தல் என்பது ஆதரித்தல் என்றும் அந்த ஒற்றை
சூனியச்சொல்லுக்குத்தெரியாது

நீ சூனியம்
நான் மந்திரம்
எம்மை நாம் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்
உனது பெயரில்
தலையணைக்கடியில்
சமையக்கட்டில்
கிணத்தடியில்
அள்ளும் வாளியில்
முறுக்கேறியிருக்கும் கயிற்றில்
மலர்ந்து கிடக்கும் ஊதாப்பூவிதழில்
தொழும் பாயில்
அது நெய்த பன்னில்
மசண்டை சாம்பிராணிப்புகையில்
அதிகாலை குளிரும் நீர்த்துளியில்

இருந்தாலும்,
நமக்கு எய்த செய்வினை
மறுநாள், மதஸ்தலத்தில் பல உயிரைக் குடித்தது

எனது பெயரை நீயோ
உனது பெயரை நானோ
இனி எப்படி உச்சரிப்பது

கே. முனாஸ்-இலங்கை

கே. முனாஸ்

(Visited 104 times, 1 visits today)