துல்னியின் மூன்று பிரதிகள்-கவிதை-துல்னி

பக்கங்களிடையே ஒளிந்திருக்கும் கதை

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

புத்தகத்தின் முதற் பக்கத்தைப் புரட்டுகிறேன்.
இந்த யுகத்தின் அதியுயர் கண்டுபிடிப்பு என வியக்கும்படியான ஒரு
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த ஒரு பகுதியில் சூரியனைக்
குடைந்து முத்தகழும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

அடுத்து, எழுமாறாக முதற் பக்கத்துக்கு தொலைவில் ஒரு பக்கத்தைப்
புரட்டுகிறேன். முடிவுறாது நீர் சுரந்தபடியே கிடக்கிறது ஒரு தடாகம். அதனுள்
இறங்கி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது நிலவு.

திடீரென புத்தகத்தின் முதற் பக்கத்திலிருந்து புறப்பட்ட நெருப்புத் துகள்கள்
தடாகத்தின் அருகிலிருக்கும் காட்டை அண்மிக்கின்றன.

உடன், நிலவு நெருப்புத்துகள்கள் வீழவிருந்த திசையை நோக்கி விரிந்ததும்
தடாகத்தை அடைந்த துகள்கள் மீன்களாகின.

இனிவரும் பக்கங்களில் குழந்தைகளுடன் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்
மீன்களைக் காணலாம்.

மீன்கள் வாழும் தடாகத்தைத் தேடிவரும் பறவைகளையும், காட்டில்
முளைக்கவிருக்கும் தளிர்களையும் எதிர் பார்ப்பவர்கள் கடைசிப் பக்கத்தைப்
புரட்டும் வரை காத்திருக்க வேண்டும்.

000000000000000000000000000000

சிறுவன் வரைந்த படம்

5 5 3
5 5 3
எனும் எண்களிடையே பென்சிலால் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி அதனை
ஆசிரியரிடம் காண்பிக்கிறான் சிறுவன். அவரோ அதில் சில குறைகளை சுட்டிக்
காட்டி “இது அசல் நாய் இல்லை” என்று கூறி மீள வரைந்து வருமாறு அவனைத்
திருப்பி அனுப்புகிறார். தானே புறக்கணிக்கப்பட்டதான கவலையுடன்
இருக்கைக்கு வந்தமர்ந்தவன் அப்படத்தையே மீள மீளப் பார்த்து யோசனை
செய்து கொண்டிருக்கிறான்.

உடன், அவன் வரைந்த படத்திலே நான் ‘கடவுள்’ என்று எழுதி வைக்கிறேன்.
சற்று நேரத்தில் வகுப்பறை எங்கும் கடவுள் பற்றிய விசித்திரமான புனைவுகள்
நிரம்பி வழிய ஆரம்பிக்கின்றன. இரண்டு பாடவேளைகளுக்குள் கடவுளை
வரைவதுதான் தமது பொழுதுபோக்கு என சிலர் அறிவித்தும் விட்டனர்.

அடுத்து, சமயப் பாடவேளை. ‘அசல் கடவுள்’ பற்றிய கறரான ஒரு முடிவு
முன்வைக்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் மேலதிகமாக சில
பெயர்களைத் தயார்படுத்தி வைத்துக் கொள்வதே நல்லது.

000000000000000000000000000000000000000

புள்ளியைத் துரத்தும் எறும்புகள்.

ஒரு முற்றுப் புள்ளி.
தாளில் அசைந்து கொண்டிருக்கிறது.
நேற்றிரவும் இப்படித்தான்.
குவளை அமர்ந்த தடத்தில் உறைந்திருக்கும்
இனிப்புக் கசிவிலிருந்து
தமது குரல்களை எழுத
ஆரம்பிக்கின்றன எறும்புகள் எனக்
கதையை நிறைவு செய்து,
ஒரு புள்ளியை வைத்தேன்.
இன்று பல்லாயிரம் பக்கங்கள் கடந்து
அது பயணித்துக் கொண்டிருக்கிறது.

துல்னி – இலங்கை

(Visited 157 times, 1 visits today)
 

துல்னியின் கவிதைகள் மற்றும் வசனக்கவிதை 

சுற்றிலும் ஆண் குறிகள் காவல் செய்யும் ஓர் ஓவியத்தில் பல கதைகளின் புனைவுகள் சீரியசாக நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன. தூய்மையும் புனிதமும் ஒற்றை அர்த்தங்களாய் நிரம்பிப் போன அக்கதைகளுக்குள் தாமும் சில […]