துல்னியின் கவிதைகள் மற்றும் வசனக்கவிதை 

சுற்றிலும் ஆண் குறிகள் காவல் செய்யும்

ஓர் ஓவியத்தில்

பல கதைகளின் புனைவுகள்

சீரியசாக நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன.

தூய்மையும் புனிதமும்

ஒற்றை அர்த்தங்களாய்

நிரம்பிப் போன அக்கதைகளுக்குள்

தாமும் சில இடைச் செருகல்களைச் செய்து

காப்புரிமை கோரி

முண்டியடித்துக் கொண்டிருந்தன

சில நிறுவனங்கள்.

பின்னரான நாட்களில்

எங்கும் புனிதப்பிரதிகளுக்கான

கிராக்கியை அதிகரிக்கும் முயற்சிகள்

அரங்கேற ஆரம்பித்தன.

நிகழ்பவற்றையெல்லாம் உன்னிப்பாக

அவதானித்துக் கொண்டிருந்தவள்

ஓவியத்திலிருந்து

ஒவ்வொரு கதைகளாக உருவியெடுத்து

அவற்றைத் தனது

மாயாஜாலக் குடுவையினுள்

போட்டடைக்கிறாள்.

சிறிது நேரத்தில் ‘ஓம் கிறீம் கிறீம்’ என

மந்திரமோதி மூடியைத் திறந்து விட,

அதிலிருந்து ஒவ்வொரு உடல் உறுப்புக்களும்

இறக்கை விரித்துப் பறக்க ஆரம்பித்தன.

பறந்தலையும் உறுப்புக்களின்

சுவாசித்தலை செவிமடுத்த மட்டில்

கதைகளை உற்பத்தி செய்தோர்,

மகா வாக்கியங்களை முணுமுணுத்தபடி

அவளை முறைக்கத் துவங்குகின்றனர்.

அவளோ கண்களை மூடி

மீண்டும் ‘ஓம் கிறீம் கிறீம்…’.

0000000000000000000000000000

திடுக்கிட்டெழுந்தேன்.

உறக்கத்தில் எனக்குள்ளிருந்து

ஏதோவோர் ஓலம் வெளிப்பட்டதாக

செய்திகள் பரவியிருக்கவேண்டும்.

வீட்டுக்கு வந்த சிலர்

சுடலை, பைரவன், மோகினி என

ஏதேதோ சொல்லிவிட்டுக் கடந்து செல்கின்றனர்.

நெடுரேமாய் என் மனதை

இலக்கு வைத்துக் காத்திருக்கும் பயத்தை

இரையாகக் குத்தி

மயானமாகிப் போன குளமொன்றினுள் எறிகிறேன்.

தங்கூசி அறுந்துவிடும் அளவுக்குக் கனதி.

இப்பொழுது உங்களிடமிருந்து

சில சொற்களை உதவிக்கு அழைத்து

தூண்டிலில் சிக்கியவற்றை

இப்பிரதிக்குள் இழுத்து வருகிறேன்.

கடந்த வாரம் வளவினுள்

வீடொன்றை முளைப்பிப்பதற்காய்

வெட்டி வீசப்பட்வற்றின்

எச்சங்கள் இவை.

என்ன ஆச்சரியம்!

நீங்கள் வாசிக்க வாசிக்க

எங்கும் பசுமை

சடைத்து வளர்கின்றது.

000000000000000000000000

காற்றின் இசைத்தலில் கைகால்களையெல்லாம் அசைத்து நடனம் புரிந்தபடி

மேசைமீது வந்தமர்கிறது ஒரு தாள். கனநேரமாக எனதருகில் இருந்து

கதையளந்து கொண்டிருந்தவள் அதில் எனக்குத் தெரியாதவாறு பென்சிலால்

ஏதோ ஒன்றைக் கிறுக்கி வைக்கிறாள். அம்மா வீடு முழுக்க எலிப்

பாஷணத்தோடு அலைவதைப் பார்த்ததும் பூனையா? என்று வினவ ‘இல்லை’

என்கிறாள். அவள் எழுதியிருப்பதை அறியும் ஆவலில் அவளது கைகளோடு

ஸ்பரிசப் போர் புரியும் எனது கைகளுக்குத் தாளை நெருங்க விடாதபடி தாப்புக்

காட்டுகிறாள். இடையில் இருவரதும் கைகள் பட்டதில் மேசை மீதிருந்த நீர்

நிரம்பிய குவளையொன்று தாளிலே கெளிந்து விட, அதற்குள்ளிருந்து

வரிசையாக சில காகங்கள் நீரை விசிறிய படி பறந்து செல்கின்றன. மறுகணம்

தாமதிக்காது அவளை நோக்கிப் பய்ந்த என் சிரிப்பை ‘இதைத்தானா வரைந்து

வைத்தாய்?’ என்பதாக மொழிபெயர்த்துக் கொள்கிறாள். பின்னர், அதற்குள்ளிருந்து

குரங்குகளும், முயல்களும், பெயரிடப்படாத இன்னும் சிலதும் நனைந்த

தொப்போடு அவசரமாக வெளியேற ஆரம்பிக்கின்றன. என்னால் ஊகிக்க

முடியவில்லை. ஓரிரு விநாடிகளில் இத்தனையும் அவளால் எழுதப்பட

வாய்ப்புள்ளதா? யோசனையில் திளைத்த என் மௌனத்தைப் பொறுத்துக்

கொள்ள முடியாமல் என்னருகில் வந்தவள் கூர்முனையற்ற பென்சிலைக் காட்டி

விட்டு, நக்கல் சிரிப்பை உதிர்த்தபடியே முன்னறைக்குள் நுழைகிறாள். இனி

என்ன செய்வது…? மேசையிலே தாளின் அருகில் கெளிந்து கிடந்த நீரைத்

துடைக்க சீலைத் துண்டொன்றை எடுத்து வந்து பார்க்கிறேன். தேங்கியிருக்கும்

மிகுதி நீரில் சில மீன்கள் உல்லாசமாய் நீந்தத் தொடங்கியிருந்தன. இம்மீன்களும்

அதனைச் சுற்றிய சம்பவங்களும் அடுத்து எப்படித் தம்மை உருமாற்றப்

போகின்றன என்பது மேற்கொண்டு உங்களிடமிருந்து அவை எதிர்கொள்ளப்

போகும் வாசிப்பைப் பொறுத்ததே… குவளையிலிருந்து தெளிந்த நீரை மேசை மீது

வந்தமர்ந்த தாளில் ஏலவே நிரம்பியிருந்த சொற்கள் எதிர்கொண்டதைப் போல.

துல்னி-இலங்கை

(Visited 251 times, 1 visits today)
 

துல்னியின் மூன்று பிரதிகள்-கவிதை-துல்னி

பக்கங்களிடையே ஒளிந்திருக்கும் கதை புத்தகத்தின் முதற் பக்கத்தைப் புரட்டுகிறேன். இந்த யுகத்தின் அதியுயர் கண்டுபிடிப்பு என வியக்கும்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த ஒரு பகுதியில் சூரியனைக் குடைந்து முத்தகழும் […]