அம்மாவின் சுவாமியறை-கவிதை-மாரிமுத்து சிவகுமார்

அம்மாவின் சுவாமியறை

அப்பா சுவாமியறைக்குள்
நுழைவதை கண்டதில்லை.

இப்போதும் அவர்
அதன் வெளிச்சுவரில் இன்முகத்தோடு
கண்ணாடி சட்டகத்துள் இருக்கிறார்.

அம்மாவின் வற்புறுத்தலால்
அவ்வப்போது அவர்
திருநீற்றை தடவிக்கொள்வதை
அறிவேன்.

நான்
பல முறை அம்மாவின்
சாயலோடு வாழ்வதற்காக
முயற்சி செய்திருக்கிறேன்.

பல தடவைகள்
தோற்ற சந்தர்ப்பங்களே
அதிகம்.

அம்மாவின் சுவாமியறை மூடிக்கிடக்கிறது.

அவளது அத்தனை தெய்வங்களும்
ஓய்வு நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர்.

இப்போது வெளிச்சுவரில் தொங்கும்
அப்பா,
அம்மாவின் தெய்வ நம்பிக்கை பார்த்து
புன்முறுவல் செய்வதாய் உணர்கிறேன்.

அம்மா அவளது அறையில்
அவள் இறுதி மூச்சை கெளவிய
சுவரில் படிப்படியாய் முளைவிட்டிருந்தாள்.

0000000000000000000000

புள்ளடி

எனக்கும் புள்ளடியிடத் தெரியும்
இடமிருந்து வலமாக
வலமிருந்து இடமாக
இது போல் பல் ரூபங்களில்..

எனது நிகழ் கால புள்ளடி மீது
ஏதோ இனம் புரியாத
குரோதம்.
அதன் வடிவம்
மிக அவலட்சணமாகிறது
அது தரும் அழுத்தம்
மிக பாரமானது.

மீண்டுக் கொள்ளும்
எனது சந்தர்ப்பத்திற்காய்
காத்துக்கிடந்தேன்.

பல தடவைகள்
என் சந்தர்ப்பங்களை நானே
நிராகரித்து
தடுக்கி ஒடுக்கிக்கொண்டேன்

இம்முறை
என் வேட்கை
விசாலமானது
விசித்திரமானது.

இது எனக்கான
தீர்வு மேடை.

இங்கே என் புள்ளடி
எதற்கும் அடிமையில்லை
புதியதொரு பிரவாகமெடுக்கும்.

இதோ
புலர்வில் கலந்துவிட
இடுகிறேன்
புள்ளடி.

மாரிமுத்து சிவகுமார்-இலங்கை

 

மாரிமுத்து சிவகுமார்01

(Visited 182 times, 1 visits today)