கசங்கி வடியும் கீதம்-மாரிமுத்து சிவகுமார்

மாரிமுத்து சிவகுமார்

கசங்கி வடியும் கீதம்
நானாக வாழ விரும்புகிறேன்
அதில் எவ்வித தவறுகளும் இல்லை
எனது மொழியில்
பேசும் சுதந்திரம்,
எங்கும் வாழும் சுதந்திரம்,
நேர்மையான பாதையில் நடக்கும்
இயல்பு,
அத்தனையும் பெறுவதற்கு
அவர்களிடத்தில் கையேந்தும் நிலை
எதற்கு?

இம்முறையாவது
இதிலிருந்து மீளெழுந்து
எனக்கான மொழியில் உரத்து
என் கீதமதை இசைக்க விரைகிறேன்..

ஆனால்
சுதந்திரத்தால் வேயப்பட்ட மேடை
எனதில்லையென உரைக்கப்பட்டது

பாடும் கீதமதில் பல்வேறு
விஷக்கிருமிகள் தொற்றிக்கொண்டிருந்தன.
அதன் வரிகளில்
பகைமை
குரோதம்
பலியுகம்
தீண்டாமை
சுயநலம்
எனப் பல பாவங்கள் நெய்யப்பட்டிருந்தன.

நான்
அந்தத் திரை விலக்கிய பின்
மேடையில்
உரத்துப் பாட ஆரம்பிக்கிறேன்.

என் தொண்டையிலிருந்து
தாய் மொழியில் புனையப்பட்ட கீதம்
கசங்கி
இரத்தமாய் வடியத் தொடங்கியது.

0000000000000000000000

அடக்குமுறைகளைக் கிழித்தெறிதல்
நான் சொல்வதில்
எவ்வித உண்மையுமில்லையாம்.

நான் பார்த்த சம்பவங்கள்
எல்லாம் செதுக்கப்பட்டவைகளாம்.
எனது
இடம்
பொருள்
உரிமைகள் அனைத்தையும்
அவர்களே ஒழித்து வைத்துக்கொண்டு
என்னிடமே இருப்பதாய் விளக்கமளிப்பதுண்டு.
அவையெல்லாம் ஒரு வேடிக்கையாக
ஒவ்வொரு மேசையும் பார்த்துச் சகித்துக்கொண்டது.

என்மீது வலிந்து திணிக்கப்பட்டவைகளைச்
சுமந்து அவர்களுக்காக
நான் நிர்ப்பந்தத்தோடு விஷமேற்றப்பட்டுத் திரிந்தேன்.

எனதுள் அத்தனை அமுக்கங்களும் செலுத்தப்பட்டன.
என்னால் அவை அனைத்தையும்
அடக்கிக்கொள்ள முடியாமல்
என்னிலிருக்கும் பல துவாரங்கள்
வழியில் வேர்களாய் பரவலடைந்தன.

என் அடக்கம்
அகிம்சை
அமைதியான
அணுகுமுறை அனைத்தும் மடை திறந்தன.

நான் புதியதொரு
விடியலின் ஆயுதமாகிறேன்.

மாரிமுத்து சிவகுமார்-இலங்கை

மாரிமுத்து சிவகுமார்01

 

(Visited 22 times, 1 visits today)