உணர்-கவிதை-கருவை ந ஸ்டாலின் ( அறிமுகம் )

கருவை ந ஸ்டாலின்

பிரேத மனிதனிடம்
கொஞ்சம்
கதைக்கலாமென்று இருக்கிறேன்

கைகால்கள் சுருக்கப்பட்டு
குருதியுறைந்து
வெள்ளுடை தரித்தவனிடம்
சொல்வதைக் கேட்கும்
திறனிருக்குமா ?

கேட்டுவிட்டுப்
பதிலுரைப்பானா ?

தெரியாது
தெரியவே தெரியாது

கையில் அவனுக்குப் பிடித்த
தேநீர் இருக்கிறது
குடித்து முடிப்பதற்குள்
கடந்துவிட வேண்டும்
இவ்வறையை விட்டு,..!

000000000000000000000

சுய விசாரணை
எதிர்வரும் காலம் கணித்து
ஒவ்வொரு முறையும்
நல்லதொரு
பக்கத்தைக்
கிழித்தெறிகிறீர்கள்
பிறகு
ஒவ்வொரு கிழிந்த தாளையும்
சிற்சில பிசின்கள் சேர்த்து
ஒட்டவைக்க முயல்கிறீர்கள்
எத்தனை வண்ணங்கள்
எத்தனை சத்தங்கள்
கிழிந்து கலந்திருக்கக்கூடும்
அக்கணம்
இறந்தவை
அப்படியே சென்று தொலையட்டும்
கையில் மீண்டுமொரு
புத்தகம் இருக்கிறது
படிப்பதிலும் கிழிப்பதிலும் இருக்கிறது
உங்களின் சுயவிசாரணை.

000000000000000000000

பிரணவம்
அகம் சுவைக்கும்
அம்மணல் மாவுகளை
காமப் பாத்திரத்தில்
மய்யம் கொள்ளச் செய்க
புரண்டோடும்
அதீதங்களை
ஆத்மார்த்தமாக
அள்ளித் தெளித்து குரோதங்களால்
பிசையப்பட்ட கணத்தில்
பீறிட்டெழுகிறது
ரௌத்திரப் பொம்மை.
ஜனிக்கவியலா அச்சடம்
லோபப் போக்கிலும்
மதச்செறிவிலும்
மாற்சரியம் படைத்த
கரங்களில் உறுப்புகளோடு
உயிர்பெற்றெழுகின்றன.
ஞானப் பிரதிபலிப்பின்
அகச்சாட்சியங்களாய்
உதித்தவன் பிரணவமாய்.

கருவை ந.ஸ்டாலின்-இந்தியா

கருவை ந.ஸ்டாலின்

(Visited 49 times, 1 visits today)