மனதுக்குள் கொதிப்புறும் சொல்-கவிதை-ஜமீல்

மனதுக்குள் கொதிப்புறும் சொல்

ஜமீல்

வழமைக்கு மாற்றமாக
மேசை மீது தேநீரைச்
சட்டென வைத்து விட்டு
முகத்தைத் திருப்பியவாறு
விரைந்து செல்லும்
மனைவியின் மனசுக்குள்
தீராக் கோபம்
கடும் வெறுப்பு
மிகு அதிருப்தியென
என் மீது வெளிப்படையாக
எய்திட முடியா
சொல்லியும் ஆற்றவியலா
ஏதோ ஒரு சொல்
ஆவி பறக்க
தயாரித்து வைத்திருக்கும்
தேநீர் மாதிரி
நிச்சயம் இந்நேரம்
கொதித்துக் கொண்டிருக்கும்

00000000000000000000000000000

வீட்டைச் சுற்றி ஓடும் மனசு
விடு முறை முடிந்து
விடுதிக்குத் திரும்பி விட்டேன்

அம்மா இறுதியாகப் பரிசளித்த
அன்பு முத்தமது ஈரம்
இன்னும் உலரவில்லை

அப்பாவுக்குத் தெரியாமல்
பாட்டி கைச் செலவுக்கு
ரகசியமாகத் தந்த பணமும்
கைவசம் இருக்கிறது

இருந்தும் மனசு மட்டும்
குழந்தைப் பராயத்திலிருந்து
எடுத்து வளர்த்து வந்த
சாம்பல் நிறப் பூனையைத் துரத்தியபடி
வீட்டைச் சுற்றியே
இன்னும் ஓடித் திரிகிறது

000000000000000000000000000000

பசி

தீரா பசியை ஆற்றிடவே
புழுவுக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் மாட்டித்
துடிக்கின்றன மீன்கள்

தூண்டில்காரனும்
தனது பசியை ஆற்றிடத்தான்
மீன்களைப் பிடிக்கிறான்

தூண்டில்காரனினதும்
மீன்களினதும்
அடங்காப் பசிக்கிடையிற் சிக்கி
இரையாவதென்னவோ
அப்பாவி மண் புழுக்கள்தாம்

ஜமீல்-இலங்கை

ஜமீல்

 

(Visited 61 times, 1 visits today)