மாரிமுத்து சிவகுமார் கவிதைகள்

காற்றை கிழிக்கும் சுவாசம்

மாரிமுத்து சிவகுமார்

மலர்களுடன்
அவ்வப்போது
உரையாடுவேன்..

அதிகாலையில்
அவை
அளப்பறியவற்றை
சிந்துவது புதுமையளிக்கின்றது.

ஒரு முறை
அதன் இதழ்கள்
தழுவி
அழகு நுகர்ந்தேன்.

அப்பழுக்கற்ற அவை
என்னை வசப்படுத்தி
பலவற்றை புலம்பியது.

அப்போது
அம்மலர்களின்
துயர்
அரும்புகளின் வேதனை
உரைத்தது.

பரந்த வெளியில்
தன்னை வதைக்கும்
பண்பற்றதுகளை
உச்சி தலையில்
ஆணியடித்து நசுக்கும்படி
விம்மியது.

மலர்களை
தாங்கி நிற்கும்
காம்புகளின்
வேடத்தனத்தை
பொசுக்கும்படி உணர்த்திற்று.

அம்மணுக்களை
கண்டு வியந்தேன்
துயர்
சூல் கொண்டது

வதைப்புகள் பலவும்
என்னுள் கருவுற்றது

பின்
காற்றை கிழித்து
சுவாசம் விரைகிறது
சூலாயுதத்தோடு.

இனி
புதிய பூக்கள்
பிரவாகமெடுக்கும்.

 

000000000000000000000

கவிதை எனும் ஆயுதம்

பாரதியின் கவிதைகளை
புரட்டிய ஈரத்துடன்
என் மார்பகத்தில் ஒரு வித
கம்பீரம் உறைந்தது.
உலக மகா யுத்தத்தின்
விரிசல்கள் இன்னும்
உலகை விட்டு அகலாத தருணங்களை
முட்டியபடி உலகு.
நவீனம்
பின் நவீனத்துவம்
மாக்சியம்
என பல கோட்பாடுகளை
புரட்டி உறிஞ்சும்
அறிவு ஜீவிகள்
இங்கே காலங்களை தொலைத்து
பிதுங்கி நிற்கின்றனர்..
அதிலிருந்து
வெறிகளால் சீறுகொண்டு
கவிதைகளை
நெய்தலானேன்,
என்னிடம்
எதுகை
மோனை
சீர்
நயம்
யாப்பு எல்லாம்
பிடுங்கி எரியப்பட்டு
நிலவில் நெய்த
ஓலைச் சுவருள் ஒடுக்கப்படுகிறேன்..
அங்கே
என் கம்பீரம் விருட்சமாகிறது..
மூன்றாம் உலகப்போரின்
படைகள்
பல கோணங்களில்
பகலிரவாய் களத்தில்
விஷமேற்றுவதை
என் கவி முனை
குறி தவறாத
நெறியொன்றை சீவியது
அதை நவீன காலத்தின்
ஆயுதமாக்கி
களத்தில் ஊன்றுகிறேன்
அங்கே உலக சுவரிலிருந்த
விஷங்கள்
என் கவியாயுதத்தால்
வெடித்துச் சிதறின.!

000000000000000000000000000

பசி

இரவுகளால் செய்த பல்லக்கினை
சுமந்து செல்கிறேன்..

பல்லாயிர மின்மினிகளை விழுங்கி
அது திரண்டிருந்தது

சுமைகளின் தாகமெல்லாம்
தோளில் சுமந்தபடி..

அவ்விரவுகளிலிருந்து
ஏதோ கசிவதாய் உணர்கிறேன்

அடி வயிற்றில் நுழைந்த
பசி
விஷமானதாய் புலம்பியது

மெதுவாய் பல்லக்கை
தரையில் கிடத்துகிறேன்

உள்ளிருந்த பசி
உயர் தொனியில் பீச்சிட்டு
பிரளயமானது.

மாரிமுத்து சிவகுமார்-இலங்கை

மாரிமுத்து சிவகுமார்01

(Visited 121 times, 1 visits today)