ஒரு அணில் குஞ்சின் விபத்து-கவிதை-ஜே.வஹாப்தீன்

ஒரு அணில் குஞ்சின் விபத்து

ஜே.வஹாப்தீன்

என்ன கலவரம்
ஏனோ
காகங்களுக்குள் ஆரவாரம்?

அந்த நெடும்பாதையிலே
அட ஒரு விபத்து
ஒரு அணில் குஞ்சின் மரணம்
ஒருவருமே காணலையோ!
என்ன அவசரம் அணிலே
எங்கு போக வந்தாயோ

தென்னந் தோட்டத்து
தென்றலோடு விளையாடி
எங்கள் பள்ளித் தோட்டத்தில்
மாம்பழம் தின்று மகிழ்ந்து
குடும்பத்தோடு
கூடிக்குதுகலித்த நீ
என்ன அவசரம் அணிலே
எங்கு போக வந்தாயோ

உந்தனது காலைக்குள்
இல்லாத எதனை நீ
பக்கத்துக் காட்டுக்குள்
பறந்து ஓடித்
பொ றுக்கப் போனாய்?

தீராத பேராசை உந்தன்
விபத்துக்குக் காரணமோ
உருவம் சிறிசு என்றாலும்
உன் உசிரு பெரிசுதானே
சின்ன அணிலே.

இது பெருநாள் காலம் என்று
உன் பெற்றோர் தடுத்தும்
வீதியைக் கடக்க நீ
விரைந்து ஏன் வந்தாய்?

எங்கள் பொடியன்கள்
வேகமாக மோட்டார் சைக்கிள்
ஓடும் நாளிது என்று
சோகமாக மரணித்த அணிலே
உனக்குத் தெரியாதா?

00000000000000000000

கடலின் கருணை

ஏதோ ஒரு ஆத்திரத்தில்
அன்று எழுந்து
நூறடிப்பெரும் பாம்பாகிப்
படமெடுத்து
ஊர்களை கொத்தி அழித்து
அடங்கியதற்காய்
கருணையற்றது கடலென்று
எண்ணுவதில்லை நான்.

என்ன சேதியை
யாருக்குச் சொல்ல வந்ததோ
கடல் அன்று!
என்ன புதையலை யாருக்கு கொடுக்க வந்ததோ !

எங்கள் ஊர்க்கடலுக்கு
கருணை அதிகம்.
பொங்கிப் பொங்கி
மீன்களைப் படைக்கிறது
வலைவாழை இலைகளிலே..

கடலின் மார்பில்
எங்களூரான் தோணியோட்டும்போதெல்லாம்
கருணைப் பால் சுரக்க
மறந்ததில்லையே
அது.

அலைப்பாட்டு
நுரை எழுதும் புது வரிகளில்
கரைமுழுதும் பாடி மகிழ்கிறதே
கடற்காற்று.

மடியைப் பறித்த
மடத்தனத்தை எச்சரிப்பதற்காக
கரையில் தலைமுறுத்து அழுது
நிலம் கரைந்ததற்காய்
கருணையற்றதாய்
நீயும் எண்ணிவிடாதே!

கல் விலங்கு போட்டு
கைதியாக்கிவர்கள் வந்தாலும்
குளிர் காற்றால் மகிழ்வித்து
அனுப்புகின்ற நமது கடல்
நமக்கு வீசாதா?

கடலே
கருணைக் கடலே
கரை கரைந்து வடிவிழந்து நீ அழும் அழகில்
குளித்து மகிழ்ந்து குதூகலிக்கவும்
கருணை காட்டிக் கிடக்கிறாய்
நீ தாய்தான்.

தாயே
உன் கருணைக் காற்றே போதும்
நான் தினமும் உன் மடி தவழ்வேன்.

00000000000000000000000000000

மனித ஓவியங்கள்

வரைந்தவன் புகழுக்குரியவன்.
இந்த மண்விரிப்பு முழுக்க
யாரிடமும்
ஒரு துளி மைகூட
இரவல் வாங்காது
எவரின் தேவையும் இல்லாது
அற்புதமாய் ….
வரைந்தவன் புகழுக்குரியவன்.

ஓவியங்களில்
ஏற்றதாழ்வில்லை.
வானத்து நிலாவின் பார்வைக்கு
எல்லாம் ஒன்றுதான்.
அப்படியா நினைக்கிறது ஓவியங்கள்.?

உயிர் எனும் வண்ணத்தில்
உலவும் சித்திரங்கள்
ஒன்றை ஒன்று பழிக்கிறது
மேலிருந்து நட்சத்திரம் சிரிக்கிறது.

மேட்டுநிலத்து ஓவியங்கள்
பள்ளத்தைப்பார்த்து
ஏளனம் செய்கிறது
ஏன் வரைந்தாயென அழுகிறது.

கர்வம் எனும் கலர்கூடி
தலையால் நடக்கும் ஓவியங்கள்
பரிசுக்குத் தகுதியற்றவை.
வெறுங்கோட்டில்
குறைந்த கலரில்
வரையப்பட்ட ஓவியம்கூட நாளை பரிசுக்குத் தகுதி பெறலாம்.

எல்லா ஓவியங்களும் தன்னைத்தான்
உயர்த்தியே பார்க்கிறது.
பரிசு வழங்கும் நாளில் புலப்படும் உண்மை.
எதுவானாலும்
எப்போது மரணமழை வருகிறதோ
அப்போது
சமனாகக் கரைந்தோடும்
மனித ஓவியங்கள்
மண்ணோடு மண்ணாக
ஐயகோ!

ஜே.வஹாப்தீன்  -இலங்கை

ஜே.வஹாப்தீன்

(Visited 113 times, 1 visits today)