மின்னல் வேர் பிடுங்கி-கவிதை-ஜே.வஹாப்தீன்

மின்னல் வேர் பிடுங்கி

ஜே.வஹாப்தீன்

மழைமேக நிலங்கிழிய
தங்க வேர்கள் பிடுங்கப்படுகின்றன.
வானம் கனிந்து
மண்ணுக்கு நீர் வழங்கும் திட்டத்தில்
மின்னல் ஒப்பம்
தற்காலிகமானது.

தற்காலிக ஒப்பந்தத்தில்
ஆனந்த வெள்ளத்தால்
வயிறு நிறைந்து கிடக்கின்றன;
ஆறு குளங்களும் குட்டைகளும்.

உயிர்களை வெள்ளமெல்லாம்
உருவாக்கும் உடன்படிக்கைக்குப் பின்னால்
மின்னல் தீ எறிந்து
உயிர்களை எரிக்கும்
அத்து மீறலையும்
வானமே பிறுப்பேற்க வேண்டும்.

மின்னல் வேர்பிடுங்கும்
கூதல் காலத்தில்
நிலக்கடலைகளாய்
நிலத்தில் பொழியும்
மழையில் ஆடும் மகிழ்ச்சி பறிபோனது.

சிரிப்பில் மயக்கும் சிங்கார மின்னலே
உயிர்களை தீய்க்கும்
கொடுங்கனல் கோபம்
ஏன் வந்தது?
கொரோனா வாய் பிழந்து
கண்ணுக்குத் தெரியாத முதலையாகி
எங்கள் பக்கத்திலையே படுக்கிறது.

உயிர்க்குலை நடுங்கி
உலகம்
மூக்கைக் கட்டி இறுக்கி
மூச்சடைத்துக் கிடக்கிறது.

நீ வேறு இந்நேரம் ஏன் வந்து
கண்களைப் பறித்து
ஈரக்குலையை எரிக்கிறாய்?
நீ வந்தால்
உலகம் அழியும் முழக்கச் சத்தம்.

அங்கே ஒரு பூமி
பூகம்பத்தில் புதையுண்டிருக்கிறது
இங்கே சில கூரைகள்
காற்றால்
கற்பழித்துக் கிடக்கின்றன.

சும்மா படுக்க முடியாமல்
ஒரு தேசத்தை அச்சுறுத்தும்
சுனாமிக் கடல் பாம்பு.
எத்தனை பக்கமடா
இந்த மனிதக்கூடு அல்லாடுவது?

கொடுப்பதாயினும்
எது வந்து எடுப்பதாயினும்
மனிதன் கொண்டது ஓருயிரே.
மின்னலே போதும்
உன் பொய்ச்சிரிப்பை நிறுத்து.

00000000000000000000000000000

மரக்கிளைக் கிளிகள்

நானும் ஒரு தோட்டத்தில்
காய்க்கும் மரம்தான்.
என்னை அழகாய்
வளர்த்தவர்களின் நினைவுகள்
எனது பட்டைக்குள்
பிசினாய் ஒட்டியிருக்கின்றன.

என்னை நல்ல நிலத்தில்
அவர்கள் நாட்டியபோது
நான் சிறுகன்று.

இன்று
எனது தோட்டத்துக் கிளிகளுக்கும்
சிறகடிக்கும் குருவிகளுக்கும்
கடித்துச் சுவைக்க பழங்களை
என்னில் கனியவைக்கிறேன்
என் கிளைகளில்
பசிதீரும் பல நூறு பட்சிகள்.

ஆதலால்
நிழல் மரமாகி
கிளைகளையும் நீட்டுவது
என் தொழிலாகிப்போனது.

எனது கிளைகளில் அமர்ந்து
இலைகளின் நகைச்சுவையில்
சிரித்துக் குலுங்கிய கலைகளை
பட்சிகள் மட்டுமல்ல
பாம்புகளும் ரசித்திருக்கலாம்.

நல்லதொரு பசுமை வாழ்வியலை
இந்த விருட்சத்தில்
பாடமாய் படித்த என்
சின்னக்குருவிகளே
உங்களை இன்றைய தினத்தில்
மட்டுமல்ல
எப்போதும் கொண்டாடுகிறேன்.

அணில்களாய் விளையாடும் குறும்பு
எறும்புகளாய்
ஊர்ந்து இனிப்புத் தேடும் சுறுசுறுப்பு
என்னை இன்னும்
வாழ வைக்கிறது.

இன்று ஒரு தேமாமரமாகி
மாம்பூத் தூவி வாழ்த்தி மகிழ்கிறேன்;
என் தோட்டத்து சின்னப்பட்சிகளெல்லாம்
கொண்டாடி மகிழ.

உங்கள் சிறகுகளின் நுனியில்
ஆரோக்கியம் கசிந்து ஒழுக
இனிய பாடல்கள் பாடி வாழ்க.

மரம் நிமிர்ந்து நின்றாலும்
புயலொன்றில் சிக்கி சரிந்தாலும்
கிடக்கட்டும்
நீங்கள் சிறகுகளால்
வானம் வரை பறக்கும்போது
நான் விறகாகியும் பெருமையடைவேன்;
அல்லது
நிலத்தில் நீருள்ளவரை
என் வேர்களால் இன்னும் பல மரங்களாவேன்.

ஜே.வஹாப்தீன்-இலங்கை

ஜே.வஹாப்தீன்

(Visited 56 times, 1 visits today)