வெயிலில் ஒரு வீரப்பழம்-கவிதை-ஜே.வஹாப்தீன்

வெயிலில் ஒரு வீரப்பழம்

கோர வெயில்

வாகரை வீதி முறுகிக்கிடக்கிறது.

காட்டுக்குள்ளிருந்து வரும்

காற்றும் சூடாகி வீசுகிறது.

ஈரமும் குளிர்ச்சியும்

இதயங்களில் இல்லை

அறுத்துக் கூற முடியாது.

மண் காய்ந்து கொதிக்கிறது.

கோரவெயிலின் கொடுமை தாங்கி

உச்சி மண்டை உருகி வடியும்

பரிதாப உருவம்

வீரப் பழ பேக்கொன்றை ஏந்தியபடி

கருகி நின்றாள் சிறுமி

உருகி வடிந்தது உள்ளம்.

யாரிந்த அழுக்கு தேவதை?

யுத்தத்தின் சத்தத்தில்

முறிந்த செடியா?

சுனாமியின் இரக்கமற்ற அராஜகத்தில்

அழிந்த கொடியா?

ஆம்

யுத்த சாத்தானும்

சுனாமி எனும் அரக்கனும்

கைகோர்த்த ஆட்சியிலே

அநாதையாகி நின்றாளோ

இந்தக் காட்சியிலே.

அழுக்குத் துணி நிறத்தில்

வறுமைச்சின்னத்தில்

வீதியோரம்

இந்த ஏழைச்சிறுமியின்

பரிதாபத் தேர்தல் நடக்கிறது.

கொதிக்கும் வெயிலில்

பதிக்கும் இரு பிஞ்சுப்பாதங்களை காக்கவேண்டிய

அந்த தேய்ந்த பாதணிகள்

எங்குபோய் தொலைந்தன?

படிக்கும் வயதில்

உருக்கும் வெயிலில்

கருகும் இந்த மலர்மீது

ஆதவனுக்கும் இரக்கமில்லை

மூசாப்புக் கொடுக்கவில்லை.

வீதியோரம் மரங்களில்லை

நிழல் வறுமை

வீயிலே மனங்களில்லை

இவள் பொறுமை.

எடுத்ததெற்கெல்லாம்

உண்ணாவிரதம்

ஏன் மனதில் குரோதம்?

இவளுக்கு முன்னால்

என் உண்ணாவிரதம்

தற்கொலை செய்து கொண்டது

வீரப் பழபேக்கை விரும்பி வாங்குகிறேன்

வீதியோரம்

உண்ணத்தொடங்கினேன்

சின்னவளின் முகப்பூங்கா மலர்கிறது

ஆயிரம் புன்னகை மொட்டுக்கள் அரும்பியது

இவளும் பசியாற  ஒருவாய் சோறு உண்பாள்.

கலைந்த என் உண்ணாவிரதம்

கனிந்து மகிழ்ந்தது.

இது போதாது

இவள்

வீரப் பழபேக்கை வாங்கிவிட்டு

பாடப் புத்தக பேக்கைப்

பரிசளிக்க யார்வருவார்?

நான் பயணிக்கிறேன்

என் மனசை ஒரு புழு துளைத்துக்கொண்டே இருக்கிறது.

00000000000000000000

உலகப்பெண்ணின் மனிதக் கனவுகள்

 

இருட்டுப் புடைவை கட்டி

தன் நிலா மனதை

கண்ணாடிக் குளத்தில்

இரவு முழுக்கப் பார்த்து மகிழும்

உலகப் பெண்ணிடம்

வாழ்வைத் தொலைத்துவிடாதே.

நாளை பகல் புடவை கட்டி

பளபளக்க

கடலில் கைகால் கழுவி

முகம் அலம்பி

சிவப்பால் உடலில்

ஒப்பனை செய்து வரும்

சூரிய மனதோடு சூடாகிவிடுவாள்.

இரண்டு புடவையிலும்

உலகமவள்

வெவ்வேறு அழகு.

ஒவ்வொரு நாளும்

காலமெனும் தங்கத்தண்ணீரில்

அவள் குளிக்கக் குளிக்க

அழகு மட்டும் மாறவில்லை.

வாழும் மனிதனே

மாறும் மனங்களாம்

சூரிய சந்திரனுக்குள்

வாழப் பழகிக்கொள்.

அவளது

மலைப் பிடிவாதங்களை

மண்ணாக்கி வாழ முயலாதே.

உலகப் பெண் உன்னதமானவள்

அவளின் நதிக்கரை அன்பினில்

நாளெல்லாம் இன்பம்தான்.

அவளது பேராசைக் காட்டுக்குள்

கரடி புலி உறுமி

காட்டுக் கவிசி கத்தினாலும்

கருணைப் பூங்காக்குள்

பூக்களின் புன்னகை

மண்மடியை மணக்கச் செய்யும்.

அவள் கடல்க் கண்களில்

ஆயிரம் மீன்கள்

முடியும்வரை தோணியோட்டலாம்

விடியும்வரை தூண்டில்ப் போடலாம்.

ஆனால்

எண்ணங்களான நட்சத்திரங்களுக்கு

எல்லை இல்லை.

அவற்றை அளந்து

பரிசு கொடுக்கும் முயற்சியைமட்டும் விட்டுவிடவேண்டும்.

உலகப் பெண்ணின்

அழகுக்குக் காரணம்

வானமுகமும்

மேகக் கூந்தலும்தான். அதனால்த்தான்

மழைக்காதலில்

மண் மகிழ்கிறது.

என்னதான் உலகப் பெண்

சேலையை

மாற்றி மாற்றி உடுத்தாலும்

அவளது ஆயுட்காலம்

சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் , அவளின்

மனிதக் கனவுகள்தான்

மாயங்களாகி

மண்மடியில் மறைந்துபோகின்றன.

ஜே.வஹாப்தீன் –இலங்கை

(Visited 172 times, 1 visits today)