காடுகள்-கவிதை-பாலைவனலாந்தர்

காடுகள்

எங்கேயோ நுழைந்தேன்

எங்கேயோ தொலைந்தேன்

சுற்றிலும் காட்டின் நெடி

பச்சையம் மாறாத நைந்த வாசம்

இருண்ட வன்மத்தை

ஒப்பிட்டுப் பார்த்தேன்

அகன்ற மடியை

பரிசளித்துச் சென்றது காடு

விரிசல்களுக்குள் மூன்று காடுகள் இருந்தன

நான் மூன்றாம் காட்டில்

முதலில் தொலைந்தேன்

பெண்ணின் உடல் வளைவுகளை ஒத்த காடுகள்

காடுகளின் நெளிவுகளை ஒத்த பெண்கள்

அங்கே சகதிகளுக்குள் சிவப்பேறிய

மிருகம் நெளிந்தது

அதன் கண்களில்

கருணை மாமழை

ஒப்பிலா உடலே போற்றி

நிறைய மயிர்கள்

நிறைய பிசுபிசுப்புகள்

காட்டின் ஜீவகாருண்யம்

கால்கள் வழுக்கி காடெங்கும்

இழுத்துச் சென்றது ஞாபகங்கள்

நத்தை கூட்டுக்குள்

நெக்குருகி கிடந்தேன் யுகங்களாக

விரலால் உடைக்கப்பட்ட குமிழ்

இக் காட்சிப்பிழை

நீங்கி விழித்து பார்

 

தகதகவென

நெருப்பு

தீ

பிழம்பு

அக்கினி

உயர் கொதிநிலை

நின்றபடி கருகிக் கொண்டிருக்கும்

கங்காரு ஒன்றின் வயிற்றிலிருந்து

எட்டிப் பார்த்தது

அதே

சிவப்பேறிய விழிகள்

கருணை சாபம்..

பாலைவன லாந்தர்-இந்தியா

பாலைவன லாந்தர்

 

 

(Visited 202 times, 1 visits today)