இரண்டாய் வகுக்கப்பட்ட நியூரான்-கவிதை-பாலைவன லாந்தர்

இரண்டாய் வகுக்கப்பட்ட நியூரான்

பாலைவன லாந்தர்

 

துருவேறிய கூர்மையான
கத்தியின் நுனியில்
பச்சைத் தளைகளை நுழைத்து
சாம்பல் கண்கள் மினுங்கும்
முயல்களை நோக்கி நீட்டுகிறான்

முத்தமிடுதலைக் குறித்து
இவ்வாறாக உன் டைரியில்
எழுதி வைத்திருக்கிறாய்

இரவு தோறும் ஏதேனுமொன்று
கிடைத்துக்கொண்டே இருக்கிறது
அது தூக்கங்களிலிருந்து
தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்லும்
மாயம் நிறைந்தது

தற்காலிகமாக உன்னை
சங்கிலியால் பிணைத்திருக்கிறேன்
அதிகமான கேள்விகளுக்கு
முன்பு நிறுத்தப்படுகின்றாய்
அதைக்குறித்து பார்வைகளுக்கு
சலனமற்ற புன்னகையின்
இரகசியத்தை எவ்வாறு அறிவேன்

நீ தடுமாறும் ஒற்றைப்புள்ளியில்
சந்திப்பதற்காக காத்திருக்கிறேன்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த
செப்புத்தகடுகளை தூக்கியெறிந்துவிட்டு
முழுவதும் அரித்துப்போகாத
பிள்ளை மண்டையோட்டை
முந்தானைக்குள் பத்திரப்படுத்துகிறாய்
உன் ஏக்கங்களின் வரையறையில்
தெளிவான அளவுகோல் இல்லை

உன்னை நீயே இரண்டாய் வகுத்து
ஒன்றில் தொலைந்து
இன்னொன்றில் தேடியபடியே
தான் ஒரு மனநோயாளி இல்லையென்பதையும்
எழுத்துக்களால் பலப்படுத்துகிறாய்

இருமுனைகூர்மையின் மத்தியில்
பாலே நாட்டியமாடும் ஊனமுற்ற
ஒரே பெண் நீ ………..

பாலைவன லாந்தர் – இந்தியா

பாலைவன லாந்தர்

(Visited 59 times, 1 visits today)