தொலைந்தவர்கள்-கவிதை-வி. அல்விற்

தொலைந்தவர்கள்

வி. அல்விற்

இந்த நீண்ட பனிக்கால உறைதலில்
பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் போல
கால்கள் புதையுண்டபடியே நடக்கிறோம்.
தூரதேசத்திலிருந்து தொடர்ந்தொலிக்கும்
அழுகுரலோலங்கள் ஓங்கி வந்தறைந்து
செவிப்பறைகளைத் தாக்குகின்றன.
தூரங்கள் அறுத்துவிட முடியாத
பந்தங்களாய்த் துரத்தியபடியே
வந்துகொண்டிருக்கின்றன.
நெக்குருக்கும் விம்மல்களுடன்
சேர்ந்து குரலெழுப்ப விழைகையில்
கடுங்கரங்கள் குரல்வளைகளை நெருக்குகின்றன.
மௌனமாகச் செத்துவிடச் சொல்லுகிறது
மாறிப்போய்விட்ட இப்பேருலகு.
மனிதம் தொலைந்தும் நீண்ட காலமானதை
பறையறிவித்தவர்கள் போல
காதுகளற்ற மனிதரைக்கொண்ட
நல்லாட்சி நீடித்திருக்கிறது.
தொலைந்தவர்கள் கனவுகளிலும்
தொலைத்தவர்கள் நடைப்பிணங்களாகவும்
ஏங்கியபடியே சுற்றி வருகிறார்கள்.
ஐயோ என்ர பிள்ளையைக் காணேல்லை!
என்ர அண்ணாவைத் தேடித்தாங்கோ!
சுருதி தப்பிய இவ்வோலங்கள் மட்டும் தொடர்ந்தொலிக்கின்றது
மாறாத விசும்பல்களுடன்…….

வி. அல்விற்- பிரான்ஸ்

வி. அல்விற்

 

(Visited 35 times, 1 visits today)