கோழிக்கால் பட்டியின் கடைசிப் பசு மாடு-சிறுகதை-யதார்த்தன்

 

யதார்த்தன் பூளை இறகிப்போய்க் கிடந்த கண்களை இவள் திறக்கும் போது முதலில் கேட்டதுகோமதியுனுடைய   ”ம்மா…….” குரல்தான். மாட்டுக்கொட்டில் இவளின் அறை  யன்னலுக்கு  நேர்எதிரிலே இருந்ததால் கோமதியின் குரல் செவிப்பறைக்குள் கோமதியின் குரல் மெலிதான  அதிர்ச்சியோடு கேட்டது.  கைகளை நீட்டி முறு வலித்தவள்  கண்களைத்திறக்காமல்  கையைதலைமாட்டிற்கு  வளைத்தாள். கடல் நண்டு ஒன்று  வாய் தூர்ந்து போன  பொந்துக்குள்  நுழையிகின்ற  மாதிரிக்கைவிரல்களை   மெத்தையில் இறக்கித் தலையணைக்குப் பக்கவாட்டில்புதிந்து போய்க்கிடந்த   கிடந்த போனைத் தேடி எடுத்தாள். திரையில் விரல்களை   ஓடவிட்டு   ‘நோட்டிபிகேசன்’ களைச் சோதித்தாள். வாட்ஸப்பில்  எந்த மேசேஜும் இல்லை.   கடைசியாய் இவள்அவனுக்கு   அனுப்பிய மெசேஜ் காட்சியாகியிருந்தது  . ஆனால் அவன் எந்தப்பதிலும்போட்டிருக்கவில்லை. ஒரு முறை இரவு நடந்த சண்டையை  உருட்டிப் பார்த்தாள். வைபரில்லண்டனில் இருந்து அண்ணா , ”அப்பான்ர  திவசத்துக்கு காசு போட்டிட்டன்  மத்தியானத்துக்குபிறகு எடு”  என்று  மேசேஜ் அனுப்பியிருந்தான், அண்ணாவுக்கு ஒரு  ஒரு  mm  போட்டு விட்டு. மீண்டும்   வாட்ஸப்பில் அவனுடைய   உரையாடல் பெட்டியுள் நுழைந்தாள்.    கடைசி மெசேஜ்  கண்ணில் பட்டது.

Solla entha karanamum illai ithu set aavathu. Bye.

 கோமதி   மீண்டும்  கத்தினாள்

ம்மா………….

அவளுடைய  சத்தம்  இவளுக்கு  எரிச்சலைத்தந்தது. தலையிடிப்பது போலிருந்தது.

இரவு இருந்த நெஞ்சுப்படபடப்போ,  தலை வலியோ கண்ணீரோ வரவில்லை. ஆனால் ஏதோவொருபாரம் நெஞ்சுக்குழிக்குள்  இறுகிப்போய்க்கிடந்தது. வெளிக்கு வந்து இரண்டாவது நாள்வேறு , மார்புக்கடியில்  லேசான வலி பரவியிருந்தது , அடி வயிற்றிலும் வலி தெரிய ஆரம்பித்திருந்தது.  கைகளைக்கீழே இறக்கி  பாட்டை சோதித்தாள். விலகாமல் திம்மென்று இருந்தது. நாசியில் இருந்துமூச்சு சீராக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.   உடல் முழுவதும் அசதி   இறுகிப்போய் கிடந்தது. ஒருவித வெப்பம் போர்த்திருந்த பெட் சீட்டினுள் பரவியிருந்தது. போர்த்திருந்த பெட்சீட்டை உதறிப்பக்கவாட்டில் சுருட்டி விட்டாள். மெல்லிய குளிர்  மேலுடலில் பரவியது.

போனை  தலைமாட்டிற்கு சற்று மேலாக இருந்த பிளக்கில் பொருத்தியிருந்த சார்ச்சரின்  மெல்லியவயர் நுனியில் சொருகி விட்டு எழுந்தாள். தலையை வாரி சுருட்டி குடுமியாக்கினாள் . படுக்கையைத் தட்டி போட்டவள் , மெத்தை விரிப்பையும்  போர்வையையும் சுருட்டி தோய்க்கின்றஉடுப்புக்கள் போடும் கூடைக்குள் போட்டாள். நேரே இருந்த டிறெஸிங் டேபிளின் கண்ணாடியில்இவளுருவம் தெரிந்தது, கண்கள் வீங்கி சிவந்து போயிருந்தன,  டிறெஸிங் டேபிளின் லாச்சியைஇழுத்து வாய்ப்பகுதி பிரிக்கப்பட்டிருந்த விஸ்பர் பக்கெற்றினுள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த  பாட்களில்   ஒன்றை உருவி எடுத்துக்கொண்டவள்.   துவாயையும் எடுத்து தோளில்போட்டுக்கொண்டு பாத்ரூமிற்குள்   நுழைந்தாள்.

ம்ம்மா………

கோமதியின் குரல் ஒலிக்கும்    நேர இடைவெளி அதிகரித்தது.    அவளுடைய கத்தலும்  அதிகமானது.

நைற்றியைக் களைந்துவிட்டு , ஸ்கினியை சுருட்டித் தோய்க்கப்போட்டாள். உள்ளாடைகளைநீக்கிப்   பாட்டை உரித்தாள் , குருதியும் பிசுபிசுப்பும் சிவப்பும் மஞ்சளுமாய்  திரண்டு கிடக்க , அதன்  வெடுக்கு  முகத்தில் வந்து அடித்தது . சுருட்டி  பொலித்தீன் பைக்குள் போட்டவள் , சவர்குழாயைத் திறந்து விட தலைக்கு மேல் படமெடுத்து நின்ற சவர் தண்ணீரைச் சீராகப்பொழியத்தொடங்கியது ,  தலையிலும் தோள்களிலும் இறங்கிய நீர் , மார்பில் வழிந்தது.   திம்மென்று லேசான நோவுடன்  இருந்த மார்பின் மீது குளிர்ந்த நீர் இறங்குகையில்சுகமாயிருந்தது. தலையை நிமிர்த்தி நீர்த்திவலைகளை முகத்தில் வாங்கத்தொடங்கினாள்.   தலைக்குள் குளிர்ச்சி   இறங்கி உடலின் மொத்த இறுக்கத்தையும் சூட்டையும்இறக்கத்தொடங்கியது , மூச்சு குளிர்ச்சியாய் வெளிப்பட்டது.  அடிவயிற்றின்     வலிக்கு   இதமாககையை அடி வயிற்றுக்கு நகர்த்தி லேசாய் அழுத்தினாள்.  கை அனிச்சையாக கீழே இறங்கி  சுத்தம்செய்யத்தொடங்க , அவனுடைய  வார்த்தைகள்   தலைக்குள் வெட்டின.   நெஞ்சு மீண்டும்அடித்துக்கொள்ளத்தொடங்கியது.

நடுநெஞ்சுக்குள்   மீண்டும் ஒரு திரண்ட திண்மம்    உடலில் வழிந்திறங்கும்   நீரில் கரையமாட்டேன்என்பதைப்போல்  இறுகிக்கொண்டிருந்தது.  அதைச்சுற்றி எங்கிருந்தோ ஆரம்பமான விம்மல்வெளிப்பட்டது. கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. நீர்குழாயின்  திருகியைத்திருப்பி   நீரின்பொழிவின் வேகத்தை அதிகப்படுத்தினாள், தலையை சற்று விலக்கி ,  மார்பின் மீது நீரைவீழ்த்தினாள், அதன் வேகம் வலியோடிருக்கும் மார்பிற்கு   இதமாக இருந்தாலும் நெஞ்சுக்குள் ஏறிநின்ற அந்தரத்தையும் விம்மலையும்     அதனால் கரைக்க முடியவில்லை.

ம்ம்ம்ம்மா…………….

கோமதியின்    குரலின்    சுரநீளம்  இன்னும்   இழுபட்டது.

தூவாயைச்சுற்றிக்கொண்டு   வெளியே வந்து   பஞ்சாபியொன்றினுள் நுழைந்துகொண்டாள்.    கோமதியின் குரல்    தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.

வெளியே வந்தாள்,    ஹோலில் அம்மா அப்பாவின்    படத்தை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தாள்,    பிரம்புக்கதிரையில் அவளின்   கிறச்சர் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.  இவளின்  அரவம் கேட்டதும்  அம்மா   நிமிர்ந்து பார்த்தாள்.

”என்ன பிள்ளை கண் வீங்கியிருக்கு ?”

“முழுகின்னான்”

“சரி கீற்றர் போட்டிட்டன் தேத்தண்ணி போட்டு குடி,  புட்டு சருவத்தால இறக்கேல்ல , சூடாய்இருக்கட்டும் எண்டு விட்டனான் அத உருத்திச் சாப்பிடு”.

“பசிக்கேல்ல” என்றாள்.

கோமதி மீண்டும்  ம்மா………….. என்றாள்.   இவளுக்கு எரிச்சலாக வந்தது

ஏன் கோமதி கத்துது?

“அதுக்கு சினைக்காலம் தொடங்கீட்டு   அதுதான்    கத்துது”

“மாட்டுக்கு விடவேணுமோ?”

”ஓம் பிள்ளை ,  ஆனா டொக்ரர் போன முறை ஊசி போட்டால் நல்லம் எண்டுதானே சொன்னவர்.”

இவளுக்கு  அம்மா சொல்லச்சொல்ல எரிச்சலாக இருந்தது. கோமதியை விற்றுவிடுங்கோ என்று  எத்தனையோ முறை அம்மாவிடம் சொல்லிவிட்டாள்.  தினமும் கோமதியைப்  பராமரிக்கத்தன் கிறச்சரை  ஊன்றி ஊன்றி  அம்மா மாட்டுக்கொட்டிலில் ஏதாவது செய்துகொண்டிருப்பாள். காலமை  அவிட்டு விட்டால் கோமதி எங்காவது போய் மேய்ந்துட்டு வருவாள். என்றாலும் , சாணகம்அள்ளுவது வைக்கோல் போடுவது,    கோமதிக்கு    தவிடோ பிண்ணாக்கோ கரைத்து வைப்பதற்குஅம்மாவாலை  இயலாது.  ஆனாலும்   அம்மா ஓரிடத்தில் இருக்க மாட்டாள், கிறச்சரைஊன்றிக்கொண்டு கோமதியோடே  நிற்பாள். காலமை   இவள் எழும்பி வேலைக்கு வெளிக்கிடவேநேரம் சரியாக இருக்கும் , மாட்டுக்கொட்டில் பக்கம் போகேலாது ,  அம்மா இவள்சொல்லிக்கேட்கமாட்டாள். அண்ணாவிடம் சொல்லி   அவன் ஸ்கைப்பில் கதைக்கும் போது ,    கோமதியை விற்கச்சொல்லிக்  கெஞ்சிப்பார்த்தான்.

அம்மா அசையவில்லை. “மாடெல்லாம் அப்பாவோட போகட்டும் அம்மா அதை வில்லுங்கோ”அம்மா   சம்மதிக்கவேயில்லை.

அப்பாவின் “கோழிக்கால் பட்டியின் கடைசி மாட்டை” அம்மா கைவிடத்தயாராகவில்லை.

000000000000000000

பரந்தனில் இருந்த பெரிய பட்டிகளில் அப்பாவின்கோழிக்கால்  பட்டியும் ஒன்று. அப்பாவின் பட்டிக்குறி  x  வடிவமுள்ள  கோழிக்கால் குறி.   எல்லா மாட்டிலும் அந்த கோழிக்கால் குறிசுட்டிருக்கும்.  பரந்தனில் இருந்து ஆனையிறவு போகும் வழியில் இருந்தது   அப்பாவின்கோழிக்கால்ப்பட்டி.மூன்று ஆலமரத்தடி என்று அவ்விடத்தைச் சொல்லுவார் அப்பா.   மூன்று பெரிய ஆலமரங்கள் விழுது விட்டு நிழலோட நிற்கும். அந்த ஆலநிழலில்த்தான் அப்பாவின்  பட்டியிருந்தது. காட்டுத்தடியால்  வேலி வரிந்து பட்டியைச் சுற்றி எல்லை ஓடும் .  பட்டி  எரு வழித்து  அருகில் எப்போதும் குவிக்கப்பட்டிருக்கும்.  பட்டிக்குப்பக்கத்தில் ஒரு பெரிய ஊரிப்பிட்டி இருக்கு.அதிலைதான் பட்டியை பராமரிக்கிற பெடியள் நிக்கவும் , வேலைச்சாமன்கள் வைக்கவும்   அப்பாபோட்டிருந்த சின்ன கொட்டிலும்,  திண்ணையும் பட்டிப்பக்கம் பார்க்கக் கட்டப்பட்டிருந்தன. பிட்டியில் ஏறிப்பார்த்தால்  பட்டி  நன்கு  தெரியும். கோழிக்கால்களின் குறிசுடப்பட்ட  எழுநூறுமாடுகள்   நின்றபட்டியது.   அப்பாவின் பட்டி  இரண்டு விதத்தில் பரந்தனில் பிரபலமான ஒன்று.    எந்த காட்டுக்குள்ள்ளும் கோழிக்கால் குறியிடப்பட்ட மாடுகள் தரமான மாடுகள் , என்று ஊருக்குள் மட்டுமில்லை , எரு ஏற்றவரும் யாழ்ப்பாணத்துப் பேருந்துக்காரர் வரைக்கும்  பிரபலம்.  அடுத்தது  கோழிக்கால் பட்டியில்  நிற்கும் எல்லா மாடுகளும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.

மாவெள்ளை மாடு மட்டும்தான் தன்னுடைய பட்டியில் நிற்கவேண்டும் என்பதில் அப்பா எப்போதும்  கவனமாக இருந்தார்.   பசு மாடுகள்  பட்டியில் இருக்கும்  வெள்ளைக்காளை மாடுகளுடன்  சேரமட்டும்தான் அனுமதிப்பார். மேயப்போகும் இடத்தில் மேய்க்கிற  பெடியளிடம்  கடும் ரைட்டாக   “வேறு காளைகளோடு  சேரவிட்டால் துலைச்சுப்போடுவன் “ என்று சொல்லி வைத்திருப்பார்.   அப்பாவின் கோபத்திற்கு அஞ்சி அவர்களும்  அதில் கவனமாக இருபபார்கள்.   தப்பிப்பதவறி  கன்று  நிறம் மாறிப்பிறந்தால்  அவை சிறிது வளரும் வரையில்  தாயையும் கன்றையும்தனிப்பட்டியில் அடைத்து விடுவார். அல்லது வீட்டிற்கு கொண்டுவந்து கட்டி வளர்ப்பார்,  பட்டிக்குள் சேர  அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு   காலையிலும்  தன்  மோட்டச்சைக்கிளை எடுத்துக்கொண்டு பட்டிக்குப்போவார்.  ஊரிப்பிட்டியில் ஏறி நின்றுபட்டியைப்  பார்ப்பார்.  வெள்ளை வெளேரென்று மாடுகளைப் பார்க்கும்போது அவரின்ர  முகம் பிரகாசமாகி  அவரின் உதடுகளில் ஒரு பெருமைச்சிரிப்பு  கசியும்.   அதை  இவள் அப்பாவுடன் பட்டிக்கு போகும்  போதெல்லாம்   பார்த்திருக்கிறாள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளத்தடிக்கு பட்டியை சாய்ச்சுக்கொண்டு போய் அப்பாவும்  வேலை செய்யிற   பெடியளும் மாடுகளை பொச்சாலை தேய்ச்சு குளிப்பாட்டி எரு வழிச்சுசுத்தமாக்கின பட்டியில் கொண்டுவந்து அடைப்பார்கள்.  இவள் அப்ப சின்ன பிள்ளை. அப்பாஅவளை தூக்கிக்கொண்டு பட்டிக்குள்ள மாடுகளுக்கு இடையில் நடந்து போவார்.   மாடுகள்அப்பாவுக்கு வழிவிடும். அப்பாவை கண்டதும் வாலைச் சுழற்றி அப்பாவைப்  பார்த்துக் கத்தும். அப்பாவுக்கு மாடுகளில்  சரியான விருப்பம். ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்திருப்பார்.   அத்தனைமாட்டின்ர பேரையும்  எப்பிடி அப்பாவாலை அடையாளம் காண முடியுது என்ரு  இவளுக்குஆச்சரியமா இருக்கும்.

அப்பாவும் பெடியளும்  பால் செம்போட போய் காலையில்  போய் நிண்டுபேரை சொல்லி கூப்பிடுவினம்.  பட்டிக்குள்  எங்கே நின்றாலும்  அந்த பெயருடையவள்  நடந்துவருவாள். அவளுக்கு  மற்ற மாடுகள் வழிவிடும்.  நேரே வந்து பால்கறக்க ஏதுவா வந்து நிற்கும். பால்கறந்து முடிய  கன்றுகள் அடைக்கிற இடத்தின் கதவு திறக்க அதன் கன்று பாய்ந்து வந்து தாயின்முலையை முட்டும். அதைக் கொஞ்ச நேரம் பாத்துக்கொண்டு நின்றுவிட்டுத்தான் அடுத்தமாட்டைக் கூப்பிடுவார். தண்ணி கலக்காத பாலென்றால்  கோழிக்கால் பட்டின்ர பால்தான் என்றுசனம் விரும்பிப்பால் வாங்க வரும்.  அப்பா ஊசி போட்டு சினைப்படுத்த கூடாதெண்டுசொல்லுவார்.   எங்கட மாட்டின்ர மடி வெளிநாட்டு மொந்தனுகளை நோக நோகச் சுமக்கோணுமோஎண்டு கேட்பார். அப்பாவின்  பட்டியில நின்ற மாடுகளில் அப்பாக்கு நல்லா பிடிச்ச பசு மாடு வெள்ளாச்சிதான். அவதான் கோமதின்ர அம்மா. பெரிய கொம்பும் திமிலுமாய்  நாம்பன் மாதிரி  ஒரு வடிவானவெள்ளைப் பசுமாடு  வெள்ளாச்சி .

“என்ர பட்டின்ர ராணியடா அவள் “ எண்டு அப்பா சொல்லுவார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டுசனவரியிலை  வெள்ளாச்சி சினைப்பட்டாள். அவளுக்கு கோமதி பிறந்தாள். இளங்கொடி விழாமல் கோமதி வெள்ளாச்சியைக் கஷ்டப்படுத்திக்கொண்டே பிறந்தாள்.  அவள் பிறக்கும் போதே நல்லவடிவு. அம்மா தான் அவளுக்கு கோமதியென்று பெயர் வைத்தார்.

குஞ்சுப்பரந்தனில் ஷெல் விழத்தொடங்க சனமெல்லாம்  இடம் பெயரத்தொடங்கிவிட்டனர்.  பட்டிக்கதவை திறந்து மாடுகளைக் காட்டுப்பக்கம் கலைத்து விடும் போது வெள்ளாச்சியைக் கட்டிப்பிடிச்சு அழுத அப்பாவின் குரல் இப்பவும் இவளுக்குக்  கேட்டுக்கொண்டே இருக்கும்.

விசுவமடு  ரெட்பானாவில் அப்பாவும் அம்மாவும் ஷெல்விழுந்து காயப்பட்டு  விசுவமடுகொஸ்பிட்டலில்  இருந்தார்கள். அம்மாக்கு கால் இயலாமல் போனது. அப்பாவின்  காயம்  ஏற்பாக்கி அவர்மோசம் போகும் வரையான  ஐந்து நாட்களில் தன் மாடுகளை பற்றி அம்மாவிடமும்  அண்ணாவிடமும்ம் இவளிடமும் முனகும் போது மூன்று பேரும் அவரை கட்டிப்பிடிச்சு  அழுகிறதைத் தவிர  வேறெதுவும் செய்யமுடியவில்லை.

முகாமிலை இருந்து மீள் குடியேற்றத்துக்கு பரந்தனுக்கு  வந்து வீட்டைத் திருத்திக்கொண்டார்கள்.  அப்பாவும் இல்லை  பட்டியும் இல்லை, வேறொரு வருமானமும் இல்லை. மாடுகள் எல்லாம்சண்டையில்  செத்தன, இறைச்சிக்கு ஏற்றியவை போக  காடுகளுக்கு கொஞ்சம் மேய்ந்துசதிரியுதென்றும் சொன்னார்கள். கோழிக்கால் பட்டியின் வெள்ளை மாடுகள் பற்றிய  செய்தியேஇல்லை . அம்மாவின் நகைகள்  அப்பா பாங்கில் சேர்த்து வைத்த பணத்தில் கனடாவில் இருக்கும்செல்வம் மாமா  ஸ்பொன்சர்  பண்ணி அண்ணாவை வெளிநாட்டுக்கு எடுப்பித்தார். அதுக்குபிறகுதான்  மெல்ல மெல்ல குடும்பம்  மீளத்தொடங்கியது.

ஒரு நாள் வீட்ட வந்த நேசமணியக்கா ” வயல் பக்கம் கோழிக்கால் குறியோட ஒரு  மாடு நிண்டுமேஞ்சத கண்டன்” என்று சொன்னார். அம்மாவும் பூரித்துப்போனார். அழுதே விட்டார்.  உடனே  குமரனைக் கூப்பிட்டு அவனுடைய மோட்டச்சைக்கிளில் ஏறி போய்  பின்னேரம் கோமதியோடுதான்வீட்டுக்கு வந்தார்.  வளந்து தாய் வெள்ளாச்சி போல கொம்பெல்லாம் ஒரளவுக்கு வளர்ந்து நல்லசதைப்பிடிப்போட இருந்தாள், அம்மாக்கு அப்பாவே திரும்பி வந்ததைப்போலொரு  சந்தோசம்.  புதுமாட்டுக்கொட்டில் அமைத்து அதில் கோமதியைப்  பராமரிக்கத்தொடங்கினார்.

முதல் பிரசவம் கன்று இறந்தே பிறந்தது , கோமதியின் பின் புறம் நாகபடம் என்றும் கன்றுசரியாகத்தங்காது என்றும் , அதை விற்கச்சொல்லியும் நிறையப்பேர் சொன்னதாக  குமரன் வந்துஅம்மாவிடம்  சொன்னான் “ கோழிக்கால் பட்டி சற்குணத்தின்ர மனுசியடா நான்  எனக்குத்தெரியும்என்ர கோமதி எப்ப கண்டு போடுவாளெண்டு” என்று அம்மா வீம்புக்கு நின்றார் , இரண்டாவதுமுறையும் கன்று இறந்தே பிறந்தது. தாய் வெள்ளாச்சியைப்போல் இளக்கொடி விழாமல்சாகக்கிடந்து பிழைத்தது.

மாட்டு டொக்டர்தணிகாசலத்தைக் கூட்டிவந்து காட்டியபோது அவரும் கோமதியின் பிருஸ்டத்தைச்   சுட்டிக்காட்டி  நாகபடம் பற்றிச்சொன்னார். அடுத்த முறை நல்ல மாட்டுடன் விடவேணும் , இல்லையெண்டால்  நல்ல இன ஊசியாய் தானே போட்டுவிடுவதாய் சொன்னார்.   இன்றைக்கு மீண்டும் கத்தத்தொடங்கிவிட்டாள்.

”ம்மா” வெளியில் மீண்டும் கோமதியின் குரல் கேட்டது.

இவள் தேனீரை உறிஞ்சிக்கொண்டே மாட்டு டொக்டரின் நம்பரை அழைத்துவிசயத்தைச்சொன்னாள். ”பின்நேரம் வாறன்பிள்ளை ”என்றார்.  அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவனுக்கு   ஒரு குட் மோனிங்கை தட்டிவிட்டாள்.

Gm  என்று குட்மோனிங்  சுருங்கிப்போய்  பதில்  வந்தது. அவன் பதில் ஏதோ ஒருவிதநிம்மதியைப்பரவ விட்டது.

Sorry யைத்தட்டி விட்டாள்.

பதில் இல்லை.

Meet pannanum.

 Ethukku ?

 Plz.

 Velai irukku.ennai konjam ninmathiya vidu plz.

 mm.

கொஞ்ச நேரம் இருந்து யோசித்தாள்.  அலுவலகத்தை  அழைத்து  விடுப்பு எடுத்துக்கொண்டாள். ஏதோ முடிவுக்கு வந்தவள் உடையை மாற்றிக்கொண்டு வெளிக்கிட்டாள். இவள் அம்மாவிடம்சொல்லி விட்டு , பிளசரை தெருவில் இறக்கி அக்சிலேட்டைரை முறுக்கினாள் .

அவன் நேற்று ஏதோ கோவத்தில் பேசிவிட்டான் என்றே யோசித்தாள்.  இவளும் அநியாயத்துக்குவார்த்தைகளை விட்டுவிட்டாள் என்று தன்னையும் நொந்துகொண்டாள். அவன் அப்படியில்லை. நம்பித்தானே பலமுறை  தன்னையும் கொடுத்தாள். உச்சியிலும் கழுத்திடுக்கிலும் முத்தமிடும்போதும் ‘என்னை விட்டிட்டு போக மாட்டாய் தானேடா ?’  என்று கேட்கும் போது, ‘இல்லையடிசெல்லம்’  என்று உச்சி முகர்வான். மீண்டும் மீண்டும் அவனுடைய பழைய உறுதி மொழிகளும் , ‘செட்டாவாது’ என்ற சமீப நாட்களின் வார்த்தைகளும் புறக்கணிப்புகளும்  மனதுக்குள்காட்சித்துண்டுகளாக சிதறிச்சிதறி எழுந்தன.

“நேரில் சென்று கேட்போம், அவன் என் கண்ணைப் பாத்துப் பொய் சொல்லமாட்டான். என்னிலையும் பிழைதானே? நான் கொஞ்சம் பொறுமையா கதைச்சிருக்கலாம்” என்றது  இதயத்துக்குள் இருந்து ஒரு குரல்.

ஆனால் என்றைக்குமில்லாமல் அவன் இவளைத் தூசணத்தால் பேசுமளவிற்கு சண்டை முற்றும்என்று அவள் நினைக்கவேயில்லை. ஆனால் அவன் சமீப நாட்களாக அவளைப் புறக்கணித்தவிதங்களை மூளைக்குள் இருந்து ஒரு குரல் பட்டியலிட்டுக்கொண்டேயிருந்தது.

அந்த பிரச்சினையையும் அவன் வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தகூடாதுஎன்று தனக்குச்சொல்லிக்கொண்டாள்.

அதிரும்  மூட்டில் போட்டிருந்த போன் அதிர்வது கேட்டது . வேகத்தை மிதமாக்கி ஹோல்டரில்தொங்கிய ஹான்ட்  பாக்கினுள் கையை விட்டுப் போனை எடுத்தாள்.

 ‘Doctor  cow ’  என்ற ஆங்கில எழுத்துக்கள் மின்னின. பச்சை குறியை தேய்த்து நகர்த்திகாதுக்குள் கொடுத்தாள்.

“பிள்ளை அந்தப்பக்கம் தட்டுவான் கொட்டிக்கு மத்தியானம் ஊசி போடப்போறன் , அதிலைவீட்டையும் கையோடவந்திட்டு போறன்”.

என்றார்.  இவள் சரி டொக்டர் என்று போனை அணைத்து ஹாண்ட் பாக்கினுள் சொருகி விட்டு , பைக்கை கிளிநொச்சி டவுனுக்குள் நுழைத்து , அவனுடைய ஸ்டூடியோ வாசலில் கொண்டு போய்நிறுத்தினாள்.

வெளியில் அவனுடைய  வெள்ளைநிற அப்பாச்சி  நின்றிருந்தது. கடைக்குள் நுழைந்தாள்.   ஏசியின்குளிர்ச்சி உடலை மோதி சிலிர்க்க வைத்தது. ரிஷெப்சனில் காயத்திரி இருந்தாள்.

“அவர் மேலையோ ?”

“இல்லை அக்கா.  பொஸ் இல்லை”.

“வெளியிலை மோட்டச்சைக்கிள் நிக்குது?”

“கரன்  அண்ணேன்ர பைக்கில கொஞ்சம் முதல்தான்  சாமத்திய வீடு ஒண்டுக்கு போட்டோசூட்டுக்கு போனவர் ”

கடைக்குள்  கண்களை ஓட விட்டாள்.  மெயின் பிசி திரை அணையாமல் இருந்தது. அவனைத்தவிரவேறு யாரும் அதில் தொட விடமாட்டான். ஷட் டவுன் செய்யாமல் போயிருப்பானோ? என்றுநினைத்துக்கொண்டே அவளின் முகத்திற்கு பார்வையை திருப்ப, அவளுக்கு ஏசிக்குள்ளும்வியர்த்தது. சட்டென்று போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள். ரிங் போனது. பிறகுதுண்டிக்கப்பட்டது. ஒரு மேசேஜ் மட்டும் வந்தது.

I am in work

 I want to talk to you , now.

 “en?”

 “nerla solran”

 “there is no reason to talk to you now……. It’s over”

 “neenka velaiya mudichidu vanka nan , kadaila wait pannuran”

 “sonna kekka madiya  ne?”

 “plz vaa enaai kadaika nindu alavaikkatha”

 “nadikkatha.. thayavu seithu kilampu, set aavathu namakku”

 “enna karanamnnu sollu plz”

 “fuck .. unakku sonna vilankatha?”

இவளுக்கு கண்ணீர் முட்டியது, காயத்திரி இவளையே பார்த்தபடியிருந்தாள் , நன்றாக குனிந்து போன் திரையை பார்பவள் போல  கண்ணீர் முட்டும் கண்களை அவளுக்கு மறைத்தாள்.

“plz sandai poda ennila thempillai , plz vaa pesanum”

 “oru ollum thevai illai kilampu”

 “plz da”

 “use your finger please leave me”

தலை கிறுகிறுத்தது.  கதவை படாரென திறந்து கொண்டு விம்மலோடு கடையை விட்டுவெளிப்பட்டாள்,   ஏசிக்குள் இருந்து மீண்டதும் வெளிச்சூழலின் வெப்பம் உடலில் வந்து சுட்டது.

கதறி அழவேண்டும் போலிருந்தது. கண்ணீரை  லேஞ்சியால் ஒற்றியெடுத்தாள். லேஞ்சி ஈரமாகஉள்ளங்கைக்குள் குளிர்ச்சியாய்ச்சுருண்டது. அதில் நிற்க மனமில்லை. பைக்கில் ஏறி அதை  வேகமாகச்செலுத்தத்தொடங்கினாள். அவனுடைய கடைசி வார்த்தைகள் மீண்டும் மீண்டும்எழத்தொடங்கின. விம்மல் முற்றிக்கொண்டு வந்தது. அவனுடைய முத்தம் தழுவல் , வியர்வைஎல்லாம் ஏதோ ஒரு அருவருப்பான தோற்றத்துடன் உள்ளே எழுந்து வந்தது. அந்த வார்த்தைகளின்அர்த்தம் தலைக்குள் ஏறிக்கொண்டு நோகத்தொடங்கியது. கரடிப்போக்கு சந்தியை தாண்டி வயல்வெளிகளால் பைக்கை வேகமாகச்செலுத்தினாள். விசுக்கென்று இரைச்சலுடன் கடக்கும் ஒவ்வொருவாகனமும்  இவள் முகத்தில் அறைந்து விட்டு போவது போலிருந்தது. இதயம் படபடவென அடித்தது.  எதிர்க்காற்று மோதும் ஒலியில் யாருமில்லாத வெளியில் குழறி அழுதுகொண்டே அக்சிலேட்டரைமுறுக்கினாள். கண்ணீர் காற்றில் தெறித்து  வெப்பத்தில் கரைந்தது.

Use your finger leave me .

வீட்டுக்குள் நுழையும் போது  லேஞ்சி  வெள்ளத்திற்குள் தோய்ந்தது போல் ஈரமாயிருந்தது. முகத்தைதுடைத்து விட்டு முற்றத்தில்  நுழைந்தாள். டொக்டரின் மோட்டார்ச்சைக்கிள் நின்றது.  அதன்பக்கப்பையில்  இருந்து கையுறைகளை எடுத்து அணிந்துகொண்டிருந்தார் டொக்டர்.  இவள்பைக்கை அம்மா அருகில் கிறச்சை ஊன்றிக்கொண்டு நின்றிருந்தார். அருகில் கோமதியின்மூக்கணாங் கயிற்றை சரிசெய்து கொண்டு குமரன் நின்றிருந்தான்.  இவள் பைக்கை நிறுத்திவிட்டு, கொழும்புப்பூவரசு மரத்தின் நிழலில் இருந்த குற்றியில் தலையைப் பிடித்துக்கொண்டு   இருந்து கொண்டாள்.

அம்மா அவள் அழுவதைப்பார்த்து விடக்கூடாது. அடி வயிற்றில் நோ இன்னும் அதிகமானது.  பிளீடிங்அதிகரித்து விட்டதை உணர்ந்தாள். அந்த வலி பெரிதாகத்தெரியவில்லை.  அம்மா வீட்டைகுமரனைக்கொண்டு கழுவி விட்டிருந்தாள். அதை மிதித்துக்கொண்டு போகவேண்டாமே என்றுதான் மரத்தடியிலேயே அமர்ந்துகொண்டாள்.  நெஞ்சு விம்ம விம்ம மூச்சு விட்டு அடக்கினாள், கண்ணீரைப் பிழிந்து விட்டுக்கொண்டேயிருந்தாள்.

Use your finger leave me

டொக்டர் கையுறைகளை கொழுவிக்கொண்டபின்  ஊசியைப் பையிலிருந்து எடுத்தார். இவள்கண்ணெதிரே   நடப்பவற்றைப்பார்த்துக்கொண்டிருந்தாள். குமரன் கோமதியின் நாணயக்கயிற்றை இறுக்கியிருந்தான்.  டொக்டர்   அருகில் சென்று அதன் பெரியவாலைப்பிடித்தார் , பின் ஒரு கையில் ஊசியை எடுத்துக்கொண்டு வாலைத்தூக்கி  கோமதியின்யோனியை நோக்கி ஊசியை கொண்டு போனார்.

Use your FINGER leave me

வார்த்தைகள் உள்ளே வெட்டின.

இவள்,

“டொக்டர் நிப்பாட்டுங்கோ” ஏறக்குறையக்கத்தினாள். திடுக்கிட்டுப்போன டொடர் இவளின் பக்கம்திரும்பினார்.  இவள் இரண்டு எட்டில் கோமதியின் பக்கம் போய் நின்றாள்.

“டொக்டர் நிப்பாட்டுங்கோ  வேண்டாம் !”

அம்மா இடை மறித்தாள்

“ஏன் பிள்ளை ?”

ஊசி போட வேண்டாம்  கோமதியை  மாட்டுக்கே  விடுவம்”

”ஏன் பிள்ளை என்ன நடந்தது? ” அம்மா திரும்பவும் கேட்டாள்.  அவள் குரலில் குழப்பம்மண்டியிருந்தது.

இவள் தாயைக் கையமர்த்தி விட்டு, டொக்டரிடம் காசைக்கொடுத்து  அனுப்பினாள் . அவள் ஏன்அப்படி நடந்து கொள்கின்றாள் என்று தெரியாமல் டொக்டர் ஏதோ  புறுபுறுத்துக்கொண்டே புறப்பட்டுப்போனார்.  இவள் குமரனிடம் திரும்பி

” அண்ணை ஆற்ற பட்டிக்கு கூட்டிக்கொண்டு போகோணும் ?”

“குஞ்சுப்பரந்தனுக்குத்தான் போகோணும் பிள்ளை. நான் கொண்டு போய் கொண்டு வாறன்’.

சரி இந்தாங்கோ ‘, என்று பேசுக்குள்  இருந்து ஆயிரம் ரூபாய்த்தாள்  ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு , கோமதியின்  தாடையில் ஒருமுறை  தடவி விட்டு , ஒன்றும் பேசாமல் வேகமாக  அறைக்குள்சென்று  கதவைச்சாத்திக்கொண்டாள்.

யதார்த்தன் – இலங்கை 

யதார்த்தன்

 

(Visited 200 times, 1 visits today)