கவி நாயகி-சிறப்பு எழுத்துகள்- வ.ஐ.ச.ஜெயபாலன்

கவி நாயகி

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

வெண்பனிக் கோலமும் இல்லாத
புகை வண்ணக் கொடுங்குளிர் நாள்.
தேனீரால் உயிரை சூடாக்கியபடி
கண்ணாடி மாளியுள் இருந்தேன்

0000000000

தூரத்துக் கரும் அணில்கள்
கோடையில் புதைத்த கொட்டைகளை
மீட்க்க  அலைந்தன.
நானோ அந்த உறைந்த நெடும் பகலில்
சென்ற வருகையில் எனக்காக
நாளொரு பறவையும்
பொழுதொரு பூவுமாய்க் கமழ்ந்த
ரொறன்டோ நகரின் நினைவுகளை
மீட்டிக் கொண்டிருந்தேன்.
சில கவிதையாய் சிறகசைத்தபடி.

00000000000

கடந்த வசந்தகால வருகையைவிட.
இக் கொடுங் கூதிர் வருகை இனிதாகுமென
ஒருபோதும் நம்பவில்லை.
ஆனாலும் வாழ்வு
தேன் சிந்தும் விநோத விழையாட்டு
என்பதை அறிவேன்.

000000000000

இருழ் சூழும் அந்தப் பிற்பகலில்
மின்விழக்குகளும் நாண
இன்னும் சூழையுள் எரிகிற
செம்மண் தேவதையாய்
என்னை நோக்கி அவள் வந்த பொழுதில்
அச்சுடைந்த சூரியன்
வடதுருவ வானில் உருண்டது.
என்னை சூழ வனங்கள் பூத்தன
எங்கும் பறவைகளின் பாடல்கள்.

00000000000

இன்னும் வெந்து கொண்டிருந்த
அந்த சுடு மண் தேவதையோ
புன்னகைத்து
என் ஆன்மாவை  பற்றிக் குலுக்கியது

0000000000000

துருவகரடியே
நீழக் குகை துயிலும் கூதிரில்
நெடுந்துயில் சிதறி
உயிர்தெழுந்த்தே என் கவி மனசு

00000000000000000000000000000

உலா

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

நீலப் பாவாடையில் குங்குமமாய்
எழுஞாயிறு கசிய
பூத்தது விடலை வானம்.
வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள்.
எனினும் அன்பே
உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான்
இந்த வசந்த நாளை அழகாக்கியது,

00000000000000

வண்ணத்துப் பூச்சிகளாய்
காற்றும் பூத்துக் குலுங்கும் வழி நெடுக.
காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல
கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான்
உலாவை ஆரம்பித்தோம்.
காடு வருக என
கதவுகளாய்த் திறந்தது.

00000000000

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட
கூறைச் சேலையாய்
வண்டாடும் மரங்களின்கீழ்
உதிரிப்பூ கம்பளங்கள்.

0000000000

என் அன்பே
முகமறைப்பில் இருளில் இணையத்தில்
கண்காணா தொலைவில்தான்
இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..
முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் இந்தக் காடும்
விடுதலைப் பிரதேசமல்லவா

00000000000

நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு
உன் மந்திர நினைப்புகளை ஒலி
தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..

வ.ஐ.ச.ஜெயபாலன்- நோர்வே 

வ.ஐ.ச.ஜெயபாலன்

(Visited 133 times, 1 visits today)