பாடா அஞ்சலி-கவிதை-வ.ஐ.ச.ஜெயபாலன்-மீள் கவனக்குவிப்பு

பாடா அஞ்சலி

வ.ஐ.ச.ஜெயபாலன்
பிருந்தாஜினி பிரபாகரன்

உதிர்கிற காட்டில்
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?

சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின்
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில்
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.

வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத…

இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய்
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின்
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.

அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”

0000000000000000000000000000000000

மொழியில் வேரூன்றி
நினைவுகளில் படர்ந்து
கனவுகளில் வாழ்கிற
புலம்பெயர்ந்த தமிழன்நான்.
இனி ஒரு இணையச் சொடுக்கில்
கோடி கோடியாய்
நம் கைகள் பெருகி உயர்கிற
நாட்க்கள் வருகுது.
வாழ்த்தாய் எழுக
நாழைய கவிஞரின் பாடல்கள்.
நான் இன்றைப் பாடும் நேற்றைய கவிஞன்
நாளையைப் பாடும் இன்றைய கவிஞர்காள்
எங்கள் அரசன் கட்டியதென்பதால்
கடற்கரைஓரம் இடிந்து கிடக்கும்
பிழைபடக் கட்டிய
புதை மணல் கோட்டையை
அதன் பிழையோடு
மீழக் கட்டிக் குடிபுகும் அரசியல்
எந்த வகையில் விடுதலையாகும்?.
தவறிய வழியில்
தொடர்ந்து செல்வோம் என்கிற விடுதலை
எந்த வகையில் அரசியலாகும்?
முஸ்லிம் என்று
புத்தளக் களரில் வீசப்பட்ட நம்
அகதிகளுடைய முன்றில்களிலும்
தமிழர் என்று வதைக்கப் பட்டு
வன்னி விழிம்பில் சிறைபட்டிருப்பவர்
வாசல்களிலும்
கோழி காகத்தை முந்தி நான் சென்று
குடு குடுப்பையை ஒலிப்பதைக் கேளீர்.
இது கோவில் மணியும் பள்ளிவாசலின் பாங்கும்
தேவாலயத்துப் பூசைப் பாடலும்
மீண்டும் ஒலிக்க
நல்லகாலம் வருகுது வருகுது என்று
குறி சொல்லிப் பாடுகிற
கடைச் சாமத்தின் பாடல்
இனி பல்லியம் இசைத்தபடி
விடியலின் கவிஞர்கள் வருவார்.

வ.ஐ.ச.ஜெயபாலன்-நோர்வே

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

(Visited 112 times, 1 visits today)