என் ஜன்னல்கள் திறந்தே கிடக்கின்றன-கவிதை-மிஸ்ரா ஜப்பார்

என் ஜன்னல்கள் திறந்தே கிடக்கின்றன

மிஸ்ரா ஜப்பார்
பிருந்தாஜினி பிரபாகரன்

அஸ்தமனக் கோடுகள்
நிழலுடன் இணைந்தும்
தனித்தும் தெரிகிறது

காற்றின் மெல்லிசை கரு நீல
கனவுகளை
தைத்துக் கொண்டிருக்கின்றது

கனத்த இரவொன்றின் விரக வேதனையின்
விரக்தியாய் தேகம் தொட்டு எரிமலையாய் விம்முகிறது
தத்துவமான என் தேடல்கள்
படித்த பின் விழியில் நடுங்கும்
கண்ணீரின் மூர்க்கத்தின் பாவனையில்
கற்பனையின் தரிசனங்களை
எட்டி நிற்கின்றன

என் இதயத்தின் துலக்கம்
ஓர் அரபிக்குதிரையின் வேகத்தில்
ராஜவஸ்திரம் தரித்து
தாண்டவம் ஆடுகின்றது

விடியல்கள் இன்னும் கதவு தட்டவே இல்லை
பனி தேசத்தில் உறைந்து போகும் உயிரின்
கதகதப்பான நினைவுகள் வக்கிரப் புத்தி கொண்டு
துவண்டு போக காண்கிறேன்….

000000000000000000000000000

மழை ஓய்ந்த பின்னிரவொன்றில்
உன் கனவுக்குள் சிக்குண்ட இப்பறவை
எதையோ கத்திப் பாடக் கேட்கிறேன்.
அடர்ந்த மலையின் பிரசங்கமாய்
எலும்புகள் உருகிக் கொண்டிருக்கின்றன.

வாழ்வின் வட்டக்கோட்டின்
ஆரம்ப புள்ளியாய் பிரசன்னம்
என்னுள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
துல்லியத்தில் தெரியும் உன் தரிசனம்
நெருப்பில் எழுதிய வாக்கியங்களாய்
இரவின் மடியில் துயில் கொள்கிறது.

000000000000000000000000000

சிவப்பு வானில் சிவப்புப் பருந்துகள்
எலிகளை தேடி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன
உரத்த நிராகரிப்புத் தூற்றல்
ரகசிய இழப்பாய்
தடிமனான வெளிச்சத்தில் கூட
வெருண்டெழுகின்றது

கறுப்பு முதுகில் ஓர் பிறவி
மச்சமாய்
அகத்தின் பிரமாண்டமான
பிம்பம்
மனதில் புதியதோர் கசப்பை பழைய
வேதனையோடு
கலக்கிறது

சுவரில் தொங்கும்
நிலை கண்ணாடியின்
அரைவட்ட வாழ்க்கையாய்
இருண்டு கறுத்து விட்டது மேகம்…

மிஸ்ரா ஜப்பார்-இலங்கை

 

(Visited 121 times, 1 visits today)
 

2 thoughts on “என் ஜன்னல்கள் திறந்தே கிடக்கின்றன-கவிதை-மிஸ்ரா ஜப்பார்”

Comments are closed.