மிஸ்ரா ஜப்பார் கவிதைகள்-மிஸ்ரா ஜப்பார்

மிஸ்ரா ஜப்பார்
ஓவியம் : டீன் கபூர்

சிரிப்பை மறந்த பெண்களை சந்திக்கிறேன்
கண்களின் ஆழத்தில் சில வேண்டுதல்கள்
மறைந்திருப்பதைக் காண்கிறேன்
மேகச் சிதறல்களில் இருந்து
அகத்தின் தாழ்வாரத்தினுள்
கறுத்த நிழல்கள் கரைந்து கலக்கின்றன
அமைதியைப் பருக
அவர்களுக்கு சில நொடிகள் வாய்ப்பதே இல்லை
திருமணம் பெண்ணுக்கு
ஏற்படுத்தும் மௌனம் அளப்பரியது
தன்னை மீறி சிரிப்பது அரிதாகிறது
காலில் அப்பிய ஈர மண்ணின்
பிசுபிசுப்பாய்
சில நீரூற்றுக்களின் அடையாளங்கள் அழிந்தே போகிறன
அமைதி புன்னகையில் வேர்விடுகிற போதெல்லாம்
புன்னகையை மறந்த பெண்களின்
அக நெருக்கடிகள் முகத்தில் உறைந்தே போகிறது
அக வீழ்ச்சியின் அடையாளமாய்
சிரிப்பதற்கான காரணங்களை
அவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்
தேடுதல் மட்டும் நீள்கிறது

00000000000000000000000000000

புகைப்படங்களை என் பெட்டகத்தினுள் சேகரிக்கிறேன்
நாற்காலியின் நுனியின் பற்றிப்படரும்
கரும்பூஞ்சணத்தின் அடையாளமாய்
சில சாட்சிகள் இன்னும் பத்திரமாய் கிடக்கின்றன
பூமியில் வாழ்ந்து மறைந்து போன மனிதர்களின்
நினைவுகள் சிதைவதே இல்லை
மரணம் விட்டுச் செல்லும் கேள்விகள் கொடூரமானவை
அனுமதிக்க முடியாத பேரவலமாய்
சில மரணங்களை அனுமதித்தே ஆக வேண்டும்
மனசாட்சியின் குரலாய்
காலம் முழுவதும் உயிரோட்டமாய் வாழ்கிறார்கள்
சிவப்பு நட்சத்திரங்களின் வெளிச்சமாய்
அவர்களின் ஒளி மங்குவதே இல்லை
புகைப்படங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்
மனிதர்கள் நிஜத்திலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்….

00000000000000000000000000000

மனிதனின் கண்ணில் தெரியும்

கொடூர பசியை உற்று நோக்குகிறேன்.
கண்ணீர் ஊற்றுக்களை
அடக்கி நினைவுகளில் அடங்காத
அகலமான கண்கள் நெருப்புத் தணலாய்
தகித்து அசைந்து கொண்டே இருக்கின்றன.
சாளறைக் கற்கள் முடிவுறும் போதான
சாலை இரு மருங்கிலும்
ஏதோ ஒன்றிற்காய் காத்திருக்கும்
ஜீவன்களின் ஆத்மார்த்தம் இல்லாத பெருமூச்சுகளை
காலம் புறந்தள்ளுகிறது.
தேர்ந்தெடுக்கப் படாத வார்த்தைளின்
ஒழுங்கின்மையால் மன அழுக்குகளின்
வழியே வந்தமர்கின்றன வன்முறைகள்.
பச்சைப் படர்வுகளின் மேல் அசையும் அதிர்வுகள்
சதா சரித்திரத்தின் கடைசி வரியாகின்றன.
பசி மனிதனின் தீராப் போராட்டம்.
உக்கிரம் கொந்தளித்து பசியைக் கடந்திட
மனிதனெடுக்கும் முயற்சிகள் பிரயத்தனம் மிக்கவை…..

00000000000000000000000000000

உடைந்து சிதறும் பனிப்பாறைகளில்
பருவங்களின் காலச் சக்கரம்
அருவியாய் விரியத் துவங்குகின்றன
எனைத் தழுவும் ஞாபகத் தூறல்களில்
இருந்து உடைந்து விழுகின்றன புலன்கள்
சாவின் விளிம்பில் பிறக்கும்
அவிழ்க்க முடியாத பிணைப்பில்
சில இரகசியங்கள் இதயவறையின்
ஒதுக்கீடாய் புதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது
இறகு உதிர்ந்த அடையாளமின்றி
நெடும் தூரம் வரை தும்பிகள் பறந்து
தவிப்பின் கணங்களை மீட்டெடுக்கின்றன
நான்கு சுவர்கள் மட்டும்
அறிந்த ரகசியங்கள் தொடரியாய் முளைத்து
மௌனமாய் வாசம் கொள்கின்றன
மறைந்திருக்கும் ரணங்களை
மனிதன் உணர்வதே இல்லை
ஓர் உதட்டில் இருந்து
இன்னொரு உதட்டுக்கு கடத்தப் படும்
முணுமுணுப்புக்கள் வியாக்கியானங்கள்
டயரிகளாகவும் கடிதங்களாகவும் சாரளங்களுக்கு

வெளியே தலைக்காட்டுவதே இல்லை
ரகசியங்கள் எழுத்துக்களில் புதைந்து கிடக்கின்றன
அவை ரகசியம் என அடையாளம்
காண முடியாத படி புனைவுகளால் சூழ்ந்திருக்கின்றன….

மிஸ்ரா ஜப்பார்-இலங்கை

 

(Visited 150 times, 1 visits today)